17 March 2024

67.அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே?"

67."அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே?"




சீதையை அபகரித்து அசோகவனத்தில் சிறை வைத்தான் இராவணன். ராமர் குரங்குகள் உதவியுடன் அணைக் கட்டி குரங்குப் படையுடன் இலங்கைக்கு வந்தார். ஒற்றர்கள் ராவணனிடம் ராமர் வந்த செய்தியைக் கூறினார்கள்.

ராவணன் என்ன செய்வது என்று ஆலோசனை செய்து முடிவு செய்ய மந்திரிசபையைக் கூட்டினான். 

ராவணன் முறைப்படி சபையைக் கூட்டுவான் ஆனால் அவர்கள் கூறும் அறிவுரையை ஏற்க மாட்டான்.  அதனால் பலர் ராவணன் என்ன நினைக்கிறான் என்பதை அறிந்து அதுபோலப் பேசுவார்கள். சிலர் மட்டும் எது சரியான கருத்தோ அதைக் கூறுவார்கள். அவர்களைச் சினம் கொண்டு விரட்டியடிப்பான். அப்படி விரட்டியடிக்கப்பட்ட விபீஷணன் ராமரிடம் அடைக்கலாம் பெற்றான். அதற்குப் பிறகு நடந்த இந்த மந்திராலோசனை சபைக்கு மாலியவான் வந்திருந்தான். 

மாலியவான் ராவணனின் தாய் வழி பாட்டனார்.  வயது, உறவு, ஞானம், உலக அனுபவம் என்ற அடிப்படைகளில் அவர் இராவணனுக்கு அறிவுரை வழங்க நிரம்ப தகுதி பெற்றிருந்தார்.

 அவன் “ராவணா, நீ ராமருடன் சமாதானம் செய்து சீதையை திரும்ப ஒப்படைத்துவிடு. ராமன் போரில் நம்மை வெற்றி கொண்டு நம்மையும், இலங்கையும் நாசமாக்கிவிடுவான். எங்கும் கெட்ட அறிகுறிகள் தென்படுகிறது!” என்றான்.

ராவணனுக்கு வழக்கம்போலக் கோபம் வந்தது. “பாட்டனாரே! அற்ப மனிதனான ராமர் பக்கம் ஏன் பேசுகிறீர் ? உங்களுக்கேன் இந்தக் கெட்ட எண்ணம் ? ராமரையும் கூட இருக்கும் குரங்குகளையும் கூண்டோடு அழிப்பேன்!” என்று கர்ஜித்தான்.

மாலியவான் ஏதோ பேச ஆரம்பிக்க அப்போது ராவணன் “நீயும் விபீஷணன் போல் ராமன் பக்கம் சென்று நீடூழி வாழ்க! என்னை இரண்டாகப் பிளந்தாலும் நான் யாருக்கும் தலை வணங்கமாட்டேன்” என்று தலைக்கனத்துடன் பேசினான்.

மாலியவான் அதன் பிறகு வாயே திறக்கவில்லை.

முதல் நாள் போரில்  “இன்று போய்ப் போருக்கு நாளை வா!” என்று ராமரிடம் அடிவாங்கிய ராவணன் ஆயுதம் ஏதும் இல்லாமல் திரும்பினான். ராவணன் வெட்கத்துடன் மனதில் சோர்வுடன் யாருடனும் பேசாமல் தன் அறைக்குச் சென்று படுத்துக்கொண்டான்.

மாலியவான்  அவனுக்கு இதமான அறிவுரை கூறி திருத்த முடியுமா என்ற நப்பாசையில் ராவணன் படுத்துக்கொண்டு இருக்கும் அறைக்கு வந்தான். கட்டிலுக்கு அருகில் வந்து “பேரனே! போருக்குப் போய் வந்துவிட்டாயா ? ராமனின் வலிமையை உணர்ந்தாயா ?” என்று பேச ஆரம்பித்தார்.

ராமனின் தோற்றம், அழகு, அவன் கையாண்ட வில்லின் ஆற்றல், அம்புகளின் வீச்சு என்று எல்லாவற்றையும் மறைக்காமல் பாட்டனாரிடம் கூறினான் ராவணன்.

மாலியவான் மெதுவாக “முன்பு சொன்னபோது என் பேச்சைக் கேட்கவில்லை. விபீஷணன் கூறியதையும் கேட்க மறுத்துவிட்டாய். எது சரியோ ஆராய்ந்து முடிவெடுக்கத் தவறிவிட்டாய். அறிவும் ஆற்றலும் உண்மை பேசுபவர்களின் பேச்சை நீ கேட்காமல் தப்பாக முடிவு எடுத்துவிட்டாய். இதனால் நீ மட்டும் இல்லை நம் இனமே உன்னால் அழியப் போகிறது!” என்று மீண்டும் நல் அறிவுரையைக் கூறினான்.

அந்த நேரத்தில் ராவணன் மந்திரி  மகோதரன் வந்து மாலியவானைக் கோபத்துடன் நோக்கி ராவணனுக்குத் தப்பான கருத்துக்களைக் கூறி சமாதானப்படுத்தினான். ராவணன் தன் பாட்டனாரின் அனுகூலமான வார்த்தையை கேட்காமல் மடிந்து போனான்.

“சாமி! நான் அழிவுப் பாதையில் சென்றுகொண்டு இருப்பவர்களுக்கு அறிவுரை எதுவும் கூறவில்லையே! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள்

முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே






திருவாய்மொழி -இரண்டாம் பத்து

2-3 ஊனில் வாழ்
அடியார் குழாத்தைக் கூடுவதற்கு விழைதல்

அறியாக் காலத்துள்ளே*  அடிமைக்கண் அன்பு செய்வித்து,* 
அறியா மா மாயத்து*  அடியேனை வைத்தாயால்,*
அறியாமைக் குறள் ஆய்*  நிலம் மாவலி மூவடி என்று,* 
அறியாமை வஞ்சித்தாய்*  எனது ஆவியுள் கலந்தே. 3

3033


எனது ஆவியுள் கலந்த*  பெரு நல் உதவிக் கைம்மாறு,* 
எனது ஆவி தந்தொழிந்தேன்,*  இனி மீள்வது என்பது உண்டே,*
எனது ஆவி ஆவியும் நீ*  பொழில் ஏழும் உண்ட எந்தாய்,* 
எனது ஆவி யார்? யான் ஆர்?*  தந்த நீ கொண்டாக்கினையே.  4

3034


68. திருமூழிக்களம்

ஸ்ரீ மதுரவேணீ ஸமேத ஸ்ரீ திருமூழிக்களத்தான் ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 

அனுபிரேம்  💕💕

2 comments:

  1. அருமை பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. சிறப்பான பகிர்வு. தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete