கோவர்த்தன மலையை தூக்குதல் ....
பிருந்தாவன மக்கள் இவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்திருக்க இந்திரலோகத்தில் இந்திரன் கடும் கோபத்துடன் இருந்தான். தன்னை அலட்சியம் செய்து ஆயர்குல மக்கள் ஒரு மலைக்குப் பூஜை செய்ததைக் கண்ட அவனது மனம் ஆத்திரத்தில் துடித்தது.
ஆயர்குலத்து மக்களையும் அவர்களுக்கு ஆலோசனை கூறிய கிருஷ்ணரையும் பழிவாங்க நினைத்தான். கடும் கோபம் அவனது புத்தியை மறைத்து விட்டது. பகவான் கிருஷ்ணர், மகாவிஸ்ணுவின் அவதாரமே என்பதையும் மறந்தான்.
தேவர்களின் அரசனான இந்திரன், நீருக்கு தேவனான வர்ணதேவனை அழைத்து தனது மேகங்களை திரட்டி கடும் மழையைப் பொழிந்து பிருந்தாவனத்தை அழித்து விடும்படி கட்டளையிட்டான்.
இந்திரன் மேலும் வாயுதேவனை அழைத்தான்.
கடும் சூறாவளிக்காற்றாக வீசி பிருந்தாவனத்து மக்களின் வீடுவாசல்களையும் மரங்களையும் அழிக்கும்படி கட்டளையிட்டான்.
பிருந்தாவனத்தில் பெரும்புயல் உண்டாகியது.
கடும்மழை பெய்தது.
சூறாவளிக்காற்று சுழன்று அடித்தது.
வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. மரங்களும் குடிசைகளும் கடும் காற்றில் சரிந்து வீழ்ந்தன. ஆயர்குலத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் ஒதுங்குவதற்கு இடமின்றி அங்குமிங்கும் ஓடினார்கள். பசுக்களும் வளர்ப்புப்பிராணிகளும் பரிதாபமாக அலறின. எங்களைக் காப்பதற்கு யாரும் இல்லையா என்ற மக்கள் ஓலமிட்டு அழுதார்கள்.
அனைவரும் கிருஷ்ணரிடம் தஞ்சம் அடைந்தார்கள்.
கிருஷ்ணர் புன்னகையுடன் அவர்களைத் தேற்றினார்.
என் அருமைத் தந்தையே! தாயே! ஆயர்குலத்து மக்களே! நீங்கள் யாரும் கலங்க வேண்டாம். இது இந்திரன் நடத்தும் விபரீத விளையாட்டு.
ஆனால் நமது பூஜையை ஏற்றுக்கொண்ட கோவர்த்தன மலை இப்போதும் நம்மைக் காக்கும். வாருங்கள்.....
உங்கள் பசுக்களையும் மற்றும் வளர்ப்புப் பிராணிகளையும் அழைத்துக்கொண்டு வாருங்கள். எல்லோரும் கோவர்த்தன மலைக்கே போவோம் என்று கூறினார்.
கிருஷ்ணர் முன்னே நடக்க நந்தகோபர் யசோதை மற்றும் ஆயர்குலத்து மக்கள் அனைவரும் அவரைப்பின் தொடர்ந்து நடந்தார்கள்.
பசுக்களும் ஆடுகள் கோழிகள் நாய்கள் பூனைகள் முதலிய வளர்ப்புப்பிராணிகளும் அவர்களுடன் நடந்து சென்றன.
அந்தக்கூட்டத்தின் முன்னே நடந்து கோவர்த்தன மலையை அடைந்த கிருஷ்ணர் ஒரு கணங்கூடத் தாமதிக்காமல் அந்த மலையைத் தம் இரு கைகளாலும் தூக்கினார்.
ஒரு குழந்தை தனது பொம்மையைத் தூக்குவது போல் அவ்வளவு எளிதாக கிருஷ்ணர் அந்தப் பெரிய மலையைத் தூக்கினார்.
தலைக்கு மேலே அதை உயர்த்திய கிருஷ்ணர் தமது இடது கரத்தின் சிறுவிரல் நுனியில் அந்தப் பெரிய மலையை நிலையாக நிறுத்திக் கொண்டார்.
பின்னர் தம் மக்களை அன்புடன் அழைத்தார். பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் தமது வளர்ப்புப் பிராணிகளுடன் அந்த மலையின் கீழே அமர்ந்தார்கள்.
ஆயிரக்கணக்கான அந்த மக்கள் கூட்டத்திற்கு கோவர்த்தன மலை ஒரு குடை போன்று விளங்கியது. வெளியே கடும் மழை பெய்தது. காற்று ஓ என்று வீசியது.
ஆனால் பிருந்தாவனத்து மக்கள் அனைவரும் எவ்வித கஷ்டமும் இன்றி பகவான் கிருஷ்ணரின் பாதுகாப்பில் மலைக்குடையின் நிழலில் ஆனந்தமாக இருந்தார்கள். இவ்வாறு ஏழுநாட்கள் மழை தொடர்ந்து பெய்தது.
மூன்றாம்பத்து
ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி
(6)
செப்பாடு உடைய திருமால் அவன் தன்
செந்தாமரைக் கை விரல் ஐந்தினையும்
கப்பாக மடுத்து மணி நெடுந்தோள்
காம்பாகக் கொடுத்துக் கவித்த மலை
எப்பாடும் பரந்து இழி தெள் அருவி
இலங்கு மணி முத்து வடம் பிறழ
குப்பாயம் என நின்று காட்சி தரும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
நேர்மை குணமுள்ள திருமகள் துணைவன்,
தன்னுடைய செந்தாமரைக் கையின் ஐந்து விரல்களையும்,
மலையை பிடுங்கி எடுத்து தலைகீழாக கவிழ்த்த போது,
நீர் அருவிகளானது, கண்ணபிரானுக்காகத் தயார்
செய்த முத்துச் சட்டைபோல் காட்சி தந்தது. அந்த
இடம் கோவர்த்தனமென்னும் மலை தான்.
(7)
படங்கள் பலவும் உடைப் பாம்பு அரையன்
படர் பூமியைத் தாங்கிக் கிடப்பவன் போல்
தடங் கை விரல் ஐந்தும் மலர வைத்துத்
தாமோதரன் தாங்கு தடவரைதான்
அடங்கச் சென்று இலங்கையை ஈடு அழித்த
அனுமன் புகழ் பாடித் தம் குட்டன்களை
குடங்கைக் கொண்டு மந்திகள் கண் வளர்த்தும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
எப்படி பரந்த பூமியை ஒரு பெரிய நாகம் தன்னுடைய
ஐந்து விரல்களை விரித்து தாங்கிப் பிடித்தபெரிய மலை எதுவெனில்,
தங்கள் குட்டிகளை தூங்க வைக்கும்
கோவர்த்தனமென்னும் மலை தான்.
(8)
சல மா முகில் பல் கணப் போர்க்களத்துச்
சரமாரி பொழிந்து எங்கும் பூசல் இட்டு
நலிவான் உறக் கேடகம் கோப்பவன் போல்
நாராயணன் முன் முகம் காத்த மலை
இலை வேய் குரம்பைத் தவ மா முனிவர்
இருந்தார் நடுவே சென்று அணார் சொறிய
கொலை வாய்ச் சின வேங்கைகள் நின்று உறங்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
நீரால் மேகங்கள் இடைச்சேரி எங்கும் சூழ்ந்து இடியின் சப்தத்துடன்,
படுத்திய வேளையில், நாராயணன்,
ஜனங்களுக்கு முன் கொடுத்த வாக்குறுதிப்படி,
மலையை குடையாக எடுத்துப் பிடித்து ரக்ஷித்தான்.
புலிகள், இலைகளால் அமைத்த வீடுகளில் வாழும்
தவம் புரியும் மகரிஷிகளின் நடுவே செல்ல, அவர்கள்
அப்புலிகளின் கழுத்தை வருட, அவை நின்றபடியே
உறங்கிய இடம் அந்த மலை தான்.
(9)
வன் பேய் முலை உண்டதோர் வாய் உடையன்
வன் தூணென நின்றது ஓர் வன் பரத்தை
தன் பேர் இட்டுக் கொண்டு தரணி தன்னில்
தாமோதரன் தாங்கு தடவரை தான்
முன்பே வழி காட்ட முசுக் கணங்கள்
முதுகில் பெய்து தம்முடைக் குட்டன்களை
கொம்பு ஏற்றி இருந்து குதி பயிற்றும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
வஞ்சனையாக வந்த பூதனை முலையை உண்ட வாயையுடையவனான
குரங்குக் கூட்டங்கள் தம் தம் குட்டிகளை முதுகில்
கட்டிக்கொண்டு போய் மரக்கொம்பில் ஏற்றிவைத்து
ஒரு கிளையிலிருந்து இன்னொரு கிளைக்கு தாவும்
பயிற்சியை அளிக்கும் இடம் அந்த
கோவர்தனமென்னும் மலை தான்.
(10)
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள்
கோலமும் அழிந்தில, வாடிற்று இல
வடிவு ஏறு திருஉகிர் நொந்தும் இல
மணி வண்ணன் மலையும் ஓர் சம்பிரதம்
முடி ஏறிய மா முகிற் பல் கணங்கள்
முன் நெற்றி நரைத்தன போல எங்கும்
குடி ஏறி இருந்து மழை பொழியும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.
கொடி படர்ந்த செந்தாமரை மலர் போன்ற கையும்,
விரல்களும் அவனுடையஅழகும், மலையை ஏழு
நாட்கள் இடைவிடாது தூக்கிப் பிடித்ததால்,
செயல் ஒரு மாயா ஜாலம் போலிருந்தது.
எல்லாவிடங்களிலும் மழையைப் பெய்து, மலையின்
முன்புறம் வெளுத்து நரைத்தது போல் காட்சியளித்த
இடமும் கோவர்தனமென்னும் அந்த மலையே.
(11)
அரவில் பள்ளி கொண்டு அரவம் துரந்திட்டு
அரவப் பகை ஊர்தி அவனுடைய
குரவிற் கொடி முல்லைகள் நின்று உறங்கும்
கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடை மேல்
திருவிற் பொலி மறைவாணர் புத்தூர்த்
திகழ் பட்டர் பிரான் சொன்ன மாலை பத்தும்
பரவு மனம் நன்கு உடைப் பத்தர் உள்ளார்
பரமான வைகுந்தம் நண்ணுவரே.
திருப்பாற்கடலில் பாம்பின் மேல் பள்ளி கொண்டும்,
கருடனை வாகனமாகக் கொண்டவனும்,
மலையை குடையாகக் கொண்டவனுமான கண்ணனுடைய விஷயமாக,
ஸ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த பெரியாழ்வார்
அருளிச் செய்த இப்பத்து பாசுரங்களையும் மனதார
நன்கு ஓதவல்ல பக்தர்கள் பரம பதத்தை அடைவர்.
கோவிந்தன் மனதில் யார்?
அர்ஜுனனின் மகனான அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர், மாயக்கண்ணாடி ஒன்றை பரிசாக வழங்கினார். அந்தக் கண்ணாடியின் சிறப்பு என்னவென்றால் கண்ணாடி முன் ஒருவர் வந்து நின்றால், அவர் மனதில் யார் இருக்கிறாரோ, அவர் அதில் தெரிவார்.
உத்தரையே முதலில் அதை சோதனை செய்தாள்.
திருமணமானதில் இருந்து, அவளது அன்புக் கணவன்அபிமன்யுவைத் தவிர அவளது உள்ளத்தில் வேறு யாருமில்லை. எனவே, அபிமன்யு கண்ணாடியில்தெரிந்தான். அபிமன்யுவும், மனைவி மீது தீராக்காதல் கொண்டிருந்தான். அவனை கண்ணாடி முன்னால் நிறுத்தினர். அப்போது, உத்தரை அதில் தெரிந்தாள்.
அந்த சமயத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு வந்தார். அவர் மனசுக்குள் யார் இருக்கிறார் என்று பார்க்க எல்லாருக்கும் ஆசை.
அர்ஜுனன் என்னை விட்டால் யார் இருப்பார்? எனச் சொல்ல, போடா! அவர் மனதில் நான் தான் இருப்பேன், என பீமன் வம்புக்குப் பேச, இருவருமே இல்லை! நான் தான் இருப்பேன், என தர்மர் பிடிவாதமாய் சொல்ல, ஏன்... அவனது தந்தை வசுதேவனின் தங்கையான நானல்லவா இருப்பேன், என மனதுக்குள் நினைத்துக் கொண்டாளாம் குந்தி.
எல்லாரும் ஆர்வமாயினர்.
கிருஷ்ணனின் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கண்ணாடி முன்கொண்டு வந்து நிறுத்தினர்.
என்ன ஆச்சரியம்! யாருக்கு பகவானை அறவே பிடிக்காதோ,யாரொருவன் கிருஷ்ணரைக் கொல்ல திட்டமிட்டிருக்கிறானோ அந்த சகுனி கண்ணாடியில் தெரிந்தான்.
கோவிந்தரே! மாயம் செய்கிறீரா? என அனைவரும் ஒரே நேரத்தில் கேட்டனர். இல்லை..இல்லை...என்னைக் கொன்றே தீர வேண்டுமென தூக்கத்தில் கூட என்னையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி.
என்னையார் ஒருவர் எப்படி எண்ணுகிறார்கள் என்பது முக்கியமல்ல! கணநேரமும் என்னை மறவாதவர்கள் என் இதயத்தில் இருப்பவர்கள், என்று உரைத்தார் கருணையுள்ள கோவிந்தன்.
நாமும் நினைப்போம் எந்நேரமும் நாராயணனை நலமே நல்கும்.
கோவர்த்தன் கிரி காட்சிகள் கண் முன்னே. ஒரு முறை கோவர்த்தன கிரி வலம் வந்ததுண்டு. அந்த நினைவுகள் நெஞ்சில்.
ReplyDeleteபதிவும் படங்களும் மிக அருமை. நன்றாக கம்பைல் பண்ணியிருக்கீங்க.
ReplyDeleteசென்ற வருட ஆரம்பத்தில் கோவர்த்தன மலையைப் பார்த்தபோது, வெறும் கற்குவியலாக வழி நெடுக இருந்ததைத்தான் பார்த்தேன்.