10 August 2021

சயனசேவையில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்....

 ஆடிப்பூரம் ஏழாம் திருநாள்... ..

சயனசேவையில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்....





ஸ்ரீபாஞ்சஜந்யத்திடத்திலே எம்பெருமானின் வாகம்ருதத்தின் தன்மையை வினவினாள். அவனைக் கேட்டவுடன் அவளின் உள்ளத்தில் அனுபவம் எம்பெருமான் அளவும் சென்றது. 


அந்த ஸமயத்தில் கார்கால மேகங்கள் முழங்கிக்கொண்டு வந்தன. 

கரிய உருவம் மற்றும் உதார குணத்தின் ஒற்றுமையாலே அந்த மேகங்கள் எம்பெருமானாகவே இவளுக்குக் காட்சி தந்தன. 

எம்பெருமானே வந்தான் என்று நினைத்தாள். 

சிறிது தெளிவு ஏற்பட்டு எம்பெருமான வரவில்லை என்று உணர்ந்தாள். 

வந்த மேகங்களுக்கு ஆகாசத்தில் நகரும் ஸாமர்த்யம் இருப்பதால் இவைகளை எம்பெருமானிடம் தூது அனுப்புவோம் என்று பார்த்தாள். 

ஆனால் இப்பொழுது விபவாவதாரத்துக்குத் தூது விடாமல் அர்ச்சாவதாரத்தில் அதுவும் திருவேங்கடமுடையானுக்குத் தூது விடுகிறாள். 

ராமாவதாரத்தில் ஸீதாப்பிராட்டி சிறந்த பண்டிதனான ஹனுமானைத் தன் நிலைமையை எம்பெருமானுக்கு அறிவிக்குமாறு சொன்னாள்.

 இங்கே ஆண்டாளோ ஞானமில்லாத மேகங்களைத் தூது அனுப்பும் அளவுக்குக் காதலால் கலங்கியுள்ளாள். எம்பெருமானிடம் இவளுக்கு இருக்கும் காமத்தால் அர்ச்சாவதாரத்தில் எம்பெருமான் தர்சனம் மட்டுமே கொடுப்பான் என்றும் பேசுதல், பழகுதல் செய்ய மாட்டான் என்பதும் இவளுக்குத் தெரியாமல் போகிறது. 

காதல், காமம் என்றால் பக்தி – அதாவது கூடியிருந்தால் தரிக்கையும், பிரிந்தால் தரியாமையும். இவை பிராட்டிமார்களுக்கே இயற்கையாக அமைந்திருக்கும். இதனால்தான் ஆழ்வார்கள் தங்களைப் பிராட்டிமார்களாக பாவித்துக் கொண்டார்கள். ஆனால், இவளோ ஸ்ரீபூமிப்பிராட்டியின் அவதாரம் ஆகையால், இவளுக்கு இவை இயற்கையாக உள்ளன.





நாச்சியார் திருமொழி

எட்டாம் திருமொழி - விண்ணீல மேலாப்பு

மேகவிடுதூது


முதல் பாசுரம் -  என்னுடைய பெண்மையை உருவழிப்பது அவனுக்குப் பெருமையாகுமோ என்று திருவேங்கடமுடையானிடம் சென்று கேட்குமாறு மேகங்களிடம் சொல்லுகிறாள்.


விண் நீல மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்!

தெண் நீர் பாய் வேங்கடத்து என் திருமாலும் போந்தானே?

கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளி சோரச் சோர்வேனை

பெண் நீர்மை ஈடழிக்கும் இது தமக்கு ஓர் பெருமையே?


ஆகாசம் முழுவதிலும் நீலநிறத்தில் இருக்கும் மேற்கட்டியை விரித்துக் கட்டினாப்போலே இருக்கிற மேகங்களே! தெளிந்த அருவிகள் பாயுமிடமான திருவேங்கட மலையில் நித்யவாஸம் செய்யும் என் ஸ்வாமியான திருமாலும் உங்களோடு வந்துள்ளானோ? முலை நுனியிலே கண்ணீர் வந்து விழும்படி வருந்துகிற என்னுடைய பெருமையை உருவழிக்கிற இது, அவருக்கு ஒரு பெருமையாக இருந்ததோ?





இரண்டாம் பாசுரம்-  தென்றலாலே நலிவுபடும் எனக்கு எம்பெருமான் ஏதாவது ஆறுதல் வார்த்தை சொல்லி அனுப்பியுள்ளானா என்று மேகங்களிடம் கேட்கிறாள்.


மா முத்தநிதி சொரியும் மா முகில்காள்! வேங்கடத்துச்

சாமத்தின் நிறங்கொண்ட தாளாளன் வார்த்தை என்னே?

காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல்

ஏமத்து ஓர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே ?


சிறந்த முத்துக்களையும் பொன்னையும் பொழிகிற காளமேகங்களே! திருவேங்கடமலையில் நித்யவாஸம் செய்கிற நீல நிறத்தில் விளங்கும் எம்பெருமானுடைய செய்தி ஏதேனும் உண்டோ? காமத்தீயானது என் உள்ளே புகுந்து கவ்வ அதனால் துன்புற்று இரவில் நடுஜாமத்திலே ஓர் தென்றல் காற்றுக்கு இலக்காகி அதனால் வருந்தி இருக்கிறேனே.







மூன்றாம் பாசுரம் - எல்லாவற்றையும் இழந்த நான் எம்பெருமானின் குணங்களைக் காட்டும் திருநாமங்களைப் பாடி தரித்திருக்க முடியுமா என்று மேகங்களிடம் கேட்கிறாள்.


ஒளி வண்ணம் வளை சிந்தை உறக்கத்தோடு இவை எல்லாம்

எளிமையால் இட்டு என்னை ஈடழியப் போயினவால்

குளிர் அருவி வேங்கடத்து என் கோவிந்தன் குணம் பாடி

அளியத்த மேகங்காள்! ஆவி காத்து இருப்பேனே ?


அருள் புரியும் மேகங்களே! என்னுடைய தேஹத்தின் ஒளியும் நிறமும் வளைகளும் நெஞ்சும் உறக்கமும் ஆகிய எல்லாம் என்னுடைய வருந்தத்தக்க நிலை காரணமாக என்னைக் கைவிட்டு நான் பலம் குலையும்படி நீங்கிப்போய்விட்டன. ஐயோ! குளிர்ந்த அருவிகளையுடைய திருவேங்கடமலையில் நித்யவாஸம் செய்கிற என்னுடைய கோவிந்தன் எம்பெருமானின் திருக்கல்யாண குணங்களை வாயாரப் பாடி என்னைக் காப்பாற்றிக்கொள்ள முடியுமோ?



நான்காம் பாசுரம் -  பிராட்டியை முன்னிட்டுத் தன் விருப்பத்தை எம்பெருமானிடம் சொல்லுமாறு மேகங்களிடம் ப்ராத்திக்கிறாள்.


மின் ஆகத்து எழுகின்ற மேகங்காள்! வேங்கடத்துத்

தன் ஆகத் திருமங்கை தங்கிய சீர் மார்வற்கு

என் ஆகத்து இளங் கொங்கை விரும்பித் தாம் நாள்தோறும்

பொன் ஆகம் புல்குதற்கு என் புரிவுடைமை செப்புமினே


சரீரத்திலே மின்னல் தோன்றும் மேகங்களே! என் மார்பிலுண்டான இளமுலைகளை அவ்வெம்பெருமான் அழகியதான தன் மார்பில் விரும்பி அணைக்கவேண்டும் என்பதில் தினமும் எனக்கு ஆசை உள்ளதை திருவேங்கடமலையில் நித்யவாஸம் செய்யும், தனது திருமேனியில் பிராட்டி எழுந்தருளியிருக்கும் திருமார்பை உடையவனான எம்பெருமானுக்குச் சொல்லுங்கள்.




ஐந்தாம் பாசுரம் - அடியார்களின் விரோதிகளைப் போக்கக்கூடிய எம்பெருமானிடம் தன் நிலையைச் சொல்லுமாறு மேகங்களிடம் ப்ராத்திக்கிறாள்.


வான் கொண்டு கிளர்ந்து எழுந்த மாமுகில்காள்! வேங்கடத்துத்

தேன் கொண்ட மலர் சிதறத் திரண்டு ஏறிப் பொழிவீர்காள்!

ஊன் கொண்ட வள் உகிரால் இரணியனை உடல் இடந்தான்

தான் கொண்ட சரி வளைகள் தருமாகில் சாற்றூமினே


திருவேங்கடமலையில்  தேன் நிறைந்துள்ள புஷ்பங்கள் சிதறும்படி திரள்திரளாக ஆகாசத்திலேறி மழையைப் பொழியும், ஆகாசத்தை விழுங்கிக்கொண்டு ஓங்கிக் கிளம்பும் காளமேகங்களே! சதையுடன் இருக்கும் கூர்மையான நகங்களாலே ஹிரண்யனுடைய உடலைப் பிளந்தெறிந்த எம்பெருமான் என்னிடத்திலிருந்து எடுத்துக்கொண்ட கைவளைகளைத் திருப்பிக்கொடுப்பானாகில் என் நிலையை அவனுக்குச் சொல்லுங்கள்.







ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் !


அன்புடன்
அனுபிரேம்

2 comments:

  1. ஒவ்வொன்றும் ஒவ்வொரு அழகு. சயனக்கோலம் இன்னும் அழகு. பூ தைத்த நிலையில் உள்ள அழகிற்கு ஈடேது?

    ReplyDelete
  2. அழகான பாடல்கள் மற்றும் படங்கள். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    ReplyDelete