24 August 2021

நான்காம் நாள் - தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை

 மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில்  ஆவணி மூல திருவிழா ...

முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை 

இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை  !

மூன்றாம்  நாள் - மாணிக்கம் விற்ற லீலை ....

நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...











திருவிளையாடற் புராணம் -

  வங்கிய சூடாமணி பாண்டியன் என்பவன் மதுரை ஆட்சி செய்து வந்தார். அவர் மீனாட்சியம்மன் சுந்தரேசுவரர் கோயிலில் நந்தவனம் அமைத்து பல வகையான மரங்களையும், மலர்ச் செடிகளையும் வைத்து பராமரித்தார். 

அந்த நந்தவனத்தில் செண்பகப்பூ செடிகளை அதிகம் வைத்து அந்தப் பூக்களை இறைவனுக்கு அணிவித்து வந்தார். அதிகமாக செண்பக மாலையிலேயே இறைவன் காட்சியளித்தமையால், செண்பக சுந்ததரர் என்றும், மன்னன் செண்பகப் பாண்டியன் என்றும் அழைக்கப்பட்டார்.

செண்பக தோட்டத்தில் மன்னன் தன்னுடைய மனைவியுடன் இருந்தபோது, அவளுடைய கூந்தலில் இருந்து மணம் வருவதை அறிந்தான். பெண்ணின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டா. செயற்கையாக பூக்களை வைப்பதால் மணம் வருகிறதா என்ற கேள்வி எழுந்தது. 

தன்னுடைய சந்தேகம் என்ன வென்று கூறாமல், மன்னரின் சந்தேகத்தினை தீர்ப்பவருக்கு ஆயிரம் பொற்காசுகள் என அறிவிக்க செய்து, சபையின் முன்பு அந்த பொற்கிழியையும் தொங்க விட்டான்.


இதற்கிடையில் தருமி என்ற ஆதி சைவ பிரம்மச்சாரி ஒருவன் சொக்கநாதரை பூசிக்க விரும்பினான். ஆனால் திருமணம் முடிந்த பிறகே இறைவனை பூஜை செய்ய முடியும். 

எனவே தனக்கு அந்த பரிசை கிடைக்கும் படி செய்தால் அதை வைத்து திருமணம் செய்து கொண்டு இறைபணி செய்யலாம் என்று நினைத்து இறைவனிடம் சென்று வேண்டினான்.


சுவாமியும் அவனுக்கு...

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே --


(கருத்து:மலர்களில் மகரந்தங்களை எடுத்து வாழும் அழகிய சிறகுகளை உடைய தும்பியே! நீ அறிந்த பூக்களில்  என்னுடன் பல பிறப்புகளில் நட்புடன் பழகும் மயில் போல் அழகுடைய அழகிய பற்களை உடைய பெண்ணில் கூந்தலைவிட மணமுடையது ஏதேனும் உள்ளதோ?எனக்குப் பிடித்ததைக் கூறவேண்டாம்.நீ கற்றறிந்ததைக் கூறு ! )


 என்ற பாடல் எழுதிய ஓலையினை வழங்கினார்.


தருமியும் சங்கத்திற்கு சென்று அந்த பாடலை படித்து காட்ட, அரசன் தன் சந்தேகம் தீர்ந்ததாக கூறி அப்பொற்கிழியை தருமிக்கு அளிக்க உத்தரவிட்டார். அப்போது அங்கிருந்த நக்கீரர் அதனை தடுத்தார்.




உடனே தருமி, இறைவனிடம் சென்று ஐயனே உன் பாட்டில் குற்றம் கூறினால் யார் உன்னை மதிக்க வல்லவர்? என்று புலம்பி வருந்தினான்.

எனவே சுவாமியே ஒரு புலவர் வடிவத்தில் சங்க மண்டபத்திற்கு வந்தார். 

அங்கு தன்னுடைய பாட்டில் என்ன குற்றம் கண்டீர்கள் என்று கேட்க, நக்கீரர் எழுந்து பொருட்குற்றம் உள்ளது என்று கூறினார். 

அதனால் இருவருக்குமிடையே வாதம் தொடர, இறுதியாக தன் நெற்றிக் கண்ணை திறந்து காட்டினார்.

 இறைவனே வந்திருக்கிறார் என்று அறிந்த பின்னரும் நக்கீரர் பொருட்குற்றம் உள்ளது என வாதாட இறைவன் தன் நெற்றிக்கண்ணை திறக்க, அந்த கண்ணில் இருந்து வந்த வெப்பம் தாளாமல் பொற்றாமரைக்குளத்தில் நக்கீரர் விழுந்தார். 

பின்னர் இறைவனும் அங்கிருந்து மறைந்தார்.


இவ்வாறு நக்கீரனின் தமிழ் புலமையை உலகுக்கு உணர்த்திய இறைவன், மற்ற புலவர்களின் வேண்டுதலுக்கு இணங்க பொற்றாமரைக் குளத்திலிருந்து நக்கீரனை உயிர்ப்பித்து கொடுத்தார். 

நக்கீரரும் பொற்கிழியை தருமிக்கே கொடுக்கும்படி செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.








திருஞானசம்பந்தர் தேவாரம் - திருஆலவாய் - நீல மாமிடற்

1.094. திருஆலவாய் - திருவிருக்குக்குறள் 


1017

அந்த மில்புகழ், எந்தை யாலவாய்

பந்தி யார்கழல், சிந்தை செய்ம்மினே.


ஆலவாய்க் கோயிலிலுள்ள எந்தையாகிய சிவபெருமானுடைய அழிவில்லாத புகழுக்கு இருப்பிடமான திருவடிகளை மனங்கொள்ளுங்கள்.


மீனாட்சி அம்மன்  திருவடிகளே சரணம் ....



தொடரும் ...


அன்புடன்

அனுபிரேம் 


1 comment:

  1. படங்களும் பதிவும் நன்று. தருமி என்றாலே நாகேஷ் என்ற அளவுக்கு மனதில் பதிந்து விட்ட காட்சிகள்.

    ReplyDelete