19 April 2023

ஶ்ரீரங்கம் நம்பெருமாள் சித்திரைத் தேர்

 பெரிய பெருமாள் திருநட்சத்திரம் -----   பங்குனியில்  – ரேவதி







 பெரிய பெருமாள் வாழி திருநாமம்!

திருமகளும் மண்மகளும் சிறக்க வந்தோன் வாழியே  

செய்ய விடைத் தாய்மகளார் சேவிப்போன் வாழியே

இரு விசும்பில் வீற்றிருக்கும் இமையவர் கோன் வாழியே

இடர் கடியப் பாற்கடலை எய்தினான் வாழியே

அரிய தயரதன் மகனாய் அவதரித்தான் வாழியே

அந்தரியாமித்துவமும் ஆயினான் வாழியே

பெருகி வரும் பொன்னி நடுப் பின்துயின்றான் வாழியே

பெரிய பெருமாள் எங்கள் பிரான் அடிகள் வாழியே


 இன்று நம்பெருமாள் சித்திரைத் தேர்....

நம்பெருமாளின் மூன்று தேர்களில் சித்திரைத் தேரே மிகப் பெரியது. (மற்ற இரண்டும் தைத்தேர் (ரங்கா,ரங்கா கோபுரத்துக்கு எதிரில் உள்ளது), மற்றும் பங்குனித்தேர்(கோரதம் கிழக்கு/வடக்குசித்திரைவீதிகள்மூலையில்).

சித்திரைத் தேர் கீழச்சித்திரை வீதி நடுவில்  ஶ்ரீ பெரியநம்பி ஸ்வாமிகள் திருமாளிகையை ஒட்டி உள்ளது.

ஶ்ரீ ராமாநுஜரின், ஆசார்யர் ஶ்ரீபெரியநம்பி ஸ்வாமிகள்,மாறனேரி நம்பி என்னும் தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த, ஒரு உத்தமத் திருமால் அடியாருக்கு சரம(இறுதி) கைங்கர்யம் செய்ததால்,அவரை ஶ்ரீரங்கத்தில் இருந்த உயர்குலத்தோர்,தங்கள் குலத்திலிருந்து விலக்கி வைத்து விட்டனர் ! 

கோவிலுக்குள்ளும் வரக் கூடாது என்றனர்.

பெரிய நம்பி ஸ்வாமி அரங்கனைச் சேவிக்க முடியாமல் மிகுந்த வேதனைப்பட்டார். அப்பொழுது ஒரு சித்திரை மாதத்தில் அரங்கன் தேரில் ஆரோகணித்துவர, பெரிய நம்பி ஸ்வாமியின் திருக்குமாரத்தி அத்துழாய் அம்மை, அவர்கள் திருமாளிகையிலிருந்து வெளியேவந்து, அரங்கன் தேர் முன்னால் நின்று குமுறினார். மனமுருக வேண்டினார்.

"ரங்கா ! உம்மையே நினைத்துக் கொண்டு உம் கைங்கர்யமே 

வாழ்க்கையாக இருக்கும் அடியேனின் தந்தையாரை உம்மைச் சேவிக்க

முடியாமல் செய்து விட்டார்களே"என்று.

அரங்கன் தேர் அந்த இடத்திலேயே நின்று விட்டது.

எவ்வளவு முயன்றும் தேரை நகர்த்த முடியவில்லை.

அப்போது தான் புரிந்தது,கோவில் நிர்வாகிகளுக்கும், ஊர்க்காரர்களுக்கும்- 

பெரிய நம்பிகளின் உண்மையான பக்தியும், மேன்மையும். உடனே அவர்கள் நம்பிகள் திருமாளிகைக்குள் சென்று தங்கள் தவறை மன்னிக்குமாறு அவரை வேண்டிக்கொண்டனர். அரங்கனைச் சேவிக்க வருமாறு அழைத்தனர்.

மிகுந்த பாரிப்புடன் நம்பிகள் வெளியே வந்து தேரில் இருக்கும் அழகிய மணவாளனைச் சேவித்து மகிழ்ந்தார்.

அர்ச்சகர்கள் அவருக்கு அரங்கனின் தீர்த்தம்,சடாரி, சந்தனம், மாலை ஆகியவற்றைச் சாதித்தனர். பெரியநம்பிகள் மனம் உகப்படைந்தது. பிறகு தேரை இழுத்தனர். தேர் சுலபமாக நகர்ந்து சென்றது. அன்றிலிருந்து அந்தத்தேர் அங்கேயே நிறுத்தப்பட்டு வருகிறது.







நம்பெருமாளுக்கு நம் மக்கள் திருவிழா!!

 48 ஆண்டுகள் திருஉலா சென்று திருவரங்கம் திரும்பிய நம்பெருமாளுக்கு, பொது மக்கள் கொண்டாடிய திருவிழாவே சித்திரை உற்சவம்! 

கி.பி.1383 ஆண்டிலிருந்து, இந்தத் திருவிழாநடைபெறுகிறது.

அன்றைய மன்னர்,விருப்பண்ண உடையாரின்(விருப்பன்) வேண்டுகோளை ஏற்று, நூற்றுக்கணக்கான கிராமங்களிருந்து,மக்கள் உற்சவம் நடத்த பொன், பொருட்களையும், தானியங்கள், விளைபொருட்களையும், கால்நடைகளையும்,வண்டிகளில் கொண்டுவந்து குவித்தனர்.

அந்த வழக்கம் இன்றும் தொடர்கிறது.

சித்திரை திருவிழாவின் 9ம் திருநாள் நம்பெருமாளின் ரேவதி நட்சத்திரத்தில்,

பெரிய சித்திரை தேரில் நம்பெருமாள்,

சித்திரை வீதிகளில் உலா வந்து அருள் பாலிக்கிறார்

இந்நாளில் லட்சக்கணக்கான கிராம மக்கள் குடும்பம், குடும்பமாக தங்கள் குல தெய்வத்தின் தேர்த்திருவிழாவுக்கு வருகிறார்கள்.

அதிகாலையில் காவிரியில் தீர்த்தமாடும் மக்கள் வெள்ளம்,தேர் வரும் வழியெங்கும்,தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்கிறார்கள். தேர்வடம் பிடிக்கையில், "கோவிந்தா,

கோபாலா"என்று கோஷ முழக்கம். 

 கோவில் முழுவதும் மக்கள் கூட்டம் காயத்ரிமண்டபத்தின் (கருவறைக்கு அடுத்த மண்டபம்)வெள்ளிக் கதவுகள் அடைக்கப்பட்டு விடும். அதுவரை அனைத்துப் பிரகாரங்களிலும் மக்கள் குழுக்கள் பழங்கள் (மா,பலா,வாழை,) தேங்காய்கள்,காய்கறிகள்-பெரும் குவியல் குவியலாகப் படையிலிட்டு, தீபமேற்றியும் நாள்முழுதும், அவர்களுக்குத் தெரிந்த முறையில் வழிபாடு செய்வார்கள். ஒரு சிலர் சாமி ஆடிக் கொண்டிருப்பார்கள்.

 அவர்களுக்கு உள்ளேயே ஒருவர் பூசாரி. அவர் அனைவருக்கும் திருநீறு இட்டு விடுவார். அவர்களைப் பொருத்த வரை பெருமாள் கோவிலில் திருமண்/குங்குமம் இட வேண்டும் என்று கூட நினைப்பதில்லை. சாமி கும்பிடுகிறோம், திருச்சின்னம் இட்டுக் கொள்கிறோம், அவ்வளவே !

கோவில் அர்ச்சகர்களையோ/பணியாளர்களையோ மாலை வரை காண முடியாது.

வழிபாடு செய்து முடித்தவர்கள் கோவிலுக்குள்,ஆங்காங்கு இலை போட்டு சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். 

மண்டபங்களில் அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள், சிலர் படுத்துத் தூங்கிக் கொண்டிருப்பார்கள் நம்பெருமாள்,பெரிய கோவிலையே  அவர்களுக்குக் கொடுத்து, அவர்கள் "நம்" கோவில்/வீடு என்று நினைக்கும்படி செய்து விட்டாரோ என்றிருக்கும் !

அவர்கள் அரங்கனுக்காகக் கொண்டு வந்த, தானிய மூட்டைகளையும், மற்ற பொருட்களையும், திருக்கொட்டாரத்தில் சமர்ப்பித்து ரசீது பெற்றுக் கொள்கிறார்கள். கால்நடைகளையும், கோசாலையில் தானமாகத் தருகின்றனர்.

மந்திரங்கள்/பிரபந்தங்கள்/சாஸ்திரங்கள் அதிகம் அறியாத கிராம மக்களின் முரட்டு பக்தியும்/அபார நம்பிக்கையும் வியப்பூட்டும் விஷ்யம்.

(முகநூலிருந்து.... நன்றி சுவாமி --- பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

















நாச்சியார் திருமொழி
11. தாம் உகக்கும் 
திருவங்கன் மேல் கொண்ட காதல் 

607
தாம் உகக்கும் தம் கையில் *  சங்கமே போலாவோ* 
யாம் உகக்கும் எம் கையில்*  சங்கமும்? ஏந்திழையீர்!* 
தீ முகத்து நாகணைமேல்*  சேரும் திருவரங்கர்* 
ஆ! முகத்தை நோக்காரால்*  அம்மனே! அம்மனே!* (2)  


608
எழிலுடைய அம்மனைமீர்!*  என் அரங்கத்து இன் அமுதர்* 
குழல் அழகர், வாய் அழகர்*  கண் அழகர், கொப்பூழில்* 
எழு கமலப் பூ அழகர்*  எம்மானார்* 
என்னுடைய கழல் வளையைத் தாமும்*  கழல் வளையே ஆக்கினரே* 2


609 
  பொங்கு ஓதம் சூழ்ந்த*  புவனியும் விண் உலகும்* 
அங்கு ஆதும் சோராமே*  ஆள்கின்ற எம் பெருமான்* 
செங்கோல் உடைய*  திருவரங்கச் செல்வனார்* 
எம் கோல் வளையால்*  இடர் தீர்வர் ஆகாதே?*  3 (2)

   
610
 மச்சு அணி மாட*  மதில் அரங்கர் வாமனனார்* 
பச்சைப் பசுந் தேவர்*  தாம் பண்டு நீர் ஏற்ற* 
பிச்சைக் குறை ஆகி*  என்னுடைய பெய்வளை மேல்* 
இச்சை உடையரேல்*  இத் தெருவே போதாரே?*      4 

  
611
பொல்லாக் குறள் உருவாய்ப்*  பொற் கையில் நீர் ஏற்று* 
எல்லா உலகும்*  அளந்து கொண்ட எம்பெருமான்* 
நல்லார்கள் வாழும்*  நளிர் அரங்க நாகணையான்* 
இல்லாதோம் கைப்பொருளும்*  எய்துவான் ஒத்து உளனே*  5

    
 
ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம் ...


அன்புடன்
அனுபிரேம் 💓💓💓

1 comment:

  1. தேர் படங்களும் விவரணமும் அருமை, அனு! எங்கள் ஊரிலும் இப்ப வரும் திருவிழா...

    கீதா

    ReplyDelete