31 July 2020

கீழப்புலியூர் பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி திருக்கோவில் - பெரம்பலூர்

பச்சையம்மன் கோயில், குமாரை...
இன்று   ஆலயதரிசனம் வழியாக பெரம்பலூர் அருகே அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பச்சையம்மன் சமேத மன்னாத சுவாமி   திருக்கோவில் தரிசனம்  காணலாம்....





பெரம்பலூர் மாவட்டத்தில் கீழப்புலியூர் என்னும் கிராமத்தில், திட்டக்குடிக்கு அருகே இந்த திருக்கோவில் அமைந்துள்ளது.




பச்சையம்மன் வரலாறு ...

பொதிகை மலை அடிவாரத்தில் வாழ்ந்த ஒரு விவசாயிக்கு ஏழு பெண் பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்குத் திருமணம் செய்துவைக்க முடியாமல் பெற்றோர் தவிக்க, அந்த ஏழு கன்னிப் பெண்களும் ஆற்றங்கரையில் மண்ணால் சிவலிங்கம் செய்து, தங்கள் பெற்றோரின் கவலையைப் போக்குமாறு சிவபெருமானை வேண்டினர்.



அவர்கள் பக்திக்கு இரங்கிய சிவபெருமான் ஒரு திருவிளையாடல் புரிய எண்ணினார். 

ஒரு விவசாய இளைஞன்போல உருவெடுத்து அங்கு சென்று, பூஜை செய்து கொண்டிருந்த பெண்களைத் தழுவ முயன்றார். “யாரோ ஒருவன் வந்து நம்மை மானபங்கப்படுத்தப் பார்க்கிறான” என்று மிரண்டு போன பெண்கள், திசைக்கு ஒருவராகக் காட்டிற்குள் ஓடி ஒளிந்தனர்.

இப்படிப் பிரிந்துபோன சகோதரிகள் மீண்டும் ஒன்று சேர ஓராண்டு ஆகிவிட்டது. 

அந்த ஏழு சகோதரிகளில் காத்தாயி என்பவள் மட்டும் இடுப்பில் கைக்குழந்தையை வைத்துக் கொண்டு வந்தாள்.

மற்ற சகோதரிகள் குழப்பமடைந்து,”உனக்கு ஏது இந்தக் குழந்தை?” எனக் கேட்டனர்.

அதற்கு காத்தாயி,”பூசை செய்தபோது நம்மைத் துரத்திய அந்த ஆண்மகன் என்னைப் பிடித்து பலவந்தப்படுத்தி விட்டான். அதனால் உண்டானது இந்தக் குழந்தை” என்றாள்.

ஆனால் அதை சகோதரிகள் நம்பவில்லை.

“என்னை நீங்கள் நம்பவில்லையா? என்மீதே சந்தேகப்படுகிறீர்களே. நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க நான் என்ன செய்ய வேண்டும்?” என்று அழுதபடி கேட்டாள்.

“நீயும் உன் குழந்தையும் தீயில் இறங்கி வந்தால் நீ சொல்வதை உண்மை என நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்” என்றனர் மற்ற சகோதரிகள்.

அதன்படியே தீ மூட்டிய காத்தாயி, அதில் தன் குழந்தையோடு இறங்கி நடந்து வந்தாள்.

அப்போது அவர்களுக்குக் காட்சி கொடுத்த சிவ பெருமான்," இவையெல்லாம் என் திருவிளையாடல்களில் ஒன்று. 

நீங்களெல்லாம் எம்மைக் கண்டு பயந்து ஓடி ஒளிந்த அந்த ஏழு ஊர்களிலேயே தெய்வங்களாய் குடிகொண்டு மக்களின் துயரங்களைப் போக்குங்கள். 

மக்களும் உங்களையே முதன்மைப் படுத்துவார்கள். 

உங்களுக்குக் காவலர்(ஏவலர்) களாக பூமாலையப்பர், செம்மலையப்பர், முத்தையா, ராயப்பா, கருப்பையா உள்ளிட்ட ஏழு முனிகளும் உடனிருந்து செயல்படுவார்கள்” என்றருளி மறைந்தார். அவர்களும் அவ்வாறே கோவில் கொண்டார்கள்.







சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன், 
புலியூர் பட்டத்தாள், 
காளிங்கராய நல்லூர் அருந்தவம், 
வசித்தூர் பூவாள், 
குமாரை பச்சையம்மன், 
வெங்கனூர் மறலியம்மன் என்னும் காத்தாயி, 
அரகண்ட நல்லூர் புங்காவனம் ஆகியோரே அந்த ஏழு தெய்வங்கள்.

 இவர்களில் சன்னாசி நல்லூர் பார்வதி அம்மன் மூத்தவள். ஏழு ஊர்களும் பெரம்பலூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அமைந்துள்ளன.










கோவிலில் கோபுரத்திற்கு அருகே   மூலவர் சன்னதி உள்ளது.  இங்கு ஸ்ரீ பச்சையம்மன் உடனுறை மன்னாத சுவாமி அமர்ந்த கோலத்தில் அருள்புரிகிறார். எதிர்புறம் நந்தியும், பலிபீடமும் அமைந்துள்ளது.


ஸ்ரீ முத்தையா சன்னதி மூலவர் சன்னதிக்கு பின்பக்கத்தில் வடக்கு நோக்கியுள்ளது. இங்கு   முத்தையா சுவாமியுடன் ராயப்பா சாமியும், செம்மலையப்பாவும் சேர்ந்தே  அருள்புரிகின்றனர்.




காவல் தெய்வங்கள் 

மிகப்பெரிய திருவுருவம் கொண்டு நான்கு முனிகள் மிரட்டும் விழிகளால் காவல் புரிகின்றனர். கோவிலுக்கு கம்பீரமாக விளங்கும் இவர்களை வால்முனி, செம்முனி, வளர்ந்தமுனி, சடாமுனி என்று அழைப்பர்.




அடுத்ததாக பூமாலையப்பா சுவாமி சன்னதி உள்ளது.

ஸ்ரீ பச்சையம்மன் சன்னதி 
 இக்கோவிலில் பிரதான சன்னதி  பச்சையம்மன் சன்னதி .

இங்கு  பச்சையம்மன், பூங்கையம்மன்  அபிஷேக திருவுருவச்  சிலைகள் அமைந்துள்ளன. அடுத்து முடியம்மன், பசுங்கிளியம்மன், பூங்கையம்மன் , வேங்கையம்மன்,  காத்தாயி அம்மன் மற்றும் மருளியம்மன் ஆகியோர் கிராமத் தேவதைகளாக இருந்து அருளாட்சி செய்கின்றனர்.





கோவிலுக்கு அருகிலேயே  வீரபத்திரசுவாமி இரு தேவியருடன் அமர்ந்து அருளாட்சி செய்கிறார். கோவிலுக்கு வடக்கு மூலையில் பெரிய திருக்குளம் அமைந்துள்ளது.


வெளிப்புற தோற்றம் ....








பசுமையான இடத்தில்  அமர்ந்து வேண்டி  வரும் மக்களுக்கு நல்லாசி அருளும் பச்சையம்மனை,  போன முறை பொங்கலுக்கு சென்ற பொழுது
 தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது. 

மிக அமைதியான இடம்.,அற்புதமான கோவில் 
மிக சிறப்பான பராமரிப்பில் அழகாக மிளிர்கிறது. 


முக நூலிலிருந்து அன்னையின் அழகிய படங்கள் ...










அபிராமி அந்தாதி...

26. சொல்வாக்கும் செல்வாக்கும் பெருக


ஏத்தும் அடியவர் ஈரேழுலகினையும் படைத்தும்,
காத்தும், அழித்தும் திரிபவராம்; கமழ் பூங்கடம்பு
சாத்தும்குழல் அணங்கே! மணம் நாறும் நின்தாள் இணைக்கு என்
நாத்தங்கு புன்மொழி ஏறியவாறு நகையுடத்தே.


27. மனநோய் அகல

உடைத்தனை வஞ்சப் பிறவியை; உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை; பத்மபதயுகம் சூடும் பணி எனக்கே
அடைத்தனை; நெஞ்சத்து அழுக்கை எல்லாம் நின் அருள்புனலால்
துடைத்தனை; சுந்தரி! நின்னருள் ஏதென்று சொல்லுவதே.


28. இம்மை மறுமை இன்பங்கள் அடைய

சொல்லும் பொருளும் என நடமாடும் துணைவருடன்
புல்லும் பரிமளப் பூங்கொடியே நின் புதுமலர்த்தாள்
அல்லும் பகலும் தொழும் அவர்க்கே அழியா அரசும்
செல்லும் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே.


29. எல்லா சித்திகளும் அடைய

சித்தியும், சித்திதரும் தெய்வமுமாகத் திகழும்
பராசத்தியும், சக்தி தழைக்கும் சிவமும் தவம் முயல்வார்
முத்தியும், முத்திக்கு வித்தும் ,வித்தாகி முளைத்தெழுந்த
புத்தியும், புத்தியின் உள்ளே புரக்கும் புரத்தையன்றே.



30. அடுத்தடுத்து வரும் துன்பங்கள் நீங்க

அன்றே தடுத்து! என்னை ஆண்டுகொண்டாய்; கொண்டதல்ல என்கை
நன்றே உனக்கு இனி நான் என்செயினும், நடுக்கடலுள்
சென்றே விழினும் கரையேற்றுகை நின் திருவுளமே;
ஒன்றே! பல உருவே! அருவே! என் உமையவளே!

ஓம்சக்தி ....
அன்னையின் திருவடிகளே சரணம்




அன்புடன் 
அனுபிரேம் 

3 comments:

  1. நல்லதொரு தரிசனம்...
    நலமெலாம் வாழ்க...

    ReplyDelete
  2. நீங்கள் சென்ற சமயத்தின் சமீபத்தில் தான் குடமுழுக்கு நடந்திருக்கும் போல! வண்ணப்பூச்சு சிறப்பாக இருக்கிறதே.

    அழகான கோவில். பகிர்ந்து கொண்டதற்கு நன்று.

    ReplyDelete
  3. கோவில் புதியது போலத் தோற்றம் அளிக்கிறது.

    அழகான படங்கள், அழகிய கோவில். தெப்பக்குளமும் அருமை.

    எல்லாக் கோவில்களுக்கும் காவல் தெய்வங்கள் இருக்கக் காரணம் என்ன? (அழகர் மலையில், கருப்பண்ணஸ்வாமி காவல் தெய்வம். இதுபோன்று பல கோவில்களில்)

    ReplyDelete