24 July 2020

ஆடிப்பூரம் - ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்

இன்று  ஆண்டாள் அவதாரம்  திருநட்சத்திரம் .....ஆடிப்பூரம்


ஆண்டாள் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!

பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயரரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!






ஏழாம் நூற்றாண்டு,

 நள ஆண்டு,

 ஆடி மாதம்   செவ்வாய்க்கிழமை,

பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதியில்  தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்..



ஆண்டாள் வைபவங்கள்  முந்தைய பதிவுகள்  இங்கே ...
ஸ்ரீ ஆண்டாள் , ஸ்ரீ ஆண்டாள் வைபவங்கள்   மற்றும்  



ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பெரியாழ்வார் தாம் அமைத்திருந்த நந்தவனத்திலுள்ள ஒரு துளசிச் செடியின் அடிவாரத்தில், பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். 

அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். 

அதையே கோதா என்று வடமொழியில் சொல்கிறோம்.

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.


3 ஆம் திருநாள் காலை ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கு, ஸ்ரீரெங்கமன்னார் தந்தப் பல்லக்கு.. 


இரவு ஸ்ரீஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி சேவை , 
ஸ்ரீரெங்கமன்னார் ஹனுமந்த வாகனத்தில் 















ஸ்ரீஆண்டாள் தங்கப் பரங்கி நாற்காலி சேவை





இந்த வருடம்  ஆடிபூரம்  மூன்றாம் திருநாள் -அலங்கார திருக்கோலத்தில் 
ஸ்ரீஆண்டாள் ரெங்கமன்னார்.





கோதா என்ற வடமொழிப் பெயருக்குப் பலவிதமான விளக்கங்கள் உள்ளன. 

தா என்றால் தருபவள். கோ என்றால் நல்வார்த்தை என்று பொருள். 
நல்வார்த்தைகளை உடைய பாசுரங்களை வழங்கியபடியால் கோதா. 

கோ என்ற சொல்லுக்கு ஞானம் என்ற பொருளும் இருப்பதால், தனது பாசுரங்களாலே உயர்ந்த ஞானத்தை நமக்கு அருள்வதால் கோதா என்றும் சொல்லலாம்.

கோ என்றால் மங்களம் என்றும் பொருளுண்டு. 

எனவே மங்களங்களை அருள்பவள் கோதா. 

அவள் யார் யாருக்கெல்லாம் மங்களங்களை அருளினாள் ..... 

அமங்களமாய்க் கருதப்பட்ட ஆடி மாதத்தில் அவதரித்து, திருவாடி என்று அதற்குப் பெயருமளித்து, ஆடி மாதத்துக்கு மங்களத்தைத் தந்தாள். 

முப்பூரம் எனப்படும் பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய மூன்று நட்சத்திரங்கள் அமங்களமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், அவற்றுள் முதன்மையானதான பூர நட்சத்திரத்தில் அவதரித்து பூரம், பூராடம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்களுக்கு மங்களத்தைத் தந்தாள். 

மங்களவாரம் என்று பெயர் பெற்றிருந்தாலும் செவ்வாய்க் கிழமை அமங்களமாகவே கருதப்பட்டது. அந்தச் செவ்வாய்க் கிழமையில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். 

தென்திசை என்பது அமங்களமாகக் கருதப்படும் நிலையில், தென்திசையிலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்து அதற்கும் மங்களம் தந்தாள். 

இவ்வாறு தென்திசை, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், ஆடி மாதம் என அனைத்துக்கும் மங்களத்தை அருளியபடியால் அவள் கோதா.

கோ என்றால் பூமி. தா என்று பிளந்தவள். 

பூமியைப் பிளந்து கொண்டு தோன்றியபடியால் கோதா என்றும் சொல்வதுண்டு.

4 ஆம் திருநாள் காலை ஸ்ரீஆண்டாள் தங்கப் பல்லக்கு, ஸ்ரீரெங்கமன்னார் தந்தப் பல்லக்கு.. 

இரவு ஸ்ரீஆண்டாள் - சேஷ வாகன சேவை , 
ஸ்ரீரெங்கமன்னார் - கோவர்தனகிரி வாகனத்தில்... 










ஸ்ரீஆண்டாள் - சேஷ வாகன சேவை







இந்த வருடம்  நான்காம்  திருநாள் 




 பெரியாழ்வாரின் பெருமையை உலகுக்கு உணர்த்தி, 
திருமாலை விட உயர்ந்த ஒரு ஸ்தானத்தை அவருக்கு அளிக்க விழைந்த பூமிதேவி, பெரியாழ்வாரைத் தன் தந்தையாகத் தேர்ந்தெடுத்து  அவருக்கு மகளாக வந்து தோன்றின நன்னாள் இந்த ஆடிப் பூரம்.


நாச்சியார் திருமொழி
ஏழாம் திருமொழி - கருப்பூரம் நாறுமோ
பாஞ்சஜன்னியத்தைப் பத்பநாபனோடுஞ் சுற்றமாக்குதல்



கருப்பூரம்நாறுமோ? கமலப்பூநாறுமோ? * 
திருப்பவளச்செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ? * 
மருப்பொசித்தமாதவன்தன் வாய்ச்சுவையும்நாற்றமும் * 
விருப்புற்றுக்கேட்கின்றேன் சொல்லாழிவெண்சங்கே. (2)

1 567



கடலில்பிறந்து கருதாது * பஞ்சசனன் 
உடலில்வளர்ந்துபோய் ஊழியான்கைத்தலத் 
திடரில் * குடியேறித் தீயவசுரர் * 
நடலைப்படமுழங்கும் தோற்றத்தாய்நற்சங்கே.

2 568


தடவரையின்மீதே சரற்காலசந்திரன் * 
இடையுவாவில்வந்து எழுந்தாலேபோல் * நீயும் 
வடமதுரையார்மன்னன் வாசுதேவன்கையில் * 
குடியேறிவீற்றிருந்தாய் கோலப்பெருஞ்சங்கே!

3 569






ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

இன்றோ திருவாடிப்பூரம்* எமக்காக
வன்றோ இங்காண்டாள் அவதரித்தாள்* குன்றாத
வாழ்வான வைகுந்த வான்போகம் தன்னையிகழ்ந்து*
ஆழ்வார் திருமகளாராய். 
22



பெரியாழ்வார் பெண்பிள்ளையாய்* ஆண்டாள் பிறந்த
திருவாடிப்பூரத்தின் சீர்மை* ஒருநாளைக்கு
உண்டோ மனமே! உணர்ந்துபார்* ஆண்டாளுக்கு
உண்டாகில் ஒப்பிதற்கும் உண்டு.
23



அஞ்சுகுடிக்கொரு சந்ததியாய்* ஆழ்வார்கள்
 தஞ்செயலை விஞ்சிநிற்கும் தன்மையளாய்* பிஞ்சாய்ப்
பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்*
வழுத்தாய் மனமே! மகிழ்ந்து 
24









ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......



திருவிழாவின் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...

இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...

தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்


3 comments:

  1. கற்பூரம் போல் மணக்கின்றது
    கோதையின் புகழ்...

    ஆண்டாள் திருவடிகள் போற்றி...

    ReplyDelete
  2. பதிவு மிக ரௌமை.
    படங்களும் பாட்லக்ளும் அருமை.
    ஆண்டாள் திருவடிகளே போற்றி போற்றி!

    ReplyDelete