23 February 2019

ஸ்ரீவில்லிப்புத்தூர் காட்டழகர் திருக்கோவில்

வாழ்க வளமுடன்


காட்டழகர் திருக்கோவில் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து  15 கி.மீ தூரத்தில்  அமைந்துள்ளது.




ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள செண்பகத்தோப்பு என்னும்  காட்டுப்பகுதியில் உள்ள மலைக்குன்றின் மீது இக்கோவில் அமைந்துள்ளது.

இங்கு திருமால் காட்டழகர் என்னும் பெயரில் காட்சி அளிக்கிறார்.

செல்லும் வழி


மலை மீது ஏறிச்செல்ல 247 படிக்கட்டுகள் உள்ளன. 

இங்கு சுந்தரராஜப் பெருமாள் என்றழைக்கப்படும் காட்டழகர், ஸ்ரீதேவி (சுந்தரவல்லி) மற்றும் பூதேவியருடன் (சௌந்தரவல்லி) நின்ற திருக்கோலத்தில் அருள்புரிகிறார். 





சுதபா என்னும் முனிவர் திருமாலிருஞ்சோலையில் தவமியற்றினார்.
ஒரு நாள் அவர் நீராடிக் கொண்டிருக்கும்போது துர்வாசர் முனியும், அவரது சீடர்களும் அங்கு வர 
இவர்களைக் கவனியாது சுதபா முனிவர் வெகுநேரம்
நீரில் மூழ்கியிருந்ததால் துர்வாசருக்கு சினம் வந்துவிட்டது. 

என்னை மதியாது தண்ணீருக்குள்ளேயே கிடந்ததால்,
 நீ தண்ணீரில் வாழும் தவளையாகக் கடவது (மண்டுகமாகக் கடவது) என்று துர்வாசர் சபித்தார். 

தனது நிலையுணர்ந்த சுதபா முனிவர் துர்வாசரிடம் மன்னிப்பு வேண்டினார். மனங்கனிந்த துர்வாசர்
நீ , நாராயணன் நித்ய வாசம் செய்யும் வராக பர்வதம் சென்று அங்குள்ள தர்மாத்திரி என்று அழைக்கப்படும் பர்வதத்தில் சென்று தவம் புரிக, எம்பெருமான் காட்சி கொடுத்ததும் உனக்கிட்ட சாபம் அகலும் என்றார். 

அதற்கு சுதபா முனிவர் நான் திருமாலிருஞ்சோலை நின்ற
சுந்தரராஜனையே நித்ய தரிசனம் செய்பவன்.
 இப்பெருமானையே நான் அங்கும் சென்று வழிபட வேண்டுமென நினைக்க, அவ்விதமே ஆகும் என்றார் துர்வாசர். 

இவ்வாறு திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாள் வராஹபர்வதத்தில் உள்ள தர்மாத்ரி என்னும் அழகிய பர்வதத்திற்கு எழுந்தருளினார். அதனால் மண்டுக முனிவரும் சாப விமோசனம் பெற்றார் .

அந்த திருக்கோவிலே இன்றைய  காட்டழகர் திருக்கோவிலாகும்

 

அழகர் கோவில் மலையிலுள்ள நூபுரகங்கை போன்றே இங்கும் வற்றாத அருவியும், நீர்த் தொட்டியையும் காணலாம். இத்தொட்டியில் ஆண்டு முழுதும் நீர் விழுந்து கொன்டே இருக்கிறது.




மகாமண்டபத்திற்கு வெளியே கருடாழ்வார் சந்நிதி இறைவனைப் பார்த்தவாறு அமைந்துள்ளது. கருடாழ்வாரின் தென்புறம் காவல் தெய்வங்களான பதினெட்டாம்படிக் கருப்பண்ணசாமி  ஆகியோரின் சிலைகள் உள்ளன. 




காட்டின் நடுவே உள்ள அழகிய திருக்கோவில் .

காலையிலும், மாலையிலும் அரசுப்பேருந்து ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து செண்பகத்தோப்பு வரை இயக்கப்படுகின்றன. அங்கிருந்து அடர்ந்த காடுகளிடையே சுமார் 5 கி.மீ நடந்து சென்றால் கோவில் மலை அடிவாரத்தை அடையலாம்.


(358)
ஆயிரம் தோள்பரப்பி முடியாயிரம் மின்னிலக

ஆயிரம் பைந்தலைய அனந்தசயனன் ஆளும்மலை

ஆயிர மாறுகளும் சுனைகள்பல வாயிரமும்

ஆயிரம்பூம் பொழிலுமுடை மாலிருஞ் சோலையதே.


(359)
மாலிருஞ் சோலையென்னும் மலையையுடை யமலையை

நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக் கடலமுதை

மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளில்

மேலிருந்த விளக்கை விட்டுசித்தன் விரித்தனவே.



அன்புடன்,
அனுபிரேம்

9 comments:

  1. பழம்பெரும் கோவிலான காட்டழகர் கோவில் பற்றி மிக அருமையாக எழுதியிருக்கிறீர்கள்!

    ReplyDelete
  2. அழகிய படங்கள் நல்கியமைக்கு நன்றி.

    ReplyDelete
  3. அழகான கோவில். அமைதியான சூழலில் இருக்கும் கோவில் எனத் தெரிகிறது. இப்படியான கோவில்களில் கிடைக்கும் நிம்மதி பிரபலமான கோவில்களில் கிடைப்பதில்லை.

    கோவில் பற்றிய தகவல்களுக்கு நன்றி.

    ReplyDelete
  4. காட்டழகர் கோயில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்..

    இன்று தங்களால் தரிசனம் காணப் பெற்றேன்.. மகிழ்ச்சி..

    ReplyDelete
  5. மிக அழகிய இடமாக இருக்கு, அழகிய படங்கள். மூலஸ்தானத் தீர்த்தம் வடிவது சூப்பர்.

    ReplyDelete
  6. அழகான கோவில் அந்த (கடைசிபடம்)படிக்கட்டு படம் ரெம்ப அழகு. கோவில் பற்றி நீங்க கொடுத்த தகவல்களின் மூலம் அறியகூடியதாகவிருந்தது சிறப்பு

    ReplyDelete
  7. அழகான கோவில் . நாங்கள் போனதில்லை.
    படங்கள், விவரங்கள் எல்லாம் அருமை.
    படிகள் புதிதாக கட்டப்பட்டு இருக்கிறதா?
    நூபுர கங்கை தீர்த்தம் அங்கும் இருப்பது மகிழ்ச்சி.

    ReplyDelete
  8. காட்டழகர் கோயிலுக்கு இதுவரை சென்றதில்லை. இப்பதிவு அங்கு செல்லும் அவாவினைத் தூண்டிவிட்டது.

    ReplyDelete
  9. நான் மலையாள நாட்டுத் திருப்பதிகள் தரிசனத்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வடபத்ரசாயியைச் சேவித்தோம். அப்போ அங்கிருந்து சென்பகத்தோப்பு வரை சென்று அங்கிருந்து நடந்தோம் நடந்தோம் நடந்தோம்... மலை/காட்டுப் பாதை. நிறைய வயதானவர்கள். மிகவும் கஷ்டப்பட்டு கடைசியில் அங்கு சென்றால், அதற்கு அப்புறமும் 250 படிகள் ஏறணும். போக வர கொஞ்சம் கஷ்டப்பட்டோம். அந்தக் காடுகளில் பறக்கும் அணிலைப் பார்த்தது, யானைகளின் தடத்தை (முந்தின நாள்தான் வந்து சென்றிருந்தது) பார்த்தோம்.

    காட்டழகரையும் சேவித்தோம், ஆனால் மிகுந்த கஷ்டத்துக்குப் பிறகு. அர்சகர், இதோ கொஞ்ச நேரத்துல கோவில் வந்துடும்னு சொல்லிக்கிட்டே எங்களுக்கு முன்னால பைக்ல போய்ட்டார்.

    ReplyDelete