20 August 2021

அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில்


அருள்மிகு தாயுமான சுவாமி திருக்கோவில், திருச்சி ...


இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 69 வது தேவாரத்தலம் ஆகும்.

தாயுமானவர் திருக்கோயிலுக்கு தென்கைலாயம் என்ற சிறப்பு பெயரும் உண்டு.







இறைவர் திருப்பெயர் : தாயுமானவர், மாத்ருபூதேஸ்வரர், செவ்வந்திநாதர்

இறைவியார் திருப்பெயர் :  சுகந்த குந்தளாம்பிகை, மட்டுவார் குழலியம்மை

தல மரம் :  வில்வம்

தீர்த்தம் :   பிரம்ம தீர்த்தம், காவேரி

வழிபட்டோர் : அருணகிரியார், தாயுமானவர், சாரமா முனிவர், விபீஷணன், விஜயரகுநாத சொக்கர் என்னும் மன்னர், அகத்தியர், அனுமன், அர்ச்சுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், பிரம்மா, ஜடாயு

தேவாரப் பாடல்கள் : திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர்,மாணிக்கவாசகர், தாயுமான அடிகள்.

இத்தல விநாயகர் செவ்வந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார்.




தல வரலாறு :

 திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு முற்கால சோழ மன்னன் ஒருவன் ஆட்சி செய்து வந்தான். அப்போது மலைக்கோட்டையின் கீழே உள்ள நந்தவனத்தில் சாரமா முனிவர் எழுந்தருளி இருந்தார். தினமும் மலைக்கோட்டை சிவனுக்கு நந்தவனத்து செவ்வந்தி மலர்களைக் கொய்து வழிபட்டு வந்தார். 


ஒருநாள் அரசனது படை வீரர்கள் சிலர் முனிவரின் நந்தவனத்தில் மலர்களைத் திருடி, மன்னனுக்குக் கொடுத்தார்கள். அந்த மலர்களின் மணம், நிறம் இவற்றால் ஆசை கொண்ட அரசன் தினமும் மலர்கள் கொண்டு வரும்படி ஆணையிட்டான். இதனால் நந்தவனத்தில் தினமும் மலர்கள் திருடு போனது. முனிவரின் சிவபூஜையும் நின்று போனது. 

மன்னனிடம் முறையிட்டும் பலன் இல்லை. இதனால் முனிவர் ஈசனிடம் முறையிட்டார்.


அடியார் தவிக்க ஆண்டவன் பொறுப்பானா! உறையூர் நோக்கி ஈசன் உக்கிரப் பார்வை செலுத்தினான். 

அங்கு மண் மழை பொழிந்தது...

 உறையூர் மண்மூடிப் போனது என்று தல வரலாறு கூறுகிறது. 

உறையூர் சோழ அரசனும் அரசியும் அரண்மனையை விட்டு வெளியேற, அரசன் அழிந்தான். 

கருவுற்றிருந்த அரசி புவனமாதேவி ஈசனை வேண்டி அழுது, அலை புரண்டோடிய காவிரியில் விழுந்து உயிர்விடத் துணிந்தாள். 

அடியார் ஒருவர் அரசியைக் காப்பாற்ற, அரசி ஆண் குழந்தை ஒன்றை ஈன்றெடுத்தாள். 

அந்தக் குழந்தையே பார் போற்றும் கரிகால் சோழன் என்கிறது ஒரு சரித்திரத் தகவல். 

செவ்வந்தி மலரால் பூஜிக்கப்பட்டவர் என்பதால் இங்குள்ள ஈசன் 'செவ்வந்தி நாதர்' என்ற திருநாமம் கொண்டார். 







தாயுமானவர்: 

தனகுத்தன் என்ற வணிகனின் மனைவி ரத்தினாவதி. செவ்வந்திநாதர் மீது தீராத பக்தி கொண்டவர்கள் இந்த தம்பதியர். 

ரத்தினாவதி சூலுற்றாள்; பிரசவம் பார்க்க தன் தாயை உதவிக்கு அழைத்தாள். 

மகளைக் காண விரைந்து வந்த தாய் காவிரி ஆற்றின் பெருவெள்ளத்தால் அக்கறையிலேயே நின்று விட்டாள். 

நேரம் நெருங்கியது, தாய் தன் மகளுக்கு என்னாகுமோ என்று மலைக்கோட்டையை நோக்கி கரம் குவித்து 'செவ்வந்திநாதா, அபயம் அபயம்...' என்று கதறினாள். 

அங்கே நிறை சூல் கொண்ட ரத்தினாவதியும் துணை இன்றி துடித்தாள்.

 செவ்வந்திநாதர் தாயானார்; ஆதரவின்றி தவித்த பெண்ணுக்கு தாதியானார். 

தாயையும் பிள்ளையையும் பூப்போல பிரித்தெடுத்தார். காவிரி வெள்ளம் வடிந்து பெற்றவள் வரும்வரை ரத்தினாவதியைப் பேணி காத்தார். இந்த அற்புத லீலையால் மண்ணுலகின் சகல ஜீவராசிகளுக்கும் தாயுமானவர் ஆனார். 

இப்போதும் ஒவ்வோர் ஆண்டும் திருச்சி மலைக்கோட்டையில் உள்ள தாயுமானவர் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ ஐந்தாம் நாள் விழாவில் செட்டிப் பெண் மருத்துவம் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது என்பது விசேஷம். 
















குழந்தை வரம் கிடைக்கவும், சுகப்பிரசவம் ஆகவும் இந்த கோயிலுக்கு வருபவர்கள் பலர். வடமொழியில் தாயுமானவர் மாத்ருபூதேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். 

அம்பிகை, அகத்தியர், அனுமன், அர்ஜுனன், ராமர், இந்திரன், சப்தரிஷிகள், கலைமகள், பிரம்மா, ஜடாயு போன்றோர் இங்கு வந்து சுவாமியை வழிபட்டுள்ளார்கள். 

அப்பரும் சம்பந்தரரும் பாடித் தொழுத பரமன் இவர். அம்பாள் மட்டுவார் குழலி, சுகந்த குந்தளாம்பிகை என்று வடமொழியிலும் போற்றப்படுகிறாள். 

ஈசனை மணக்க விரும்பிய அம்பிகை தாமரை மலரில் அவதரித்து கார்த்யாயன முனிவரால் வளர்க்கப்பட்டாள். நீண்ட காலம் தவமிருந்து ஈசனை அடைந்தாள் என புராணம் கூறுகிறது.
 தன் கூந்தலில் இயற்கையாக நறுமணம் வீச வளர்ந்த அம்பிகை மட்டுவார் குழலி என்றானாள்.












கோவில் அமைப்பு:

இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்குப் பார்த்த நிலையில் ஒரு பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். மலையில் உள்ள பாறைகள் மீது மூன்று அடுக்குகளாக  இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளது.

 முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதியும், இரண்டாம் தளத்தில் இறைவன் தாயுமானசுவாமியின் சந்நிதியும் அமைந்துள்ளன. 

இறைவன், இறைவி இருவர் சந்நிதியும் மேற்குப் பார்த்தவாறு அமைந்திருக்கின்றன. 

தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய சிவலிங்கத் திருமேனிகளில் தாயுமானவர் லிங்கத் திருமேனியும் ஒன்றாகும். லிங்கத் திருமேனி சுமார் 5 அடி உயரம் உள்ளது.

கி.பி. 7-ம் நூற்றாண்டைச் சேர்ந்த மகேந்திரவர்மனால் குடையப் பெற்ற இரண்டு குடவரைக் கோவில்கள் இங்கு உள்ளது. மலையின் உச்சியில் உச்சிப் பிள்ளையார் கோவில் இருக்கிறது.





மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும்.

இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால் இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரக தோஷங்கள் நீங்கும்.

இத்தலத்தில் முருகப் பெருமான் குத்துக்குமாரசாமியாக பன்னிரு திருக்கரங்களும், ஆறு திருமுகமும் கொண்டு மயில் மீதமர்ந்து கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். வள்ளி, தெய்வசேனா தேவியர் இருபுறமும் விளங்குகின்றனர். 

மற்றொரு சந்நிதியில் முருகப் பெருமான் ஒரு திருமுகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது இரு தேவியருடன் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகின்றார். இத்தலத்து முருகர் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப் பெற்றவராவார். திருப்புகழில் 16 பாடல்கள் உள்ளன.

கோயில்களில் சிவன் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் இருக்கும். ஆனால், இக்கோயிலில் சிவனுக்கு பின்புறம் கொடிமரம் இருக்கிறது. முன்பு இக்கோயிலில் சிவன் சன்னதி, கிழக்கு திசையை நோக்கி இருந்தது. எனவே, பிரதான வாசலும், கொடிமரமும் கிழக்கு திசையில் அமைக்கப்பட்டது.

சாரமா முனிவருக்காக, மன்னனைத் தண்டிக்க சிவன் மேற்கு திசை நோக்கித் திரும்பி விட்டதால், சன்னதி வாசலும், கொடி மரமும் அங்கேயே நிலைத்து விட்டது.






சிவன் சன்னதி பிரகாரத்தில் மகாலட்சுமி, நின்ற கோலத்தில் இருக்கிறாள். இவளது சிலை மரத்தில் செய்யப்பட்டதாகும்.மற்றோர் சன்னதியில் மரத்தில் செய்யப்பெற்ற, துர்க்கையும் காட்சி தருகிறாள்.

பிரகாரத்தில் அருகில் சாரமா முனிவர் வணங்கியபடி இருக்க விஷ்ணு துர்க்கை எட்டு கரங்களுடன் காட்சி தருகிறாள்.

சித்திரை பிரம்மோற்ஸவத்தின் 5ம் நாளில், சிவன் ரத்னாவதிக்கு பிரசவம் பார்த்த வைபவம் நடக்கிறது. அன்று, சோமாஸ்கந்தர் அருகில் கர்ப்பிணிப்பெண் ரத்னாவதியின் சிலையை வைக்கின்றனர். அப்போது, திரையிட்டு சிவன், ரத்னாவதி இருவரையும் மறைத்துவிடுவர். இவ்வேளையில் ரத்னாவதியின் மடியில் குழந்தை அமர வைத்து அலங்கரித்து, பின்பு திரையை விலக்கி தீபராதனை காட்டுவர். இந்த வைபவத்தின் போது, பிறந்த குழந்தைகளுக்குக் கொடுக்கும், மருந்து மற்றும் தைலமே பிரசாதமாக தரப்படும். இதைச் சாப்பிடும் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை.

 









மனதிற்கு நிறைவையும் , மகிழ்வையும் தரும் அற்புத ஆலயம் .....



 3

அரிச்சி ராப்பக லைவரா லாட்டுண்டு
சுரிச்சி ராதுநெஞ் சேயொன்று சொல்லக்கேள்
திருச்சி ராப்பள்ளி யென்றலுந் தீவினை
நரிச்சி ராது நடக்கும் நடக்குமே. 



நெஞ்சே! ஐம்புலக் கள்வரால் இராப் பகலாக அரிக்கப்பெற்று ஆட்டப்பெற்று வருந்தியிராமல் இருக்க, ஓர் உபாயம் சொல்லக் கேட்பாயாக! திருச்சிராப்பள்ளி என்றலும் தீவினை பொருந்தி இருக்காமல் உன்னைவிட்டு நடக்கும்; நடக்கும்!







10
தாயு மாயெனக் கேதலை கண்ணுமாய்ப்
பேய னேனையும் ஆண்ட பெருந்தகை
தேய நாதன் சிராப்பள்ளி மேவிய
நாய னாரென நம்வினை நாசமே. 


தாயுமாகி எனக்குத் தலைகண்ணுமாகிப் பேயனேனாகிய என்னையும் ஆட்கொண்டருளிய பெருந்தகையும் தேயங்கட்கெல்லாம் நாதனும் ஆகிய பெருமானைச் சிராப்பள்ளி மேவிய நாயனார் என்று கூறி வாழ்த்த நம்வினை நாசம் அடையும்.

தாயுமான சுவாமி திருவடிகளே சரணம் ....

அன்புடன் 
அனுபிரேம் 


1 comment:

  1. மிகவும் அழகான கோவில். மனதிற்கு நிம்மதி அளிக்கும் கோவில். திருச்சி வரும் சமயங்களில் செல்ல விரும்பும் கோவில்களில் தாயுமானவர் ஸ்வாமி கோவிலும் ஒன்று.

    ReplyDelete