24 August 2024

70.சுற்றிக் கிடந்தேனோ மாலை ஆண்டானைப் போலே.

(70) சுற்றிக் கிடந்தேனோ மாலை ஆண்டானைப் போலே.




சுவாமி ராமானுஜருக்கு ஐந்து முக்கிய குருமார்கள்.

 பெரிய நம்பி, பெரிய திருமலை நம்பி, திருக்கோட்டியூர் நம்பி, ஆழ்வார் திருவரங்கப் பெருமாள் அரையர், திருமாலை ஆண்டான்.

 இவர்கள் அனைவரும்  ஆளவந்தாரின் சிஷ்யர்கள். ஆளவந்தார் தன் நல் உபதேசங்களை இவர்களிடம் பிரித்துக் கொடுத்து, இவற்றை எல்லாம் ராமானுஜருக்குச் சொல்லிக்கொடுங்கள் என்று கூறினார்.

ஒவ்வொருவரும் ராமானுஜருக்கு ஒவ்வொன்றைச் சொல்லிக்கொடுத்தார்கள். பெரிய திருமலை நம்பி ராமாயணம் சொல்லிக்கொடுத்தார். 

திருக்கோட்டியூர் நம்பி சில ரகசிய அர்த்தங்களைச் சொல்லிக்கொடுத்தார்.

 அதே போலத் திருமாலை ஆண்டான் திருவாய்மொழியின் அர்த்தங்களைச் சொல்லிக்கொடுத்தார்.

 திருமாலை ஆண்டானுக்குச் சொந்த ஊர் அழகர் கோயிலான திருமாலிருஞ்சோலை. இவருடைய மூதாதையர் ஒருவர் கண்ணுக்கினியான் என்பவர்.

ஒரு முறை சில மலையாள மந்திரவாதிகள் அழகருடைய சக்தியையும் அழகையும் கொள்ளையடித்துச் செல்ல வந்தார்கள். மந்திரவாதிகளிடமிருந்து அழகரைக் காத்ததால் ’திருமாலை ஆண்டான்’ என்ற பெயர் ஏற்பட்டு, அப்பெயரையே அவர்கள் வழி வந்தவர்கள் வைத்துக்கொண்டார்கள்.

 சுவாமி ராமானுஜருக்குத் திருவாய்மொழி பொருளைச் சொல்லிக்கொடுத்த ஆண்டானின் இயற்பெயர் ‘ஞானபூர்ணர்’. 

கள்ளழகருக்கு இவர்கள் கைங்கரியம் செய்வதால். “ஆண்டார் பல்லக்கு முன்னே; அழகர் பல்லக்கு பின்னே” என்ற ஒரு சொல் வழக்கு இன்னும் இருக்கிறது!” .

திருக்கோட்டியூர் நம்பி ராமானுஜரிடம் திருமாலை ஆண்டான் என்பவரிடம் திருவாய்மொழி உபதேசங்களைக் கேளும் என்று அறிவுரை கூறினார்.

ராமானுஜர் ஆண்டானிடம் சென்று வணங்கி “ஆளவந்தார் உபதேசித்த திருவாய்மொழி பொருளை எனக்கு உபதேசம் செய்ய வேண்டும்” என்று வேண்டினார். 

திருமாலை ஆண்டான் ராமானுஜரை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். ஆளவந்தார் தனக்கு உபதேசம் செய்த திருவாய்மொழி பொருளை ராமானுஜருக்கு உபதேசம் செய்ய ஆரம்பித்தார்.


சுவாமி ராமானுஜரும் பய பக்தியுடன் கற்க ஆரம்பித்தார். 

கற்கும் போது ஒரு நாள் ராமானுஜர் தலையைக் குனிந்து கொண்டார்.

 ஆண்டான் “என்ன ராமானுஜரே! ஏன் தலையைக் குனிந்து கொள்கிறீர் ?” என்று கேட்க “இந்தத் திருவாய்மொழி பாசுரத்துக்கு இப்படியும் அர்த்தம் இருக்கலாமே’ என்று அவர் ஒரு அர்த்ததை கூறினார். ஆண்டானுக்கு இது பிடிக்காமல் போனது “நான் ஆளவந்தார் எனக்கு உரைத்தபடி பொருள் கூறுகிறேன்” என்று தொடர்ந்தார்.


நாட்கள் போகப் போக சுவாமி  ராமானுஜர் அடிக்கடி முகத்தைக் குனிந்துகொண்டார்.

ஒரு நாள் ஆண்டான் திருவாய்மொழி பாசுரம் ஒன்றை கூறினார் ..

அறியாக் காலத்துள்ளே*  அடிமைக்கண் அன்பு செய்வித்து,* 

அறியா மா மாயத்து*  அடியேனை வைத்தாயால்,*

அறியாமைக் குறள் ஆய்*  நிலம் மாவலி மூவடி என்று,* 

அறியாமை வஞ்சித்தாய்*  எனது ஆவியுள் கலந்தே.

நம்மாழ்வார் தன்னை பற்றிச் சொல்லிக்கொள்கிறார். 

அதாவது ’அறியாக் காலத்துள்ளே’ - எனக்கு ஒன்றும் தெரியாத இளமைப் பருவத்தில்

’அடிமைக்கண் அன்பு செய்வித்து ’- தொண்டு செய்வதில் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கினாய்

‘ அறியா மாமாயத்து அடியேனை வைத்தாய்’- ஆனால் என்ன பயன் ? மீண்டும் இந்த மாய உலகத்தில் ( சம்சாரத்தில் ) அடியேனை வைத்தாய் என்று ஆழ்வார் வருத்தத்துடன் பாடுகிறார்.


சுவாமி ராமானுஜர் தலையைக் குனிந்துக் கொண்டார் “என்ன ராமானுஜரே இன்று என்ன உமக்குத் என்ன புது அர்த்தம் தோன்றுகிறது?” என்று கொஞ்சம் கோபத்துடன் கேட்டார். அதற்கு ராமானுஜர் “நீங்கள் சொல்லும் இந்த பொருள் எனக்கு ஒப்புதலாக இல்லை! நீங்கள் அனுமதி கொடுத்தால் சொல்லுகிறேன்” என்றார்.

“சொல்லு பார்க்கலாம்!” என்றார் ஆண்டான்.

சுவாமி ராமானுஜர் “இந்தப் பாசுரத்துக்கு முன்னும் பின்னும் உள்ள பாசுரத்தைக் கொஞ்சம் கூர்ந்து நோக்க வேண்டும்” என்றார்.

ஆண்டானுக்குப் புரியவில்லை. “அப்படி என்றால் நீரே அதற்கு என்ன அர்த்தம் என்றும் சொல்லு” என்றார்

சுவாமி ராமானுஜர் தொடர்ந்தார் “முன் பாசுரத்திலும், அதற்குக் கீழ் பாசுரத்திலும் ஆழ்வார் மகிழ்ச்சியுடன் பாடுகிறார். முன் பாசுரத்தில் ’அறியாதன அறிவித்த அத்தா’ என்று நன்றியுடன் கூறுகிறார். கீழ் பாசுரத்தில் ’எனது ஆவியுள் கலந்தபேறு நல் உதவி’ என்று மிகுந்த உவகையுடன் கூறுகிறார். மேலும், கீழும் நன்றியுடனும், மகிழ்ச்சியுடன் பாடிவிட்டு நடுவில் வருத்தத்துடன் ஆழ்வார் படியிருக்க மாட்டார் ? நடுவில் இந்தப் பாடலும் ஆழ்வார் ஆனந்தமாகத் தான் பாடியிருக்க வேண்டும் அல்லவா ?” என்றார்

ஆண்டான் பேசாமல் ”எப்படி ?” என்பதைப் போல ராமானுஜரைப் பார்க்க ராமானுஜர் தொடர்ந்தார் ’இந்த மாய உலகத்தில்(சம்சாரத்தில்) இருந்த அடியேனை, எனக்கு ஒன்றும் தெரியாத இளமைப் பருவத்திலேயே, தொண்டு செய்வதில் மிகுந்த ஆர்வத்தை உண்டாக்கினாய்’ என்று படித்தால் ஆழ்வார் சந்தோஷமாகப் பாடுகிறார் அன்றோ ?” என்றார்.


ஆண்டானுக்கு ராமானுஜர் சொன்ன அர்த்தம் சரியாக இருக்கிறது என்ற எண்ணம் வந்தது. ஆனால் ஆளவந்தார் சொன்ன அர்த்தத்துக்கு எதிர்மாறாக இருக்கிறது. விட்டுக்கொடுக்க மனம் இல்லாமல். மிகுந்த கோபம் வந்தது. ஓலைச்சுவடிகளை மூடிவிட்டு அதைக் காட்டிவைத்தார். ”எல்லா அர்த்தமும் உமக்கே தெரிந்து இருக்க இனி உமக்கு அர்த்தம் சொல்ல முடியாது. பாடங்களை இத்துடன் முடித்துக்கொள்ளலாம். இனி வர வேண்டாம்” என்றார். ராமானுஜரும் வருத்தத்துடன் விடைபெற்றுக்கொண்டு திரும்பினார்.


ஆண்டானிடம் பாடம் கற்றுக்கொள்வது தடைப்பட்டுப் போனது என்ற செய்தி திருக்கோட்டியூர் நம்பிக்குத் தெரிய வந்தது.

 நம்பி ஆண்டான் இல்லத்துக்கு வந்து “ஏன் பாடம் சொல்லுவதை நிறுத்துவிட்டீர்கள் ?” என்று கேட்க அதற்கு ஆண்டான் “நான் எது சொன்னாலும் ராமானுஜர் அதற்கு வேறு அர்த்தம் கூறிக்கொண்டே இருக்கிறார்.

 நான் அர்த்தங்களை ஆளவந்தாரிடம் நேரில் கேட்டிருக்கிறேன். ராமானுஜரோ ஆளவந்தாரிடம் பேசியது கூடக் கிடையாது. அவருக்குப் பாடம் சொல்லித் தர நம்மால் முடியாது. நிறுத்திவிட்டேன்! ” என்றார்.

திருக்கோட்டியூர் நம்பி “ஆண்டானே. ராமர் எல்லாம் அறிந்தவர் ஆனால் அவர் வசிஷ்டரிடம் பாடம் கேட்டார். கிருஷ்ணன் கீதையை உபதேசித்த கீதாச்சாரியன் ஆனால் அவன் சாந்தீபனிடம் பாடம் கேட்டான்.

எப்படி ராமரும், கிருஷ்ணரும் பாடம் கேட்டார்களோ அதே போல ராமானுஜர் நம்மிடம் கேட்கிறார். அவருக்குத் தெரியாததை நாம் சொல்லிக்கொடுக்கவில்லை. குருகுல வாசம் என்ற மரபு கெட்டுவிடக்கூடாதே என்ற நல் எண்ணத்தில் ராமானுஜர் நம்மிடம் பாடம் படிக்கிறார். ராமானுஜருக்குச் சொல்லிக்கொடுக்கும் பாக்கியத்தை நமக்கு ஆளவந்தார் கொடுத்தார் என்பதை நினைத்து நாம் ஆனந்தப்பட வேண்டும்!” என்று கூறிவிட்டு “உமக்கு கோபம் வரும்படி ராமானுஜர் என்ன அர்த்தம் கூறினார்?” என்று கேட்க ஆண்டான் நடந்த விஷயத்தைச் சொன்னார்.

திருக்கோட்டியூர் நம்பி ”அன்று நீர் பாடம் கேட்க வரவில்லை என்று நினைக்கிறேன். ராமானுஜர் சொன்ன அதே அர்த்தத்தைத் தான் ஆளவந்தார் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். ராமானுஜர் வாக்கினால் என்ன அர்த்தம் வந்தாலும் அது ஆளவந்தாரின் உள்ளத்திலிருந்து வரும் அர்த்தமாக இருக்க வேண்டும். அதனால் மீண்டும் அவருக்குப் பாடங்களைத் தொடருங்கள்!” என்றார்.


ஆண்டானும் நம்பியை வணங்கி ராமானுஜருக்கு மீண்டும் பாடங்களைத் தொடங்கினார். ராமானுஜர் குரு நான் சிஷ்யன் என்று சுற்றிக் கிடந்தாலும் ( மாறி இந்தாலும்) அவர் கூறும் அர்த்தங்களையும் ஆளவந்தார் கூறும் அர்த்தங்களாகக் கேட்டு ரசிக்க ஆரம்பித்தார். இனி ராமானுஜரை விட்டுப் பிரிய மாட்டேன் என்று அவரையே சுற்றிச் சுற்றிக் கிடந்தார் ஆண்டான்.


“ ஆண்டானைப் போல நான் ராமானுஜரைச் சுற்றிக் கிடந்தேனா ? இல்லையே அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன் என்றாள்!”


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே








திருவாய்மொழி -இரண்டாம் பத்து

2-3 ஊனில் வாழ்
அடியார் குழாத்தைக் கூடுவதற்கு விழைதல்

        

கடி வார் தண் அம் துழாய்க்*  கண்ணன் விண்ணவர் பெருமான்,* 
படி வானம் இறந்த*  பரமன் பவித்திரன் சீர்,*
செடி ஆர் நோய்கள் கெட*  படிந்து குடைந்து ஆடி,* 
அடியேன் வாய் மடுத்துப்*  பருகிக் களித்தேனே.  9

3039
          

களிப்பும் கவர்வும் அற்று*  பிறப்புப் பிணி மூப்பு இறப்பு அற்று,* 
ஒளிக் கொண்ட சோதியுமாய்*  உடன்கூடுவது என்று கொலோ,*
துளிக்கின்ற வான் இந்நிலம்*  சுடர் ஆழி சங்கு ஏந்தி,* 
அளிக்கின்ற மாயப் பிரான்*  அடியார்கள் குழாங்களையே. 10

3040
          

குழாம் கொள் பேர் அரக்கன்*  குலம் வீய முனிந்தவனை,* 
குழாம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த,*
குழாம் கொள் ஆயிரத்துள்*  இவை பத்தும் உடன் பாடி,* 
குழாங்களாய் அடியீர் உடன்*  கூடிநின்று ஆடுமினே. 11

3041



71. திருச்செங்குன்றூர்

ஸ்ரீ செங்கமலவல்லீ ஸமேத ஸ்ரீ இமயவரப்பன் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

2 comments:

  1. பதிவினை ரசித்தேன். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்

      Delete