06 May 2020

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

  மதுரகவியாழ்வார்   திருநட்சத்திரம்

 (சித்திரையில் – சித்திரை)........











மதுரகவியாழ்வார்  வாழி திருநாமம்!

சித்திரையிற்  சித்திரைநாள் சிறக்க வந்தோன் வாழியே 

திருக்கோளூர் அவதரித்த செல்வனார் வாழியே 

உத்தர கங்கா தீரத்துயர் தவத்தோன் வாழியே 

ஓளிகதிரோன் தெற்கு உதிக்க உகந்து வந்தோன் வாழியே 

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே 

மத்திமமாம் பதப் பொருளை வாழ்வித்தான் வாழியே 

மதுரகவி திருவடிகள்  வாழி வாழி வாழியே




மதுரகவியாழ்வார்

பிறந்த ஊர் : பாண்டிய நாட்டில் திருக்கோளூர்

பிறந்த காலம் : கி.பி.8ம் நூற்றாண்டு

 சித்திரைத் திங்கள் -  சித்திரை நட்சத்திரத்தில்

 வளர்பிறை சதுர்த்தசி திதியில்

வெள்ளிக்கிழமை அன்று அவதரித்தார்.

சிறப்பு : கருடனின் அம்சம்

   சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு .   ‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே‘ என்று இருந்தவர் நம்மாழ்வார்.

ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார்.

மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.

நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். 

அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்குவதால் அதற்கு  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று

முந்தைய பதிவுகள் .....
ஸ்ரீ  மதுரகவியாழ்வார்

ஸ்ரீ  மதுரகவியாழ்வார் வைபவம் போன வருட பதிவு ...இங்கே 




நம்மாழ்வாரைத் தரிசித்து, அவரது அருளைப் பெற்று, அவர் பாடிய பக்திரசம் மிகுந்த தெய்வீகப் பாசுரங்களை மதுரகவியார் பட்டோலையில் எழுதி வரலானார்.

நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் ப்ரபந்தம் அவர் மனம் முழுதுமாக ஆழ்ந்தது.

 "குருகூர் நம்பி பாவின் இன்னிசை பாடித்திரிவனே" என்று நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழிப் பாசுரங்களைப் பாடிப்பாடிக் களித்தார்.

ஆசார்ய பக்தியே தெய்வ பக்தியாகும்;

ஆசார்யனுக்கு ஆற்றும் தொண்டே தெய்வத் தொண்டாகும் என்பதில் மிக்க ஊற்றம் உடையவராயிருந்தார்.

நம்மாழ்வாரைப் போற்றி பக்திப் பரவசத்துடன் 11 பாசுரங்கள் கொண்ட "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்னும் பிரபந்தத்தை  அருளிச்செய்தார்

நம்மாழ்வாரின் பிரிவை ஆற்ற மாட்டாமல் அவர் அவதரித்த திருக்குருகூரில் நம்மாழ்வாரின் திருவுருவத்தை அர்ச்சா  ரூபமாகச் செய்து,

அப்பெருமான் கோயிலினுள்ளே எழுந்தருளச் செய்து,

அதற்கான திருமண்டபத்தையும், மதிள்களையும், விமானத்தையும் தோற்றுவித்தார்.

நம்மாழ்வார் பாடிய பாசுரங்களையெல்லாம் உலகெங்கும் பரவுமாறு பக்தியுடன் பாடினார்.

நம்மாழ்வாரின் விக்கிரகத்திற்கு மாலைகள் சூட்டி வழிபாடுகள் செய்து, திருவிழாக்களையும் ஏற்படுத்திக் கொண்டாடினார்.

அப்பொழுது அழகிய பொன் விமானத்தில் அத்தெய்வ உருவை எழுந்தருளச் செய்து, வீதிகள் தோறும் வலம் வரச் செய்தார்.

விமானத்தின் முன்னே அடியார்களுடன் அவரும் சேர்ந்து,

"நம்மாழ்வார் வந்தார்,

 நற்குணச் சீலர் வந்தார்,

தமிழில் வேதம் பாடிய பெருமான் வந்தார்,

 திருக்குருகூர் நம்பி வந்தார்,

திருவாய்மொழி ஈந்த அருளாளர் வந்தார்,

திருவழுதி வளநாடர் வந்தார்,

வகுளாபரணர் வந்தார்,

காரி மாறர் வந்தார்,

 சடகோபர் வந்தார்,

நாட்கமழ் மகிழ்மாலை மார்பினர் வந்தார் ,

பராங்குசர் வந்தார், பவனிநாதர் வந்தார்" என்று விருதுகள் உரைத்து திருவுலா வருவார்.

இப்படி நம்மாழ்வாரின் புகழ் பரப்பி வந்துகொண்டிருந்தார் மதுரகவிகள்.






அதைக்கேட்ட அக்காலச் சங்கப் புலவர்கள் , " எங்களோடே வாது செய்து ஜெயித்து சங்கப்பலகை ஏறிலொழிய இவ்விருதுகளை முழங்கவிடமாட்டோம் " என்று தடுத்தார்கள் மதுரகவிகளும் ,

" இது நியாயமே , ஆனாலும் எங்களாழ்வார் உங்கள் சங்கப் பலகைக்கு எழுந்தருள முடியாதாகையால் ,

அவருடைய திருவாய்மொழியில் " கண்ணன் கழலிணை ' என்னும் துணுக்கை எழுதிய இந்த ஓலையை உங்கள் சங்கப் பலகையிலே வையுங்கள் ;

"கண்ணன் கழலிணை
நண்ணும் மனமுடையீர் 
எண்ணும் திருநாமம்,  
திண்ணம் நாரணமே"
 (திருவாய்மொழி, 10.5.1)

பலகை இதற்கு இடம் கொடுத்ததானால் அவரை ஏற்றுக் கொண்டதாகும் ' ' என்று அவ்வோலையைக் கொடுத்தார் .

அவ்வண்ணமே முந்நூறு தமிழ்ப் புலவர்கள் ஏறியிருந்த சங்கப்பலகையிலே இவ்வோலையை வைத்தார்கள் .

உடனே அப்பலகை அந்த முந்நூறு புலவர்களையும் தான் மிதக்கும் பொற்றாமரைப் பொய்கையிலே கவிழ்த்துத் தள்ளி
“கண்ணன் கழலிணை “ என்னும் ஆழ்வார் வாய் மொழி எழுதப்பெற்ற ஓலையை மாத்திரம் தரித்துக் கொண்டு மிதந்தது .

நீரில் விழுந்த புலவர்கள் அமிழ்ந்து தடுமாறி எழுந்து மெள்ள நீந்திக் கரைசேர்ந்து

 " எம்பெருமானால் மயர்வற மதிநலம் அருளப்பெற்று நம்மாழ்வார் பாடிய பாசுரங்களே  திருவாய்மொழி முதலான திவ்ய ப்ரபந்தங்கள் " என்று உணர்ந்து கர்வமழிந்து ,

அவரிடம் முன்பு அபசாரப் பட்டதற்கு அநுதாபம் கொண்டு , அதற்குக் கழுவாயாக ( ப்ராயஸ்சித்தமாக ) ஒவ்வொருவர் ஒவ்வொரு துதிப்பாடலைப் பாடினார்கள் .

அப்பாடல்களின் முதற்பதங்களை  சேர்த்தபோது ,

“ சேமங்குருகையோ செய்ய திருப்பாற்கடலோ 
நாமம் பராங்குசமோ நாரணமோ - தாமந் 
 துளவோ வகுளமோ தோளிரண்டோ நான்கு 
முளவோ பெருமானுனக்கு ' ' 

என்னும் பாடலாய் அவை அமைந்திருந்தன .

அதாவது, நம்மாழ்வாரின் இருப்பிடமானது அவர் பிறந்த திருக்குருகூரா அல்லது பெருமான் உறையும் திருப்பாற்கடலா?
இவர் திருநாமமானது பராங்குசரா அல்லது பெருமானின் திருநாமமான நாராயணனா?
 இவர் சூடுவது பெருமான் சூடும் துளசி மாலையா அல்லது வகுள மாலையா?
இவருக்குத் தோள்கள் இரண்டா அல்லது பெருமானைப் போல் நான்கா? என்று பொருள்பட பெருமானுடன் ஆழ்வாரைப் பொருந்தக் கூறி மகிழ்ந்தார்கள்.


இதன் மூலம் ஸ்ரீமந்நாராயணனே நம்மாழ்வாராக அவதரித்திருக்கிறார் என்று உணரப்பெற்ற அவர்கள் ஆழ்வாரிடம் மிகவும் ஈடுபட்டு 


ஈயாடுவதோ கருடற்கெதிரே யிரவிக்கெதிர் மின்மினியாடுவதோ 

நாயோடுவதோ வுறுமிப்புலிமுன் நரிகேசரிமுன் நடையாடுவதோ 


பேயாடுவதோ அழகூர்வசிமுன் பெருமான் வகுளாபரணன்னருள் கூர்ந் 


 தோவ துரையாயிர மாமறையின் னொருசொற்பொருமோ வுலகிற்கவியே .

  

என்று நம்மாழ்வார் என்னும் பெரியவருக்கு முன், மற்ற அனைத்தும் தாழ்ந்தவைகளே என்று ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பாடினார். 

அதாவது, கருடனுக்கு எதிரே ஈ ஆடுமோ?

 சூரியனுக்கு எதிரே மின்மினிப் பூச்சி பிரகாசிக்குமோ?

 புலியின் முன்பு நாய் ஆடுமோ?

 நரி ஆடுமோ சிங்கத்தின் முன்?

பேய் ஆடுமோ ஆழ்வாரின் அழகான தோற்றத்தின் முன்?

நம்மாழ்வார் என்னும் தெய்வம் அருளிய தெய்வப் பாசுரங்களுக்கு முன் வேறு எந்த சொல்லும் ஏற்றம் பெறுமோ? என்று பொருள்படும் வண்ணம் பாடினர் .







மதுரகவிகளிடமும் தங்கள் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு, உங்கள் ஆழ்வாரின் மேன்மையை நாங்கள் உணர்ந்துகொண்டோம்.  தங்களால் எங்கள் அகந்தையும் அழிந்தது.  இனி நீங்கள் ஆழ்வாருடைய புகழை வான் முட்டும் அளவு கூறுங்கள்.

இவ்வுலகம் முழுதும் அவருடைய அருட்புகழ் சென்று பரவட்டும்.  திக்கெட்டும் அவருக்குத் திருவிழா நடைபெறட்டும்.  நாங்களும் அவ்விழாவிலே கலந்து கொள்கிறோம்.  உடனே சென்று விழா நடத்துங்கள் என்று கூறினார்கள். 

அவர்கள் மனம் திருந்தியதைக் கண்டு மதுரகவிகளும் பெருமகிழ்ச்சி கொண்டு, அங்கிருந்து விடைபெற்றுச் சென்றார்.

நம்மாழ்வார் பாடிய பாசுரங்களின் பொருள்களையெல்லாம் மக்களுக்கு எடுத்துக்கூறி, நல்வழிப்படுத்தி நெடுங்காலம் மதுரகவி ஆழ்வார் வாழ்ந்து, இறுதியில் எம்பெருமானின் பரமபதத்தை அடைந்தார்.







கண்ணிநுண்சிறுத்தாம்பு 

கண்ணிநுண்சிறுத்தாம்பினால் கட்டுண்ணப் 
பண்ணியபெருமாயன் * என்னப்பனில் * 
நண்ணித்தென்குருகூர் நம்பியென்றக்கால் * 
அண்ணிக்கும்அமுதூறும் என்னாவுக்கே. (2)

1
937


நாவினால்நவிற்று இன்பமெய்தினேன் * 
மேவினேன் அவன்பொன்னடிமெய்ம்மையே * 
தேவுமற்றறியேன் குருகூர்நம்பி * 
பாவினின்னிசை பாடித்திரிவனே. 

2
938


திரிதந்தாகிலும் தேவபிரானுடை * 
கரியகோலத் திருவுருக்காண்பன்நான் * 
பெரியவண்குருகூர் நகர்நம்பிக்கு ஆள்  
உ ரியனாய் *அடியேன்பெற்ற நன்மையே.

3
939


நன்மையால்மிக்க நான்மறையாளர்கள் * 
புன்மையாகக் கருதுவராதலின் * 
அன்னையாய் அத்தனாய் என்னையாண்டிடும் 
தன்மையான் * சடகோபன்  என்நம்பியே.

4
940


நம்பினேன் பிறர்நன்பொருள்தன்னையும் * 
நம்பினேன் மடவாரையும்முன்னெல்லாம் * 
செம்பொன்மாடத் திருக்குருகூர்நம்பிக்கு  
அன்பனாய் * அடியேன் சதிர்த்தேன் இன்றே.

5
941






இன்றுதொட்டும் எழுமையும்எம்பிரான் * 
நின்றுதன்புகழ் ஏத்தஅருளினான் * 
குன்றமாடத் திருக்குருகூர்நம்பி * 
என்றும் என்னை இகழ்விலன்காண்மினே.

6
942


கண்டுகொண்டு என்னைக் காரிமாறப்பிரான் * 
பண்டைவல்வினை பாற்றியருளினான் * 
எண்திசையும் அறியஇயம்புகேன் * 
ஒண்தமிழ்ச் சடகோபனருளையே.

7
943


அருள்கொண்டாடும் அடியவர் இன்புற * 
அருளினான் அவ்வருமறையின்பொருள் * 
அருள்கொண்டு ஆயிரம் இன்தமிழ்பாடினான் * 
அருள்கண்டீர் இவ்வுலகினில்மிக்கதே.

8
944


மிக்கவேதியர் வேதத்தினுட்பொருள் 
நிற்கப்பாடி என்நெஞ்சுள்நிறுத்தினான் * 
தக்கசீர்ச் சடகோபன் என்நம்பிக்கு * ஆள் 
புக்ககாதல் அடிமைப்பயனன்றே.

9
945


பயனன்றாகிலும் பாங்கல்லராகிலும் 
செயல்நன்றாகத்திருத்திப் பணிகொள்வான் * 
குயில்நின்றார்பொழில்சூழ் குருகூர்நம்பி * 
முயல்கின்றேன் உன்தன்மொய்கழற்கன்பையே. (2) 

10
946


அன்பன்தன்னை அடைந்தவர்கட்கெல்லாம் 
அன்பன் * தென்குருகூர் நகர்நம்பிக்கு * 
அன்பனாய் மதுரகவிசொன்னசொல் 
நம்புவார்பதி * வைகுந்தம் காண்மினே. (2)

11

947




ஓம் நமோ நாராயணாய நம!!
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!




அன்புடன்
அனுபிரேம்...

5 comments:

  1. அருமையான பதிவு.

    சேமங்குருகையோ, ஈயாடுவதோ - இரண்டு பாடல்களையும், செய்திகளையும் இன்றுதான் அறிகிறேன்.

    ஆழ்வார் அவதாரத் தலங்களை சில மாதங்களுக்கு முன்பு, பாண்டியநாடு, மலைநாடு யாத்திரையில் சேவித்தது நினைவுக்கு வந்தது.

    பெருமாளைப் பாடாது, தன் குருவை மட்டுமே பதினோரு பாசுரங்களால் பாடியவரை "ஆழ்வார்களில் ஒருவர்" எனச் சிறப்பித்தும், அந்தப் பாடல்களை நாலாயிர திவ்யப் ப்ரபந்தத்தில் ஒன்றாகச் சேர்த்தும், குருபக்தியின் முக்கியத்துவத்தை வைணவம் சொல்லியது சிறப்பு.

    ReplyDelete
  2. மதுரகவி ஆழ்வாருக்கு இன்னொரு ஏற்றமும் உண்டு. அவர் இல்லையேல் நாலாயி திவ்யப்ப்ரபந்தம் நமக்கு இல்லை.

    ReplyDelete
  3. அருமையான பதிவு.
    மதுரகவி யாழ்வார் திருவடிகளே சரணம்.

    ReplyDelete
  4. இன்று குருவை வணங்குவது சிறப்பு.
    இந்த நாளுக்கு ஏற்ற பதிவு.

    ReplyDelete
  5. சிறப்பான பகிர்வு.

    வழமை போல படங்கள் வெகு அழகு.

    ReplyDelete