25 July 2017

ஆடி -பூரம் .... ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்...




ஸ்ரீ ஆண்டாள் அவதார திருநட்சத்திரம்..  ....ஆடிப்பூரம்



 ஏழாம் நூற்றாண்டு,

 நள ஆண்டு,

 ஆடி மாதம்   செவ்வாய்க்கிழமை,

பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதி,







பெரியாழ்வார்    தன் வழக்கமான மலர்க் கைங்கரிய சேவையைச் செய்ய  ஒரு  நாள்  நந்தவனத்திற்கு சென்று மலர்க் கொய்து கொண்டிருக்கையில்,



 ஒரு துளசிச் செடியின் அடியில் பூதேவியின் அம்சமாக அந்த குழந்தையைக் கண்டெடுத்தார்.. ....


பெரியாழ்வார்-விரஜை தம்பதியர் அக்குழந்தைக்கு “கோதை” என பெயர் சூட்டி வளர்த்து வந்தனர்.


     கோதையும் பெரியாழ்வாருடன் சேர்ந்து இறைவனுக்கு மலர்க்கைங்கரியம் செய்வதிலும், இறைவனுக்குத் தொண்டுகள் புரிவதிலும் துணையாய் இருந்தாள்.



    பெரியாழ்வார், நாள்தோறும் கோதைக்கு, கண்ணனின் குழந்தைப் பருவ குறும்புகள் முதல் அவரது ஒவ்வொரு அருட்செயல்களையும் கதையாய்க் கூறுவார்.


இதனால் இறைவனைப் பற்றிய சிந்தனையே உள்ளத்தில் பதிந்து, தன் ஒவ்வொரு அசைவிலும் இறைவன் இருப்பதை இதயப்பூர்வமாக உணர்ந்தாள்.




  கோதையின் பக்தி,   காதலாக மலர்ந்தது.

கோதை வளர, தான், தன் தலைவனுக்கு ஏற்ற துணையாய் இருக்க முடியுமா என்று யோசிக்க ஆரம்பித்தாள்.

அதனால் அவள், இறைவனுக்குச் சூட்டுவதற்காக பெரியாழ்வார் கோர்த்து வைத்திருந்த பூமாலையை, தன் தந்தைக்குத் தெரியாமலேயே எடுத்து அணிந்து கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்துக் கொள்வாள்.






   ஒரு நாள், மாதவனுக்கான மாலையில் மங்கையின் முடி ஒன்று இருப்பதைப் பார்த்துப் பதறினார், பெரியாழ்வார்.

     அதைக் கண்டறிய வழக்கம் போல், தன் வழக்கமான இடத்தில் மாலையை வைத்து விட்டு மறைந்து நின்று கவனிக்கையில் கள்வனின் காதலியின் கள்ளத்தனம் வெளிப்பட்டுவிட்டது.

     அவர், கோதையைக் கடிந்து கொண்டு, மீண்டும் புதியதொரு மாலையை மாலவனுக்கு அணிவித்தார்.ஆனால் இறைவன் அதை ஏற்கவில்லை.

    பெரியாழ்வாரின் கனவிலே பெருமாள் தோன்றி, தனக்குக் கோதையின் மாலையை அணிவித்தலே பிடித்தம் என்றார் பெரியாழ்வாரும் மகிழ்ந்து அதன்படியே நடந்தார். இதனாலேயே

“சூடிக்கொடுத்த சுடர்க்கொடி“

என்றும் இறைவனையே ஆண்டவள் என்ற பொருளில் ஆண்டாள் என்றும் போற்றப்படுகிறாள்.




     மணப்பருவம் எய்திய மகள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழ்கில்லேன்” என்றும் ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன் மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்றும் கூறுவதைக் கேட்டு மனம் வருந்தினார் விஷ்ணு சித்தர்.


ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு “நூற்றியெட்டுத் திருப்பதிகளிலே வாழும் எம்பிரான்களில் எவரை மணக்க விரும்புகிறாய்?” என மகளிடம் கேட்டார்.


அவர்கள் குண நலன்களைக் கூறுமாறு ஆண்டாள் கேட்டுக் கொண்டாள்.

அதற்குஇணங்கிய ஆழ்வார் வில்லிப்புத்தூரில் தொடங்கி பாண்டி மண்டலம்,தொண்டை மண்டலம், மலைநாடு, சோழநாடு, வட திசைத்திருப்பதிகளில் உறையும் எம்பிரான்கள் மற்றும் திருவேங்கடவன், அழகர்,திருவரங்கன் ஆகியோரது பெருமைகளை விரிவாக கூறினார்.



      இவற்றுள் அரங்கத்துறையும் அழகிய மணவாளனின்கண்ணழகு குழலழகு ஆகியவற்றால் கவரப் பட்ட கோதை அவரையே தன் மணாளராக வரித்து அம் மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்து கைத்தலம் பற்றும் கனாக்காணலானாள்.




    ஆழ்வாரும் அரங்கத்து எம்மானே தன் மகளுக்கேற்ற மணவாளன் என ஒப்பினாலும் இது எப்படி நடக்கும் என்ற கவலையில் ஆழ்ந்தார்.


கோதை தன் தந்தையிடம் தான் மணந்தால், அந்த மாளவனைத்தவிர வேறு யாரையும் மனதாலும் நினைக்க மாட்டேன் என்று அடம் பிடிக்க, அரங்கத்து எம்மான் அவர் கனவில் தோன்றி “கோதையை திருவரங்கத்துத்திருமுற்றத்துக்கு அழைத்து வருக. அங்கே தக்க முறையில் அவள் கைத்தலம் பற்றுவோம்.” என்று சொல்ல மன மகிழ்ச்சியுற்றார்.




திருவரங்கனுடன்-ஆண்டாள் சங்கமம்


       ஒரு நாள் அரங்கத்துக் கோயில் பரிவாரம் முற்றும் எம்பிரானின் சத்திரம் சாமரம் போன்ற வரிசைகளோடு வில்லிபுத்தூர் வந்து பெரியாழ்வரைப் பணிந்து ஆண்டாளை அழைத்து வர அரங்கன் பணித்ததாகச் சொன்னார்கள்.


ஆழ்வாரும் அகமகிழ்ந்து வட பெருங் கோயில் உடையானை வணங்கி அரங்கம் செல்ல அவன் அனுமதி பெற்றார்.


ஆழ்வாரும் அவர் அணுக்கர்களும் ஆண்டாளை பட்டுத் திரையிட்ட பல்லக்கில் ஏற்றி பல்வகை இசைக்கருவிகள் இசைத்து “சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள் சுரும்பார்க் குழற்கோதை வந்தாள்.

திருப்பாவை பாடிய செல்வி வந்தாள்.

தென்னரங்கனைத் தொழும் தேசியள் வந்தாள்.” ஆகிய முழக்கங்களோடு அழகிய மணவாளன் திருமண்டபத்தை அடைந்தனர்.    


  அங்கே பாண்டிய மன்னன் வல்லபதேவன்போன்ற சீடர்களும் கோவிற் பரிவாரமும் பார்த்திருக்க பல்லக்கின் திரைச்சீலையை ஆழ்வார் திறந்தார்.



 அங்கே திருவரங்கப் பெருமானுடன், ஆண்டாள் சங்கமம் ஆனாள்.




ஸ்ரீ ரங்கநாதரையே மனதால் தினம் அணிந்து அழகு பார்த்து சூடிக்களைந்த மாலைகளையே ரங்கனுக்கு மாலையாக்கி ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள்.



      பெரியாழ்வார், இறைவன் துணைவியாருக்கு (கோதை) தாயாய்-தந்தையாய் இருந்து, தாரை வார்த்துக் கொடுத்த மாமன் ஆவார்.



       அரங்கனின் மாமனாரான ஆழ்வார் அவன் தீர்த்தப் பிரசாதங்களைப் பெற்று வில்லிபுத்தூர் திரும்பி வட பெருங் கோயில் உடையான் பொன்னடி பூண்டு வாழ்ந்தார்.




ஆண்டாள்-பாசுரங்கள்


சூடித்தந்த நாச்சியாரான கோதை, இறைவன் மேல் பக்திச் சுவைச் சொட்டச் சொட்ட பாடிய:

நாலாயிர திவ்யபிரபந்த பாசுரங்கள்

திருப்பாவை: 30 பாசுரங்கள்

நாச்சியார் திருமொழி: 143 பாசுரங்கள்-14 திருமொழிகள் (பதிகங்கள்)


திருப்பாவை தனியங்கள்


ஸ்ரீ உய்யக்கொண்டார் அருளிச்செய்தது

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் – இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற்பாமாலை; பூமாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு

      அன்னங்கள் உலவுகின்ற வயல்களை உடைய ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்த ஆண்டாள்.
அரங்கனுக்கு பல (முப்பது) பாசுரங்களை ஆராய்ந்தருளிய திருப்பாவையை இனிய இசையோடு கூட்டி நல்ல பாமாலையாக (பாட்டுக்கலான மாலையாக),

 பாடிக் கொடுத்தவளும்,

பூக்களாலான மாலையைத், தான் சூடிக் களைந்து

கொடுத்தவளுமான ஆண்டாளின் புகழைச் சொல்லு!

 சூடிக் கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடி அருளவல்ல பல்வளையாய் – நாடிநீ
வேங்கவற்(கு) என்னை விதி என்ற இம் மாற்றம்
நாங்கடவா வண்ணமே நல்கு.

      ஆண்டாள் “வெங்கடவற்கு என்னை விதி” என்று நாச்சியார் திருமொழியிலே சொன்னதை இங்கே நினைவுகூர்கிறார்.

தான் அரங்கனுக்கு பொருத்தமா என்று எண்ணி அவனுக்கான பூமாலைகளை முதலில் தான் சூடி அழகு பார்த்து பின் அவனுக்கு கொடுத்து இந்த அன்பினாலேயே அவனை அடைந்த சுடர் கொடியே!

தொன்மையான பாவை நோன்பை மேற்கொண்டு, தன்னை போல் பின் வரும் மக்களும் அவனை அடைய பாடி அருளினாய். இந்த உனது பெருமையை நாங்களும் உணர்ந்து உன் வழியை பின்பற்ற அருள் செய்!


   


ஆண்டாள் வாழித்திருநாமம்


கோதை பிறந்தவூர் கோவிந்தன் வாழுமூர்
சோதி மணிமாடம் தோன்றுமூர்,நீதியால்
நல்லபத்தர் வாழுமூர், நான்மறைகளோதுமூர்,
வில்லிபுத்தூர் வேதக்கோனூர்.

பாதகங்கள் தீர்க்கும் பரமனடி காட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதைத்தமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு. (ஐயைந்தும்), ஐந்தும் : (5×5) +5= 30

   
கோதை பிறந்த ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிந்தன்(பெருமாள்) வாழும் ஊர்; பெருமை வாய்ந்த அவ்வூரிலே மணிமாடங்களில் ப்ரகாசமான விளக்குகள் ஏற்றி வைக்கப் பட்டுள்ளன; நீதியை கடை பிடிக்கும் சிறந்த பக்தர்கள் வாழும் ஊர் ; நான்கு மறைகள் ஓதப்படும் ஊர். வேதாத்யயனம் பண்ணிய பண்டிதர்கள் உள்ள ஊர். அம்மண்ணை மிதித்தாலே முன் செய்த, செய்துக் கொண்டிருக்கும், செய்யப் போகும் பாபங்கள் அனைத்தும் ஒழிந்து, பரமனாகிய நாராயணனின் திருவடியினை அடையலாம்.




திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே!
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே!
பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!
ஒருநூற்று நாற்பத்து மூன்றுரைத்தாள் வாழியே!
உயரரங்கர்க் கேகண்ணி யுகந்தளித்தாள் வாழியே!
மருவாரும் திருமல்லி வளநாடு வாழியே!
வண்புதுவை நகர்க்கோதை மலர் பதங்கள் வாழியே!

 
 திரு ஆடிப்பூர நாளில் பிறந்த கோதை-

திருப்பாவை-30 உலககிற்கு அளித்தவள்-

பெரியாழ்வார் கண்டெடுத்த பெண்பிள்ளை-

ஸ்ரீபெரும்புதூர் மாமுனி யின் (ராமாநுஜரின்) தங்கை-

நாச்சியார் திருமொழி 143 பாசுரங்கள் சொன்னவள்-

அரங்கனை தமக்குரியவனாக ஆக்கிக்கொண்டவள்-

மல்லி (ஸ்ரீவில்லிபுத்தூர்)-என்னும் வன்மை-இளமை தங்கிய

ஸ்ரீவில்லிபுத்தூரில் உதித்த மங்கையின் தாமரைத் திருவடிகள்

வாழ்க!

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......








நாளை ஆடி பூரம்  ..( 27. 7. 2௦17)...

ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்......


( படங்களும், செய்திகளும் இணையைத்திலிருந்தே....பகிர்ந்தவர்களுக்கு மிகவும் நன்றி.....)




அன்புடன்
அனுபிரேம்....





10 comments:

  1. ஆடிப்பூரச் சிறப்புப்பகிர்வு. சிறந்த படங்களுடன் சுவாரஸ்யமாய் சொல்லியுள்ளீர்கள்.

    ReplyDelete
  2. கோதைநாச்சியாரின் கதையை நீங்கள் மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள்! படங்கள் மிக அழகு. 26 ஆம் தேதியா? நாளை மறு நாள் 27 ஆம் தேதி வியாழக் கிழமை அன்றுதானே திருஆடிப்பூரம்?

    கல்யாணங்களில் பாடப்படும் வாரணமாயிரம் மிகவும் பிரபலாமாயிற்றே! திருஅரங்கனின் நினைவிலேயே வாழும் கோதை அரங்கனை நினைத்து மணப்பெண்ணாய்ப் பாடுவது வாரணமாயிரம்...

    ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
    வேயர் புகழ் வில்லிப்புத்தூர் கோன் கோதை சொல்
    தூயதமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
    வாயுநன் மக்களைப் பெற்றுமகிழ்வரே!

    கீதா



    ReplyDelete
    Replies
    1. ஆடி பூரம் நட்சத்திரம் நாளைலிருந்தே ஆரம்பிக்கிறது....ஆனால் ஆடி பூர நட்சத்திர உற்சவங்கள் எல்லாம் 27 ம் தேதி தான்...

      நான் நாளை தான் உற்சவங்கள் என எண்ணி பதிவிட்டேன்....பின் உங்கள் பின்னோட்டத்தை பார்த்து அப்பாவிடம் கேட்க அவர் தான் தெளிவு படுத்தினார்....

      தகவலுக்கு நன்றி கீதாக்கா...

      Delete
    2. மிக்க நன்றி அனு....ஆம் நேற்றே தொடங்கி விடுகிறது...இன்றும்....

      கீதா

      Delete
  3. படங்கள் அத்தனையும் அழகுப்பா. நாளைக்கு ஆடிப்பூரம்ன்னு பதிவு ரெடி பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க பதிவு போட்டிருக்கீங்க.

    ReplyDelete
  4. படங்கள் அழகு.

    ஆடிப்பூரம் சிறப்புகள் பற்றிய பகிர்வு நன்று.

    ReplyDelete
  5. அழகழகான படங்களுடன் இனிய பதிவு..

    ஆண்டாள் திருவடிகள் போற்றி..

    ReplyDelete
  6. படங்களின் அணிவகுப்பு மிகவும் அருமை.

    ReplyDelete
  7. ஆடிப்பூரம் பற்றிய தகவல்கள் அருமை. படங்கள் அழகாக இருக்கு. ஆடிமாதமென்றாலே விஷேசம்தான். அம்பாளின் அருள் கிடைக்கட்டும் உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும்..

    ReplyDelete