28 July 2020

முத்துக்குறி உற்சவமும்,புஷ்ப யாகமும்

வாழ்க வளமுடன் 












பத்தாம் நாள் - மாலை 5 மணிக்கு இரட்டைத்தோளுக்கினியானில் ஆண்டாள்-ரங்கமன்னார் புறப்பாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஆண்டாள் அவதாரம் பட்டர்களால் வாசிக்கப்படும். 
முத்துக்குறி உற்சவம்  - ஆண்டாள் கோவிலுக்கு முன்னால் உள்ள சிங்கம்மாள் குறடு மண்டபத் தில் மாலை தொடங்கி நள்ளிரவு வரை நடக்கும்.




ஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் அலங்காரத்தில் எழுந்தருளி இருப்பார்.
அரங்கன் வந்து தன்னைக் கைத்தலம் பற்றும் நாளும் விரைவில் வராதோ என்று ஆண்டாள்-தலைவி ஏங்கி,ஏங்கி உருகி மெலிந்து விடுவாராம்.

தலைவியின் தாய் தன் மகள் பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று 'இரக்கம் இல்லாத பெருமாளே' என்று கோபித்துக் கொள்வார்.


வாணுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள்;விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்!உம்மைக்
காண, நீர் இரக்கம் இலீரே– 2819
(திருவாய்மொழி 2-4-2)

தலைவியின் நிலை, தாயின் புலம்பல்,  தோழி இயம்புதல் ஆகியவற்றை பல பாசுரங்கள் வாயிலாக அரையர் ஸ்வாமி எடுத்துரைப்பார்.


















108 திவ்ய தேசப் பெருமாள்கள், ஆண்டாள் நாச்சியாரை மணம் புரிய வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து விடுகிறார்களாம்.

அவர்களில் யார் ஆண்டாள் கனாவில் கண்ட பெருமாள் என்று கட்டுவிச்சி என்னும் குறத்தி குறி சொல்வாள். அரையர் ஸ்வாமியே குறத்தியாகவும் இருந்து சொல்வார்.

இதற்காக ஆண்டாள் சந்நிதியில் பாரம்பரியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நன்முத்துக்களை ஒரு தாம்பாளத்தில் பரப்பி, அவற்றை கைகளால் அலைந்து
ஒவ்வொருவராக விலக்கி நிறைவாக அரங்கர்/ரங்கமன்னார் தான் ஆண்டாள் கவர்ந்த பெருமாள் என்று ஆண்டாளும்,ரங்கமன்னாரும் கூடுவதாக கட்டுவிச்சி (அரையர்) உரைப்பார்.

இந்த வைபவத்தில் அரையரே கேள்வி-பதில் சொல்வார்....

தகுந்த பாசுரங்களை இசைப்பார்....

சில இடங்களில் அபிநயமும் செய்வார்....





இந்த வருட அரையர் சேவை 












பதினொன்றாம் நாள்  காலையில் ஆண்டாள்- ரங்கமன்னார் புறப்பாடாகி நான்கு ரத வீதிகளில் உலா வருவர். 
தீர்த்தவாரி கண்டருளி மாலை ஆஸ்தானம் சென்று அடைவார்கள்.

12 நாட்கள் உற்சவம் முடிந்து இன்று தான் திவ்ய தம்பதிகள் சந்நிதி கர்ப்பஹ்ருகத்துக்கு முன்னால் உள்ள தங்கள் ஆஸ்தான மண்டபம் எழுந்தருளி பெரியாழ்வாருடன் சேர்ந்து சேவை சாதிப்பார்கள். 



பனிரண்டாம் நாள் காலை உற்சவ சாந்தியோடு விழா நிறைவடையும். 

மாலை 6 மணிக்கு ஆண்டாள்-ரங்கமன்னார் தம்பதிக்கு புஷ்ப யாகம் நடைபெறும். 



இந்த வருட புஷ்ப யாகம்













நாச்சியார் திருமொழி
பதிநான்காம் திருமொழி : பட்டிமேய்ந்தோர்
விருந்தாவனத்தே பரந்தாமனைக் கண்டமை கூறுதல்



பட்டிமேய்ந்தோர்காரேறு பலதேவற்கு ஓர்கீழ்க்கன்றாய் * 
இட்டீறிட்டுவிளையாடி இங்கேபோதக்கண்டீரே? * 
இட்டமானபசுக்களை இனிதுமறித்துநீரூட்டி * 
விட்டுக்கொண்டுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே. (2)

1 637



அனுங்கஎன்னைப்பிரிவுசெய்து ஆயர்பாடிகவர்ந்துண்ணும் * 
குணுங்குநாறிக்குட்டேற்றைக் கோவர்த்தனனைக்கண்டீரே? * 
கணங்களோடுமின்மேகம் கலந்தாற்போல * வனமாலை 
மினுங்கநின்றுவிளையாட விருந்தாவனத்தேகண்டோமே.

2 638



மாலாய்ப்பிறந்தநம்பியை மாலேசெய்யும்மணாளனை * 
ஏலாப்பொய்களுரைப்பானை இங்கேபோதக்கண்டீரே? * 
மேலால்பரந்தவெயில்காப்பான் வினதைசிறுவன்சிறகென்னும் * 
மேலாப்பின்கீழ்வருவானை விருந்தாவனத்தேகண்டோமே.

3 639


கார்த்தண்கமலக்கண்ணென்னும் நெடுங்கயிறுபடுத்தி * என்னை 
ஈர்த்துக்கொண்டுவிளையாடும் ஈசன்தன்னைக்கண்டீரே? * 
போர்த்தமுத்தின்குப்பாயப் புகர்மால்யானைக்கன்றேபோல் * 
வேர்த்துநின்று விளையாட விருந்தாவனத்தேகண்டோமே.

4 640



மாதவன்என்மணியினை வலையில்பிழைத்தபன்றிபோல் * 
ஏதுமொன்றும்கொளத்தாரா  ஈசன்தன்னைக்கண்டீரே? * 
பீதகவாடையுடைதாழப் பெருங்கார்மேகக்கன்றேபோல் * 
வீதியாரவருவானை விருந்தாவனத்தேகண்டோமே. (2)

5 641

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......


திருவிழாவின் படங்களும் , தகவல்களும் இணையத்திலிருந்தே ...இவ்வழகிய  படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் ...

மேலும் தொடர்ந்து ஸ்ரீஆண்டாள் ரங்கமன்னார் திருக்காட்சிகளை  கண்டு ரசித்த அனைவருக்கும் நன்றிகள் ........

அன்புடன்
அனுபிரேம்

4 comments:

  1. அற்புதமான தரிசனம்...
    ஸ்ரீ ஆண்டாள் ரங்க மன்னார் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  2. அனு எல்லாமே அழகான படங்கள். அரையர் சேவை பற்றி சுஜாதா குறிப்பிட்டிருப்பார் கற்றதும் பெற்றதும் என்று நினைக்கிறேன்.

    கீதா

    ReplyDelete
  3. அருமையான தரிசனம். படங்கள் டாப் க்ளாஸ்.

    அரையர் சேவையின் சிறு காணொளியாவது கிடைக்கவில்லையா?

    ReplyDelete
  4. படங்கள் அனைத்துமே அழகு.

    ReplyDelete