16 August 2021

வெளி ஆண்டாள் சன்னதி, ஸ்ரீரங்கம்

ஸ்ரீரங்கம் வெளி ஆண்டாள் சன்னதி ஆடி பூரம் உற்சவம் ....

வேணுகோபாலன் திருக்கோலம் 


நாச்சியார் திருமொழி

பதினொராம் திருமொழி  : தாமுகக்கும்

ஆறாம் பாசுரம் -  அவன் எண்ணியபடி என் சரீரத்தைக் கொள்ளைகொண்டான் என்கிறாள்.


கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரி நீர்

செய்ப் புரள ஓடும் திருவரங்கச் செல்வனார்

எப் பொருட்கும் நின்று ஆர்க்கும் எய்தாது நான்மறையின்

சொற் பொருளாய் நின்றார் என் மெய்ப்பொருளும் கொண்டாரே


காவிரியின் தீர்த்தமானது பயிர் நிலங்கள் வளமாக இருக்கும்படி ஓடும் திருவரங்கத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமானாயும் எத்தனையேனும் தாழ்ந்தவர்களுக்கும் எளியனாய் நின்று எத்தனையேனும் உயர்ந்தவர்க்கும் கைப்படாமல் இருப்பவனும், நான்கு வேதங்களிலுள்ள சொற்களுக்கும் அர்த்தமாய் நிற்பவருமான பெரிய பெருமாள் முன்பே கையிலுள்ள பொருள்களை எல்லாம் கொள்ளை கொண்ட பின்பு இப்போது எனது சரீரத்தையும் கொள்ளைகொண்டார்.




பரகாலநாயகி திருக்கோலம்



ஏழாம் பாசுரம் - சீதாப்பிராட்டியிடத்தில் காட்டிய பரிவை என்னிடத்தில் அவர் காட்டவில்லை என்கிறாள்.


உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்துப் 

பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற பேது  எல்லாம்

திண்ணார் மதில்  சூழ் திருவரங்கச் செல்வனார்

எண்ணாதே தம்முடைய நன்மைகளே எண்ணுவரே


திண்மை பொருந்திய மதிள்களாலே சூழப்பட்ட கோயிலிலே சயனித்திருக்கும் ச்ரிய:பதியான எம்பெருமான் ஸ்ரீராமாவதாரத்தில் சீதை என்கிற பெண் விஷயத்தில் ஆசை கொண்டு உண்ணாமலும் உறங்காமலும் வருந்தி இருந்து, பெருத்தை ஓசையைச் செய்யும் கடலில் அணைகட்டி தாம் அடைந்த எளிமைகளை எல்லாம் மறந்துபோய் இப்போது தம்முடைய பெருமைகளையே எண்ணுகிறார்.





பரமபதநாதன் திருக்கோலம்


எட்டாம் பாசுரம் -  எம்பெருமானுடைய குணங்களை நினைத்து உன்னையே நீ தரித்துக்கொள்ளலாமே என்று சொல்ல இவள் “நான் எம்பெருமானை மறந்து தரிக்கலாம் என்று பார்க்கிறேன், ஆனால் என்னால் மறக்க முடியவில்லை” என்கிறாள்.


பாசி தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டு ஒரு நாள்

மாசு உடம்பில் நீர் வாரா மானம் இலாப் பன்றி ஆம்

தேசு உடைய தேவர் திருவரங்கச் செல்வனார்

பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே


முன் காலத்தில் பாசி படர்ந்து கிடந்த ஸ்ரீ பூமிப்பிராட்டிக்காக அழுக்கேறின திருமேனியில் நீர் ஒழுகும்படி நிற்கும் வெட்கமில்லாத வராஹ வடிவு கொண்ட தேஜஸ்ஸையுடைய தெய்வமான திருவரங்கநாதன் முன்பு சொல்லியிருக்கும் பேச்சுக்கள் நெஞ்சில் நின்று அழிக்கப் பார்த்தாலும் அழியாமல் இருக்கின்றன.




பத்ரி நாராயண பெருமாள் அலங்காரத்தில் ...

ஒன்பதாம் பாசுரம் - எம்பெருமான் ருக்மிணிப் பிராட்டிக்கு உதவியது தன்னை உள்பட எல்லாப் பெண்களுக்கும் உதவியதாக எண்ணித் தன்னை தரித்துக்கொள்கிறாள். கண்ணன் எம்பெருமான் அர்ஜுனன் ஒருவனுக்குச் சொன்ன வார்த்தை எல்லா சரணாகதர்களுக்கும் பொதுவாக இருப்பதைப் போலே இங்கும் கண்டு கொள்ளலாம்.


கண்ணாலம் கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்

திண் ஆர்ந்து இருந்த சிசுபாலன் தேசு அழிந்து

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த

பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே


கல்யாண க்ரமங்களை எல்லாம் நன்றாகச் செய்து முடித்து மணப்பெண்ணான ருக்மிணிப்பிராட்டியை பாணிக்ரஹணம் செய்துகொள்ளப் போவதாக உறுதியாக நினைத்திருந்த சிசுபாலன், ஒளி அழிந்து ஆகாசத்தை நோக்கிக் கிடக்கும்படியாக நேர்ந்த அச்சமயத்திலே, அந்த ருக்மிணிப்பிராட்டியை பாணிக்ரஹணம் செய்தருளினவனாய், பெண்களுக்கெல்லாம் துணைவன் என்று ப்ரஸித்தனான பெருமான் உகந்து சயனித்திருக்கும் திவ்யதேசத்தின் திருநாமம் திருவரங்கமாம்.




பெரிய பெருமாள் திருக்கோலம்


பத்தாம் பாசுரம்- பெரியாழ்வார் திருமகளாக இருந்தும் தர்மம் அறிந்த நீர் என்னைக் கைக்கொள்ளவில்லை என்றால் நன் என்ன செய்யமுடியும் என்று வருந்துகிறாள்.


செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த

மெய்ம்மைப் பெரு வார்த்தை விட்டுசித்தர் கேட்டு இருப்பர்

தம்மை உகப்பாரைத் தாம் உகப்பர் என்னும் சொல்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பார் ஆர் இனியே?


நேர்மை என்கிற குணத்தை உடைய திருவரங்கநாதர் முன்பு தம் வாயாலே அருளிச்செய்த ஸத்யமானதும் பெருமதிப்புடையதுமான சரமச்லோகம் என்கிற வார்த்தையை எனது திருத்தகப்பனாரான பெரியாழ்வார் கேட்டு அதன்படி நிர்ப்பரராயிருப்பார். “தம்மை விரும்பினவர்களைத் தாமும் விரும்புவார்” என்ற பழமொழியானது தம்மிடத்திலேயே பொய்யாகி விட்டால் அதற்குமேல் வேறுயார் அவரை நியமிக்க முடியும்?


நாச்சியார் திருக்கோலம்










ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !


அன்புடன்,
அனுபிரேம்

1 comment:

  1. அழகான கோவில். அங்கே சென்று சேவித்ததோடு சில படங்கள் எடுத்ததுண்டு. திருப்பாவை காட்சிகள் ஓவியமாக வரைந்திருப்பார்கள்.

    ReplyDelete