30 August 2021

குன்று குடையாய் எடுத்தாய்...


 கோவர்த்தன விழா- 

வருடந்தோறும் ஐப்பசி கார்த்திகை மாதங்களில் ஆயர்கள் இந்திரனுக்கு விழாக்கொண்டாடுவது வழக்கமாக இருந்தது. 

இந்திரன் தேவர்களுக்கு அரசன். ஆகமங்களுக்குத் தலைவன். அதனால் மேகங்கள் நல்ல மழையை பெய்ய வேண்டும் என்று இந்திரனை வேண்டுவதற்காக அந்த விழா கொண்டாடப்பட்டது. 

அந்த வருடமும் விழா கொண்டாடப்படுவதற்குரிய ஏற்பாடுகள் நடைபெற்றன. 

ஆயர்குலத் தலைவர் நந்தகோபர் விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

 இந்திரன் தானே மூவுலகங்களுக்கும் இறைவன் என்று எண்ணிக் கர்வம் அடைந்தான். மும்மூர்த்திகளை வழிபட மறந்தான். அவனது கர்வத்தை உணர்ந்து கொண்ட கிருஷ்ணர் அவனுக்கு நல்ல அறிவு புகட்ட முனைந்தார்.


விழா ஏற்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்த தந்தையிடம் சென்றார்.

 “தந்தையே இந்திரனுக்காக இந்த விழாவைக் கொண்டாட வேண்டாம்” என்று கூறினார். நந்தகோபர் வியப்படைந்தார். 

ஏன் அப்படிச் சொல்கிறாய் கிருஷ்ணா?.. என்று கேட்டார்.

 “தந்தையே இந்திரனுக்கு மேலானவர்களே மும்மூர்த்திகள். அவர்களே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களைச் செய்து உலகங்களையும் உயிர்களையும் வாழ வைக்கிறார்கள். அவர்கள் இல்லாத இடமேயில்லை. இதோ இந்தக் கோவர்த்தன மலையினுள்ளும் அவர்கள் இருந்து நம்மையெல்லாம் வாழவைக்கிறார்கள். மேலும் ஆயர்களான நமது வாழ்க்கையில் கோவர்த்தன மலை முக்கிய இடத்தைப் பெறுகின்றது. அதுவே நமக்குச் சுத்தமான தண்ணீரைத் தருகின்றது. நமது பசுக்கள் உண்பதற்குப் பசுமையான புல்லைத் தருகின்றது. ஆதலால் நாம் இந்தக் கோவர்த்தன மலைக்கே பூஜை செய்து விழா எடுக்க வேண்டும் என்று கிருஷ்ணர் கூறினார். 

கிருஷ்ணர் சொல்லுக்கு மறுப்பு ஏது? நந்தகோபர் சம்மதித்தார்.

 மறுநாள் காலை கோவர்த்தன மலைக்கே பூஜைகள் செய்து விழாக் கொண்டாடுவதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யும்படி கட்டளையிட்டார்.


மக்கள் யாவரும் ஒன்று சேர்ந்தார்கள். கோவர்த்தன மலையைச் சுத்தம் செய்தார்கள். 

வாழை மரங்களை நட்டார்கள். மாவிலைத் தோரணங்களைக் கட்டினார்கள். 

பல வண்ணக்கோலங்களை இட்டார்கள். நெய் விளக்குகளை ஏற்றி வைத்தார்கள்.

 கோவர்த்தன மலை சொர்க்கலோகம் போல் அழகுடன் விளங்கியது. 

மறுநாட்காலை கோவர்த்தன விழா தொடங்கியது.

 பிருந்தாவனத்து ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் புது ஆடைகள் அணிந்து அந்த மலையின் அடிவாரத்துக்கு வந்து சேர்ந்தார்கள்.


பெண்கள் புது அரிசி கொண்டு பொங்கல் சமைத்தார்கள். காய் கறிகள் பழங்கள் கொண்டு விருந்து படைத்தார்கள். 

ஆண்கள் தமது பசுக்களை வரிசையாக நிற்க வைத்துக் குளிப்பாட்டி அலங்கரித்து நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்துப் பூஜை செய்தார்கள். 

அந்தணர்கள் மலை அடிவாரத்தில் யாகசாலைகளை ஏற்படுத்தி அவற்றிலே நெய் ஊற்றி நெருப்பு வளர்த்து அகில், சந்தனம் முதலிய வாசனைப் பொருட்களை அந்த நெருப்பிலே இட்டு மந்திரங்கள் ஓதி யாகம் செய்தார்கள். 

சமைக்கப்பட்ட பொங்கல் மற்றும் சுவையான உணவுப் பொருட்களை மக்கள் அந்த மலையின் அடிவாரத்திலே குவித்தார்கள். அந்த உணவுக்குவியல் மற்றொரு சிறிய மலை போன்று தோற்றமளித்தது.


நந்தகோபர் கிருஷ்ணரை அழைத்தார். 

மகனே கிருஷ்ணா... நீ சொன்னபடியே உணவுப்பொருட்களை மலையாகக் குவித்துவிட்டோம். 

இப்போது நமது கோவர்த்தன மலையில் வாழும் தெய்வம் நாம் படைத்த உணவுப் பொருட்களை ஏற்றுக் கொள்ளுமா என்று கேட்டார். 

கிருஷ்ணர் புன்னகைத்தார். 

நிச்சயமாக ஏற்றுக் கொள்ளும் என்று பதில் கூறினார். 

இவ்வாறு கூறிய பின்னர் கிருஷ்ணர் தாமே அந்த மலையின் தெய்வமாக உருவெடுத்தார். 

மலையின் உச்சியிலே அழகிய பிரமாண்டமான உருவத்துடன் தோன்றினார். 

அந்த உணவு மலை முழுவதையும் ஒரு நொடிப்பொழுதில் உண்டு முடித்தார். 

அங்கு சூழ்ந்து நின்று வணங்கிய ஆயர்குல மக்கள் அனைவருக்கும் அருள் வழங்கி மறைந்தார். தங்கள் காணிக்கையைக் கோவர்த்தன மலைத் தெய்வமே நேரில் வந்து ஏற்றுக் கொண்டதைக்கண்டு மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து ஆடிப்பாடினார்கள். 

அனைவரும் சேர்ந்து ஒற்றுமையாக உணவருந்திய பின்னர் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினார்கள்.

 இதன் தொடர்ச்சி அடுத்த பதிவில் ......
பெரியாழ்வார் திருமொழி

மூன்றாம்பத்து

ஐந்தாம் திருமொழி - அட்டுக்குவி

கண்ணன் கோவர்த்தனகிரியை குடையாகக்கொண்டு கல்மழை தடுத்து ஆயரையும் பாதுகாத்தல்


இந்திரன் தனக்கு பூஜை செய்யாததால் கோபமுற்று, கடும் மழை பொழிவித்தான். இடையர்களும், பசுக்களும் மழையால் அவதியுறுவதை கண்டு

சகிக்காமல் கண்ணன் கோவர்த்தன மலையை தனது திருக்கையால் தகர்த்து குடையாக மேலே

தூக்கிப் பிடித்து ஜீவர்களை ரக்ஷித்தான்.


(1)

அட்டுக்குவி  சோற்றுப் பருப்பதமும்

தயிர் வாவியும் நெய் அளறும் அடங்கப்

பொட்டத் துற்றி மாரிப் பகை புணர்த்த

பொரு மா கடல் வண்ணன் பொறுத்த மலை

வட்டத் தடங்கண் மட மான் கன்றினை

வலை வாய்ப் பற்றிக் கொண்டு குறமகளிர்

கொட்டைத் தலைப் பால் கொடுத்து வளர்க்கும்

கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.


நன்றாக சமைத்து குவித்து வைத்த சோற்றை விழுங்கி, 
குடத்திலிருந்து தயிரையும் குடித்து,
உருக்கி வைத்திருந்த நெய்யையும் அவசரமாகப் பருகி,
 இந்திரனுக்கு கோபமுண்டாக்கி, அதனால் பகை கொண்ட அவன்,
  பலத்த மழையை உண்டாக்க, அந்த மழையைத் தடுக்க
வெற்றியையுடைய ஒரு மலையை தன்னுடைய
விரலால் தூக்கிப் பிடித்தான்.  குறப் பெண்கள்
வட்ட வடிவான பெரிய கண்களைக் கொண்ட மான் குட்டியை, 
அதனுடைய தாயினின்றும் பிரித்து, வலையில் அகப்படுத்தி, பஞ்சை
சுருளாக்கி அதன் நுனியாலே பாலை ஊட்டி வரும்
இடம் தான் கோவர்தனமென்னும் அந்த மலை.

(2)

வழு ஒன்றும் இல்லாச் செய்கை வானவர்கோன்

வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட

மழை வந்து ஏழு நாள் பெய்து மாத் தடுப்ப

மதுசூதன் எடுத்து மறித்த மலை

இழவு தரியாதது  ஓர் ஈற்றுப் பிடி

இளஞ்சீயம்  தொடர்ந்து முடுகுதலும்

குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும்

கோவர்த்தனம்  என்னும்  கொற்றக்  குடையே.


குறையிலாச் செயல்களை உடையவனாக இருந்தும்,இந்திரன் தனக்கு பூஜை செய்யாததால் கோபமுற்று, ஏழு நாட்கள் இடைவிடாது மழை பொழிவித்து,
பசுக்களை வெளியில் வரவிடாமல் செய்ததைப் பொறுக்காமல், 
மதுசூதனனான கண்ணபிரான்,
ஒரு மலையை பெயர்த்தெடுத்து, 
தலைகீழாக கொடையைப்போல் பிடித்து ஜனங்களையும்,
பசுக்களையும் ரக்ஷித்தருளினான். 
ஒரு பெண் யானை தன் குட்டியை தாக்க தொடர்ந்து வந்த சிங்கக் குட்டியிடமிருந்து காப்பாற்ற, குட்டியை பிரிய நேரிடுமோ என்று துக்கமுற்று, தன்
கால்களின் இடுக்கில் அக்குட்டி யானையை பத்திரமாக அடக்கி வைத்து, 
அச்சிங்கக் குட்டியை எதிர்த்துப் போராடிய இடம் தான்
கோவர்தனமென்னும் அந்த மலை.

(3)

அம் மைத் தடங்கண் மட ஆய்ச்சியரும்

ஆனாயரும் ஆநிரையும் அலறி

எம்மைச் சரண் என்று கொள் என்று இரப்ப

இலங்கு ஆழிக் கை எந்தை எடுத்த மலை

தம்மைச் சரண் என்ற தம் பாவையரைப்

புனமேய்கின்ற மானினம் காண்மின் என்று

கொம்மைப் புயக் குன்றர் சிலை குனிக்கும்

கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே


மை இட்ட பரந்த அழகிய கண்களையுடைய பேதமை குணம் படைத்த இடைச்சியர்களும், இடையர்களும், பசுக்கூட்டங்களும் கடுமையான மழையைக் கண்டு

பயத்தால் பெரிய கூக்குரலிட்டு, பெருமானே!
 நீ தான் எங்களை காப்பாற்றவேண்டும் என்று கதறி முறையிட,
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, எம்பெருமான் கையில் சக்ராயுதம் 
ஏந்தியவனாய், ஒரு மலையைத் தூக்கிப் பிடித்தான்.
 பருத்த தோள்களை கொண்ட குறவர்கள், தங்களையே நம்பி இருக்கிற தம்
பெண்களின் கண்களைக் கண்டு, மான் கூட்டங்கள்தான் கொல்லையில் 
பயிர்களை மேய்ந்து அழிக்கின்றதோ என்று ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டு,
கையில் வில்லையும் அம்பையும் எடுத்த இடம் தான்
கோவர்தனமென்னும் அந்த மலை.(4)

கடு வாய்ச் சின வெங்கண்  களிற்றினுக்குக்

கவளம் எடுத்துக் கொடுப்பான் அவன் போல்

அடிவாய் உறக் கையிட்டு  எழப் பறித்திட்டு

அமரர் பெருமான் கொண்டு நின்ற மலை

கடல் வாய்ச் சென்று மேகம்  கவிழ்ந்து இறங்கிக்

கதுவாய்ப் பட நீர்முகந்து ஏறி எங்கும் 

குடவாய்ப் பட நின்று மழை பொழியும்

கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே


கோபத்துடனும், கூர்மையான கண்களுடனும், பயங்கரமான வாயையுமுடைய 
ஒரு யானைக்கு சோற்றை பெரிய உருண்டையாக திரட்டி எடுத்து
கொடுக்கும் யானைப்பாகனைப்போல்,  தேவர்களின்
தலைவனான கண்ணபிரான் மலையை வேரோடுபிடுங்கி மேலே தூக்கி பிடித்து நின்றான். மேகங்கள் கடலிடத்திற்கு திரண்டு போய் நின்று, கீழே இறங்கி
கடல் நீர் அனைத்தையும் அதனிடம் ஈர்த்து,
பிறகு மேலேறி, குடங்கள் நிரம்ப மழையாகப்
பொழிவதும் கோவர்தனமென்னும் மலையில் தான்


(5)

வானத்தில் உள்ளீர்! வலியீர் உள்ளீரேல்

அறையோ! வந்து வாங்குமின் என்பவன் போல்

ஏனத்து உரு ஆகிய ஈசன் எந்தை

இடவன் எழ வாங்கி எடுத்த மலை

கானக் களி யானை தன் கொம்பு இழந்து

கதுவாய் மதம் சோரத் தன் கை எடுத்து

கூனல் பிறை வேண்டி அண்ணாந்து நிற்கும்

கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே.


வானோர்களே! உங்களில் பலசாலி யாரேனும் உள்ளீராகில் 
இங்கு வந்து இந்த மலையை தூக்கிப் பாருங்கள்! 
என்று சவால் விடுபவன் போல், அன்று வராஹ உருவம் எடுத்த 
எனது தந்தை கண்ணபிரான்,
மலையை மண்கட்டியை எடுப்பது போல் அடியோடு
பிடுங்கி கையில் தூக்கியவாறு நின்றான்! காடுகளில்
திரியும் ஒரு யானை தன்னுடைய தந்தத்தை இழந்து,
மத நீர் சுரக்க, பிறை சந்திரனை தானிழந்த தந்தம்
என்று தவறாக எண்ணி தும்பிக்கையை மேலே தூக்கி
அதை எடுத்துக்கொள்ள நினைத்து நின்ற இடம்
அந்த கோவர்தனமென்னும் மலையில் தான....

இதுவல்லவா பக்தி!

பகவான் கிருஷ்ணரின் நினைவு எந்நேரமும் நம் நினைவில் இருந்தால் போதும். உலகில் எதையும் சாதிக்கலாம். பக்தனின் உண்மை அன்புக்கு அவன் உடனே கட்டுப்படுவான்.

ஒருசமயம், கிருஷ்ணர் தனக்கு தலைவலி வந்தது போல நடித்தார். அவரது மனைவி சத்யபாமாவுக்கு விஷயம் தெரிந்து மருந்துடன் ஓடோடி வந்தாள். அடுத்து ருக்மணி வந்தாள். அவர்கள் தங்களால் ஆன வைத்தியத்தை எல்லாம் செய்து பார்த்தார்கள். வலியால் துடிப்பது போல நடித்தார்.

அந்த சமயத்தில் நாரதர் அங்கு வந்தார். 

ஊரையே ஏமாற்றும் நாரதரை உலகளந்த பெருமான் ஏமாற்றி விட்டார். 

உண்மையிலேயே, சுவாமிக்கு தலைவலி தான் போலும் என்று நம்பிவிட்டார். 

இதற்கான மருந்தை அந்த பரந்தாமனைத் தவிர வேறு யாரால் சொல்ல முடியும் என நினைத்து, ஐயனே! எங்களைப் போன்ற ஜடங்களுக்கு வியாதி வந்தால் வைத்தியர் மருந்தளிப்பார். நீயே உலகம். உனக்கு ஒன்று என்றால், அதற்கு மருந்தும் உன்னிடம் தானே இருக்கும். என்ன மருந்து என சொல். வரவழைக்க ஏற்பாடு செய்கிறேன், என்றார்.


கிருஷ்ணர் அவரிடம், என் மீது அதிக பக்திகொண்டவன் யாரோ, அவனது பாதத்தில் படிந்த மணலை உதிர்த்து தண்ணீரில் கலக்கிக் கொண்டு வாருங்கள். 

அந்த பாததூளி தீர்த்தம்  என்னைக் குணமாக்கி விடும், என்றார். 

நாரதரும் தேடிப்பார்த்தார். யாரும் சிக்கவில்லை. எல்லாரும் தங்கள் பக்தியில் ஏதோ ஒரு குறை இருப்பதாகவே கூறினர்.

கிருஷ்ணரிடமே திரும்பிய நாரதர்,மருந்தைச் சொன்ன நீ மருந்து எங்குள்ளது? என்பதையும் சொல்லி விடு, என்றார்.


அதற்கு, கிருஷ்ணர் சொன்ன பதிலைக் கேட்டு, நாரதர் சிரித்துவிட்டார்.

கிருஷ்ணா! கோபியர்களின் கால் தூசைக் கொண்டு வரச்சொல்கிறாயே! எங்களைப் போன்றவர்கள் யாகம், பூஜைகளால் உன்னை ஆராதிக்கிறோம்.

அப்படிப்பட்ட நாங்களே எங்கள் பாத தூசை தருவதற்கு யோசிக்கிறோம்...கல்வியறிவற்ற கோகுலத்துப் பெண்களின் கால் தூசை கேட்கிறாயே!என்ன விளையாட்டு இது, என்றார்.

சொன்னதைச் செய்,என்றார் கிருஷ்ணர்.


நாரதர் கோகுலம் சென்றார்.


கோபியரே! கிருஷ்ணனுக்கு உடல்நிலைசரியில்லை,என்றார்.

இதைக் கேட்ட மாத்திரத்திலேயே பல கோபிகைகள் மயங்கி விழுந்து விட்டனர். 

சிலர் அரைகுறை மயக்கத்தில், கண்ணா! உனக்கு என்னாயிற்று! கிருஷ்ணா! நீ பிழைக்காவிட்டால் நாங்களும் பிழையோம். இந்த உலகில் வாழமாட்டோம், என்று உயிர்போகும் நிலைக்கு ஆளாகிவிட்டனர். சிலர், பித்துப் பிடித்ததைப் போல தயிர் பானைகளை கீழே போட்டு விட்டு அங்குமிங்குமாக ஓடினர்.


கிருஷ்ணா! உனக்கு என்னாயிற்று? இப்போதே உன்னைப் பார்க்க வேண்டும்! என்று அரற்றினர். அவர்களின் பக்தியைப் பார்த்து நாரதர் அசந்து போனார்.


தேவலோகத்திற்கு போய், கிருஷ்ணனுக்கு உடல்நிலை சரியில்லை, உங்களில் பக்தி மிக்கவர் பாதத்தூளியைக் கொடுங்கள் என்ற போது, நாங்கள் ஒன்றும் அவர் நினைக்குமளவு பக்தி செலுத்தவில்லையே! என்றார்களே தவிர, ஒருவராவது இப்படி வருத்தப்பட்டார்களா! 

ஏன்! நாராயணா! நாராயணா! என்று அவன் திருநாமத்தை எந்நேரமும் உச்சரிக்கும் நான் கூட அப்படி ஒரு நிலையை அடையவில்லையே! 

இந்தக் கோபிகைகளோ, கிருஷ்ணனின் உடல்நிலை சரியில்லை எனக் கேட்டதுமே கலங்கித் துடிக்கிறார்களே! உயிரையே விடுமளவு பக்தி செலுத்துகிறார்களே! இவர்களின் பாதத்தூளியே கிருஷ்ணரின் வியாதியைக் குணப்படுத்தும் என்று நினைத்த நாரதர், அவர்கள் பாதம்பட்ட கோகுலத்து மண்ணில் சிறிதளவு நீரில் கரைத்து கொடுத்தார்.

கிருஷ்ணருக்கு சுகமாகி விட்டது.


அந்தக் கண்ணனை நாமும் .....கிருஷ்ணா! கிருஷ்ணா  என பக்தியுடன் நினைப்போம். அவனது கருணா கடாட்சத்துக்கு ஆளாவோம்.


ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!!!!!

ஸ்ரீ க்ருஷ்ணா உன் திருவடிகளே சரணம் !!!!
அன்புடன் 
அனுபிரேம் 2 comments:

  1. கோவரத்தனம் சென்று வணங்க்கிய அந்த நாட்கள் மனதில் வந்து போகிறது. அவன் விளையாடிய இடம், அமுது உண்ட இடம், குடையாக பிடித்த மலை இவற்றை கண்ட போது வேறு எதுவும் வேண்டாம் என்று எண்ணம் தோன்றியது.
    உங்கள் பதிவு அருமை.
    படங்கள் அழகான தேர்வு.

    ReplyDelete