ஸ்ரீநம்பெருமாள் ஆதி பிரமோற்சவம் - பங்குனி திருவிழா 6 ஆம் திருநாள்
நம்பெருமாள் கமலவல்லி நாச்சியார் சேர்த்தி சேவை நேற்று ...
ஆறாம் திருநாள் காலை நம்பெருமாள், கமலவல்லி தாயார் சேர்த்தி மண்டபம் சேருதல்...
நிசுளாபுரியில் தர்ம வர்மாவின் வம்சத்தில் நந்த சோழன் என்ற மன்னர் உறையூரைத் தலைநகராக கொண்டு, ஆட்சி செய்து கொண்டு இருந்த காலம். மன்னன், அரங்கனின் பரம பக்தன். இவருக்கு ஒரு பெரிய மனக்குறை, குழந்தை இல்லை என்பதுதான்.
அரங்கனிடம் வேண்டிக்கேட்க, ரங்கனோ மஹாலக்ஷ்மியை மன்னனுக்கு மகளாக் கொடுக்க நினைத்தார். ஒருநாள் காட்டுக்கு வேட்டையாடப் போன இடத்தில் ஒரு தடாகத்தில் மலர்ந்திருந்த தாமரையில் ஒரு பெண்குழந்தை கிடைத்தது.
கமலத்தில் கிடந்த குழந்தையை எடுத்துவந்து கமலவல்லி என்ற பெயர் வைத்து வளர்த்து ஆளாக்கினார் மன்னன்.
கமலவல்லி வளர்ந்து பெரியவளாய் தன் தோழிகளுடன் விளையாடும்போது ஒருநாள் அங்கே நம்பெருமாள் குதிரையின் மீது ஜீயபுரத்துக்கு வேட்டைக்கு எழுந்தருளினார். அப்போது கமலவல்லிக்கு அதிசுந்திரராய் திருவரங்கநாதர் எல்லா அழகையும் காட்டி சேவை சாதிக்கக் கமலவல்லி அவரிடம் மோகித்து மனதைப் பறிகொடுக்கிறார்.
பின் கமலவல்லியோ அவரை மறக்க இயலாமல் அவர் மீது காதல் கொண்டு, பக்தியும் மேலிட்டுக் கலங்கலானாள். தம் மகளின் நிலை கண்ட நந்தசோழன் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்தார்; மனம் வருந்தினார்;
எம்பெருமானிடம் முறையிட்டார். அவர் கனவில் தோன்றிய பெருமாள் “யாம் பிள்ளையில்லாத உன் மனக்குறையைப் போக்கவே பிராட்டியை உனக்குத் திருமகளாக அனுப்பி வைத்தோம். நீ உன் மகளை எம் சந்நிதிக்கு அழைத்து வா; யாம் அவளை ஏற்றுக்கொள்கிறோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
மன்னன் மனம் மகிழ்ந்தார். நகரை அலங்கரித்தார்.
கமலவல்லியைத் திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வந்தார். அக்கோவிலின் கருவறையில் எழுந்தருளி உள்ள அரங்கநாதனுடன் சென்று கமலவல்லி இரண்டறக் கலந்தருளினார்...
உறையூர் திரும்பிய மன்னன், மகளுக்காக ஒரு கோவிலைக் கட்டினான்.
அதுதான் இந்த உறையூர் நாச்சியார் கோவில் ..
அழகிய மணவாளன் என்னும் அரங்கனே,
கமலவல்லிக்கு அழகான மாப்பிள்ளையாக வந்ததால் இங்கு எழுந்தருளிய பெருமாளும் மணவாளன் எனும் திருநாமம் கொண்டார்.
மாப்பிள்ளையும்,பெண்ணுமாக கல்யாணக்கோலத்தில் வடக்கே, ஸ்ரீரங்கத்தில் உள்ள தங்கள் "பெரிய கோயிலை-திருமாளிகையை" நோக்கி நின்றபடி சேவை சாதிக்கிறார்கள்.
உறையூர் கோயிலில் கமலவல்லி நாச்சியார் மட்டுமே மூலவராகவும், உற்சவராகவும் சேவை தருகிறார்.
அழகிய மணவாளப் பெருமாள் (ஸ்ரீரங்கநாதர்) மூலவர் மட்டுமே நின்ற கோலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.
உற்சவர் ஸ்ரீரங்கம் பெரியகோயில் நம்பெருமாளே. அவர் ஆண்டுக்கு ஒரு முறை இந்த பங்குனி ஆயில்ய சேர்த்திக்கு, மட்டுமே இங்கு எழுந்தருள்கிறார்.
கமலவல்லி நாச்சியார் பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் அவதரித்ததாக ஐதீகம்.
முக நூலில் இவ்வழகிய படங்களை வழங்கிய அனைவருக்கும் நன்றிகள் பல ...
1762
கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலர் ஒப்பர் குன்றம் அன்ன *
பாழி அம் தோளும் ஓர் நான்கு உடையர்
பண்டு இவர் தம்மையும் கண்டறியோம் *
வாழியரோ! இவர் வண்ணம் எண்ணில்
மா கடல் போன்று உளர் கையில் வெய்ய *
ஆழி ஒன்று ஏந்தி ஓர் சங்கு பற்றி
அச்சோ , ஒருவர் அழகியவா!
பெருமாள் திருவடிகளே சரணம் !!
தாயார் திருவடிகளே சரணம் !!
ஓம் நமோ நாராயணாய நமக
அன்புடன்
அனுபிரேம் 💕💕💕
சேத்தி குறித்த தகவல்களும் படங்களும் சிறப்பு. ரசித்தேன்.
ReplyDelete