23 August 2021

மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  ஆவணி மூல திருவிழா மூன்றாம்  நாள் - மாணிக்கம் விற்ற லீலை ....

முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடைபெற்றது.

இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை  !
திருவிளையாடற் புராணம் -


வீரபாண்டியனின் மனைவிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. தெய்வ வழிபாடு நடத்தி  சதுர்த்தி, சோமவாரம் போன்ற விரதங்களை கடைபிடித்தனர்.

 நாட்கள் சில கழிந்தன. 

ஈசனின் அருளால் அரசியார் வயிற்றில் ஒரு சற்புத்திரன் தோன்றினான். 
புத்திரனுக்கு வேதப்படி சாதகன்ம முதலாக பிற சடங்குகளை வீரபாண்டியன் சிறப்புற செய்து முடித்தான். 

ஒரு நாள் வீரபாண்டியன் வேட்டையாட காட்டுக்குச் சென்றான். விதி விளையாடியது. 

வீரபாண்டியன் புலிக்கு இரையாகி பொன்னாடு போய் சேர்ந்தான். மன்னன் விண்ணுலகம் அடைந்த செய்தி கேட்டு மக்கள் சோகத்தில் மூழ்கினர். நாடே சோகக் கடலில் மூழ்கியது. 

இந்த நேரத்தில் மன்னரின் பிற மனைவிகளும் அவரது புதல்வர்களும், அரண்மனையில் கிடைத்த பொன் ஆபரணம், மகுடம் போன்ற பிற பொருள்களையெல்லாம் கவர்ந்து கொண்டு தலைமறைவாகினர். 

அமைச்சர்கள் இளங்குமாரனைக் கொண்டு வீரபாண்டியனுக்கு இறுதி சடங்குகள் செய்து முடித்தார்கள். வீரபாண்டியனின் மைந்தனுக்கு முடிசூட்ட அமைச்சர்கள் விரும்பினர். 

அரண்மனைப் பொக்கிஷத்தை திறந்து பார்த்த போது நவமணிகள் இழைத்த முடியும், வேறு சில பொருட்களும் காணாமல் போயிருந்தது. 

செய்வதறியாது நின்ற அமைச்சர்கள் திருக்குமாரனை அழைத்துக் கொண்டு திருக்கோயிலின் கோபுர வாயிலை அடைந்தனர். 

அங்கே சொக்கநாதப்பெருமான் ஒரு வியாபாரியைப் போன்று வேடமணிந்து அவர்கள் முன் வந்தருளினார். 

தங்க வியாபாரி அவர்களைப் பார்த்து, நீங்கள் கவலை கொண்ட முகத்தோடு இங்கு வரக் காரணம் என்ன? என்று கேட்டார். அமைச்சர்கள் அரண்மனையில் நிகழ்ந்த அனைத்தையும் அவரிடம் விளக்கமாகக் கூறினர். 

அதைக் கேட்ட வியாபாரி, அமைச்சர்களே! என்னுடன் வாருங்கள். 

கிரீடம் செய்வதற்கான தரமான நவரத்தினக்கற்கள் பல என்னிடம் உள்ளன. 

காணாமல் போன கற்களை விட இவை தரமானவை. மேலும், பாண்டிய மன்னர்களுக்கு எங்கள் குடும்பத்தினரே பரம்பரை பரம்பரையாக கிரீடங்கள் உருவாக்கித் தந்திருக்கிறோம்.

 காணாமல் போன கற்களைப் பற்றிய கவலையை விடுங்கள். அவை மெதுவாகத் திரும்பக் கிடைக்கட்டும். 

பாண்டியனின் ஒற்றர்கள் திறமைசாலிகள். 

அவர்கள் எப்படியும் கற்களைக் களவாடியவர்களின் இருப்பிடத்தைக் கண்டுபிடித்து விடுவார்கள். அவை கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டாம். 

புதிய கற்களை கிரீடத்தில் பதித்து தருகிறேன். அதைக் கொண்டு செல்வபாண்டியனுக்கு பட்டாபிஷேகம் செய்து விடலாம், என்றார். 

அமைச்சர்கள் அந்த தங்க வியாபாரியை இதற்கு முன் பார்த்ததே கிடையாது. 

இருப்பினும், தங்களை அறியாமலே அவர் பின்னால் சென்றனர். கோயில் மண்டபம் ஒன்றில் அவர்களை அமர வைத்த வியாபாரி, தன்னிடமிருந்த பட்டுக் கம்பளம் ஒன்றை விரித்து, அதில் நவரத்தினக் கற்களைப் பரப்பினார். 

அமைச்சர்கள் அயர்ந்து போய் விட்டனர். 

இந்தளவுக்கு ஒளிசிந்தும் நவரத்தினங்களை அவர்கள் தங்கள் வாழ்நாளில் பார்த்ததே இல்லை. 

பாண்டியனின் கிரீடத்தை அவை அலங்கரித்தால் நாட்டுக்கே பெருமை என எண்ணினர். முந்தைய கற்களை விட இவை தரத்திலும், அழகிலும் மிகையானவை என்பதைப் புரிந்து கொண்டனர். 

அவரை அழைத்துக் கொண்டு அரண்மனைக்கு விரைந்தனர். 

கிரீடத்தில் அவற்றைப் பதித்துக் கொடுத்த வியாபாரி, அமைச்சர்களே! எனது சிறு வேண்டுகோளை நீங்கள் ஏற்க வேண்டும். விலைமதிப்பு மிக்க இந்த கிரீடத்தைக் கொண்டு பட்டாபிஷேகம் நடத்திய பிறகு, செல்வபாண்டியனை அனைவரும் அபிஷேகப் பாண்டியன் என வழங்க வேண்டும், என கேட்டுக் கொண்டார். 

அமைச்சர்களும் அதை ஏற்றனர். 

செல்வபாண்டியனும் அந்த கிரீடத்தை பார்த்து அகம் மகிழ்ந்தான். 

ஒரு நன்னாளில் செல்வபாண்டியனுக்கு முடிசூட்டி, அபிஷேகப்பாண்டியன் என்ற சிறப்பு பெயரையும் சூட்டி மகிழ்ந்தனர் அமைச்சர்கள். 

அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த தங்க வியாபாரி திடீரென காணாமல் போய்விட்டார். 

அவரைத் தேடியலைந்து ஓரிடத்தில் கண்டுபிடித்து அவருக்கு தக்க மரியாதை செய்ய மன்னனும், அமைச்சர்களும் விரைந்தனர். 

அப்போதும் வியாபாரி அங்கிருந்து மறைந்து விட்டார். 

இதென்ன மர்மம் என அனைவரும் ஓரிடத்தில் அவரைக் கண்டுபிடிக்க, அந்த வியாபாரி அன்னை மீனாட்சியுடன் சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்தார். 

தங்கள் நாட்டின் மானம் காக்க வந்த அந்த தெய்வங்களை அவர்கள் அனைவரும் பரவசத்துடன் வணங்கினர். அபிஷேகப் பாண்டியனை வாழ்த்திவிட்டு அவர்கள் மறைந்தார்.

 

திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்

1.094. திருஆலவாய் - திருவிருக்குக்குறள்


1016

ஆல நீழலார், ஆல வாயிலார்

கால காலனார், பால தாமினே.


கல்லால மர நிழலில் வீற்றிருப்பவரும், காலனுக்குக் காலனாய் அவனை அழித்தருளிய பெருவீரரும் ஆகிய ஆலவாய் இறைவரை மனத்தால் அணுகியிருப்பீர்களாக.


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....தொடரும் ...


அன்புடன்
அனுபிரேம்

1 comment:

  1. தகவல்களும் படங்களும் சிறப்பு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete