21 February 2019

உலக தாய்மொழி தினம்

வாழ்க வளமுடன்


ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.





உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. எனவே அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ  அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.

தாய்மொழி என்பது வெறும் கருவி இல்லை .
ஒரு இனத்தின் பண்பாடு, கலாசாரம், வாழ்க்கைமுறை,
சிந்தனை எல்லாவற்றிலும் முக்கிய பங்காற்றும்,
நீங்காத அங்கமாக இருக்கும்,
 சிறப்பு அன்னை மொழிக்கு உண்டு.



தமிழ் நாடு

தமிழ் மொழி வாழ்த்து

    
வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
  வாழிய வாழிய வே.

வான மளந்த தனைத்தும் அளந்திடும்
  வண்மொழி வாழிய வே.

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
  இசைகொண்டு வாழிய வே..

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி
  என்றென்றும் வாழிய வே.

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
  துலங்குக வையகமே.

தொல்லை வினைதரு தொல்லை யகன்று
  சுடர்க தமிழ்நாடே.

வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி
  வாழ்க தமிழ்மொழி யே.

வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
  வளர்மொழி வாழிய வே.




தமிழ்


யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்

  இனிதாவது எங்கும் காணோம்.

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

  இகழ்ச்சி சொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

  வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்

  பரவும்வகை செய்தல் வேண்டும்.


யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்,

  வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,

  உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்

  வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

  தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!


பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

  தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;

இறவாத புகழுடைய புதுநூல்கள்

  தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;

மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்

  சொல்வதிலோர் மகிமை இல்லை;

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

  அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.


உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்

  வாக்கினிலே ஒளி யுண்டாகும்;

வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்

  கவிப்பெருக்கும் மேவு மாயின்

பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்

  விழிபெற்றுப் பதவி கொள்வார்;

தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்

  இங்கமரர் சிறப்புக் கண்டார்.

-பாரதியார் 


பாரதி காந்திக்கு திருவல்லிக்கேணி கூட்டத்தில் ஆங்கிலத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார் .

” உங்கள் அன்னை மொழி குஜராத்தியிலோ அல்லது பெரும்பான்மை மக்கள் பேசும் மொழியான ஹிந்தியிலோ உரையாற்றி இருக்கலாமே ? “என கேள்வி எழுப்ப,

”இனிமேல் அவ்வாறே செய்கிறேன் நீங்கள் ஏன் இக்கடிதத்தை ஆங்கில மொழியில் எழுதினீர்கள் ?” என காந்தி கேட்க,

 பிறர் மனம் நோக எழுதும் பொழுது அன்னை மொழியை உபயோகப்படுத்த கூடாது என்பதே எங்களின் பண்பாடு என்று பதில் தந்தார் பாரதி .

தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப்பாடம் நடத்தினார் பாரதி .

அன்னை மொழி மீதான பற்று
ஒவ்வொருவருக்கும் கட்டாயத்தேவை மட்டுமல்ல ,

அதை அடுத்த தலைமுறைக்கும் கடத்த வேண்டும்.




வாழ்க தமிழ்...

வளர்க தமிழ்...




அன்புடன்
அனுபிரேம்



5 comments:

  1. இரண்டு நாட்களுக்கு முன்னாலேயே முடிந்து விடவில்லையே உலக தாயமொழி தினம்? இன்றுதானா?

    ReplyDelete
    Replies
    1. பிப்ரவரி 21 தான் உலக தாய்மொழி தினம் ஸ்ரீ ராம் சார்..

      Delete
  2. "//தாய் மொழி வெறும் தாய் சொல்லித்தந்த மொழி மட்டுமில்லை ; தாய்மை உணர்வோடு பயன்படுத்தப்பட வேண்டிய மொழி எனப்பாடம் நடத்தினார் பாரதி .//"
    - அருமை

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    விவரங்கள் தொகுப்பு மேலும் சிறப்பு.

    ReplyDelete