43. பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே
மதுராபுரி முழுவதும் ஒரே கொண்டாட்டம். இன்றுடன் கம்சனின் அட்டூழியங்களுக்கு ஒரு முடிவு வரப்போகிறது. தனுர் யாகம் என்ற பெயரில் கண்ணனையும் பலராமனையும் அழைத்துவர அக்ரூரர் சென்றிருக்கிறார். அவர் தேர் வரும் தடத்தைப் பார்த்தபடி மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
அந்தப் பெண்மணி கூட்டத்தை தள்ளிக் கொண்டு முன்னே வருகிறாள். அவளுடைய முதுகு முற்றிலும் கூனி இருக்கிறது. எனவே மற்றவரை போல அவளால் கண்ணனை எளிதாக நிமிர்ந்து பார்க்க இயலாது. அவள் பெயர் த்ரிவக்ரை அல்லது நைகவக்ரை.
அவள் கம்சனுக்கும் ஊர் மக்களுக்கும் சந்தனம் அரைத்துக் கொடுத்து பிழைப்பு நடத்துபவள். அவள் கைகளில் ஒரு பெரிய தாமரை இலையில் மணக்க மணக்க சந்தனம் பசுமையாக இருந்தது. கண்ணன் எப்பொழுது வருவான் நாம் எப்போது தன் கைகளால் அவன் திருமேனியில் சந்தனம் பூசுவோம் என்று காத்திருக்கிறாள்.
அதோ இந்த உலகை உய்விக்க வந்த மாயக் கண்ணன் தனது தமையனுடன் இரு அடலேறுபோல வந்து கொண்டிருக்கிறான். அந்தக் கூனிக்கு தன்னை கண்ணன் கவனியாமல் சென்று விடுவனோ என்று கவலை. பிரதியுபகாரம் பாராமல் கைங்கரியம் செய்யும் எந்த பக்தன் கண்ணன் கண்களிலிருந்து தப்பியிருக்கிறான்?
ஆனால், அவர்கள் நெருங்கி வர வர த்ரிவக்ரைக்கு தன் கூன் உடம்பை பற்றி கூச்சமே வந்தது. கூட்டத்திலிருந்து நழுவ பார்த்த அவளை ஒரு குரல் நிறுத்தியது.
"ஹே அழகியே! அந்த சந்தனத்தை யாருக்காக எடுத்து செல்கிறாய்?" என்றான் கிருஷ்ணன்.
"ஹே சியாமா! நான் கம்சனுக்காக எடுத்துச் செல்கிறேன் இந்த சந்தனத்தை" என்றாள் கூனி.
கண்ணன் அவளிடம் வந்து நின்று “பெண்ணே அந்த சந்தனம் எனக்குப் பூசு!" என்கிறான். இந்தத் தருணத்திற்கு அல்லவா அவள் காத்திருந்தாள்? தனது கைகளை ஏந்திய சந்தனத்தை கண்ணனின் திருமேனியில் பூசினாள்.
பூசும் சாந்து என் நெஞ்சமே* புனையும் கண்ணி எனதுடைய,*
வாசகம் செய் மாலையே* வான் பட்டு ஆடையும் அஃதே,*
தேசம் ஆன அணிகலனும்* என் கைகூப்புச் செய்கையே,*
ஈசன் ஞாலம் உண்டு உமிழ்ந்த* எந்தை ஏக மூர்த்திக்கே.
என்று நம்மாழ்வார் பாடுகிறார். எம்பெருமானுக்கு பூசும் சந்தனம் தன்னுடைய நெஞ்சம் என்றும், பாடும் பாமாலையே அவனுக்குச் சூடும் பூமாலை என்றும், அணியும் பரிவட்டமும் அதுவே என்றும், ஒளி பொருந்திய அணிகலன் அவனைத் தொழும் நிலையில் உள்ள கைகள் என்று பாடுகிறார்.
கண்ணனுக்கு ஆயர்பாடி குறும்பு போகவில்லை.
“இந்தச் சந்தனம் நன்றாக இல்லை. வாசனை செயற்கையாக உள்ளது. மன்னர்களுக்கு வழங்கும் சந்தனம் எங்களில் அகந்தையை வளர்த்து விடப்போகிறது. வேறு சந்தனம் உன்னிடம் இல்லையா?“ என்கிறான்.
திகைத்துப் போனாள் கூனி.
இருப்பதில் மிக வாசனையுள்ள சந்தனத்தைக் கொண்டு வந்தவளிடம் இப்படி ஒரு கேள்வியா?
பின்பு, காலையில் கோவிலுக்கு அரைத்த அவர்களது திருமேனிக்கு பொருந்தும் படியான நற்சந்தனத்தை எடுத்து கொடுத்தாள். அவர்கள் அதை ஆனந்தமாக அணிந்துக் கொண்டனர். கண்ணன் மெல்ல அவளை தொட்டு அவனது கால் கட்டைவிரலை அவளது பாதத்தில் வைத்து, இருவிரல்களால் அவளது முகவாய்கட்டையை தூக்கினான்.
அவளது கூனை நீக்கினான்.
"கூனியைப் போல எதையும் எதிர்பாராது எம்பெருமானுக்கு வாசனை சந்தனத்தை பூச கொடுத்தேனா? இல்லையே!" என்று அந்த பெண் கிளம்புகிறாள்.
முந்தைய பதிவுகள் -
திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் முன்னுரை ...
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே
வைகலும் வெண்ணெய்,* கைகலந்து உண்டான்,*
பொய் கலவாது,* என் மெய் கலந்தானே. 5
2980
கலந்து என் ஆவி,* நலம் கொள் நாதன்,*
புலன் கொள் மாணாய்,* நிலம் கொண்டானே. 6
2981
ஸ்ரீ அலர்மேல்மங்கை ஸமேத ஸ்ரீ ஆதிகேசவாய நமஹ
சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!
ரகசியம் தொடரும்...
No comments:
Post a Comment