21 February 2018

உலக தாய்மொழி தினம்



ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 21ஆம் தேதி உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

உலகில் சுமார் 6000 மொழிகள் உள்ளன. ஏற்கனவே பல மொழிகள் அழிந்து விட்டன. எனவே அழிந்துவரும் மொழிகளைப் பாதுகாக்கவும் அவற்றின் வளர்ச்சிக்கு உதவும் வகையிலும் யுனெஸ்கோ  அமைப்பு உலக தாய்மொழி தினத்தை 1999ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தியது.





ஒரு மனிதன் தன்னுடைய உணர்வுகளை சக மனிதனுக்கு மொழியாலே தெரிவிக்கிறான். அப்படி ஒவ்வொருவருக்கும் தாய்மொழி என்பது நிச்சயம் உண்டு.  அந்த மொழியை அழிக்காமல் பாதுகாப்பதே நமது கடமை....




இன்பத் தமிழ்

தமிழுக்கும் அமுதென்று பேர் ! -- அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர் !

தமிழுக்கு நிலவென்றுபேர்! -- இன்பத்

தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர் !

தமிழுக்கு மணமென்று பேர் ! -- இன்பத் 

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர் !

தமிழுக்கு மதுவென்று பேர்! -- இன்பத்

தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர் !



தமிழ் எங்கள் இளமைக்குப் பால்! -- இன்பத்

தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல் ! 

தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! -- இன்பத்

தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன் !

தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! -- இன்பத்

தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள் !

தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! -- இன்பத் 

தமிழ் எங்கள் வலமிக்க உளமுற்ற தீ



தமிழின் இனிமை

கனியிடை ஏறிய சுளையும் -- முற்றல்
கழையிடை ஏறிய சாறும்,
பனிமலர் ஏறிய தேனும், -- காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்;
நனிபசு பொழியும் பாலும் -- தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும், -- தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்!

பொழிலிடை வண்டின் ஒலியும் -- ஓடைப்
புனலிடை வாய்க்கும் கலியும்,
குழலிடை வாய்க்கும் இசையும், -- வீணை
கொட்டிடும் அமுதப் பண்ணும்,
குழவிகள் மழலைப் பேச்சும் -- பெண்கள்
கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும், 
விழைகுவனேனும், தமிழும் -- நானும் 
மெய்யாய் உடலுயிர் கண்டீர்!

பயிலுறும் அண்ணன் தம்பி, -- அக்கம்
பக்கத்துறவின் முறையார்,
தயைமிக உடையாள் அன்னை -- என்னைச்
சந்ததம் மறவாத் தந்தை, 
குயில்போல் பேசிடும் மனையாள், -- அன்பைப்
கொட்டி வளர்க்கும் பிள்ளை,
அயலவராகும் வண்ணம் -- தமிழ் என்
அறிவினில் உறைதல் கண்டீர் !


நீலச் சுடர்மணி வானம் -- ஆங்கே
நிறைக் குளிர்வெண்ணிலவாம்.
காலைப் பரிதியின் உதயம் -- ஆங்கே
கடல்மேல் எல்லாம் ஒளியாம், 
மாலைச் சுடரினில் மூழ்கும் -- நல்ல
மலைகளின் இன்பக் காட்சி
மேலென எழுதும் கவிஞர் -- தமிழின்
விந்தையை எழுதத் தரமோ?



செந்நெல் மாற்றிய சோறும் -- பசுநெய்
தேக்கிய கறியின் வகையும்,
தன்னிகர் தானியம் முதிரை, -- கட்டித்
தயிரோடு மிளகின் சாறும்,
நன்மதுரஞ்செய் கிழங்கு -- கானில்
நாவிலினி்த்திடும் அப்பம்,
உன்னை வளர்ப்பன தமிழா! --உயிரை
உணர்வை வளர்ப்பது தமிழே !

.......-பாரதிதாசன் கவிதைகள்







வாழ்க தமிழ்

வளர்க தமிழ்...





அன்புடன்
அனுபிரேம்

6 comments:

  1. தாய்மொழியைப் போற்றி உரைத்தது இனிமை.

    ReplyDelete
  2. தாய்மொழியின் சிறப்பை உரைத்து அதுவும் சிறப்பான பாடல்களுடன் பதிவு அருமை..அனு..

    கீதா

    ReplyDelete
  3. பாரதியின் கவிதையுடன் தாய்மொழி தின பதிவு மிக அருமை .
    எக்கண்டத்தில் வாழ்ந்தாலும் நம் தாய் மொழியை மறவாமல் அடுத்த சந்ததிக்கு எடுத்து செல்வோம் பெற்றோர்களாகிய நாம்

    ReplyDelete
  4. அருமை
    தாய்மொழி போற்றுவோம்

    ReplyDelete
  5. வாழ்க தமிழ்..
    வளர்க தமிழ்!...

    ReplyDelete
  6. அருமையான பதிவு.

    தாய் மொழி போற்றுதல் நலம்.
    கவிதைகள் பகிர்வு அருமை.

    ReplyDelete