09 July 2025

"ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்" தனியன் அவதார நாள்--ஆனி மூலம்

 "ஶ்ரீ சைலேச தயாபாத்ரம்,

தீபக்த்யாதி குணார்ணவம்,

யதீந்திர ப்ரவணம்,

வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"--

தனியன் மந்திரம் தோன்றிய திருநாள் ஆனி மூலம், இன்று  (09/07/2025)

அதி ஆச்சர்யமாக இதே ஜூலை மாதம் 9 ஆம்நாள்--1434 ஆம் ஆண்டில் ---தமிழ் பிரமாதீச ஆண்டு, ஆனி மாதம் பெளர்ணமி ஞாயிறன்று, மணவாள மாமுனிகளின் திருநட்சத்திரமான மூலத்தில், பெரிய பெருமாள்-அழகிய மணவாளர், ஸ்ரீரங்கம் பெரிய கோயில் பெரிய திருமண்டபத்தில் (சந்தனு மண்டபத்தில்), ஸ்ரீராமாநுஜரின் மறு அவதாரமான, 

ஸ்ரீ மணவாள மாமுனிகளைத் தம் ஆசார்யராக ஏற்றுக்கொண்டு, "ரங்கநாயகம்" என்னும் பாலகன் வடிவில் வந்து, இந்தத் தனியனைச் சொல்லி, ஒரு சுவடியில்  எழுதி மாமுனிகளிடம் சமர்ப்பித்தார் !!





தனியன் என்பது ஆசார்யர்களைப் போற்றி சீடர்கள் இயற்றிப் பாடும் ஸ்தோத்ரம். ஆழ்வார்களுக்குப் பல ஆசார்யப்பெருமக்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட தனியன்களைப் பாடியுள்ளனர்.

ஆழ்வார்கள், ஆசார்யர்கள் இயற்றிய கிரந்தங்களுக்கும் தனித்தனியாக தனியன்கள் உள்ளன. ஆழ்வார்,ஆசார்யர் இயற்றிய கிரந்தங்களில் இல்லாமல், தனியாக இருப்பதாலும், ஆனால் அவற்றைச் சேவிக்கும் (படிக்கும்/பாடும்) முன், இந்த ஸ்தோத்ரத்தைச் சேவித்தே தொடங்க வேண்டும் என்பதால் தனியன் எனப்படுகிறது.







எப்புவியும் ஸ்ரீசைலம் ஏத்தவந்தோன் வாழியே!

ஆனந்த வருடம்! அன்று ஆனி மூலம்!
அரங்கம் வந்து சேர்ந்தனர் இரு வைணவர்கள்!
கங்கையிற் புனிதமான காவிரியில் தீர்த்தமாடினர்! 
நித்தியானுஷ்டாங்களை செய்து முடித்தனர்.


பெரியபெருமாளை மங்களாசாசனம் செய்ய சன்னதிக்கு எழுந்தருளினார்கள்.
வரும் வழியில் உள்ளூர் வைணவர்களிடம், சமயம் அறிந்து கொள்ள முற்பட்டனர்.

இரு வைணவர்கள் : ஸ்வாமி! அடியோங்கள் யாத்திரையாக இங்கு வந்துளோம். தற்சமயம் சன்னதிக்கு சென்றால் பெரிய பெருமாளை சேவிக்கலாமா ?

உள்ளூர் வைணவர் : அடியேன்! நிச்சியமாக சேவிக்கலாம் ஸ்வாமி!

இரு வைணவர்கள் : திருவரங்கத்தில் வருடம் முழுவதும் உற்சவம் என்று கேள்விப்பட்டுயிருக்கிறோம். இன்று ஏதேனும் உற்சவம் உண்டா ?

உள்ளூர் வைணவர் : ஸ்வாமி! அனுதினமும் உற்சவம் நடக்கும் திருவரங்கத்தில் உற்சவத்திற்கு குறை ஏதேனும் உண்டோ ? அதுவும் கடந்த பரீதாபி வருடம், ஆவணி மாதம், முப்பத்தொன்றாம் நாள், ஸ்வாதி அன்று தொடங்கிய உற்சவம் இன்றளவும் நடைபெறுகிறது. அந்த உற்சவம் இன்றுடன் முடிவடைகிறது.

இரு வைணவர்கள் : திருவரங்கத்தில் வருடம் முழுவதும் உற்சவம் என்று கேள்விபட்டுயிருக்கிறோம். அது என்ன சென்ற வருடம் தொடங்கி  இன்று வரை நடைபெறும் உற்சவம் ? நம்பெருமாளுக்கு ஏதேனும் விஷேஷ உற்சவமா? அது குறித்து தெரிவிக்க ப்ரார்த்திக்கிறோம்.

உள்ளூர் வைணவர் : உங்களுக்கு தெரியாதோ ? நம்பெருமாள் தன்னுடைய உற்சவங்களை சென்ற வருடம் ஆவணி ஸ்வாதியுடன் நிறுத்திக்கொண்டார்.

 தன்னுடைய சன்னிதி முன்பே, சேனை முதன்மையார் தொடக்கமாக நித்யஸூரிகள் கோஷ்டியுடன் , நம்மாழ்வார் தொடக்கமான ஆழ்வார்கள் கோஷ்டியுடன், நாதமுனிகள் தொடக்கமான ஆசார்யர்கள் கோஷ்டியுடன், ஸ்ரீரங்க நாராயண ஜீயர் தொடக்கமாக ஸ்தலத்தார்களுடன், உபயநாச்சியார்களுடன் நம்பெருமாள் திவ்ய ஸிம்மாசனத்தில் வீற்றிருந்து, மணவாளமாமுனிகளிடம் ஈடு காலஷேபம் கேட்கிறார். 

மிகவும் ஆனந்தமாக இருக்கிறது! அவ்வவ்விடங்களில் இது இந்த பாசுரத்தின் உட்பொருள், இது இந்த பாசுரத்தின் ஒண்பொருள் என்பதை தெளிவாக அருளிச்செய்கிறார். 

நம்பெருமாளும், முன்பொருகால் சக்ரவர்த்தி திருமகனாக அவதரித்த போது,  எப்படி தன் சரிதையை பண்டிதர்கள், பாமரர்கள் நடுவே பிராட்டியின் திருவயிறு வாய்த்த மக்களான லவ குசர்கள் மூலம் கேட்டு ஆனந்தம் கொண்டானோ, அதனை போன்றே இன்று நம்பெருமாள் ஆழ்வார், ஆசார்யர்கள் கோஷ்டியுடன், நிலத்தேவர்களான ஸ்ரீவைஷ்ணவர்கள் குழாங்களுடன் மணவாளமாமுனிகளிடம் ஈடு கேட்டு பூரித்து நிற்கிறான்.

 பத்து மாதங்களாக, ஆழ்வாரின் வாக்கின் சுவையை, மணவாளமாமுனிகளின் வியாக்கியான இன்சுவையும் கேட்டு மகிழ்கிறான்.

இரு வைணவர்கள் : ஆஹா! கேட்கவே மிகவும் அருமையாக உள்ளதே! கண்ணராக் கண்டால் எத்தனை இன்பமாக இருக்கும். முன்பொருகால் நம்பிள்ளை காலக்ஷேபத்தை கேட்க, பெரியபெருமாள் தன் நிலையை குலைத்து, சன்னதி கதவு வரை வந்தான் என்பதை அறிவோம். 

ஆனால், இப்போது திருவாய்மொழியை கேட்க, கடந்த பத்து மாதங்களாக தனது உற்சவங்களை நிறுத்தி கேட்கிறான் என்றால் அவன் திருவாய்மொழி மேலும், மணவாளமாமுனிகளின் மேலும் எத்தனை க்ருபை கொண்டுயிருக்க வேணும். இவ்விஷயத்தை கண்ணராக் காண சன்னதிக்கு விரைந்து செல்வோம்.

இடம் : பெரியபெருமாள் சன்னதி வாசல் கருட மண்டபம்

சேனைமுதண்மையார், ஆழ்வார், ஆசார்யர்கள் மற்றும் நிலத்தேவர்கள் குழாங்களுடன் நம்பெருமாள் திவ்ய ஸிம்மாசனத்தில் வீற்றிருந்து மணவாளமாமுனிகளின் வரவுக்காக காத்து கொண்டு இருந்தான்.

(இக்காலத்தில் நடைபெறும் அத்யன உற்சவத்தில் அரையர் வரவிற்க்காக காத்துயிருப்பது போல்)

அன்றைய தினம் சாற்றுமுறை தினமானதால், நம்பெருமாள் தானும் உயர்ந்த ஆடை அணிகலங்களை சாற்றிக்கொண்டு, சந்தன மண்டபத்தில் அடியார்கள் குழாம்களுடன் எழுந்தருளியிருந்தான்.

அடுத்த நிமிடம், அவ்விரு ஸ்ரீவைஷ்ணவர்களின் செவியில் தரையில் பட்டை அடிப்பது கேட்டது.

திருப்பி பார்த்தால், அப்போது அலர்ந்த தாமரைக்கு ஒப்பான திருவடிகளுடன், 
செந்துவராடையுடன், பன்னிரு திருநாமங்களுடன், ஆனந்தனுக்கு ஓப்பனான  வெண்மையான திருவுருவம், வெண் புரிநூலுடன், தோள் கண்டார் தோளே கண்டார் என்பதை போல இளைய பெருமாளுக்கு ஒப்பான, சுந்தர திருத்தோளினைகளுடன், திருக்கையில் முக்கோலும், சந்திரனை விட அழகியதான திருமுகமண்டலம், அதனில் கருணையே வடிவான திருக்கண்களுடன் ஒரு திருவுருவம், தமது அடியார் குழாம்களுடன்,  அவர்களின் முன்பு எழுந்தருளினார். 

அவரை கண்டாலே, ஞானம் அனுட்டானம் பரிபூரணர் என்பதை அறிந்து கொண்டனர்.

 இப்படி இவர் வருவதை கண்டால், எம்பெருமானார் தாமே தன் அடியார் குழாங்களுடன் எழுந்தருள்வது போன்று இருந்தது. 

அப்படி எழுந்தருள கூடியவர், கோயில் மணவாளமாமுனிகள் என்பதை அறிந்து கொண்டனர்.

ஸ்ரீரங்கநாராயண ஜீயர் தொடக்கமான ஸ்தலத்தார்கள் அவரை எதிர் கொண்டு வரவேற்றனர். மணவாளமாமுனிகள் நேரே கருட மண்டபம் சென்று, தண்டனிட்டு நம்பெருமாளை பார்த்து வடக்குமுகமாக அமர்ந்து கொண்டு தமது ஆசார்யரான திருவாய்மொழிப்பிள்ளையை மனதில் தியானித்து குருபரம்பரை தனியங்களை அருளிச்செய்ய தொடங்கினார்.

பெரிய ஜீயரின் முன்பே, பெரிய தட்டுகளில் தேங்காய், வெற்றிலை பாக்கு பழங்கள், புஷ்பமாலைகள், காஷாய திருப்பறியட்டங்கள், சந்தனம், கற்கண்டு , பட்டு பீதாம்பரங்கள் மற்றும் பலவகைப்பட்ட உபகாரங்கள் ஸித்தமாய் சேர்க்கப்பட்டிருந்தன.

வாசனை திரவியங்கள் மணம் பரப்பின. 

நெய்தீபங்கள் மங்கள ஒளியைக் காட்டின.

அங்கே கூடியிருந்த குழாம், நம்பெருமாள் பெரியஜீயரை உபசரிக்கும் நேர்த்தி கண்டு ஆச்சர்யப்பட்டனர்.

மாமுனிகள் கம்பீரமான தம்மிடற்றோசையில் "முனியே நான்முகனே" தொடங்கி ஸேவித்து "சூழ்ந்தகன்று" " அவாவறச் சூழ்" பாசுரங்களை அநுஸந்தித்து ஈடு சாற்றுமுறை செய்தார்.

பரமபதநாதனுக்கும் கிடைக்காத பாக்யம் நம்பெருமாளுக்கு கிடைத்தது!

மங்கள வாத்யங்கள் முழங்கின, பெரியமேளம் சேவிக்கப்பட்டது.

மணவாளமாமுனிகளுக்கு சம்பாவனை செய்யும் சமயம் வந்தது.

என்ன ஒரு ஆச்சர்யம்! எங்கிருந்தோ வந்தான் சிறுவன் ஒருவன்! நான்கு வயது அவனுக்கு! வந்தவன் நேராக பெரியஜீயர் முன்பு நின்றான்.

தன்னுடைய பெயர் "அரங்கநாயகம்" என்றான். 

பெரியோர்கள் பலர் அவனை விலக்க முயன்றனர். அவர்களால் அவனை விலக்க முடியவில்லை. பிடிவாதமாக பெரிய ஜீயர் முன்பு நின்றான்.

இரு கரம் கூப்பினான். 

கண்களில் ஆனந்த கண்ணீர் பெருகியது!

கம்பீரமான குரலில் பதம் பதமாக பிரித்து,

"ஸ்ரீஸைலேச தயா பாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம்
யதீந்த்ர ப்ரவணம் வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்"

( திருமலையாழ்வாரின் தயைக்கு இலக்கானவரும், ஞான பக்தி முதலான குணங்களை கடலாகவும், யதீந்த்ரரான எம்பெருமானாரிடத்தில் அன்பு மிக்கவராயுமிருக்கிற அழகிய மணவாள மாமுனியை வணங்குகிறேன்)

என்று சொன்னான்.

கூடியிருந்த பெரியோர்கள் காண, அச்சிறுவன் அடுத்த நொடிகளில் ஓடிப்போக, அவனை அப்பெரியோர்கள் அன்புத் சொற்களால் கொஞ்சி அழைத்து மீண்டும் சொல்வாய் என்று வேண்டினர்.

"எனக்கு ஒன்றும் தெரியாது" என்று விரைந்து ஓடி, பெரியபெருமாள் சன்னிதிக்குள் சென்றவன் மறைந்து போனான்.

அங்கிருந்தவர்கள், பெரியபெருமாளே பாலனாய் தோன்றி தனியன் வெளியிட்டதை உணர்ந்தனர். 

ஆண் மூலம் அரசாளும் என்பார்கள், ஆனால் இங்கோ ராஜாதிராஜனான பெரியபெருமாளையே ஆண்டுவிட்டார் மணவாளமாமுனிகள்.

(குறிப்பு: ஸ்ரீசைலேச வைபவம் 1433 நடைபெற்றதாக வரலாற்று ஆராச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அப்படி பார்த்தால் இவ்வைபவத்திற்கு  
வயது 588 ஆகிறது.)

மணவாளமாமுனிகளுக்கு நம்பெருமாள் சகல வரிசைகளும் சம்பாவனைகளும் சமர்ப்பித்து பொது நின்ற பொன்னங்கழலான ஸ்ரீசடகோபன் ப்ரஸாதித்து பலரடியார் முன்பு சிறப்பித்தார்.

பிறகு ப்ரதிவாதி பயங்கரம் அண்ணனுக்கு அருளப்பாடு கூறி "மணவாளமாமுனிகள் விஷயமாக வாழிதிருநாமம் அருளிச்செய்யும்" என்று நம்பெருமாள் நியமித்தார்.

அண்ணனும்,


வாழி திருவாய்மொழிப்பிள்ளை மாதகவால்
வாழும் மணவாள மாமுனிவன் – வாழியவன்
மாறன் திருவாய்மொழிப் பொருளை மாநிலத்தோர்
தேறும்படியுரைக்கும் சீர்
 
செய்ய தாமரை தாளினை வாழியே
சேலைவாழி திருநாபி வாழியே
துய்ய மார்பும் புரிநூலும் வாழியே
சுந்தரத் திருத்தோளிணை வாழியே
கையுமேந்திய முக்கோலும் வாழியே
கருணை பொங்கிய கண்ணினை வாழியே
பொய்யிலாத மணவாள மாமுனி – புந்தி வாழி
புகழ் வாழி – வாழியே
 
 
அடியார்கள் வாழ அரங்கநகர் வாழ
சடகோபன் தண்டமிழ்நூல் வாழ – கடல் சூழ்ந்த
மன்னுலகம் வாழ  மணவாள மாமுனியே!
இன்னுமொரு நுhற்றாண்டிரும்!


என்று பாசுரங்களை அருளிச்செய்தார்.

நம்பெருமாள் ஸகல மரியாதைகளுடன் பெரிய ஜீயரை மடத்துக்கு அனுப்பப் திருவுள்ளம் கொண்டான். மேலும் மணவாளமாமுனிகளை சிறப்பிக்க எண்ணினான்.

தமக்கே உரியதான சேஷ வாகனத்தில் மணவாளமாமுனிகளுக்கு ப்ரஹ்மரதம் பண்ணி ஸகல வாத்ய கோஷங்கள் ஒலிக்க அனைத்துக் கொத்து பரிகரங்களுடன் மடத்துக்கு எழுந்தருள செய்தான்.

 (அதனால் தான் இன்றளவும் மணவாளமாமுனிகள் சேஷ பீடத்தில் சேவை சாதிக்கின்றார்)

மணவாளமாமுனிகளை ஈடு முப்பத்தாறாயிரப்பெருக்கர் என்று பெருமை வெளியிட்டான் நம்பெருமாள்.

திருமலை, பெருமாள்கோயில் தொடக்கமான திவ்யதேசங்களுக்கு சேனைமுதலியார் ஸ்ரீமுகமாக அணுஸந்தான காலங்கள் தோறும் ஜீயர் விஷயமாக நம்பெருமாள் அருளிச்செய்த தனியான "ஸ்ரீ சைலேச தயாபாத்ரம்" என்ற மந்திரத்தை கொண்டு தொடங்கவும், திவ்யப் பிரபந்தம் சாற்றுமுறையில் "வாழி திருவாய்மொழிப்பிள்ளை" என்று தொடங்கி "மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்" என்று அநுஸந்தித்து தலைக்கட்டவும் என்று நியமித்தார்.

இந்த வைபவம் கண்ட இரு வெளியூர் வைணவர்களுக்கு மிகவும் ஆனந்தம்.

 தமக்கு கதியான ஒரு பொருளை தந்தார் பத்ரி நாராயணன் என்று பெருமை கொண்டனர்.

இங்கு நம்பெருமாள் தானே, இத்தனை சிறப்புகளை செய்தார். 

பத்ரி நாராயணனை நினைத்து என் இவர்கள் பெருமை கொள்ள வேண்டும் ?
காரணமிருக்கிறது!

இவ்விரு ஸ்ரீவைஷ்ணவர்களும், பத்ரிகாச்ரமம் சென்று நாராயணனை வணங்கி, அடிபணிந்து "எங்களுக்கு உஜ்ஜீவகமாக ஒரு பொருளைத் திருவாய் மலர்ந்து அருளவேண்டும் கண்ணனே!" என்று ப்ரார்த்தித்தார்கள்.

உடனே " ஸ்ரீசைலேச தயாபாத்ரம் தீபக்த்யாதி குணார்ணவம் " என்ற வாக்கியத்தை அவர்களுக்கு கூறி, "நீங்கள் ஸ்ரீரங்கத்திற்கு செல்லுங்கள். அங்கு இந்த ச்லோகத்தின் பிற்பகுதியை நீங்கள் உஜ்ஜீவிக்க சொல்லுவோம்" என்று அனுப்பிவிட்டு, திருவரங்கனாக இருந்து பிற்பாதியைக் இங்கே கூறினான் பத்ரி எம்பெருமான்.

இவ்வைபவத்தை அப்பிள்ளார் தாமும் சம்பிரதாய சந்திரிகையில்,

"4. வதரியாச் சிரமத்தில் இருமெய்த் தொண்டர்
வகையாக நாரணனை அடிவணங்கிக்
கதியாக ஓர் பொருளை அளிக்கவேண்டும்
கண்ணனே! அடியோங்கள் தேறவென்ன,
சதிரான ச்ரீசைல மந்திரத்தின்
சயமான பாதியை ஆங்கு அருளிச் செய்து
பதியான கோயிலுக்கு சென்மின் நீவிர்
பாதியையும் சொல்லுதும் யாம் தேறவென்றார்"

5. சென்றவர்கள் இருவருமே சேர வந்து
திருவரங்கன் தினசரியை கேளா நிற்பச்
சன்னதிமுன் கருடாழ்வார் மண்டபத்தில்
தாம் ஈடு சாற்றுகின்ற சமயம் தன்னில் 
பொன்னிதனில் நீராடிப் புகழ்ந்து வந்து
புகழரங்கர் சன்னிதிமுன் வணங்கி நிற்பச்
சன்னதியின்று அரங்கர் தாமே அந்தத்
தனியனுரை செய்து தலைக்கட்டினாரே 

என்று அருளிச்செய்தார்.

எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தவை எல்லாம் மந்தரங்கள் ஆகும்.

அஷ்டாஷர மஹாமந்தரம் எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தது. 
அதைத் திருமந்திரம் என்கிறோம்.

"த்வயம்" எம்பெருமானுடைய திருவாக்கிலிருந்து வெளிவந்தது. 

அதனால் "த்வய" மந்த்ரம்.

சரம சுலோகத்தையும் அவனே வெளியிட்டான். 

அதுவும் த்வய மந்திரத்தின் விவரணம் தான். 

எம்பெருமான் திருவாக்கிலிருந்து  வெளிப்பட்டது கீதை. அதனைத் கீதோபநிஷத் என்கிறார்கள்.

"ஸ்ரீசைலேச" தனியனும் திருவரங்கர் திருவாக்கிலிருந்து வெளிவந்தபடியால் அஷ்டாஷர மஹாமந்திரம் போல் இதுவும் திருமந்திரமே. 

திருமந்திரம் என்கிற சொல்லில் முதலில் "திரு" என்ற சொல் அமைந்திருக்கிறது. 

திருவரங்கன் அருளிய தனியனிலும் முதலில் "ஸ்ரீ" என்ற சொல் அமைத்திருக்கிறது. எனவே "ஸ்ரீசைலேச" தனியனும் திருமந்திரமே என்பது அடியேன் பிதாமஹரின் கருத்து. மேலும் மேலும் இத்தனியனும், வாழி திருநாமமும் எங்கும் தடைபெறாமல் நடக்க பெரிய ஜீயர் திருவடிகளில் வணங்குகிறேன்.


சேற்றுக் கமல வயல் சூழ் அரங்கர் தம் சீர் தழைப்ப
போற்றித் தொழும் நல் அந்தணர் வாழ் இப்பூதலத்தே
மாற்றற்ற செம்பொன் மணவாள மாமுனிகள் வந்திலனேல்
ஆற்றில் கரைத்த புளி அல்லவோ தமிழ் ஆரணமே


ஜீயர் திருவடிகளே சரணம்.

 (பிள்ளைலோகம் இராமானுசன்  சுவாமி கட்டுரையிலிருந்து --- நன்றி சுவாமி  )







 

பெரிய திருமொழி - ஐந்தாம் பத்து 

5 -4 உந்தி மேல் நான்முகனை 

திருவரங்கம் - 1


1378

உந்தி மேல் நான்முகனைப் படைத்தான்*  உலகு உண்டவன்
எந்தை பெம்மான்*  இமையோர்கள் தாதைக்கு இடம் என்பரால்*
சந்தினோடு மணியும் கொழிக்கும்*  புனல் காவிரி* 
அந்திபோலும் நிறத்து ஆர் வயல் சூழ்*  தென் அரங்கமே.    1
      

 
1379
 
வையம் உண்டு ஆலிலை மேவும் மாயன்*  மணி நீள் முடி* 
பை கொள் நாகத்து அணையான்*  பயிலும் இடம் என்பரால்*
தையல் நல்லார் குழல் மாலையும்*  மற்று அவர் தட முலைச்*
செய்ய சாந்தும் கலந்து இழி புனல் சூழ்*  தென் அரங்கமே. 2





ஆச்சாரியார் திருவடிகளே சரணம்....


அன்புடன்
அனுபிரேம் 💜💜

No comments:

Post a Comment