28 July 2025

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

 இன்று திருவாடிப்பூரம் ஸ்ரீ கோதை நாச்சியார்  திருஅவதார தினம் ... !!!







ஆண்டாள் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப்  பதங்கள் வாழியே!


மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். 

ஏழாம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம்  செவ்வாய்க்கிழமை, பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதியில்  தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்..


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பெரியாழ்வார் தாம் அமைத்திருந்த நந்தவனத்திலுள்ள ஒரு துளசிச் செடியின் அடிவாரத்தில், பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். 

அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். 

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.






மணப்பருவம் எய்திய ஆண்டாள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன்” என்றும்

 ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்று ஸங்கல்பித்து கொண்டாள்.
.
அரங்கநாதனின்  பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள். 

.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத,*
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்*
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்*
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.*

என்று கனவு காண்டாள்.
.
ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு வசமாகி  கோதையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். 

அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி கோதையை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான். 
.
பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன், ஏவலாளரைக் கொண்டு,  விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். 

பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். 

அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி  பெரியாழ்வார் முதலானோருடன்  திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தான்.  
.
திருவரங்கத்தில் நுழைந்ததும் 
அரங்கனுக்காகவே  அலங்கரித்தால் போல் இருந்த  ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி
பெரிய பெருமாள் சந்நிதியில் சென்று, மறைந்து எம்பெருமானுடன் ஒன்றறக் கலந்தாள்.
.
இது கண்ட யாவரும் பெரியாழ்வாரைப்  பெரிய பெருமாளின் மாமனார் என்றும் சமுத்ரராஜன் போலே என்றும் போற்றினர். 
.
ஆஸ்சர்யமான இந்த ஸம்பவத்தை 
ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்வாமி தேசிகன் தான் அருளியுள்ள *கோதாஸ்துதியில்* நயம்பட விவரித்துள்ளார். 
.














நாச்சியார் திருமொழி

6. வாரணமாயிரம் 

மாயவன் தன்னை மணம்  செய்யக் கண்ட கனவை உரைத்தல் 


குயிலிடத்திலே தன்னை எம்பெருமானுடன் சேர்த்துவைக்குமாறு ப்ரார்த்தித்தாள். அது நடக்காததால் மிகவும் வருத்தமுற்றாள். எம்பெருமானோ இவளுக்கு இன்னமும் தன் மீதான ப்ரேமத்தை அதிகரிக்கவைத்து பின்பு வரலாம் என்று காத்திருந்தான்.

 நம்மாழ்வாருக்கும் முதலிலே மயர்வற மதிநலம் அருளினாலும், பரபக்தி தொடக்கமாக பரமபக்தி நிலை ஈறாக வரவழைத்தே பரமபதத்தில் நித்ய கைங்கர்யத்தைக் கொடுத்தான். 

ஸீதாப் பிராட்டியும் எம்பெருமானைப் பிரிந்திருந்த நிலையில் “நான் ஒரு மாதம் வரை பெருமாளின் வரவுக்குக் காத்திருப்பேன்” என்று சொன்னாளே.

 ஆனால் பெருமாளோ “ஒரு க்ஷணமும் என்னால் பிராட்டியைப் பிரிந்திருக்கமுடியாது” என்றானே. 

அங்கே த்ரிஜடை போன்றவர்கள் நல்ல ஸ்வப்னம் கண்டு அதை ஸீதாப் பிராட்டிக்குச் சொல்ல அவள் தரித்திருந்தாள்.

 ஆண்டாளோ தானே ஸ்வப்னம் கண்டால் மட்டுமே தரித்திருக்கக்கூடியவள். எம்பெருமான் சிலர் உறங்கும்போது தான் உறங்காமல் இருந்து அவர்களுக்கு ஸ்வப்னத்தில் ஆனந்தத்தைக் கொடுக்கும்படி இருக்கிறான் என்று சாஸ்த்ரம் சொல்லுகிறது. 

அப்படியே இவளுக்கும் தனக்கும் நடக்கும் திருக்கல்யாண வைபவத்தை எம்பெருமான் இவளுக்கு ஸ்வப்னத்தில் காட்டிக்கொடுக்க அதைத் தான் அனுபவைத்தபடியைத் தன் தோழிகளுக்குச் சொல்லித் தரித்துக்கொள்கிறாள்.


முதல் பாசுரம்--- அவன் வந்த பிறகு அனுபவித்துக் கொள்ளலாம் என்றில்லாமல் அவன் வரவு தொடக்கமாக அனுபவிக்க வேண்டும் என்று அவன் வரவைச் சிந்திக்கிறாள்.

556

வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரணன்  நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்  1


என் உயிர்த்தோழியே! எல்லா குணங்களிலும் பூர்ணனான ஸ்ரீமந்நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ்ந்து வர, ப்ரதக்ஷிணமாக வருகிறான் என்று எதிரே பொன்னாலான பூர்ண கும்பங்களை வைத்து நகரம் முழுவதும் தோரண ஸ்தம்பங்களை நாட்ட, இவற்றை எல்லாம் நான் என் கனவில் அனுபவித்தேன்.


இரண்டாம் பாசுரம்---மணப்பந்தலில் கண்ணன் புகுந்ததைக் கண்டேன் என்கிறாள்.

557
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்
கோள் அரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான் 2


தோழீ! நாளை விவாஹ மஹோத்ஸவம் என்ற முஹூர்த்தம் நிர்ணயித்து, பாளைகளோடு கூடிய பாக்கு மரங்களாகிற அலங்காரங்களை உடைய திருமணப் பந்தலின் கீழே நரஸிம்ஹன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் திருநாமங்கள் கொண்ட ஒரு இளைஞன் ப்ரவேசிப்பதை நான் என் கனவில் கண்டு அனுபவித்தேன்.



மூன்றாம் பாசுரம் --- கூறைப் புடவை, மணமாலை ஆகியவைகளை அணிந்துகொள்ளும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.

558

இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி, மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான் 3


தோழீ! இந்த்ரன் முதலான தேவர்கள் எல்லாரும், இங்கே வந்து இருந்து என்னை மணப்பெண்ணணாகப் பேசி, தேவையான ஏற்பாடுகளை ஆலோசித்து, துர்க்கை என்கிற என்னுடைய நாத்தனார் (கணவனின் ஸஹோதரி) கல்யாணப் புடவையை நான் உடுத்தும்படி செய்து, நறுமணம் மிகுந்த மாலைகளையும் சூட்டும்படி நான் கனாக் கண்டேன்.


நான்காம் பாசுரம் -- விவாஹ அனுஷ்டான க்ரமத்தின் ஆரம்பத்தில் செய்யப்படும் காப்புக் கட்டிக்கொள்ளும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.



559

நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான் 4


தோழீ!  பெரியோர்களான பல ப்ராஹ்மணர்கள் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து உயர்ந்த ஸ்வரத்தில் மங்களங்களைச் சொல்லிப் பூக்களால் கட்டப்பட்ட மாலையை அணிந்தவனான பரம பவித்ரனான கண்ணன் எம்பெருமானுடன் என்னைச் சேர்த்துக் காப்புக் கயிறைக் கட்டுவதை நான் கனாக் கண்டேன்.



ஐந்தாம் பாசுரம்--- தீபம், பூர்ண கும்பம் ஆகியவற்றுடன் மணப்பந்தலுக்குள் வரவேற்கப்பட்டு எம்பெருமான் எழுந்தருளும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.



560

கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான் 5


தோழீ! அழகிய இளம் பெண்கள் ஸூர்யனுடைய ஒளி போன்ற ப்ரகாசிக்கும் மங்கள தீபத்தையும் பொற்கலசங்களையும் (பூர்ணகும்பம்) கையில் ஏந்திக்கொண்டு, எதிர் கொண்டு அழைக்க, வடமதுரை மன்னனான கண்ணன் எம்பெருமான் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி முழுவதும் அதிரும்படி எழுந்தருளியதை நான் கனாக் கண்டேன்.






ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை


22
இன்றோ திருவாடிப்பூரம்*
 எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்*
 குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னை இகழ்ந்து*
 ஆழ்வார் திருமகளாராய்.



23
பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த*
 திருவாடிப்பூரத்தின் சீர்மை*
 ஒருநாளைக்கு உண்டோ மனமே! உணர்ந்து பார்*
 ஆண்டாளுக்கும் உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.



24
அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்*
 ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்*
 பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்*
 வழுத்தாய் மனமே! மகிழ்ந்து.


















ஸ்ரீ  ஆண்டாள் திருவடிகளே சரணம்.......

அன்புடன்
அனுபிரேம்💚💚💓





No comments:

Post a Comment