29 April 2023

44. பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!

 (44) பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!



எவன் ஒருவன் எனக்கு இலை, மலர், பழம், நீர் முதலியவற்றை அர்ப்பணம் செய்கிறானோ, தூய்மையான பக்தியுடன் அந்த பக்தன் அளிக்கும் காணிக்கையை நான் ஏற்றுக் கொள்கிறேன்" என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது பகவத் கீதையில் கூறுகிறார். 

எனவே துளசியும், பூக்களும் புகழ் பெற்றன. வைணவர்கள் புஷ்ப கைங்கரியம் செய்வதில் சிறந்தவர்கள். அதில் பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் முதலியோர் போல நந்தவனம் அமைத்து புஷ்ப கைங்கரியம் செய்தவர்களும் உண்டு. பொன்பூ, மண்பூ மூலம் கைங்கரியம் செய்தவர்களும் உண்டு. இதற்கெல்லாம் மூலம் ஸ்ரீமத் பாகவதத்தில் குறிப்பிடப்படும் இந்த மாலாக்காரரின் கதைதான்.


மதுராவிற்கு வந்த கண்ணன் பட்டு ஆடையை அணிந்துகொண்டான். பிறகு கூனியின் சந்தனத்தைப் பூசிக்கொண்டு வாசனையுடன் நடந்தான். கழுத்தில் ஒரு பூ மாலை சூடிக்கொண்டால் நன்றாக இருக்குமே என்று நினைத்தான்... 

ஒருவரிடம் “பூக்காரரின் வீடு எங்கே ?” என்று விசாரித்தான்.

 ”யாரு மாலாகாரரா ? இதோ அந்தக் குறுகிய சந்துக்குள்ளே இருக்கிறது” என்று ஒருவர் வழி காண்பிக்க அதில் நுழைந்தான் கண்ணன்.

 ஒரு வீட்டு வாசலில் பூக்கள் கீழே சிந்தியிருக்க இது தான் மாலாகாரர் வீடு என்று கண்ணன் கண்டுபிடித்தான். 

வாசற் கதவைத் தட்டினான். 

உள்ளே மாலாகாரர் பூ வியாபாரம் எல்லாம் முடித்துவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். 

இந்தச் நேரத்தில் யார் கதவைத் தட்டுகிறார்கள் என்று கதவைத் திறந்தார் . கண்ணன் இருப்பதைப் பார்த்து அப்படியே திகைத்து நின்றார் மாலாகாரர்.


”கண்ணா வைகுண்டத்திலிருந்து மதுராவிற்கு வந்தது ஆச்சரியம். மதுராவில் எவ்வளவோ இடம் இருக்க இந்தச் சின்ன சந்துக்குள் வந்தது இன்னொரு ஆச்சரியம். எவ்வளவோ பெரிய வீடுகள் இருக்க என்னுடைய சின்னக் குடிசைக்கு வந்தது அதைவிட ஆச்சரியம். வந்ததும் அல்லாமல் என் வீட்டுக் கதவைத் தட்டியது மிகப் பெரிய ஆச்சரியம் என்று அப்படியே கீழே விழுந்து கண்ணனின் பாதங்களைப் பற்றினார்.


”மாலாகரரே! உன் கையால் நான் புஷ்ப அலங்காரம் செய்துகொள்ள வேண்டும் என்று ஓடி வந்தேன்” என்றான் கண்ணன்.


“என்னைத் தேடி வந்தாயா ? இந்தத் தெரு என்ன பாக்கியம் செய்தது! இந்த வீடு என்ன பாக்கியம் செய்தது ! நான் என்ன பாக்கியம் செய்தேன் என்று விதுரர் போல ஒரே பரபரப்பாக அங்கேயும் இங்கேயும் ஓடினார் மாலாகாரர்.


கீழே சிதறிக் கிடக்கும் புஷ்பங்களைக் கையில் எடுக்கிறார். 

காலியான குடையை கவிழ்த்தார். 

அதில் சில ஒரு ரோஜா, ஒரு முல்லை, ஒரு சென்பகப் பூ, ஒரு மல்லிகை கீழே விழுந்தது. மூலையில் சில வாடிய துளசி இருந்தது. அதைக் கொண்டு ஒரு குட்டி மாலை செய்தார். 

வழக்கமாகச் செய்யும் மாலைபோல இல்லாமல் பல வண்ணங்களில் இருந்தது.

 ”கண்ணா ! என்ன செய்வேன். இந்த மாதிரி மாலையை இதற்கு முன் செய்ததில்லை. என்ன செய்வேன். புஷ்பம் எல்லாம் தீர்ந்துவிட்டது” என்று புலம்பினார். 

அதற்குக் கண்ணன் “இந்த மாலை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதைத் தேடித் தான் நான் உன் வீட்டுக் கதவைத் தட்டினேன். எனக்கு நீரே சூட்டி விடு” என்றான் கண்ணன்.


“இந்த மாலையைத் தேடிக் கொண்டா இவ்வளவு தூரம் வந்தாய்?” என்று கண்ணீருடன் மாலையைக் கண்ணுக்குச் சூட்டினார் மாலாகாரர்.


“மிகவும் மகிழ்ந்தேன். உனக்கு என்ன வேண்டுமோ கேள் தருகிறேன்!” என்றான் கண்ணன். மாலாகாரர் ”கண்ணா! எதுவும் வேண்டாம். உன்னிடம் பக்தி குறையாமல் இருக்க வேண்டும்” என்றார்.


அந்த மாதவன் அந்த இடத்திலேயே மாலாக்காரருக்கு மோட்சம் அளிக்கிறான் என்பது புராணம். இதனாலேயே நமது ஆழ்வார்களும் பல ஆச்சாரியர்களும் இறைவனுக்கு புஸ்ப கைங்கரியம் செய்ய முன்வந்தனர்.


ராமானுஜர் “ஆண்டாள் சொல்லாது எதுவும் கிடையாது! பெண்ணே! இதுவரை விதுரர், கூனி, மாலாகாரர் பற்றிய கதைகளைச் சொன்னாய். விதுரர் கொடுத்தது ‘மடி தடவாத சோறு’,  கூனி கொடுத்தது ‘சுண்ணாம்பு கலவாத சந்தனம், ’ மாலாகாரர் கொடுத்தது ‘சுரு மாறாத பூக்கள்’ என்றார்”

“சாமி புரியவில்லையே!” என்றாள் அந்தச் சின்னப் பெண்.

ராமானுஜர் “ ‘மடி தடவாத சோறு’ - அதாவது சோறிடும் போதே அவன் மடியில் என்ன இருக்கிறது நமக்கு என்ன பயன் என்று எந்த எதிர்ப்பாப்பும் இல்லாமல் உணவு அளித்தார் விதுரர் கண்ணனுக்கு உணவு அளித்தார். 

’சுண்ணாம்பு கலவாத சந்தனம்’ -  கூனி கண்ணனுக்குக் கொடுத்தது தூய்மையான சந்தனம். அவளும் எந்தப் பிரதிபலனையும் எதிர்பார்க்கவில்லை. என்னையே சந்தனமாக எடுத்துக்கொள் என்றாள். சந்தனத்தில் சுண்ணாம்பு கலந்தால் தூய்மை கெட்டுவிடும். அதுபோலப் பக்தியும் இருக்க வேண்டும். 

’சுரு மாறாத பூ’ -  மாலாகாரர் கொடுத்தது. பூக்களை நெருப்பின் பக்கம் எடுத்துச் சென்றால் இயற்கையான மணம் போய்க் கருகிய வாசனை வரும். நம் பக்தியும்  இயற்கை மணம் உள்ளதாக இருக்க வேண்டும். மாலாகாரர் பக்தியுடன் கொடுத்தால் அந்தப் பூக்களுக்கு இயற்கையான மணம் இருந்தது! ” என்றார் ராமானுஜர். 

"சுருள் நாறாத பூவை கொடுத்து மாலாக்காரர் போல தன்னலமற்ற அன்பினை வெளிப்படுத்தினேனா, எங்கள் வைத்தமாநிதி பெருமாளுக்கு? இந்தத் திருக்கோளூரில் இருக்க தனக்கு யோக்கியதை கிடையாது" என்று அந்தப் பெண்பிள்ளை வெளியேறுகிறாள்.


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே







திருவாய்மொழி -முதற் பத்து

1- 8  ஓடும் புள் ஏறி
எம்பெருமானின் இனிமைத்தன்மை 


கொண்டான் ஏழ் விடை,*   உண்டான் ஏழ் வையம்,*

தண் தாமம் செய்து,*  என் எண் தான் ஆனானே. 7

2982



ஆனான் ஆன் ஆயன்,*  மீனோடு ஏனமும்;* 

தான் ஆனான் என்னில்,*  தான் ஆய சங்கே. 8

2983


          





 

45 . திருத்தண்கால்

ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ தீபப்பிரகாசய நமஹ



சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. கதை நன்றாக உள்ளது. இக்கதையை இதுவரை நான் அறிந்த தில்லை. திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் என்ற இந்த சம்பவ கதைகளை தொகுத்து நன்றாக தந்து கொண்டிருக்கிறீர்கள். இதை ஒரு மின்னூலாக ஆக்கி வெளியிட்டீர்கள் என்றால் தெரியாதவர்களுக்கு இந்த கதைகள் வெகு பலனாக இருக்கும். நல்ல அருமையான கதைகள். படப்பகிர்வும், பாசுரங்களும் அருமை. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete