04 May 2023

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

 மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்  (சித்திரையில் – சித்திரை)........












மதுரகவியாழ்வார்  வாழி திருநாமம்!


சித்திரையிற்  சித்திரைநாள் சிறக்க வந்தோன் வாழியே 

திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே 

உத்தர கங்காதீரத்துயர் தவத்தோன் வாழியே 

ஒளி கதிரோன் தெற்குதிக்க உகந்து வந்தோன் வாழியே 

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே

பராங்குசனே பரன் என்று பற்றினான் வாழியே 

மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே 

மதுரகவி திருவடிகள்  வாழிவாழி வாழியே






மதுரகவியாழ்வார்

பிறந்த ஊர் : பாண்டிய நாட்டில் திருக்கோளூர்

பிறந்த காலம் : கி.பி.8ம் நூற்றாண்டு

 சித்திரைத் திங்கள் -  சித்திரை நட்சத்திரத்தில்

 வளர்பிறை சதுர்த்தசி திதியில் வெள்ளிக்கிழமை அன்று அவதரித்தார்.

சிறப்பு : கருடனின் அம்சம்

   சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு .‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே‘ என்று இருந்தவர் நம்மாழ்வார்.

ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார்.

மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.

நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். 

அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்குவதால் அதற்கு  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று..





நம்மாழ்வாரைப் பாடத் தொடங்கிய மதுரகவி ஆழ்வார், ஆழ்வாருக்கு மிகவும் உயிரான கண்ணன் எம்பெருமானை இந்தப் பாசுரத்தில் அனுபவிக்கிறார்.


கண்ணி நுண் சிறுத் தாம்பினால் கட்டு உண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே (2)

1   937

என்னுடைய ஸ்வாமியும் ஸர்வேச்வரனுமான கண்ணன் எம்பெருமானை, யசோதைப் பிராட்டி துண்டு துண்டான, மெல்லிய, சிறிய கயிற்றினால் தன்னைக் கட்டும்படி அமைத்துக்கொண்டான். அப்படிப்பட்ட எம்பெருமானை விட்டு, தென் திசையில் உள்ள திருக்குருகூருக்குத் தலைவரான நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால் அது என்னுடைய நாக்குக்கு இனியதாகவும் அமிர்தமாகவும் உள்ளது.

இரண்டாம் பாசுரம் -

 நம்மாழ்வாரின் பாசுரங்களே தனக்கு மிகவும் இனிமையாக இருப்பதாகவும் அவற்றைச் சொல்லிச் சொல்லியே தன்னைத் தரித்துக்கொள்வதையும் விளக்குகிறார்.


நாவினால் நவிற்று இன்பம் எய்தினேன்
மேவினேன் அவன் பொன்னடி, மெய்ம்மையே!
தேவு மற்று அறியேன் குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே

2    938



நான் நாக்காலே ஆழ்வாரின் பாசுரங்களைச் சொல்லி மிகப்பெரிய ஆனந்தத்தை அடைந்தேன். ஆழ்வாரின் திருவடிகளிலே நன்கு சரணடைந்திருக்கிறேன். கல்யாண குணங்களால் நிறைந்த, திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரைத் தவிர வேறு ஒரு தெய்வத்தை அறியேன். ஆழ்வாருடைய பாசுரங்களை இசையுடன் பாடிக்கொண்டு எல்லா இடங்களுக்கும் செல்வேன்.


மூன்றாம் பாசுரம் -

 நம்மாழ்வாரின் அடியவனாக இருப்பதாலே எம்பெருமான் தானே விரும்பி வந்து மதுரகவி ஆழ்வாருக்குத் தன் தரிசனத்தைக் காட்டிக்கொடுத்த நன்மையைப் பேசி மகிழ்கிறார்.


திரிதந்து ஆகிலும் தேவபிரான் உடை
கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்
பெரிய வண் குருகூர் நகர் நம்பிக்கு ஆள்
உரியனாய் அடியேன் பெற்ற நன்மையே  

 3 939


ஆழ்வாருக்கே அடியவன் என்றிருந்த நானும் அந்த நிஷ்டையில் இருந்து நழுவினேன். நித்யஸூரிகளின் தலைவனான, கறுத்த, அழகிய திருமேனியை உடையவனான ஸ்ரீமந் நாராயணனைக் அவன் காட்டிக் கொடுக்க நான் கண்டேன். சிறந்த, வள்ளல் தன்மை மிகுந்த திருக்குருகூரில் அவதரித்த ஆழ்வாரின் உண்மையான அடியவனாக இருக்கும் எனக்குக் கிடைத்த நன்மையைப் பாரீர்!



நான்காம் பாசுரம் -

ஆழ்வார் நமக்குச் செய்த நன்மையைப் பார்த்தால், அவருக்கு எதுவெல்லாம் விருப்பமோ, அவற்றை நாமும் விரும்ப வேண்டும் என்கிறார். மேலும் தன்னுடைய தாழ்ச்சியையும் ஆழ்வார் தன்னை ஏற்றுக்கொண்ட விதத்தையும் பேசி அனுபவிக்கிறார்.


நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
புன்மை ஆகக் கருதுவர் ஆதலின் 
அன்னையாய் அத்தனாய் என்னை ஆண்டிடும்
தன்மையான் சடகோபன் என் நம்பியே

4   940


நான் தாழ்ச்சிகளின் உருவமாக இருப்பதைக் கண்ட நான்கு வேதங்களில் சிறந்த ஞானமும் அனுஷ்டானமும் உடையவர்கள், என்னைக் கைவிட்டார்கள். ஆழ்வாரோ தாயும் தந்தையுமாக இருந்து என்னை அடிமையாக ஏற்றுக் கொண்டார் என்பதால் அவரே என் ஸ்வாமி.


ஐந்தாம் பாசுரம் -

தான் முன் பாசுரத்தில் கூறிய தாழ்ச்சியை விளக்கி, அப்படி இருந்த தான் இப்பொழுது ஆழ்வாரின் காரணமற்ற அருளாலே திருந்தியுள்ளதைத் அறிவித்து ஆழ்வாருக்குத் தன் நன்றியைத் தெரிவிக்கிறார்.


நம்பினேன் பிறர் நன்பொருள் தன்னையும்
நம்பினேன் மடவாரையும், முன் எல்லாம்
செம்பொன் மாடத் திருக் குருகூர் நம்பிக்கு
அன்பனாய் அடியேன் சதிர்த்தேன், இன்றே

941

முற்காலத்தில் பிறருடைய சொத்தையும் பெண்களையும் விரும்பினேன். இன்றோ, தங்கத்தால் செய்யப்பட்ட மாட மாளிகைகள் நிறைந்த திருக்குருகூருக்குத் தலைவரான ஆழ்வாரால் திருத்தப்பட்டு அவரின் அடியவனாகி, மேன்மையை அடைந்தேன்.






ஆறாம் பாசுரம் -

 “எவ்வாறு இப்படிப்பட்ட பெருமைஅயைப் பெற்றீர்?” என்ற கேள்விக்கு, ஆழ்வாரின் அருளாலே இப்பெருமையைப் பெற்றேன், இனி இந்நிலையிலிருந்து நாம் வீழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்கிறார்.



இன்று தொட்டும் எழுமையும் எம்பிரான்
நின்று தன் புகழ் ஏத்த அருளினான்
குன்ற மாடத் திருக் குருகூர் நம்பி
என்றும் என்னை இகழ்வு இலன் காண்மினே

6 942

திருக்குருகூருக்குத் தலைவரான, என்னுடைய ஸ்வாமியும் நாதனுமான ஆழ்வார் இன்று முதல் நான் அவருடைய பெருமையைப் பாடும்படியான பூர்ண விச்வாஸத்தை எனக்கு அருளினார். இனி அவர் எம்மை ஒருநாளும் கைவிட மாட்டார்!  இதை நீரே பாரீர்!


ஏழாம் பாசுரம் -

 ஆழ்வாராலே அருளப்பட்ட தான், ஆழ்வாரின் பெருமையைத் தெரிந்து கொள்ளாமால் அதனால் ஆழ்வாரின் அருளை இழந்து துன்புற்றிருக்கும் அனைவருக்கும் ஆழ்வாரின் பெருமையை எடுத்துரைத்து அவர்களுக்கும் வாழ்ச்சியைப் பெற்றுத்தருவேன் என்கிறார்.


கண்டு கொண்டு என்னைக் காரிமாறப் பிரான்
பண்டை வல்வினை பாற்றி அருளினான்
எண் திசையும் அறிய இயம்புகேன்
ஒண் தமிழ்ச் சடகோபன் அருளையே


7 943


பொற்காரியின் திருக்குமாரரான காரிமாறன் என்னும் ஆழ்வார் என்னைக் கடாக்ஷித்துத் தன் கைங்கர்யத்தில் ஏற்றுக்கொண்டார். என்னுடைய அநாதி காலப் பாபங்களைப் போக்கினார். அற்புதத் தமிழ்ப் பாசுரங்களை அருளிச்செய்த ஆழ்வாரின் கருணையின் பெருமைகளை எட்டுத்திக்கிலும் உள்ளோர் உணரும்படிப் பாடுவேன்.



எட்டாம் பாசுரம் -

இதில் எம்பெருமானின் கருணையைவிட ஆழ்வாரின் கருணை உயர்ந்தது என்பதை விளக்குகிறார். எம்பெருமான் ஸ்ரீ கீதையை அருளிசெய்ததைவிட ஆழ்வார் திருவாய்மொழியை அருளிசெய்தது உயர்ந்தது என்கிறார்.


அருள் கொண்டாடும் அடியவர் இன்புற
அருளினான் அவ் வருமறையின் பொருள்
அருள் கொண்டு ஆயிரம் இன் தமிழ் பாடினான்
அருள் கண்டீர் இவ் உலகினில் மிக்கதே

944


பகவானைக் கொண்டாடும் அடியார்களின் ஆனந்தத்துக்காக, ஆழ்வார் தன் பெருங்கருணையால் வேத ஸாரத்தை திருவாய்மொழியில் ஆயிரம் பாசுரங்களாக அருளினார். ஆழ்வாரின் இந்தக் கருணை இவ்வுலகினில் மிகப் பெரியது.




ஒன்பதாம் பாசுரம் -

 இதில் ஆழ்வார் வேத ஸாரமான “பாகவத சேஷத்வம்” என்னும் அடியார்களுக்கு அடிமையாக இருக்கும் விஷயத்தை என் தாழ்ச்சி பாராமல் எனக்கு வெளியிட்டார். அவருக்கு நான் எப்பொழுதும் நன்றி உடையவனாக இருப்பேன் என்கிறார்.


மிக்க வேதியர் வேதத்தின் உட் பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்
தக்க சீர்ச் சடகோபன் என் நம்பிக்கு ஆட்
புக்க காதல் அடிமைப் பயன் அன்றே

9 945


வைதிக ச்ரேஷ்டர்களாலே அத்யயனம் செய்யப்படும் வேதத்தின் ஸாரத்தை என்னுடைய நெஞ்சிலே நிலைத்து நிற்கும்படி அருளினார் ஆழ்வார். இதனால் அவருக்குத் தொண்டு செய்யும் அந்த உத்தம நிலை எனக்கு உடனே கிடைத்தது.


பத்தாம் பாசுரம் -

 இதில் ஆழ்வார் எனக்கு மிக உயர்ந்த நன்மைகளைச் செய்துள்ளார் என்றும் அதற்குத் தகுதியாக என்னால் எந்த ப்ரதி உபகாரமும் செய்ய முடியாது என்றும் சொல்லி ஆழ்வார் திருவடிகளில் பேரன்பு கொள்கிறார்.

பயன் அன்று ஆகிலும் பாங்கு அலர் ஆகிலும்
செயல் நன்றாகத் திருத்திப் பணி கொள்வான்
குயில் நின்று ஆர் பொழில் சூழ் குருகூர் நம்பி
முயல்கின்றேன் உன்தன் மொய் கழற்கு அன்பையே

10   946

குயில்களின் ஓசை நிறைந்திருக்கும் சோலைகளாலே சூழப்பட்ட திருக்குருகூரில் வசிக்கும் ஆழ்வாரே! இவ்வுலகில் உள்ளவர்களாலே தேவரீருக்கு எந்த ப்ரயோஜனமும் இல்லை என்றபோதிலும், இவர்கள் திருந்தும் நிலையில் இல்லாவிட்டாலும், தேவரீர் உபதேசங்களாலும் நடத்தையாலும் இவர்களைத் திருத்திக் கைங்கர்யத்தில் ஈடுபடுத்துகிறீர். இப்படிப்பட்ட தேவரீர் திருவடிகளில் அன்பை வளர்த்துக்கொள்ள முயல்கின்றேன்.



பதினொன்றாம் பாசுரம் -

 இதில் இந்தப் ப்ரபந்தத்தைக் கற்பவர்கள் ஆழ்வாரின் ஆளுமைக்கு முழுமையாக உட்பட்ட ஸ்ரீவைகுந்தத்தில் வாழ்வார்கள் என்கிறார். ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதரும் தலைவர் ஆழ்வாரும் தலைவர். ஆனால் பரமபதத்திலோ ஆழ்வாரே தலைவர் என்பது உள் அர்த்தம்.


அன்பன் தன்னை அடைந்தவர்கட்கு எல்லாம்
அன்பன் தென் குருகூர் நகர் நம்பிக்கு
அன்பனாய் மதுரகவி சொன்ன சொல்
நம்புவார் பதி வைகுந்தம் காண்மினே   


11  947

எம்பெருமான் எல்லோரிடத்திலும் (முக்யமாகத் தன்னுடைய அடியார்களிடத்திலே) அன்புடையவன். நம்மாழ்வார் இப்படிப்பட்ட எம்பெருமானின் அடியார்களிடத்தில் அன்பு பூண்டவர். நான் (மதுரகவி ஆழ்வார்) இப்படிப்பட்ட ஆழ்வாரிடத்தில் அன்பு பூண்டவன். இப்படிப்பட்ட நான் பக்தியுடன் பாடிய இந்த ப்ரபந்தத்தை முழுவதுமாக விச்வஸிப்பவர்கள் திருநாடான ஸ்ரீவைகுந்தத்தை அடைந்து அங்கே வாழ்வார்கள்.





மணவாள மாமுனிகள்  - உபதேச ரத்தின மாலை


ஏரார் மதுரகவி இவ்வுலகில் வந்துதித்த,
சீராரும் சித்திரையில் சித்திரை நாள்-பாருலகில் 
மற்றுள்ள ஆழ்வார்கள் வந்துதித்த நாள்களிலும்,
உற்றது எமெக்கென்றுநெஞ்சே ஓர்  

25


வாய்த்த திருமந்திரத்தின் மத்திமமாம் பதம் போல்
சீர்த்த மதுரகவி செய் கலையை – ஆர்த்த புகழ்
ஆரியர்கள் தாங்கள் அருளிச்செயல் நடுவே 
சேர்வித்தார் தாற்பரியம் தேர்ந்து 

 26








முந்தைய பதிவுகள் .....

ஸ்ரீ  மதுரகவியாழ்வார்(2022 )

ஸ்ரீ  மதுரகவியாழ்வார் (2021)

 ஸ்ரீ  மதுரகவியாழ்வார்(2020) 

ஸ்ரீ  மதுரகவியாழ்வார்(2019)

ஸ்ரீ  மதுரகவியாழ்வார் வைபவம்  ...இங்கே 


 ஓம் நமோ நாராயணாய நம!!

மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!



அன்புடன்
அனுபிரேம் 💖💖

1 comment: