குழுமாயி அம்மன் கோயில், திருச்சி.
திருச்சியில் உய்யகொண்டான் ஆற்றங்கரையில்,
உய்ய கொண்டான், கோரையாறு, குடமுருட்டி ஆறுகள் பிரியும் வனப்பகுதியில்
குழுமாயி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
கோயிலுக்கு அருகில் தொட்டிப் பாலம் உள்ளது.
திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து மேற்கே நான்கு கி.மீ தொலைவில் உள்ளது இந்த அருள்மிகு குழுமாயி அம்மன் ஆலயம்.
இந்த கோயிலுக்குச் செல்ல புத்தூர் நாலு ரோடு , பிஷப் ஹீபர் கல்லூரி வழியாக குமரன் நகர் செல்ல வேண்டும். அங்கிருந்து இடது (தெற்கு) பக்கம் கோயிலுக்குச் செல்லும் பாதை வழியாக செல்ல வேண்டும் ...
குழுமாயி அம்மன் கோயில் வரலாறு -
திருச்சி புத்தூர் சோழனூர் என்ற பகுதியில், ஒரு புறம் சலசலத்து ஓடும் உய்யக்கொண்டான் வாய்க்கால், மறுபுறம் வயல்வெளி என பசுமை வளம் சேர்க்கும் இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த திருச்சி மாநகரை மங்கம்மாள் என்ற ஒரு அரசி ஆண்டு வந்தாள். அவருடைய ஆட்சியில் மக்கள் செல்வச் செழிப்புடன் வாழ்ந்து வந்தனர். தற்போது கோவில் இருக்கும் பகுதியானது, இந்த காலகட்டங்களில் ஒரு வயல் வெளியாக இருந்தது. அந்த ஊர் மக்கள் விவசாயம் செய்து தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தனர்.
அந்த ஊரில் உள்ள ஒருவர் தன்னுடைய நிலத்தை சமன் செய்ய வெட்டியபோது, திடீரென ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டு வெளியே வந்தது. அப்போது அந்த ஊர் கிராம மக்கள் அனைவரும் அந்த இடத்தில் ஒன்று சேர்ந்தனர்.
அப்போது அங்கு இருந்த ஒரு பெண்ணுக்கு அருள் வந்து, அந்த சிறுமி... நான் காளி நான் இங்கே குடி கொண்டிருக்கிறேன். நான் காவல் தெய்வமாக இருந்து உங்களை பாதுகாப்பேன் என்று கூறவே, அந்த கிராம மக்கள் உடனே அங்கு ஒரு கோயிலை எழுப்பி, ஒரு அம்மன் சிலையை நிறுவி அதனை தெய்வமாக வழிபட்டனர்.
குழி வெட்டும்போது இந்த அம்மன் பிரசன்னமாகி அருள்பாலிப்பதால், குழுமாயி அம்மன் என்று அழைத்தனர்.
இதுவே இந்தக் கோயில் உருவானது பற்றி கூறப்படும் செவிவழி வரலாறு ஆகும்.
பின்னர், மலையாள மந்திரவாதி ஒருவன் ஏவல் பில்லி சூனியம் செய்து அம்மனின் சக்தியை அடக்குவது போல் மந்திர வேலைகளைச் செய்தானாம். அப்போது இரட்டை மலை ஒண்டி கருப்புசாமி, அருள்வாக்கு அளித்தாராம். 'எனக்கு ஆடு பலி கொடுத்து விழா நடத்துங்கள் அந்த மந்திரவாதியை நான் அழிக்கிறேன்' என்றாராம்.
அதன் படி கருப்புசாமிக்கு ஆடு பலியிட்டு வழிபட்டனர்.
மந்திர வாதி அழிக்கப்பட்டான்.
அதன் காரணமாகவே இந்த குழுமாயி அம்மனுக்கு காவல் தெய்வமாக இரட்டைமலை ஒண்டி கருப்பு சாமி உள்ளார்.
மேலும் இக்காரணத்திற்காக இக்கோவிலில் ஒண்டி கருப்பு சாமிக்கே முதலில் பூஜை செய்யப்படுகிறது. அதன் பிறகு குழுமாயி அம்மனுக்கு பூஜை நடத்தப்படுகிறது.
அந்த மலையாள மந்திரவாதி அழிக்கப்பட்ட நாளை தான்,மக்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மாசி மாதம் முதல் வாரம் புதன்கிழமை அன்று காப்பு கட்டும் திருவிழா நடக்கும்...... செவ்வாய்க்கிழமை இரவு காளி வட்டம் நடக்கும். புதன்கிழமை சுத்த பூஜையும் வியாழக்கிழமை குட்டிக் குடித்தல் வைபவம் நடக்கும்.
வெள்ளிக்கிழமை மஞ்சள் நீராடுதலும், சனிக்கிழமை அன்று சாமி குடியேறுதல் நிகழ்ச்சியும் நடைபெறும். அன்றுடன் திருவிழா முடிவடைகிறது.
உற்சவ அம்மன் -
குழுமாயி அம்மனுக்கு உற்சவ அம்மன் சிலை கிடையாது. பனை ஓலையால் தான் உற்சவ அம்மன் செய்யப்படுகிறது ஆண்டுதோறும் திருவிழாவின் போது தான், பனை ஓலைகளை அம்மன் உருவில் கத்தரித்து அதை கருப்பு துணியால் வைத்து அம்மன் உருவை தயாரிப்பார்கள்.
சப்பரத்தில் வைத்துதான் அம்மன் திருவீதி உலா நடக்கும். சப்பரத்தில் உள்ள அம்மன் உருவுக்கு பின்பக்கத்தில் மற்றொரு அம்மன் உருவமும் இருக்கும். அது கடந்த வருடம் செய்யப்பட்டது ஆகும். அம்மன் இருபுறமும் நோக்குகிறாள் என்பதற்காக இவ்வாறு இரண்டு உருவங்கள் அமைக்கப்படுகின்றன.
திருவிழா முழுவதும் புத்தூர் அக்ரஹாரம் அருகே தான் நடக்கும். கோவிலில் இருந்து அம்மனை மந்தைக்கு கொண்டு வருவர். திருவிழா காலங்களில் அம்மன் இங்கு இருப்பார், பின் சாமி குடியேறுதல் அன்று மீண்டும் தன் கோவிலுக்கு அம்மன் செல்லுவார்.
வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்
வேல்முருகன் அன்னை அவள் வேண்டும் வரம் தந்திடுவாள்
பாற்கடலாய் அவள் கருணை பெருகிடவே செய்திடுவாள்
பக்தர்களை கண்ணிமை போல் எப்போதும் காத்திடுவாள் (வேற்காடு)
தீராத வினை எல்லாம் தீர்த்து வைக்கும் தெய்வமகள்
போராடும் பாவங்களை பறந்தோடச் செய்பவளாம்
திருச்சாம்பல் அணிந்தோரை திடமுடனே காப்பவளாம்
திருமாலின் சகோதரியாம் கருநாக ரூபிணியாம் (வேற்காடு)
எங்கும் நிறைந்தவளாம் ஏகாந்த ரூபிணியாம்
மங்களமாய் வாழ்வளிக்கும் மணிகண்டன் தாயவளாம்
சங்கரன் முதல் நாரணயனும் பணிந்திடும் பரதேவதையாம்
பங்கஜம் முகம் கொண்டவளாம் பரமசிவன் நாயகியாம் (வேற்காடு)
ஓம் சக்தி ஓம் ...
ஓம் சக்தி ஓம் ...
அனுபிரேம்
இதுவரை சென்றதில்லை. வாய்ப்பு கிடைக்கும்போது அவசியம் அம்மனைச் சென்று தரிசிப்பேன்.
ReplyDeleteநல்ல தகவல்கள். படங்களும் நன்று.
ReplyDeleteவாய்ப்பு கிடைத்தால் செல்ல வேண்டும்.