30 July 2021

வெக்காளியம்மன் ...

 வெக்காளி அம்மன் திருக்கோவில், உறையூர் .

வானமே கூரையாக வாழும் அன்னை, 

காளி என்றாலும் காட்சியில் கருணை வடிவம் காட்டும் அன்னை...




திருச்சிராப்பள்ளி மாநகரின் சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து 3 கி.மீ தொலைவில்  வெக்காளி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.

சோழ மன்னன் காலத்தில், இத்தலத்திற்கு வந்த மன்னனின் பட்டத்து யானை அலங்காரத்தோடு, கம்பீரமாக பவனி வந்தது. அப்போது அதை எதிர்கொண்ட கோழி ஒன்று, சற்றும் பயம் கொள்ளாமல், சட்டெனப் பறந்து, யானையின் பிடரியின் மீது அமர்ந்து கொண்டது. 

இதனால் அதிர்ச்சியுற்ற பட்டத்து யானை, செய்வதறியாது நெடுநேரம் திகைத்து நின்றது. 

இதனால் இத்தலம் ‘கோழியூர்’ என்றும், யானையைக் குறிக்கும் விதமாக ‘வாரணம்’ என்றும் அழைக்கப்பட்டது. இதனை மெய்ப்பிக்கும் விதமாக, இத்தலத்தில் உள்ள பஞ்சவர்ணநாதர் கோவில், அம்மன் சன்னிதி கருவறை வெளிச்சுவரில், இக்காட்சி புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.





சிலப்பதிகாரத்தில் கூறப்படும் நெடுங்கிள்ளியின் மகனான பெருநற்கிள்ளி எழுப்பிய பத்தினிக் கோட்டமே ‘வெக்காளி ஆலயம்’ என கூறப்படுகிறது. 


தலவரலாறு -

சாரமா முனிவர் என்பவர், அபூர்வ பூச்செடிகளைக் கொண்டு உறையூரில் நந்தவனம் அமைத்தார். அந்த நந்தவனத்தில் மலரும் மலர்களை மாலையாகத் தொடுத்து, அருகே உள்ள தாயுமான சுவாமிக்கு நாள்தோறும் சமர்ப்பித்து வந்தார்.


இந்த நிலையில் பூ வணிகன் ஒருவன், அந்தப் பகுதி மன்னனை மகிழ்விப்பதற்காக சாரமா முனிவரின் நந்தவனத்தில் இருந்து மலர்களை திருட்டுத்தனமாக பறித்துக் கொடுத்து வந்தான். ஒரு நாள் இதனைக் கண்டறிந்த சாரமா முனிவர், மன்னனிடம் போய் முறையிட்டார். 

மன்னனோ, முனிவரின் புகாரை புறக்கணித்த தோடு அல்லாமல், 

பூ வணிகனை ஊக்குவித்தான்.

இதனால் தவித்துப் போன சாரமா முனிவர், திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்று எண்ணி, தாயுமான சுவாமிகளிடமே தனது புகாரை சொல்லி வழிபட்டார். 

தனக்கு நேரும் குறைகளைக் கூட தாங்கிக் கொள்ளும் இறைவன், தன் அடியார்கள் படும் துயரைத் தாங்கிக்கொள்ள மாட்டார் என்பதே  உண்மை. 

இதனால் கிழக்கு நோக்கிய இறைவன், கோபக்கனல் கொண்டு மேற்குநோக்கி திருப்பினார். அவரது உக்கிரப் பார்வையால், உறையூரில் மண் மழை பொழிந்தது. 

இதில் அங்கு வசித்த மக்களின் வீடுகள் அழிந்தன. மக்கள் செய்வதறியாது திகைத்தனர். 

அனைவரும் உறையூரில் உள்ள வெக்காளி அம்மனிடம் சரண் புகுந்தனர்.

அன்னை வெக்காளி, தம் மக்களுக்காக தாயுமானவரிடம் வேண்ட, மண் மாரி பொழிவது நின்றது.

 மக்கள் வீடு இழந்து நின்றனர். மக்களின் துயரம் கண்டு வருந்திய அன்னை, மக்கள் அனைவருக்குமே வீடு கிடைக்கும் வரை நானும் வெட்ட வெளியிலேயே வாழ்வேன் என்று சபதம் செய்து வானமே கூரையாக வாழத் தொடங்கினாள். இன்றளவும் வீடற்றவர்கள் வாழ்ந்து வருவதால், அன்னையும் தன் சபதப்படியே வெட்ட வெளியில் வாழ்ந்து வருவதாக தல வரலாறு சொல்கிறது.





ஆலய அமைப்பு -

சுற்றிலும் எழிலான மண்டபம் இருக்க, அன்னை வெக்காளி மட்டும் தன் வாக்குப்படி வெட்டவெளியில் நடுநாயகமாக வடக்கு முகமாய் அருள்காட்சி வழங்குகிறாள். 

ஆலயத்திற்கு தெற்கு, வடக்கு வாசல்கள் உள்ளன. 

தெற்கு வாசலில் நுழைந்தால் வல்லப கணபதி, விசாலாட்சி சமேத விஸ்வநாதர், 

வள்ளி - தெய்வானை சமேத மயூர முருகன், காத்தவராயன், 

புலி வாகனத்துடன் கூடிய பெரியண்ணன், மதுரைவீரன், உற்சவர் வெக்காளி, 

வடக்கு சுவரில் துர்க்கை, பொங்கு சனீஸ்வரர் என அனைத்து சன்னிதிகளும் ஒருங்கே அமைந்துள்ளன.


அன்னை வெக்காளி, பெயரில் தான் காளி. 

வடிவத்தில் கருணை கொண்ட முகம். 

கோரைப் பற்களின் சீற்றம் கிடையாது. 

சிரித்த முகம், சிவந்த வாய், அக்னிச் சுவாலையுடன் கூடிய கிரீடம், அதில் நாகமும் அமைந்துள்ளது. 

நான்கு கரங்களில் மேற்கரங்கள் இரண்டில் உடுக்கை, பாசம், கீழே வலது கரம் சூலம் ஏந்தியிருக்கிறாள். 

வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு, அரக்கனை மிதித்த விதமாக காட்சி தருகின்றாள். 

பொதுவாக, இடதுகாலை மடித்து காட்சிதரும் கோலத்திற்கு மாறாக, வலது காலை மடித்து காட்சி தருவது குறிப்பிடத்தக்கது. இது ‘வீர ஆசனம்’ என்று அழைக்கப்படுகிறது.





திருவிழாக்கள் -

 சித்திரை - ஐந்து நாட்கள் திருவிழா,
 வைகாசி – கடைசி வெள்ளி " மாம்பழஅபிஷேகம்" , 
ஆனி – கடைசி வெள்ளி காய்கனிகள் அலங்கார வழிபாடு.,
ஆடி – அனைத்து வெள்ளிகளும் சிறப்பு வழிபாடு.
ஆவணி - "சண்டிஹோமம்". 
புரட்டாசி - நவராத்திரி விழா. 
கார்த்திகை - தீபம்.
தை – பொங்கல் சிறப்பு வழிபாடு, தைப்பூசம் புறப்பாடு. 
மாசி – கடைசி ஞாயிறு "லட்சார்ச்சனை". 
பங்குனி – முதல் வெள்ளியில் பூச்சொரிதல் விழா.








கருமாரி எங்கள் தாயே கருமாரி

    தேவி கருமாரி துணை நீயே மகமாயி


ஆயிரம் கண்கள் உடையவளே

    ஆலயத்தின் தலைமகளே

    கடைக் கண்ணாலே பார்த்தருள்வாய்

    காலமெல்லாம் காத்தருள்வாய் (தாயே)

    அன்னை உந்தன் சன்னதியில்

    அனைவரும் ஒன்றாய் கூடிடுவோம்

    அம்மா உந்தன் பொன்னடியில்

    அனுதினமும் சரணடைவோம்  (தாயே)

    சிங்கமுக வாகனத்தில் சிங்கார மாரியம்மா

    வந்துவரம் தந்திடுவாய் எங்கள் குல தெய்வம் மாரியம்மா


ஓம் சக்தி ஓம் ...

ஓம் சக்தி ஓம் ...

அன்புடன், 
அனுபிரேம் 

2 comments:

  1. வணக்கம் சகோதரி

    ஆடி வெள்ளியில் பதிவு அருமை. திருச்சி மாநகரம் உறையூரில், உறையும் வெக்காளியம்மனை பக்தியுடன் தரித்து கொண்டேன்.கோவிலைப் பற்றிய ஸ்தல வரலாறும், அங்கு குடி கொண்டிருக்கும் அன்னையின் சிறப்புகளைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.
    ஓம் சக்தி ஓம். ஓம் சக்தி ஓம்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
  2. பார்க்கவேண்டிய முக்கியமான கோயில். பொதுவாக பட்டீஸ்வரம் துர்க்கையினை நான் அதிகம் நினைப்பவன், வணங்குபவன். பட்டீஸ்வரத்தைத் தவிர்த்து இரு கோயில்கள் என் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுததியவை. ஒன்று சோட்டாணிக்கரை பகவதியம்மன் மற்றொன்று உறையூர் வெக்காளியம்மன். இந்த இரு கோயில்களுக்கும் முதல் முறை நான் சென்ற சமயத்தில், காலை வைத்து நுழையும்போது, என்னையும் அறியாமல் என் உடலில் ஒரு விதமான உணர்வு ஏற்பட்டது. அன்னியோன்னியமான, அல்லது வெகுநாட்களாக பார்க்க ஆசைப்பட்ட இக்கோயில்களில் நான் பெற்ற அனுபவத்தை வேறு எங்கும் பெறவில்லை. அப்போது முதல் இக்கோயில்கள்மீதும் இறைவியின் மீதும் அதிக நம்பிக்கை வந்துவிட்டது.

    ReplyDelete