காலத்தை வென்ற கலாம்!
’ஏவுகணை நாயகன்’ என்று போற்றப்படுகிற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் நினைவிடத்தை ராமேஸ்வரம் அருகில் உள்ள பேக்கரும்பு பகுதியில் பிரதமர் மோடி நேற்று (27.7.2௦17) திறந்து வைத்தார்.
பேக்கரும்பு பகுதியில் சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் நினைவிடம், அவரது சாதனைகளைப் போற்றும் வண்ணம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மொகலாயர் மற்றும் இந்திய கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
நினைவிடத்துக்குள் கலாமின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரின் நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் வண்ணம் 4 அறைகளில் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
நினைவிடத்தின் பிரதான நுழைவுவாயில் மும்பையில் உள்ள இந்தியா கேட்டை நினைவுபடுத்தும் விதமாகவும், கதவுகள் தஞ்சை பிரகதீஸ்வரர் கோவிலின் கதவுகளைப் போலவும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதேபோல, கட்டிடத்தின் கூம்புவடிவக் கோபுரம் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ளது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை நாயகனைக் கௌரவிக்கும் வகையில், அக்னி ஏவுகணை ஒன்றின் மாதிரியும் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் அணுகுண்டு சோதனையான போக்ரான் சோதனையில் கலாம் முக்கிய பங்காற்றியவர் என்பதால், அந்த நிகழ்வு குறித்த பிரத்யேக புகைப்படங்களும் நினைவிடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பூக்கள் மீது பேரன்பு கொண்ட கலாமின் நினைவிட வளாகம் பூச்செடிகள் மற்றும் புற்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு குடியரசுத் தலைவர் மாளிகையின் மொஹல் தோட்டத்தின் வடிவமைப்பில் பணியாற்றிய பெங்களூருவைச் சேர்ந்த ஆர்ஐசி என்ற தனியார் நிறுவனம் ஈடுபடுத்தப்பட்டது.
கலாம் நினைவிடத்தில் இரண்டாம் கட்டமாக நூலத்துடன் கூடிய அறிவுசார் மையம், கோளரங்கம் மற்றும் மக்கள் கூடும் வகையிலான பெரிய அரங்கம் போன்றவையும் கட்டப்பட இருக்கின்றன.
![]() |
மலர்களுக்கு சிரிப்பைத் தந்தாய்
மாணவர்களுக்கு கனவு தந்தாய்
குழந்தைகட்கு அன்பைத் தந்தாய்
இளைஞருக்கு எழுச்சி தந்தாய்
மதம் மொழி இனம் கடந்து
மக்களை நேசித்தாய்!
தலைமுறை தாண்டி
மனிதர்(ம்) வாழ யோசித்தாய்
அக்னிச்சிறகுகளை அனைவருக்கும்
அணிவித்தாய்!
உனக்கென எதையும் எண்ணாமல்
விண்ணையும் மண்ணையும்
உயிராய் கருதினாய்
அதனால்தானோ என்னவோ
உனதுடல் மண்ணுக்கு
உயிர் விண்ணுக்கு!
பூக்கள் சிரிக்கும் போது
பூமி சிரிக்கிற தென்றலாய்
உன் அஞ்சலிக்கு வந்த
மண்ணில் மலர்ந்த மலர்கள் எல்லாம்
புண்ணியம் பெற்றதாய் பேசிக்கொண்டன
துக்கத்துடன்!
விழிமடை உடைப்பெடுக்க
விடை கொடுத்தோம் இப்போது
ராமேஸ்வரம் கடலில் கரிப்பது
உப்பல்ல…
எங்களின் கண்ணீர்!
தீபகற்ப இந்தியத்தாய் ஏங்குகிறாள்
மீண்டும் உன்னை
தன் கர்ப்பத்தில் தாங்கிக் கொள்ள!
அணு ஆயுத சோதனையால்
அகிலத்தையே வியக்க வைத்த நீ
இறுதி வரை ஆராயவேயில்லை
அன்பு கொள்பவருக்காய்
ஆயுளை பகிர்ந்து கொள்ளும் ரகசியத்தை
கண்டிருந்தால்
தந்திருப்போம் எங்கள் ஆயுளை
இன்னும் வாழ்ந்திருப்பாய்
பல கோடி ஆண்டு!
அப்துல் கலாம்… நீ
ஒற்றை வார்த்தையில்
உருவான இந்தியக் கவிதை!
எழுத எழுத முடிவில்லாமல் நீளும்
உன்னைப் பற்றி
தற்காலிகமாய் முடிக்கிறேன்
வைக்காது விட்ட முற்றுப்புள்ளியுடன்!
— ஜோதி பெருமாள்,
புதுடில்லி.
மேதகு அப்துல்கலாம் அவர்களின் மணிமண்டப படங்கள்.....
மீனவர் குலத்தினில் பிறக்கலாம்
மாணவர் பருவத்தில் படிக்கலாம்
வானில் பறந்திட நினைக்கலாம்
வாய்ப்பு சறுக்கிட பொறுக்கலாம்
குரான் கீதை படிக்கலாம்
தூக்கம் துறந்து உழைக்கலாம்
வானில் கோள்கள் வடிக்கலாம்
அணுவை துளைத்து வெடிக்கலாம்
கவிதைகள் புனைந்து கொடுக்கலாம்
அன்பால் மதங்களை இணைக்கலாம்
மரங்கள் வளர்த்திட பணிக்கலாம்
அறங்கள் நிலைத்திட அழைக்கலாம்
இளமை கனவுகள் விதைக்கலாம்
எளிமை வாழ்வினில் இருக்கலாம்
காலம் கடந்தும் நிலைக்கலாம்
கடவுளரோடும் கலக்கலாம்
-(இணையத்தில் ரசித்தவை....)
அன்புடன்
அனுபிரேம்
அருமையான தகவல்களோடு,அழகிய படங்கள் நன்று.
ReplyDeleteஅற்புதமான மனிதர். நல்ல அருமையான கருத்துக்களை அவர் சொல்லியிருக்கார். தொகுத்த கருத்துக்கள் சிறப்பானவை. மணிமண்டபம் பற்றி தகவல்கள், படங்கள் அருமை
ReplyDeleteஅருமையான படங்கள், தகவல்கள்.... பதிவும் அருமை..மாமனிதர்..வணக்கங்கள்...
ReplyDeleteஅவர் நினைவு நாளில் அஞ்சலி செலுத்துறேன், மரியாதை செலுத்துறேன்னு அசிங்கப்படுத்திக்கிட்டிருக்கானுங்க.
ReplyDeleteகலாம் போற்றுவோம்
ReplyDeleteசிறப்பான தகவல் தொகுப்பு..
ReplyDeleteவாழ்க நலம்..
நல்ல விஷயம். நன்றாகப் பராமரிக்க வேண்டும்.
ReplyDeleteஅழகான படங்கள் , செய்திகள். மணிமண்டபத்தை நேரில் பார்த்த நிறைவு.
ReplyDelete