11 August 2021

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

 இன்று  ஆண்டாள் அவதாரம்  திருநட்சத்திரம் .....ஆடிப்பூரம்



ஆண்டாள் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப்  பதங்கள் வாழியே!





ஏழாம் நூற்றாண்டு,

 நள ஆண்டு,

 ஆடி மாதம்   செவ்வாய்க்கிழமை,

பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதியில்  தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்..



ஆண்டாள் வைபவங்கள்  முந்தைய பதிவுகள்  இங்கே ...
ஸ்ரீ ஆண்டாள் , 

ஸ்ரீ ஆண்டாள் வைபவங்கள்   மற்றும்  



ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பெரியாழ்வார் தாம் அமைத்திருந்த நந்தவனத்திலுள்ள ஒரு துளசிச் செடியின் அடிவாரத்தில், பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். 

அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். 

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.









எம்பெருமான் வாக்கு மாறமாட்டான், நம்மை ரக்ஷிப்பான். 

அது தப்பினாலும் நாம் பெரியாழ்வார் திருமகள், அதற்காகவாவது நம்மைக் கைக்கொள்வான் என்று உறுதியாக இருந்தாள். 

அப்படியிருந்தும் அவன் வாராமல் போகவே, ஸ்ரீ பீஷ்மர் எப்படி அர்ஜுனனுடைய அம்பகளாலே வீழ்த்தப்பட்டு அம்புப் படுக்கையில் இருந்தாரோ, அதைப் போலே, எம்பெருமானை நினைவூட்டும் பொருள்களாலே துன்பப்பட்டு மிகவும் நலிந்த நிலையை அடைந்தாள்.

 அதைக்கண்ட தாய்மார், தோழிமார் மற்றும் அனைவரும் அங்கே வந்து கூடி நின்றனர். அவர்களிடத்தில் இவள் “நான் அவன் வருவான் என்று உறுதியாக இருந்தேன். 

என்னுடைய நிலை இப்படி ஆகிவிட்டதே. இந்த நிலையிலும் அவன் வரவில்லையே. 

அவன் தன்மையைப் பார்த்தீர்களே” என்று மிகவும் வருந்தினாள். பிறகு “என்னைப் போன்ற சில பெண்களுக்கு (பிராட்டிமார்களுக்கு) அவன் முன்பு உதவியுள்ளான். என்னையும் வந்து கைக்கொள்வான்” என்று சொல்லி வருத்தத்துடன் தன்னை தரித்துக் கொள்கிறாள்.






நாச்சியார் திருமொழி
பதினொராம் திருமொழி  : தாமுகக்கும்

தலைவி மாயவன்செய்கைக்கு மனம்பொறாது தாய்மார் முதலியோரை நோக்கி வருந்திகூறுதல்


முதல் பாசுரம் - “இந்த துயரமிகு நிலையிலும் நீர் வந்து உதவாமல் இருப்பது ஏன்?” என்று கேட்டால் அதற்கு பதில் வைத்திருக்கிறாரோ என்று கேளுங்கோள் என்கிறாள். என்னிடத்திலும் குறையில்லை, அவரிடத்திலும் குறையில்லை, இப்படி இருந்தும் அவன் வரவில்லை. இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் என்கிறாள்.



தாம் உகக்கும் தம் கையில் சங்கமே போலாவோ?
யாம் உகக்கும் எம் கையில் சங்கமும் ஏந்திழையீர்!
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்
ஆ! முகத்தை நோக்காரால் அம்மனே! அம்மனே!

ஆபரணங்களை அணிந்துள்ள பெண்களே! நான் உகந்து அணிந்திருக்கும் என் கைவளைகள், தான் உகந்து வைத்திருக்கும் சங்குக்கு ஒப்பாகாதோ? (எனக்கு உதவாததால்) கொடிய முகங்களையுடைய திருவனந்தாழ்வானாகிற படுக்கையின் மேலே, சயனித்திருக்கிற திருவரங்கநாதர் என்னுடைய முகத்தை பார்க்கவில்லையே. ஐயோ! ஐயோ! ஐயோ!







இரண்டாம் பாசுரம் - தன்னுடைய நிலையை மறைக்க வேண்டிய தாய்மார்களிடம் தன் நிலையை வெளியிடுகிறாள்.

எழில் உடைய அம்மனைமீர்! என் அரங்கத்து இன் அமுதர்
குழல் அழகர், வாய் அழகர், கண் அழகர் கொப்பூழில்
எழு கமலப் பூ அழகர் எம்மானார் என்னுடைய
கழல் வளையைத் தாமும் கழல் வளையே ஆக்கினரே

அழகிய தாய்மார்களே! திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கிற என்னுடைய இனிய அமுதம் போன்றவராய் அழகிய திருக்குழற்கற்றையை உடையவராய், அழகிய திருவதரத்தை உடையவராய், அழகிய திருக்கண்களை உடையவராய், திருநாபியில் உண்டான தாமரைப்பூவாலே அழகு பெற்றவராய், எனக்கு ஸ்வாமியான அழகிய மணவாளர் என்னுடைய கழலாத கைவளையை அவர்தாம் கழன்று விழுகின்ற வளையாக ஆக்கினார்.







மூன்றாம் பாசுரம் - உன்னிடத்தில் விருப்பம் இருந்ததால்தானே உன் கைவளையை அவர் எடுத்துக்கொண்டார். தம்முடைய சொத்திலே ஒன்று குறைந்ததால், உன்னிடத்தில் இருந்து அதைப் பெற்றுக்கொண்டு பூர்த்தியடைந்தார் என்று சொல்ல, அதற்கு “இது இல்லாமல் துன்புற்று, இதைப் பெற்ற பின் இன்பம் அடைந்தாரோ? அதெல்லாம் இல்லை, என்னைத் துன்புறுத்துவதற்காகவே, இவ்வாறு செய்தார்” என்று வெறுக்கிறாள்.


பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண் உலகும்
அங்கு ஆதும் சோராமே ஆள்கின்ற எம் பெருமான்
செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார்
எங் கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே?


அலை வீசுகிற கடலாலே சூழப்பட்ட இந்த பூலோகமும், பரமபதமும் அங்கு சிறிதும் குறைவுபடாதபடி ஆள்கின்ற எம் ஸ்வாமியாய், செங்கோல் செலுத்த வல்லவராய், கோயில் என்று அழைக்கப்படும் திருவரங்கத்திலே சயனித்திருக்கும் ஸ்ரீமான் என்னுடைய கைவளையாலே தம்முடைய குறை தீர்த்துக்கொள்வாரோ?




நான்காம் பாசுரம் - “எம்பெருமான் உன் மீதுள்ள விருப்பத்தாலேயே வளையைக்கொண்டான். இதற்கு நீ ஸந்தோஷப்படத்தானே வேண்டும்?” என்று கேட்க, அதற்கு இவள் “என்னைப் பிரிந்து வாழ முடியாமல் என் வளையை எடுத்துக்கொண்டார் என்றால், நான் உயிர் வாழவேண்டும் என்பதற்காக ஒரு முறை நான் இருக்கும் தெருவில் போக வேண்டாமா?” என்கிறாள்.


மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார்

பச்சைப் பசுந் தேவர் தாம் பண்டு நீர் ஏற்ற

பிச்சைக் குறை ஆகி என்னுடைய பெய்வளை மேல்

இச்சை உடையரேல் இத்தெருவே போதாரே?


மேல் தளங்களாலே அலங்கரிக்கப்பட மாடங்களையும் மதிள்களையுமுடைய திருவரங்கத்தில் எழுந்தருளியிருப்பவராய் முன்பு வாமனாவதாரம் செய்தருளினவராய் பசுமை தங்கிய தேவரான பெரிய பெருமாள் தாம் முன்பு நீரை ஏந்திப்பெற்ற பிச்சையிலே குறை உண்டாகி, அக்குறையைத் தீர்ப்பதற்காக என்னுடைய கையில் இருக்கும் வளைமேல் விருப்பமுடையவராகில் இத்தெரு வழியாக எழுந்தருளமாட்டாரோ?








ஐந்தாம் பாசுரம் - என் வளையை மட்டுமல்ல என் உடம்பையும் கொள்ளைகொள்வானைப்போலே இருந்தான் என்கிறாள்.

பொல்லாக் குறள் உருவாய்ப் பொற் கையில் நீர் ஏற்று
எல்லா உலகும் அளந்து கொண்ட எம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையான்
இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே

சிறந்த வாமனரூபியாய் அழகிய கையாலே நீரை ஏற்று பிக்ஷை பெற்று ஸகல லோகங்களையும் அளந்து தன் வசப்படுத்திக்கொண்ட ஸ்வாமியாய் நன்மையுடைய பெரியோர் வாழ்கிற குளிர்ந்த திருவரங்கத்தில் திருவனந்தாழ்வானைப் படுக்கையாக உடையரான பெரிய பெருமாள் ஒன்றுமில்லாதவளான என்னுடைய கைம்முதலான இந்த சரீரத்தையும் கொள்ளைகொள்வதைப்போலே இருக்கிறான்.




 


ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக வன்றோ
 இங்காண்டாள் அவதரித்தாள்* குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னையிகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய். 
22



பெரியாழ்வார் பெண்பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை* ஒருநாளைக்கு
உண்டோ மனமே! உணர்ந்துபார்* ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு.
23



அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்* ஆழ்வார்கள்
 தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்* பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்*
வழுத்தாய் மனமே! மகிழ்ந்து 
24









ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


அன்புடன்
அனுபிரேம்


1 comment:

  1. ஆடிப்பூரம் - தகவல்களும் படங்களும் சிறப்பு.

    ReplyDelete