09 February 2018

திருச்சி மலைக்கோட்டையிலிருந்து ஒரு பார்வை.....


திருச்சியை நினைத்தவுடன் கண் முன்னே தெரிவது மலைக்கோட்டையும் அதன் கம்பீரமும், உச்சி பிள்ளையார் கோவிலின் அழகும்தான் ......







சுமார் 1800 வருடங்களுக்கு முன்பே, குணபரன் என்ற மகேந்திர பல்லவ மன்னர் காலத்தில் இதைக் கட்ட ஆரம்பித்து, மதுரை நாயக்க மன்னர்களால் விஜய மன்னர்கள் முன்னிலையில் பூர்த்தி செய்யப்பட்டது .




 இது, 273 அடி உயரமும், 437 படிக்கட்டுக்களும் கொண்டது. உலகத்திலேயே மிகவும் பழமையான மலைக்கோவில் இது என்று கூறுகின்றனர்..




இந்த கோவிலின் மற்றுமொரு சிறப்பு, இங்குள்ள இரண்டு குகைகள் ஆகும்.








 புராண வரலாறு 

அசுரர் குலத்தைச் சார்ந்த இலங்கையின் மன்னன் ராவணன்... ..சீதையை சிறை எடுத்தான்.  சீதையை மீட்க அனுமன், சுக்ரீவன்  ஸ்ரீராமருக்கு உதவி செய்தனர்.

அத்துடன் அசுரர் குலத்தைச் சார்ந்தவரும், ராவணனின் சகோதரனும் ஆன விபீஷணனும் உதவினார்.

அதன் பின்பு, அயோத்தி சென்ற ஸ்ரீ ராமன், பட்டாபிஷேகம் முடிந்ததும், விபீஷணனுக்கு ரங்கநாதர் சிலை ஒன்றை பரிசாக கொடுத்தார்.

அதை இலங்கைக்கு எடுத்துச் செல்லும் பொழுது வழியில் மிகவும் அழகிய சோலைகள் நடுவே அகண்ட காவிரி நதியில் நீராடி, பூஜை செய்ய நினைத்தார் விபீஷணர்.

அச்சமயம் அங்கு வந்த சிறுவனிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்கும்படி கொடுத்துவிட்டு சென்றார்.

சிறுவன் உருவில் வந்தது விநாயகப் பெருமானே.


விபீஷணன் சென்ற பின்பு சிலையை அந்த இடத்திலேயே வைத்துவிட்டு, அருகிலிருந்த மலையின் மீது சென்றுவிட்டார்.

திரும்பி வந்த விபீஷணன் சிறுவனை காணாது திகைத்து நின்றார்.

சிலை மண்ணில் இருப்பதை கண்டு, அதை எடுக்க முயன்றபோது முடியவில்லை.

இதன் காரணத்தால், இலங்கைக்கு செல்ல இருந்த ஸ்ரீரங்கநாத பெருமான் ஸ்ரீரங்கத்தில் எழுந்து அருளியதாக வரலாறு.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் உள்ள பகையின் காரணத்தால், எவ்வளவுதான் விபீஷணன் நல்லவனாக இருந்தாலும், ஸ்ரீ ராமனுக்கு உதவி செய்தாலும், ஸ்ரீ ரங்கநாத பெருமான், அசுரர் பூமிக்கு செல்வதை விரும்பவில்லை.

எனவே, விநாயகரை வேண்டிக் கொண்ட படியால் அது தடுக்கப்பட்டது.

சிலையைப் பெற்ற சிறுவன் மலையின் மீது இருப்பதை கண்டு, விபீஷணன் கோபத்துடன் தலையில் ஒரு கொட்டு வைத்ததாகவும்....அதன்  அடையாளம், இன்றும் உச்சிப்பிள்ளையாரின் தலையில்  உள்ளது என்கின்றனர்.

பின்பு தான் செய்த தவறுக்கு விநாயகரிடம் மன்னிப்பு கேட்டாராம் விபீஷணர்.

இப்படி சிறப்பு பெற்ற விநாயகர் தான், தமிழகத்துக்கு பெருமை தருகின்ற ஸ்ரீ ரங்கநாதருடன் பக்தர்களின் நலனுக்காக உச்சிப்பிள்ளையாராக அருள்பாளிக்கின்றார்.




திருச்சி மாநகர்...


தாயுமானவர் திருக்கோவில்...


அகண்ட காவேரி..



ஸ்ரீரெங்கம்....



மலைக்குள் செதுக்கப்பட்ட மற்றுமொரு கோவில் உள்ளது.

இது சிவன் கோவில். இங்கு வீற்றிருக்கும் சிவபெருமானின் பெயர் தாயுமானவர்.

இறைவனே   பெண்ணுக்கு மகப்பேறு காலத்தில் தாயாக வந்து உதவிய தலமென்பது வரலாறு....

எம்பெருமான் பெண்ணாய் வந்து.. பிரசவம் பார்த்து, தாயையும் குழந்தை யையும் ஆசி கூறி வாழ்த்தியதால், தாயும் ஆனவர் என்பதை தாயுமானவர் என்று அழைக்கப்படுகிறார்.

அன்னையின் பெயர் மட்டுவார் குழல் அம்மையார்... தெய்வீக அழகு ததும்பும் முகம்...

தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஆறாவது சிவத்தலமாகும்.




மிக அழகிய ஓவியங்களும்....சிற்பங்களும் உள்ள கோவில்...ஆனால் அங்கு படம் எடுக்க அனுமதில்லை....







இந்த கோவிலுக்கு செல்லும் படிகள் செங்குத்தாக இருக்கிறது. இங்கிருந்து, பார்த்தால், திருச்சி நகர் முழுவதும் அழகாய் காணலாம்.



இக்கோவிலை  பூர்த்தி செய்ய 300 மனிதர்கள் தொடர்ந்து 11 வருடங்கள் உழைத்து நிர்மாணித்துள்ளனர்.



5.85 திருச்சிராப்பள்ளி
திருக்குறுந்தொகை

1910
மட்டு வார்குழலாளொடு மால்விடை
இட்டமா உகந்து ஏறும் இறைவனார்;
கட்டு நீத்தவர்க்கு இன் அருளே செயும்
சிட்டர்போலும்-சிராப்பள்ளிச் செல்வரே.

1911
அரி அயன் தலை வெட்டி வட்டு ஆடினார்,
அரி அயன் தொழுது ஏத்தும் அரும்பொருள்,
பெரியவன், சிராப்பள்ளியைப் பேணுவார்
அரி அயன் தொழ அங்கு இருப்பார்களே.

1912
அரிச்சு, இராப்பகல் ஐவரால் ஆட்டுண்டு,
சுரிச்சு இராது,-நெஞ்சே!-ஒன்று சொல்லக் கேள்:
திரிச் சிராப்பள்ளி என்றலும், தீவினை
நரிச்சு இராது நடக்கும் நடக்குமே.


1913
ழுதாயும் ஆய் எனக்கே, தலை கண்ணும் ஆய்,
பேயனேனையும் ஆண்ட பெருந்தகை;
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாயனார்ழு என, நம் வினை நாசமே.


-  திருநாவுக்கரசர்



அன்புடன்
அனுபிரேம்...

6 comments:

  1. சில வருடங்களாகி விட்டன மலைக்கோட்டைக்குச் சென்று!..

    அழகான படங்களுடன் இனிய பதிவு.. வாழ்க நலம்..

    ReplyDelete
  2. அழகிய படங்கள், சுவாரஸ்யமான விவரங்கள். மலைக்கோட்டையைப் பார்த்தால் எனக்கு வைகோ ஸார் நினைவும் வரும்!

    ReplyDelete
  3. அருமையான படங்கள், செய்திகள் என்று பதிவு சிறப்பாக இருக்கிறது.

    ReplyDelete
  4. படங்கள் அருமை
    திருச்சி மலைக்கோட்டையில் ஏறி நீண்ட ஆண்டுகள் ஆகிவிட்டன

    ReplyDelete
  5. வா..வ் ரெம்ப அழகா இருக்கு அனு. கடைசி 6 படங்களும் சூப்பர். நானும் உச்சிபிள்ளையார் தரிசித்திருக்கிறேன் 7 வருடத்துக்கு முன்.

    ReplyDelete