தொடர்ந்து வாசிப்பவர்கள்

17 July 2017

ஸ்ரீமத் நாதமுனிகள் ...

வீரநாராயணப்பெருமாள், காட்டுமன்னார்குடி..

நாதமுனிகளார் அவதார ஸ்தலம்...

வைணவத்திற்கு மிகப் பெரும் தொண்டாற்றிய ஸ்ரீமத் நாதமுனிகள், அவரது பேரர் யமுனைத்துறைவர் என்று அழைக்கப்பட்ட ஸ்ரீ ஆளவந்தார் ஆகிய இருவரும் அவதரித்த ஸ்தலம்..

 ஸ்ரீமத் நாதமுனிகள்  திருநட்சத்திரம் ஆனி அனுஷம்,   (5.7.2017) அன்று
காட்டுமன்னார் கோவிலில் நடைபெற்ற  உற்சவத்தில் அப்பா எடுத்த படங்கள் இன்று உங்கள் சேவைக்கு....

சிதம்பரத்துக்கு அருகிலுள்ள காட்டுமன்னார்குடி (காட்டுமன்னார் கோவில்)  குப்பங்குழியில் அவதரித்த நாதமுனிகள்  நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்கள் அனைத்தையும்......... நம்மாழ்வாரின் திருவருளால் மீட்டு மக்களுக்கு வழங்கினார். ..எனவே இவரை முதல்வராகக் கொண்டே வைணவ ஆச்சார்யர்களின் பரம்பரை துவங்குகிறது.ஆசார்ய பரம்பரையில் திருமகள் கேள்வன்,

திருமகள்,

சேனைமுதலியாராகிய விஷ்வக்சேனர்,

நம்மாழ்வார் என்ற நான்கு ஆசாரியர்களில்...


முதல் மூவர் விண்ணுலகத்தவர்.

நான்காவது ஆசாரியரான நம்மாழ்வார் இறைவனால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் - ...அதனால் உள்ளதை உள்ளபடி உள்ளங்கை நெல்லிக்கனி போல் அறிந்து வேதங்கள் சொல்லாதவற்றையும் வேதங்களில் நேரடியாகச் சொல்லப்படாதவற்றையும் வேதங்களில் குழப்பம் தரும் பகுதிகளைத் தெளிவுறுத்துபவற்றையும் தன்னுடைய திருவாய்மொழி முதலான பாசுரங்களில் பாடி


'வேதம் தமிழ் செய்த மாறன்'      என்று பெயர் பெற்றவர்.


இப்பரம்பரையில் ஐந்தாவது ஆசாரியர் நாதமுனிகள். அவர் முதற்கொண்டு தொடர்ந்து ஆசார்ய பரம்பரை தடையில்லாமல் வந்து கொண்டிருக்கிறது.

முதல் மூவர் விண்ணுலகத்தவர்; நான்காமவர் அவதாரமாகிய ஆழ்வார் என்பதால் மானுட ஆசாரியர்களில் இவரே முதல்வராக அமைகிறார். அதனால் இவரிடமிருந்தே வைணவ ஆசாரிய பரம்பரை தொடங்குவதாகக் கூறும் மரபும் உண்டு.
.

காட்டுமன்னார் கோவில் ஊரின் நடுவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் ஆலயம்.

மூலவர் ஸ்ரீ வீரநாராயணப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் ஏந்தி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சி தருகிறார்.

மரத்தினாலான நெடிய வீரநாராயணப் பெருமாளின் சிலை கி.பி. 13-ஆம் நூற்றாண்டில் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டிய மன்னனால் சுதை உருவாக அமைக்கப்பட்டதாகக் கூறப் படுகிறது.

மூலவரின் சந்நிதிக்கு இடப்புறம் நம்மாழ்வார், மதுரகவியாழ்வார் சந்நிதிகள் உள்ளன.


பெருமாள் பெயர் : வீரநாராயணப்பெருமாள்

உற்சவர் : ஸ்ரீ ராஜகோபாலன் சுந்தரகோபாலன், ஸ்ரீனிவாசர்.

தாயார் : மஹாலக்ஷ்மி, மரகதவல்லி.

தீர்த்தம் : வேதபுஷ்கரணி, காவேரி நதி

தலவிருட்சம் : நந்தியாவட்டை
ஸ்ரீமத் நாதமுனிகள்

ஒரு சமயம் வீரநாராயணபுரத்தில் இருக்கும் பெருமாளை சேவிக்க சில ஸ்ரீவைஷ்ணவர்கள் வந்தார்கள்.

 அவர்கள் பெருமாளைச் சேவிக்கும் போது நம்மாழ்வார் ஐந்தாம் பத்து எட்டாம் திருவாய்மொழியின் முதல் பதிகமான


ஆராவமுதே! அடியேனுடலம் நின்பால் அன்பாயே
 நீராய் அலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே!
 சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த்திருக் குடந்தை
 ஏரார்கோலம் திகழக்கிடந்தாய்! கண்டேன் எம்மானே!
……………………………….திருவாய்மொழி 5-8-1

என்னும் பாடலில் தொடங்கி,

உழலையென்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிருண்டான்
கழல்களவையே சரணாகக் கொண்ட குருகூர்ச் சடகோபன்
குழலின் மலியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
மழலைத் தீரவல்லார் காமர்மானேய நோக்கியர்க்கே

……………………………திருவாய்மொழி 5-8-10

என்னும் பாடல் முடிய பத்து பாடல்களையும் பாடினர்.

 அதைக் கேட்ட நாதமுனிகள் கடைசியில்  "ஆயிரத்துள் இப்பத்தும்" என்று  சேவிக்கின்றீர்களே,

இந்த ப்ரபந்தம் முழுவதும் உங்களுக்குத் தெரியுமா ?   என்று அவர்களிடம் கேட்க அவர்கள் எங்களுக்கு இந்த பத்துப் பாட்டு மட்டும் தான் தெரியும்...... என்று கூறிவிட்டார்கள்.


நாதமுனிகளுக்கு அன்று முதல் திருவாய்மொழி ஆயிரத்தையும் பெறவேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது.

நம்மாழ்வாரின் அவதார ஸ்தலமான திருநெல்வேலிக்குப் பக்கம் இருக்கும் திருக்குருகூருக்கு சென்று அங்கு விசாரித்ததில் அந்த ப்ரபந்தம் பற்றி யாருக்கும் தெரியவில்லை.


நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வார் சீடரான பராங்குசதாசர் என்பவரிடம் "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்ற ப்ரபந்தத்தை உபதேசம் பெற்று அதை பன்னீராயிரம்முறை (12,௦௦௦) ஆழ்வாரின் திருப்புளியமரத்திற்குச் சென்று நம்மாழ்வாரின் திருவடி முன் அமர்ந்து தியானம் செய்தார்....

அப்பொழுது  நம்மாழ்வார்  அவர் முன்  தோன்றி திருவாய்மொழி மட்டுமல்லாமல் மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த ப்ரபந்தங்களையும் தந்தருளினார் .

அப்பாசுரங்களை எல்லாம் தொகுத்து முறைப்படுத்தி இசையமைத்து தன் மருமகன்களுக்கு அவற்றைக் கற்றுக் கொடுத்து அவர்கள் மூலமாக இசையுடன் கூடிய ஆழ்வார் பாசுரங்களை தமிழகம் எங்கும் பரவச் செய்தார் நாதமுனிகள்.
 அன்று நடைபெற்ற வேளுக்குடி சுவாமிகளின் உபன்யாசம்..    


ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே,

நீராய் அலைந்து கரைய வுருக்குகின்ற நெடுமாலே,

சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்க் திருகுடந்தை,

ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே!


எட்டாந் திருமொழி
(3418)


அன்புடன்
அனுபிரேம்...11 comments:

 1. புகைப்படங்கள் மிகவும் தெளிவு.

  ReplyDelete
 2. அனு நல்ல தொகுப்பு! நாதமுனிகள் பற்றியும், பிரபந்தம் பற்றியும், மேலதிகத் தகவல்கள் தரலாம் தான் ஆனால் ஒரு சில இங்கு தர இயலவில்லை.

  ஒரே ஒரு தகவல் மட்டும்....நம்மாழ்வாரின் அம்மா உடையநங்கை எங்கள் ஊரில்தான் வாழ்ந்தார். அதனாலேயே அவருக்கும் நம்மாழ்வாருக்கும் ஒரு சிறு கோயில் பஜனை மடம் என்று எங்கள் ஊர் திருவண்பரிசாரத்தில்(திருப்பதிசாரம் என்று வாழ்வழக்கில்) எங்கள் தெருவில் இருக்கிறது. உடையநங்கை பிறந்த தலம். திருமணம் நடந்ததும் இங்குதான். எங்கள் ஊர்ப்பகுதி வேளாளர் வாழும் பகுதி. உடையநங்கையும் வேளாளர் குலத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை திருவாழ்மார்பன் பிள்ளை. அப்போதெல்லாம் கன்னியாகுமரி கேரளத்துடன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் வந்தது இல்லையா...அதனால் சேர மன்னனான குலசேகரன் இக்கோயிலுக்கு வந்திருக்கிறார். வைணவம் தழுவி குலசேகர ஆழ்வாரானதன் பின் இங்கு வந்ததாகவும் சொல்லப்படுவதால் அவரது திரு உருவமும்
  திருவாழ்மார்பன் (இங்கு உள்ள பெருமாளின் பெயர்) சன்னதிக்குள் உண்டு.

  உடையநங்கை தம்பதியர்க்கு குழந்தை இல்லாததால் திருக்குறுங்குடி (என் அப்பாவின் ஊர்) சென்று அங்கு நம்பி பெருமாளைப் பிரார்த்தித்ததாகவும் அவரின் அருளால் நம்பியே அவர்களுக்குக் குழந்தையாய் பிறந்ததாகவும் அவர்தான் நம்மாழ்வார் என்றும் சொல்லப்படும் புராணம் உண்டு. திருவண்பரிசாரம் நம்மாழ்வார் பாடல் பெற்ற தலம். 108 திருப்பதிகளுள் ஒன்று. குட்டை நாடு/மலை நாடு திருப்பதி என்று சொல்லப்படும் கேரளத்தில் இருக்கும் திருப்பதிகளுள் ஒன்றும் ஆகும்...

  நல்ல தொகுப்பு அனு...
  படங்களும் அருமை...
  கீதா

  ReplyDelete
  Replies
  1. அருமையான தகவல்கள் கீதாக்கா....
   நம்மாழ்வாரின் அம்மா உடையநங்கை பற்றி தகவல்கள் சிறப்பு...

   Delete
 3. எங்கள் ஊர் நம்மாழ்வார் பாடல்...

  வருவார் செல்வார் வண்பரி சாரத் திருந்த,என்
  திருவாழ் மார்வற் கென்திறம் சொல்லார் செய்வதென்,
  உருவார் சக்கரம் சங்கு சுமந்திங் கும்மோடு
  ஒருபா டுழல்வானோரடி யானு முளனென்றே… ----திருவாய்மொழி

  கீதா

  ReplyDelete
 4. படங்களுடன் விவரங்கள் சுரஸ்யம், அழகு.

  ReplyDelete
 5. நானும் வீரநாராயணப்பெருமாளைப்பற்றி எழுதி இருக்கிறேன். ஆடிமாதம் ஆடி 18 சமையத்தில் போய் வந்தோம்.
  படங்களும் செய்திகளும் அருமை.

  ReplyDelete
 6. இன்றுதான் பார்த்தேன். முதல் படம் குழப்புகிறதே. நாதமுனிகள் பெருமாளை நோக்கி இருக்க, ஸ்ரீபாதம் தாங்கிகள் முன்னால் நடப்பதனால் அப்படித் தோன்றுகிறதோ?

  ReplyDelete
  Replies
  1. இப்பொழுது எனக்கும் குழப்பமே....

   சரி அப்பாவிடம் கேட்கலாம் என்றால்...அவர் பயணத்தில்...

   விரைவில் அவரிடம் கேட்டு ...கூறுகிறேன்...   தங்கள் முதல் வருக்கைக்கும் ...கருத்துக்கும் ...நன்றிகள் பல

   Delete
 7. Replies
  1. தங்கள் முதல் வருகைக்கு மிகவும் நன்றி மா....

   Delete