02 July 2025

6. ஹேரா பஞ்சமி -- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!

 பூரி ஸ்ரீ  ஜெகந்நாதர் திருக்கோயில் ரத யாத்திரை  .

1.அபிஷேகத் திருவிழா! (ஸ்நான யாத்திரை) 11/06/2025 

2.குண்டிசா பவனம் -

3.நபயௌவன (புதிய இளமை) தரிசனம் 

4.மூன்று இரதங்கள் ...

5. ஸ்ரீ  ஜெகந்நாதரின் ரத யாத்திரை 

 " ஹேரா பஞ்சமி " --- பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!



ஹேரா பஞ்சமி  ---பூரி ஸ்ரீ ஜெகந்நாதர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி ஊடல்!

புரி  ஸ்ரீ ஜெகந்நாத ரத யாத்திரையில் இந்த தினம் ஸ்ரீ மஹாலக்ஷ்மி தாயாருக்காகக் கொண்டாடப்படுகிறது !

பகவான் ஜெகந்நாதன், அண்ணன் பலராமன், தங்கை சுபத்திராவோடு தன்னுடைய அவதாரம் நிகழ்ந்த "குண்டீசா பவனம் எனப்படும் சுந்தராசலம் " செல்வதே ரத யாத்திரை !

" ஹேரா பஞ்சமி " உற்சவம் என்பது ரத யாத்திரைக்கு ஐந்து  நாட்களுக்கு பின்னர் வருகிறது.

மஹாலக்ஷ்மியிடம் அடுத்த நாளே வருவதாகச் சொல்லிவிட்டு செல்கிறார் பகவான் ஜெகந்நாதன். ஆனால் துவிதியை அன்று சென்ற ஜகந்நாதன் பஞ்சமி வரை வராததால், கலக்கமும், கோபமும், ஊடலும் கொண்டு தாயார் தன்னுடைய கோவிலை விட்டு குண்டீசா பவனத்திற்கு இருளடைந்த பிறகு செல்வாள். 

பகலில் சென்றால் ஊரில் உள்ளவர் எல்லாம் "இன்னும் உன் கணவன் வீடு திரும்பவில்லையா" என்று கேட்பார்களே... அதனால் தாயார் இரவில் செல்கிறாள்.

கோபத்தோடு கணவனைப் பார்க்க மஹாலக்ஷ்மி செல்வதால் இதற்கு "ஹேரா பஞ்சமி " என்று பெயர். ஹேரா என்றால் தரிசிக்க/பார்க்க என்று அர்த்தம். பஞ்சமி என்பது ஐந்தாம் ஆம் நாள்.

தாயார் கோபத்துடன் ரதவீதி வழியாக தன்னுடைய சேவகர்களோடு குண்டீசா பவனம் செல்வாள். தாயாரின் கோபத்தை தன்னுடைய சேவகர்கள் மூலம் அறிந்த ஜகந்நாதன், பயத்தில் குண்டீசா பவனத்தின் வாயில்கதவை அடைக்கச் சொல்லிவிடுவார்.


உள்ளே நுழையமுடியாத கோபத்தில்,  மஹாலக்ஷ்மி கிண்டலாக "ஆமாம் ! அண்ணன், தங்கை எல்லாம் ரொம்ப முக்கியம்; மனைவி அவ்வளவு முக்கியமல்ல ! எப்படியும் திரும்ப நீலாசலம் வரவேண்டுமே, அப்போது பார்த்துக்கொள்கிறேன்" என்று வேகமாகக் கோவிலுக்குத் திரும்புவாள்.

குண்டீசா வாயிலில் நிற்கும் ஜகந்நாதனின் கருடத்வஜ ரதத்தைப் பார்த்தவுடன், கோபம் அதிகமாகி, தன் சேவகர்களை அந்த ரதத்தின் ஒரு பகுதியை சிதைக்கச் சொல்வாள்.

 பிறகு ரதவீதி வழியாகச் சென்றால், ஊரில் எல்லோரும் கேள்வி கேட்பரே என்று "ஹேரா கோஹிரி சஹி" என்னும் வேறு குறுக்கு வழியில் தன்னுடைய கோயிலுக்கு வந்துவிடுவாள் !




கபிலேந்திர தேவன் என்னும் ராஜாவின் காலத்திற்கு முன் இந்த வைபவம், பிராமணர்களின் வேத கோஷத்தோடு மட்டுமே நடந்தது.

ஆனால் ராஜா இந்த வைபவம் எல்லோரும் அனுபவிக்கும்படியாக, ஒரு தங்க மஹாலக்ஷ்மி மூர்த்தியை எழுந்தருளப் பண்ணி, கோயிலிலிருந்து குண்டீசா பவனம் செல்லுதல் போன்று மாற்றியமைத்தார்.

அந்த உற்சவ மஹாலக்ஷ்மியை "சுவர்ண லக்ஷ்மி" ( _ஒடிசா பக்தர்கள் - சுபர்ண மஹாலக்ஷ்மி என்பர்_) என்றழைப்பர். 









திருமங்கை ஆழ்வார்

பெரிய திருமொழி - ஏழாம் பத்து 

7-7.திருவுக்கும் திருவாகிய 
 
திருவழுந்தூர் -3



1608

திருவுக்கும் திருவாகிய செல்வா!* 
 தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
உருவச் செஞ் சுடர்ஆழி வல்லானே!* 
 உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*

ஒருவற்குஆற்றி உய்யும் வகை என்றால்*  
உடன் நின்று ஐவர் என்னுள் புகுந்து*  ஒழியாது- 
அருவித் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் 
அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2) 1




1609

பந்தார் மெல் விரல் நல் வளைத் தோளி*  
பாவை பூ மகள் தன்னொடும் உடனே- 
வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  
மால் வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*

சந்தோகா! பௌழியா! தைத்திரியா!* 
 சாமவேதியனே! நெடுமாலே* 
அந்தோ! நின்னடியன்றி, மற்று அறியேன்* 
அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  2



 மஹாலக்ஷ்மி தாயார் திருவடிகளே சரணம் ....

ஸ்ரீ பலராம ஸ்வாமி , ஸ்ரீ சுபத்ராதேவி, ஸ்ரீ  ஜெகந்நாத பெருமாள்  

திருவடிகளே சரணம் ... !!!



அன்புடன் 
அனுபிரேம் 💖💖💖

No comments:

Post a Comment