21 February 2023

உலக தாய்மொழி தினம் ....

 வாழ்க வளமுடன்

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.








ஆகவே இன்றைய தாய்மொழி தினத்திற்காக ஒளவையாரின்  நல்வழி பாடல்கள் ....

நல்வழி -- வாழ்க்கைக்கு நல்வழி காட்டும் 41 வெண்பாக்களையுடைய நூல்.


கடவுள் வாழ்த்து


பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை

நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய்

துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச்

சங்கத் தமிழ் மூன்றும் தா.



பாலையும், தெளிந்த தேனையும், வெல்லப் பாகுவையும், பருப்பையும் கலந்து நான் உனக்கு தருவேன், ஆண் யானை உருவம் உடைய உயிர்களுக்கு நல்லது செய்யும், மாசில்லாத விநாயகப் பெருமானே நீ எனக்கு இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ், என்ற சங்கத் தமிழ் மூன்றும் தா.



வெண்பா : 1

புண்ணியம்ஆம் பாவம்போல் போனநாள் செய்தஅவை

மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் -எண்ணுங்கால்

ஈதொழிய வேறில்லை; எச்சமயத்தோர் சொல்லும்

தீதொழிய நன்மை செயல்


மனிதன் பிறக்கும் போதும், இறக்கும் போதும் அவன் கூட வருவது அவன் செய்த புண்ணியம் பாவம் என்று கூறும் இரண்டு மட்டுமே, இதைத் தவிர வேறு எதுவும் கூட வாராது, அனைத்து சமயமும் கூறுவது தீமையை செய்யாதே உன்னால் முடிந்த நன்மையை செய் என்பது தான்…


வெண்பா : 2

சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில்

இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார்

பட்டாங்கில் உள்ள படி


உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர். மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.


வெண்பா : 3

இடும்பைக்கு இடும்பை இயல்பு உடம்பு இது அன்றே

இடும் பொய்யை மெய் என்று இராதே - இடும் கடுக

உண்டாயின் உண்டாகும் ஊழில் பெரு வலி நோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு. 3



நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்


வெண்பா : 4

எண்ணி ஒரு கருமம் யார்க்கும் செய்ய ஒண்ணாது

புண்ணியம் வந்து எய்த போது அல்லால் - கண் இல்லான்

மாங்காய் விழ எறிந்த மாத்திரைக் கோல் ஒக்குமே

ஆங்காலம் ஆகும் அவர்க்கு. 


கண் தெரியாத குருடன் , மாங்காய் அடிக்க முயற்சி செய்து அவன் கையில் வைத்திருந்த கோலை இழப்பதை போல், ஒருவன் காலம் அறியாமல் ஒரு செயலைச் செய்தால் அவனிடன் உள்ளதையும் இழக்க நேரிடும். நாம் செய்த புண்ணியத்தின் பலனாக, ஒரு காரியம் கைகூடும் வேலை வரும் வரை நாம் செய்யும் எந்த முயற்சியும் பலன் தராது, அதனால் காலம் கருதி ஒரு செயலை தொடங்க வேண்டும்.


வெண்பா : 5

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா

பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்து ஏங்கி

நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம் நினைத்து

துஞ்சுவதே மாந்தர் தொழில்.


நாம் மனம் வருந்தி அழைத்தாலும், நமக்கு என்று இல்லாத பொருள் நமக்கு கிடைக்காது, அது போல் ஒன்றை வேண்டாம் என்று சொன்னாலும் அது நம்மை விட்டு போகாது, அனைத்து காரியங்களும், உறவுகளும் நாம் செய்த பாவம், புண்ணியம் என்ற இரண்டு விசயங்களின் மூலமே அமைகிறது, இதை உணராமல் தினம் தினம் புலம்பி, நெஞ்சம் வருந்துவது மனிதர்களின் இயல்பு.


வெண்பா : 6

உள்ளது ஒழிய ஒருவர்க்கு ஒருவர் சுகம்

கொள்ளக் கிடையா குவலயத்தில் வெள்ளக்

கடல் ஓடி மீண்டு கரையேறினால் என்

உடலோடு வாழும் உயிர்க்கு. 


கடல் கடந்து போய், கை நிறைய பணம் சம்பாதித்தாலும், ஒருவருக்கு என்ன கிடைக்க வேண்டும், எதை அனுபவிக்க வேண்டும் என்று விதி நிர்ணயம் செய்கிறதோ அது தான் கிடைக்கும், அடுத்தவருக்கு கிடைக்கும் சுகம் நமக்கு கிடைக்கவில்லையே என்று வருந்துவதால், எல்லாம் நமக்கு கிடைக்க வேண்டும் என்று பேராசையுடன் நினைப்பதால் என்ன லாபம் ?


வெண்பா : 7

எல்லாப் படியாலும் எண்ணினால் இவ்வுடம்பு

பொல்லாப் புழுமலி நோய்ப் புன்குரம்பை - நல்லார்

அறிந்திருப்பார் ஆதலினால் ஆம் கமல நீர் போல்

பிரிந்திருப்பர் பேசார் பிறர்க்கு


எந்த வகையில் ஆராய்ந்து பார்த்தாலும், இந்த உடம்பு நிலையில்லாதது, புழுக்களும், நோய்யும் நிறைந்து வாழும் குடிசை. இதை அறிந்த நல்லவர்கள் தாமரை இலை தண்ணீரில் வாழ்தாலும், அதுனுடன் ஒட்டாமல் வாழ்வது போல் இந்த உலகத்தில் பற்று இல்லாமல் வாழ்வார்கள், இந்த உண்மையை புரியாதவரிடம் /உணர முடியாதவரிடம் இதை பற்றி பேச மாட்டார்கள்.


வெண்பா : 8

ஈட்டும் பொருள் முயற்சி எண்ணிறந்த ஆயினும் ஊழ்

கூட்டும்படி அன்றிக் கூடாவாம் - தேட்டம்

மரியாதை காணும் மகிதலத்தீர் கேண்மின்

தரியாது காணும் தனம்.


உலகத்தில் நாம் சம்பாதிக்க வேண்டியவை எண்ணிலடங்காது இருப்பினும் , விதி என்ன நிர்ணயம் செய்கிறதோ அதைத் தவிர வேற எதுவும் நம்மிடம் சேராது, ஆதலால் பொருள் சேர்க்க வேண்டும் என்ற ஆசையை விட்டு அடுத்தவருக்கு உதவும் நல்ல மனிதர் இவர் என்ற மரியாதையை முதலில் சம்பாத்தியம் செய்யுங்கள்.


வெண்பா : 9

ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந்நாளும் அவ்ஆறு

ஊற்றுப் பெருக்காம்உலகு ஊட்டும் - ஏற்றவர்க்கு

நல்ல குடிப் பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்

இல்லை என மாட்டார் இசைந்து.


கால் சுடும் அளவிற்கு நீர் வற்றி போய் வெரும் மணலாக ஆறு வற்றி போனாலும், அதை தோண்டுவோருக்கு, ஊற்று நீர் கொடுத்து இந்த உலகதிற்கு உதவும் நதியைப் போலே நல்ல மனம் படைத்தோர், நல்ல காரியங்கள் செய்யும் நல்ல குடியில் பிறந்தோர் தங்களுக்கு இல்லையென்றாலும் அடுத்தவர் கேட்கும் பொது தங்களிடம் உள்ள பொருளையும் கொடுத்து உதவுவார்கள்.


வெண்பா : 10

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்

மாண்டார் வருவாரோ? மாநிலத்தீர் - வேண்டாம்

"நமக்கும் அது வழியே; நாம் போம் அளவும்

எமக்கு என்" என்று இட்டு உண்டு இரும்.


பல ஆண்டுகள் அழுதாலும் இறந்தவர் திரும்ப இந்த பூமிக்கு வருவதில்லை, பல முயற்சி செய்தாலும் இறப்பை தள்ளிபோடலாமே தவிர தவிர்க்க/தப்பிக்க முடியாது. இறப்பு உறுதியாக இறுதியில் வரும். ஆதலால் நமக்கு மட்டும் என்று சேர்த்து வைக்காமல் நம்மால் முடிந்த பொருள்களை அடுத்தவருக்கு கொடுத்து நாம் வாழ வேண்டும் .




முந்தைய பதிவுகள் ....



வாழ்க தமிழ் ....
வளர்க  தமிழ் ...



அன்புடன்
அனுபிரேம் 🌼🌼🌼








No comments:

Post a Comment