07 August 2024

திருவாடிப்பூரம் ஸ்ரீ கோதை நாச்சியார்...

 இன்று திருவாடிப்பூரம் ஸ்ரீ கோதை நாச்சியார்  திருஅவதார தினம் ... !!!




ஆண்டாள் வாழித்திருநாமம்

திருவாடிப் பூரத்துச் செகத்து உதித்தாள் வாழியே!

திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே!

பெரியாழ்வார் பெற்று எடுத்த பெண் பிள்ளை வாழியே!

பெரும்பூதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே!

ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தாள் வாழியே!

உயர் அரங்கற்கே கண்ணி உகந்தளித்தாள் வாழியே!

மருவாரும் திருமல்லி வள நாடி வாழியே!

வண் புதுவை நகர்க் கோதை மலர்ப்  பதங்கள் வாழியே!


மகாவிஷ்ணுவின் பல்வேறு அம்சங்களான சங்கு, சக்கரம், வில், கதை, வாள் போன்ற ஆயுதங்கள் மட்டுமே ஆழ்வார்களாக அவதரித்த தருணத்தில், பூமாதேவியும் ஆடிப்பூர நாளில் ஆண்டாளாக அவதரித்தாள். 

ஏழாம் நூற்றாண்டு, நள ஆண்டு, ஆடி மாதம்  செவ்வாய்க்கிழமை, பூரம் நட்சத்திரம்,

சுக்லபட்சம் பஞ்சமி திதியில்  தோன்றியவள் ஸ்ரீஆண்டாள்..


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தன்று, பெரியாழ்வார் தாம் அமைத்திருந்த நந்தவனத்திலுள்ள ஒரு துளசிச் செடியின் அடிவாரத்தில், பூமிதேவியின் அம்சமாகத் தோன்றிய ஒரு பெண் குழந்தையைக் கண்டெடுத்தார். 

அக்குழந்தைக்குக் கோதை என்று பெயரிட்டார். 

கோதை என்றால் தமிழில் பூ மாலை என்று பொருள். இறைவனுக்குப் பூமாலைகளைச் சுமந்து சுமந்து பழகிய பெரியாழ்வாரின் திருக்கரங்களிலே, அவர் கண்டெடுத்த பெண் குழந்தையும் ஒரு பூமாலை போலவே தோன்றினாளாம். அதனால் கோதை என்று பெயர் சூட்டியதாகச் சொல்வார்கள்.





மணப்பருவம் எய்திய ஆண்டாள் ”மானிடவர்க் கென்று பேச்சுப்படில்
வாழ்கில்லேன்” என்றும்

 ”மற்றவர்க்கு என்னைப் பேசலொட்டேன்
மாலிருஞ் சோலை எம் மாயற்கல்லால்” என்று ஸங்கல்பித்து கொண்டாள்.
.
அரங்கநாதனின்  பெருமைகளைக் கேட்டு அளவற்ற இன்பம் அடைந்து அரங்கனுக்கே மாலையிடுவதென உறுதி பூண்டாள். 

.
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத,*
முத்துடைத் தாமம் நிரைதாழ்ந்த பந்தற்கீழ்*
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து,என்னைக்*
கைத்தலம் பற்றக் கனாக்கண்டேன் தோழீ நான்.*

என்று கனவு காண்டாள்.
.
ரங்கநாதனும் அவளுடைய பக்திக்கு வசமாகி  கோதையை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். 

அரங்கன் ஆழ்வாரின் கனவில் தோன்றி கோதையை ஸ்ரீ ரங்கத்திற்கு அழைத்து வருமாறு ஆணையிட்டான். 
.
பாண்டிய நாட்டு மன்னனாகிய வல்லபதேவன், ஏவலாளரைக் கொண்டு,  விடியற்காலைக்குள் ஸ்ரீவில்லிபுத்துரையும் திருவரங்கத்தையும் இணைக்கும் வழியெங்கும் தண்ணீர் தெளித்தும், பூம்பந்தலிட்டும், தோரணம் கட்டியும், வாழை, கமுகு நாட்டியும் நன்கு அலங்கரித்து வைத்தான். 

பின், நால்வகை சேனைகளோடும் ஆழ்வார் பக்கலில் வந்து சேர்ந்தான். 

அடியார் குழாத்துடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்குச் சென்று, பட்டர்பிரான் மகளாம் கோதையை முத்துப் பல்லக்கில் ஏற்றி  பெரியாழ்வார் முதலானோருடன்  திருவரங்கம் பெரிய கோயிலை அடைந்தான்.  
.
திருவரங்கத்தில் நுழைந்ததும் 
அரங்கனுக்காகவே  அலங்கரித்தால் போல் இருந்த  ஆண்டாள் பல்லக்கிலிருந்து இறங்கி
பெரிய பெருமாள் சந்நிதியில் சென்று, மறைந்து எம்பெருமானுடன் ஒன்றறக் கலந்தாள்.
.
இது கண்ட யாவரும் பெரியாழ்வாரைப்  பெரிய பெருமாளின் மாமனார் என்றும் சமுத்ரராஜன் போலே என்றும் போற்றினர். 
.
ஆஸ்சர்யமான இந்த ஸம்பவத்தை 
ஆசார்ய ஸார்வபௌமன் ஸ்வாமி தேசிகன் தான் அருளியுள்ள *கோதாஸ்துதியில்* நயம்பட விவரித்துள்ளார். 
.












நாச்சியார் திருமொழி
11.தாம் உகக்கும் 

திருவரங்கன் மேல் கொண்ட காதல் 

தாம் உகக்கும் தம் கையில் *  சங்கமே போலாவோ* 
யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 

தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  

607 

          


எழிலுடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன்னமுதர்* 
குழல் அழகர், வாய் அழகர்*  கண் அழகர் கொப்பூழில்* 

எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* என்னுடைய
 கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே* 2

608






ஸ்ரீ  மணவாள மாமுனிகள் அருளிச் செய்த உபதேச ரத்தினமாலை

இன்றோ திருவாடிப்பூரம்*
 எமக்காக அன்றோ இங்கு ஆண்டாள் அவதரித்தாள்*
 குன்றாத வாழ்வான வைகுந்த வான்போகந் தன்னை இகழ்ந்து*
 ஆழ்வார் திருமகளாராய்.
22



பெரியாழ்வார் பெண் பிள்ளையாய் ஆண்டாள் பிறந்த*
 திருவாடிப்பூரத்தின் சீர்மை*
 ஒருநாளைக்கு உண்டோ மனமே! உணர்ந்து பார்*
 ஆண்டாளுக்கும் உண்டாகில் ஒப்பு இதற்கும் உண்டு.
23



அஞ்சுகுடிக்கு ஒரு சந்ததியாய்*
 ஆழ்வார்கள் தஞ்செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்*
 பிஞ்சாய்ப் பழுத்தாளை ஆண்டாளைப் பத்தியுடன் நாளும்*
 வழுத்தாய் மனமே! மகிழ்ந்து.
24



ஸ்ரீ  ஆண்டாள் திருவடிகளே சரணம்.......

அன்புடன்
அனுபிரேம்💚💚💓

No comments:

Post a Comment