மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் ஆவணி மூல திருவிழா ...
முதல் நாளன்று கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை
இரண்டாம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்த லீலை !
மூன்றாம் நாள் - மாணிக்கம் விற்ற லீலை ....
நான்காம் நாள்- தருமிக்கு பொற்கிழி அளித்த லீலை...
ஐந்தாம் நாள் -உலவாக் கோட்டை அருளிய லீலை
ஆறாம் நாள் - பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை ...
ஏழாம் நாள் திருவிழா - வளையல் விற்ற லீலை, பட்டாபிஷேகம்
திருவிளையாடற் புராணம் -
வளையல் விற்ற படலம் இறைவனான சொக்கநாதர் வளையல் வியாபாரியாக மதுரை வீதியில் எழுந்தருளி, வணிக மகளிருக்கு வளையல்கள் அணிவித்து அவர்களின் சாபத்தை போக்கியதைக் கூறுகிறது.
வளையல் விற்ற படலம் திருவிளையாடல் புராணத்தின் கூடல் காண்டத்தில் 32-வது படலமாக அமைந்துள்ளது.
முன்னொரு காலத்தில் தாருகாவனத்தில் இருந்த முனிவர்களின் மனைவியர்கள் தங்களைப் போன்று அழகிலும், கற்பிலும் சிறந்த பெண்கள் வேறு எங்கும் இல்லை என்று கர்வம் கொண்டிருந்திருந்தனர்.
இறைவனான சிவபெருமான் அவர்களின் கர்வத்தை அடக்க எண்ணினார். எனவே அவர் பிட்சாடனார் வடிவம் கொண்டார்.
பிட்சாடனார் அழகில் மன்மதனைப் போல கையில் பிட்சைப் பாத்திரம் ஏந்தி தாருகாவனத்திற்குச் சென்றார். தாருகாவனத்து முனிவர்களின் மனைவியர்கள் பிட்சாடனாரின் அழகில் மயங்கி செய்வதறியாது மயக்க முற்றிருந்தனர்.
பிட்சாடனார் தாருகாவனத்தை விட்டுச் சென்ற பின்னும் பெண்கள் மதிமயக்கத்திலிருந்தனர்.
தாருகாவனத்து முனிவர்கள் தங்கள் மனைவியர்களின் செயல்களைக் கண்டு ஆச்சரியமடைந்து மயக்கத்திற்கான காரணத்தை தங்களின் தவவலிமையால் கண்டறிந்தனர்.
பெண்களின் இந்நிலைக்கு காரணம் மதுரை சொக்கநாதர் என்பதை அறிந்த அவர்கள் அப்பெண்களை மதுரையில் அழகு வாய்ந்த வணிக மகளிர்களாய் பிறக்குமாறு சாபம் அளித்தனர்.
அப்பெண்கள் தங்களின் சாபம் எவ்வாறு விலகும் என்று முனிவர்களிடம் வினவினர்.
அதற்கு அவர்கள் மதுரை சொக்கநாதர் வளையல் வியாபாரியாக வந்து அப்பெண்களுக்கு வளையல்கள் அணிவித்ததும் நீங்கும் என்று கூறினர்.....
தாருகாவனத்து முனிவர்களின் சாபத்தினால் அவர்களுடைய மனைவியர்கள் மதுரையில் வணிகப் பெண்களாக அவதரித்தனர். அவர்கள் வளர்ந்து பேரழகுடன் மணப் பருவம் எய்தினர்.
அப்போது ஒரு நாள் சொக்கநாதர் வளையல் வியாபாரியாக பட்டு நூலில் வளையல்களைக் கோர்த்துக் கொண்டு வணிக வீதிக்கு எழுந்தருளினார்.
“வளையல் வாங்குங்கள், வளையல் வாங்குங்கள்” என்று வளையல் வியாபாரி கூறினார். வளையல் வியாபாரின் குரலால் ஈர்க்கப்பட்ட வணிகப் பெண்கள் வீதிக்கு வந்தனர்.
வளையல் வியாபாரியின் மேல் ஈர்ப்பு கொண்டு அவரிடம் தங்களுக்கு வளையல்கள் அணிவிக்கும்படி கூறினர். வளையல் வியாபாரியும் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார்.
வணிகப் பெண்கள் வளையல்களை உடைத்துவிட்டு மீண்டும் வளையல்களை அணிவிக்க வியாபாரியைக் கேட்டுக் கொண்டனர். வளையல் வியாபாரியும் அவர்களுக்கு வளையல்களை அணிவித்தார்.
வணிகப் பெண்கள் தாங்கள் அணிந்து கொண்ட வளையல்களுக்கு உரிய விலையைப் பெற்றுச் செல்லுமாறு கூறினர். அதற்கு இறைவனார் நாளைப் பெற்றுக் கொள்வதாகக் கூறி திருக்கோவிலுக்குள் சென்று சிவலிங்கத்துள் மறைந்தருளினார்.
வளையல் வியாபாரியின் பின் சென்ற பெண்கள் நடந்தவற்றைக் கண்டு அதிசயித்தனர். பின் நீண்ட நாட்கள் மதுரையில் வசித்து சாபம் நீங்கப் பெற்றனர்.
1.094. திருஆலவாய் - திருவிருக்குக்குறள்
1020
அம்பொ னாலவாய், நம்ப னார்கழல்
நம்பி வாழ்பவர், துன்பம் வீடுமே.
அழகிய பொன்மயமான ஆலவாய்த் திருக்கோயிலில் விளங்கும் இறைவனுடைய திருவடிகளே நமக்குச் சார்வாகும் என நம்பி வாழ்பவரின் துன்பம் நீங்கும்.
மீனாட்சி அம்மன் திருவடிகளே சரணம் ....
அனுபிரேம்
சிறப்பான படங்கள். தகவல்களும் சிறப்பு.
ReplyDelete