42. மூலம் என்று அழைத்தேனோ கஜராஜனைப் போலே!
இந்திரத்யும்னன் என்ற அரசன் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான்.
சிறந்த திருமால் பக்தன். தினமும் காலைப் பூஜை முடித்துவிட்டுத் தான் மற்ற காரியங்களில் ஈடுபடுவான். ஒரு நாள் அகத்திய முனிவர் அரசனைப் பார்க்க வந்தார். அப்போது அரசன் பூஜையிலிருந்தான். முனிவர் வந்ததைக் கவனிக்கவில்லை. தன்னை வரவேற்கவில்லை, கவனிக்கவில்லை என்று முனிவர் தப்பாகப் புரிந்துகொண்டு ‘யானையாகப் பிறப்பாய்’ என்று அரசனைச் சபித்தார்.
அரசன் ஒன்றும் சொல்லாமல் சாபத்தை ஏற்றுக்கொண்டான். கஜேந்திரன் என்ற யானையாகப் பிறந்தான். யானையாகப் பிறந்தாலும் திருமாலிடம் இருந்த பக்தி குறையவில்லை. தினமும் மலை அடிவாரத்தில் இருக்கும் தாமரைக் குளத்தில் இறங்கி அங்கே அழகாகப் பூத்திருக்கும் தாமரை மலர்களைப் பறித்துத் திருமாலுக்கு அர்ப்பணித்து வந்தான்.
ஒரு நாள் பூப்பறிப்பதற்காகத் தாமரைக்குளத்தில் இறங்கியது. அப்போது யானையின் காலை முதலை கவ்வியது....
யானைக் காலைக் கவ்விய முதலைப் பற்றி ---’ஹுஹு’ என்ற கந்தர்வன் மேல் உலகத்தில் வாழ்ந்துவந்தான். ஒரு சமயம் குளத்தில் குளித்துக்கொண்டு இருந்தான். அதே குளத்தில் தேவலர் என்ற முனிவர் ஒற்றைக் காலால் தவம் செய்துகொண்டு இருந்தார்.
ஹுஹு தண்ணீருக்குள் சென்று முனிவரின் காலை விளையாட்டுக்காகப் பிடித்து இழுத்தான். முனிவரின் தவம் கலைந்தது.
கோபம் வந்தது.
உடனே ஹுஹு “தண்ணீருக்குள் முதலை மாதிரி வந்து காலை இழுத்தாய் அதனால் நீ முதலையாகப் போ!” என்று சாபம் கொடுத்தார். ஹுஹு முதலையாகப் பிறந்தான்.
இந்த முதலை தான் யானையின் காலைக் கவ்வியது. யானை தன் பலத்தை எல்லாம் உபயோகித்து தன்னை விடுவித்துக் கொள்ள முயற்சி செய்தது.
முடியவில்லை. கூட இருந்த யானைகள் எல்லாம் கஜேந்திரனைக் கரைக்கு இழுத்தும் பயன் இல்லை. யானைக்குத் தரையில் பலம், முதலைக்குத் தண்ணீரில் பலம்.
யானைக்கும் முதலைக்கும் இழுபறி நீடித்தது.
கூட இருந்த யானைகள் ஒன்றும் செய்ய முடியாமல் வருத்தத்துடன் சென்றன.
கஜேந்திரன் தன்னை தானே காத்துக்கொள்ள முடியும் என்ற தைரியத்தில் பல ஆண்டுகள் போராடியது. இறுதியில் சோர்வு ஏற்பட்டது. இனி ஒன்றும் செய்ய முடியாது என்று தோன்றியது.
யாரும் உதவிக்கு இல்லாத நிலையில் “நாராயணா ! ஓ மணிவண்ணா வாராய் என் துன்பத்தை நீக்க வா!” என்று ஈனக்குரலில் அலறியது.
”ஆதிமூலமே! என்னைக் காக்க வா!” என்று அலறியது.
அந்தச் சமயத்தில் பெருமாள் வைகுண்டத்தில் ஆதிசேஷன் மீது படுத்துக்கொண்டு இருந்தான். கூடப் பெருமாளின் தேவியர்கள் பாதத்தின் பக்கம் வீற்றிருந்தார்கள். யானை குரல் மெல்லியதாகக் கேட்டவுடன், பெருமாள் சடக்கென எழுந்தான்.
ஏன் இப்படிப் பதறுகிறார் என்று தேவியர்களுக்குப் புரியவில்லை.
பெருமாள் புறப்பட்டார். பெருமாள் புறப்படும் சமயம் விஷ்வக்சேனர் பெருமாளுக்கு கைக்கொடுத்து அழைத்துச் செல்வது வழக்கம். அதனால் அவர் கையை கொடுக்கப் பெருமாள் அதைக் கவனிக்காமல் அவசரமாகக் கருடன் இருக்கும் இடத்துக்கு ஓடினார். பெருமாள் வழக்கமாக அணியும் பாதுகை இல்லாமல் ஓடுகிறாரே என்று விஷ்வக் சேனரும் ஒன்றும் புரியாமல் முழித்தார்.
பெருமாளைப் பார்த்த கருடனுக்கு ஆச்சரியம்.
பெருமாள் அணிந்த ஆடைகள். மாலைகள் எல்லாம் கலைந்து இருந்தன.
ராவணனை யுத்தத்தில் கூட ஆடைகள் கலையவில்லையே என்று கருடன் நினைக்க “பெருமாள் சீக்கிரம் சீக்கிரம்” என்று கருடன் மீது ஏறி அமர்ந்தார்.
”எங்கே என்று சொன்னால் தானே அங்கே போக முடியும் ?” கருடனும் புரியாமல் முழிக்க. பெருமாள் பொறுமை இழந்து கருடனை இடுப்பில் கைக்குழந்தை போல இடுக்கிக்கொண்டு ஓடினார்.
முனிவர்களும், தேவர்களும் இந்த காட்சியைப் பிரம்மிப்புடம் பார்த்தார்கள். தன்னைவிடப் பெருமாள் வேகமாக ஓடுகிறாரே என்று கருடனுக்கு வெட்கமாக இருந்தது.
பெருமாள் விரைந்து வந்து, ஆகாசத்திலிருந்து யானையைப் பார்த்தார்.
சக்கரத்தை ஏவினார். முதலை வாயைப் பிளந்தார், யானையை விடுவித்தார்.
யானைக்கு அப்போதும் மகிழ்ச்சி ஏற்படவில்லை. யானை தன் துதிக்கையில் வைத்திருந்த அந்த ஒற்றை தாமரை மலரைப் பெருமாளின் திருவடியில் சமர்ப்பித்தது, வணங்கியபின் தான் அதற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
யானையின் அன்பைப் பார்த்த பெருமாளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. தன் பட்டு மேல்துண்டை உருவினான். வாயில் வைத்து ஊதி இளம் சூட்டில் யானையின் கால் புண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தான்.
”ஏன் யானை ஆதிமூலமே!” என்று கூப்பிட்டது ? தெரியுமா ?”
“உன் தாய் தந்தையர் மூலம் நீ பிறந்தாய். உனக்கு அவர்கள் மூலம். அவர்களுக்கும் மூலம் உண்டு. எனக்கும் உண்டு. இங்கே இருக்கும் என் சிஷ்யர்களுக்கும் உண்டு. நமக்கு நிழல் கொடுக்கும் இந்த மரத்துக்கும் உண்டு... மற்ற தேவதைகள், தேவர்கள், முனிவர்கள் எல்லோருக்கும் ஒரு மூலம் உண்டு. ஆனால் திருமாலுக்கு மட்டும் மூலமும் இல்லை முடிவும் இல்லை!” என்றார்.
“சாமி! நீங்களே சொல்லுங்கள் ஒரு விலங்கான யானைக்கு இருந்த பக்தி கூட என்னிடம் இல்லையே ! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்றாள் அந்தப் பெண்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
43. திருக்கச்சி
ஸ்ரீ பெருந்தேவித்தாயார் ஸமேத ஸ்ரீ பேரருளாள (ஸ்ரீ வரதராஜன்) ஸ்வாமிநே நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
No comments:
Post a Comment