07 May 2020

கஜேந்திர மோக்ஷம்

சித்ரா பவுர்ணமி கஜேந்திர மோக்ஷம் ....திருவரங்கத்தில் கஜேந்திர மோக்ஷம் சித்திரை பௌர்ணமியன்று காவிரி நதிக்கரையில் அம்மா மண்டபத்தருகில் நடைபெறுகின்றது.விசிஷ்டாத்வைதத்தின் மையக் கருத்தே பூரண சரணாகதிதான் அந்தச் சரணாகதி தத்துவத்தை உணர்த்தும் நிகழ்ச்சிதான் கஜேந்திர மோக்ஷம்.

 பாகவதத்தில் கஜேந்திர மோக்ஷம் ..

பரிக்ஷித் மஹாராஜாவிற்குச் சுகபிரம்ம ரிஷி கூறிய பாகவத புராணத்தின் 8வது ஸ்கந்தத்தில் இந்த வரலாறு விரிவாகக் கூறப்பட்டுள்ளது.


கம்பீரமும் வீரமும் மிகுந்த யானைகளின் அரசனான கஜேந்திரன் தன் பிடிகளுடனும், குட்டிகளுடனும் காட்டில் மரங்களை உடைத்தும் மூங்கிலை உண்டும் உலாவி கொண்டிருந்தது. அதன் அந்த சப்தத்தை கேட்டதுமே சிங்கம், புலி முதலிய பலம் மிகுந்த மிருகங்கள் பயந்து ஓட மற்ற சிறிய மிருகங்களான மான் , முயல் முதலியவை பயமில்லாமல் அதனுடன் ஒட்டி வந்து கொண்டிருந்தன.

அப்போது எங்கிருந்தோ தாமரை மலரின் நறுமணம் அவனது துதிக்கையை எட்டியது .
உடனே தனது பரிவாரங்கள் சூழ அந்த பொய்கையை நோக்கி ஓடத்தொடங்கினான்.

வழியில் உள்ளவற்றையெல்லாம் துவம்சம் செய்து கொண்டு பொய்கையை அடைந்த கஜராஜன் தன் துதிக்கையால் தாமரைப் பூ. அல்லி ஆகியவற்றின் மகரந்தங்கள் நிறைந்த அந்த இனிய பொய்கை நீரை உறிஞ்சி உளம் குளிர பருகி, அந்த நீரை தன் பரிவாரங்களுக்கும் வழங்கினான்.

 ஒரு குடும்பத்தலைவனைப் போல பின் ஒரு தாமரை மலரை தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்பிக்க பறிக்க, பொய்கைக்குள் காலை வைத்த போது அந்த பொய்கையிலிருந்த முதலை கஜேந்திரனின் காலைக் கவ்விக் கொண்டு கஜேந்திரனை தண்ணீருக்குள் இழுக்க முயன்றது.

பின்னிருந்து மற்ற பெண் யானைகளும், குட்டிகளும் சேர்ந்து இழுத்தன் ஆனால் முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமல்லவா? இந்த இழுபறி நீடித்தது.

ஆயிரம் வருடங்கள் இந்த இழுபறி நீடித்தது.

தேவர்கள் எல்லாரும் கூடி நின்று இந்த போராட்டத்தை கண்ணுற்றனர்.

மெள்ள மெள்ள கஜேந்திரன் தன் சக்தி குறைந்து வருவதை உணர்ந்தான், மற்ற பிடிகள் எல்லாம் இனி பயனில்லை என உணர்ந்தான்,

மரணத்தின் வாயிலில் நின்ற அந்த வேளையில் அந்த பரம் பொருளைத் தவிர தனக்கு எந்த பற்றுக் கோடும் இல்லை என்று உணர்ந்தான்.

முன் ஜென்மத்தில் தான் அந்த ஆதி மூலத்தை துதித்த துதிகள் அவனுக்கு ஞாபகம் வந்தன. அவன் அவற்றை பாராயணம் செய்தான்.

அந்த ஸ்தோத்திரத்தின் சாரம் ......
பரம புருஷனே உனக்கு நமஸ்காரம்,
உன்னிடமிருந்து தான் சகலமும் தோன்றியது,
அனைத்துக்கும் ஆதாரம் நீயே,
அனைத்தும் உன்னுள்ளே அடக்கம்,
உன்னுடைய மாயையினாலே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன,
 சில ஒளிர்கின்றன,
சில அழிகின்றன.

பிரளய முடிவில் அனைத்து உயிர்களும் அழிய ஆலிலை மேல் துயில் கொள்ளும் மாயனும் நீயே.

உன்னை விட்டால் எனக்கு வேறு பற்றுக் கோடு யாருமில்லை, உன் சரணமே சரணம்.

ஆதி மூலமே! என்று தாமரைப் பூவை தனது தும்பிக்கையில் வைத்துக் கொண்டு அலறியது கஜேந்திரன்.

கஜேந்திரனின் அந்த அபயக்குரல் கேட்டவுடனே பெருமாள் வேத சொருபனான ஓடும் புள்ளேறி ( கருடனில்), கையில் சுதர்சன சக்கரத்துடன் விரைந்து வந்து சக்கராயுத்தால் முதலையை வதைத்து கஜேந்திரனைக் காப்பாற்றி அவனுக்கு மோக்ஷமும் அளித்தான் அந்த பக்த வத்சலன்.
 அத்தனை யானை கூட்டத்தில் கஜேந்திரனை மட்டும் முதலை இழுக்க காரணம் ....

முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திரதும்யனாக பிறந்து மஹா விஷ்ணு மீது மிகவும் அதீத பக்தி கொண்டு வாழ்ந்து கொண்துருந்தான்.

ஒரு சமயம் அவன் பூஜை செய்து கொண்டிருந்த போது துர்வாச முனிவர் அவனைக் காண வந்தார்.

பூஜையில் ஈடுபட்ட மன்னன் முனிவரை வெகு நேரம் காக்க வைத்து விட்டான்.

 அதனால் கோபமடைந்த துர்வாசர், என்னை மதிக்க்காமல் மதம் கொண்டு நடந்த நீ , மதம் கொண்ட யானையாக மாறக்கடவது என்று சாபம் கொடுத்தார்.

மன்னன் முனிவர் தாள் படிந்து வேண்டி, அடுத்த பிறவியிலும் தான் பெருமாள் கொண்ட பக்தி தொடரவேண்டும் என்று வேண்ட, முனிவரும் அவ்வாறே வரம் கொடுத்து அந்த மஹா விஷ்ணுவாலேயே உனக்கு மோக்ஷம் கிட்டும் என்று சாப விமோசனமும் அளித்தார்.

இனி முதலை....,
முற்பிறவியில் அவன் கூஹூ என்னும் கந்தர்வனாக இருந்தான்.
பொய்கைக்கு கால் கழுவ வருபவர்களின் காலை பற்றி இழுத்து விளையாடும் வழக்கத்தை கொண்டிருந்தான். ஒரு சமயம் தேலவர் முனிவரின் காலை இவ்வாறு இழுத்த போது முனிவர் அவனுக்கு தண்ணீரில் கிடந்து தவிக்கும் முதலையாக ஆகும் சாபம் அளித்தார்.

அவன் தன் தவறை உணர்ந்து சாப விமோசனம் வேண்ட மஹா விஷ்ணுவின் சுத்ர்சன சக்கரம் பட்டு உனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்று சாப விமோசனம் அளித்தார்.
கஜேந்திரன் ஏன் ஆயிரம் வருடங்கள் காத்திருந்தான் ஏன் முதலிலேயே சரணாகதி அடைந்திருக்கக் கூடாது. ...மனித மனம் இவ்வாறு தான் உள்ளது.

சம்சார மாயையில் மயங்கி நாம் ஏதோ நாம் தான் நமது உறவினர்களைத் தாங்குவது போல் மாயையில் உழல்கின்றோம். அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பதை உணர்ந்து எப்போது நாம் பூரண சரணாகதி அடைகின்றோமோ அப்போது தான் அவன் அருள் நமக்கு கிட்டும்.

பெருமாள் ஏன் ஆயிரம் வருடம் காத்திருந்து வந்தார்.....

அது வரை கஜேந்திரன் தனது வலிமையின் மேலும்,
தனது பிடிகள் தன்னை காப்பாற்றும் என்ற நம்பிக்கையிலும் இருந்ததால் தான்,

 பகவான் தனது பஞ்சாயுதங்களுடன் எப்போதும் தன் பக்தர்களைக் காப்பாற்ற தயாராக இருந்தாலும் அவன் உண்மையை உணரும் வரை காத்திருந்தார்.


எம்பெருமான் திருநாட்டிலிருந்து கருடாழ்வார் மேலேறி வந்தார். அவர்  அந்தக் கயத்தை அடைந்ததும் தன சக்ராயுதத்தை முதலையை அழிக்க ஏவினார்.

ஆனையின் புண்ணைத்தடவி ஒத்தடம் தந்து, ஆனை எடுத்திருந்த தாமரை மலர்களை ஏற்றுக்கொண்டார்.
முதலையிடமிருந்து ஓர் ஆனையைக் காப்பதற்காக மட்டும் எம்பெருமான் வந்து தோன்றவில்லை.

கஜேந்த்ராழ்வான் தானே சொல்கிறான் ..
“நாஹம் கலேவரஸ்யாஸ்ய த்ராணார்த்தம் மதுசூதன!
கரஸ்த கமலான்யேவ பாதயோர் அர்ப்பிதம் தவ”

 (மதுசுதன! என் சரீரத்தைக் காத்துக்கொள்ள நான் உன்னை அழைக்கவில்லை. என் துதிக்கையில் உள்ள  இந்தத் தாமரை மலர்களை உனக்கு ஸமர்ப்பிக்கவே அழைத்தேன்”).


கஜேந்த்ராழ்வானின் இந்த நோக்கத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டதாலேயே எம்பெருமான் தன் தாமத்திலேயே நில்லாமல் தானே அவனிருந்த இடத்துக்கு ஓடி வந்தார்.பெரியாழ்வார் திருமொழி

தாழைதண்ணாம்பல் தடம்பெரும்பொய்கைவாய் *
வாழுமுதலை வலைப்பட்டுவாதிப்புண் *
வேழம்துயர்கெட விண்ணோர்பெருமானாய் *
ஆழிபணிகொண்டானால்இன்றுமுற்றும் 
அதற்குஅருள்செய்தானால்இன்றுமுற்றும்.   

220


பெரியாழ்வார்  திருமொழி 


துப்புடையாரை அடைவதெல்லாம்* 
 சோர்விடத்துத் துணையாவர்ரென்றே*
ஒப்பிலேனாகிலும் நின்னடைந்தேன்*  
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்*
எய்ப்பு என்னைவந்து நலியும்போது*  
அங்கு ஏதும் நானுன்னை நினைக்கமாட்டேன்*
அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்*  
அரங்கத்தரவணைப் பள்ளியானே! (2)


423

திருமாலை

பெண்ணுலாம் சடையினானும் பிரமனும் உன்னைக் காண்பான் *
எண்ணிலாவூழியூழி தவஞ்செய்தார்வெள்கிநிற்ப *
விண்ணுளார்வியப்பவந்து ஆனைக்கு அன்று அருளையீந்த
கண்ணறா * உன்னையென்னோ? களைகணாக்கருதுமாறே. (2)

915பெரிய திருமொழி

மீனமர்பொய்கை நாள் மலர்கொய்வான் 
வேட்கையினோடுசென்றிழிந்த * 
கானமர்வேழம் கையெடுத்தலறக் 
கராஅதன்காலினைக்கதுவ * 
ஆனையின்துயரம்தீரப்புள்ளூர்ந்து 
சென்றுநின்றுஆழிதொட்டானை * 
தேனமர்சோலைமாடமாமயிலைத் 
திருவல்லிக்கேணிக்கண்டேனே. (2) 1076
திருவாய்மொழிமழுங்காதவைந்நுதிய சக்கரநல்வலத்தையாய்,

தொழுங்காதல் களிறளிப்பான் புள்ளூர்ந்துதோன்றினையே,

மழுங்காதஞானமே படையாக, மலருலகில்

தொழும்பாயார்க்கு அளித்தால் உன் சுடர்ச்சோதி மறையாதே?

2905
போன வருட திருவரங்க காட்சிகள் இவை ...கஜேந்திர மோக்ஷம் - காவேரிக்  கரையில்  போன வருட பதிவு ...

ஓம் நமோ நாராயணாய !!!


அன்புடன்
அனுபிரேம் 

5 comments:

 1. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க (கோர்த்திருக்கீங்க). படங்களும் இடுகைக்கு நல்ல வலு சேர்க்கிறது.

  இடுகையைப் படிக்கும்போதே 'ஆனைக்கு அன்று அருளை ஈந்த கண்ணறா' மனதில் வந்துபோனது.

  பல படங்கள் எழிலுடன் இருக்கின்றன. இந்த வருடம் கஜேந்திர மோக்‌ஷத்துக்கு பெருமாள் காவிரிக் கரைக்கு வரப்போவதில்லை என்பதை கீதா சாம்பசிவம் அவர்களின் பின்னூட்டத்திலிருந்து தெரிந்துகொண்டேன். விரைவில் நிலைமை சரியாகணும் (மக்களும் இதுதான் சாக்கு என்று ஒரேடியாக கும்பலாக கூடக்கூடாது)

  ReplyDelete
 2. இறைவனை அனைவரும் சேர்ந்து துதித்து சரணாகதி அடைய வேண்டிய காலம்.காலத்து ஏற்ற பதிவு.

  வரமும் சாபவிமோசனமும் அருளும் இறைவன் விரைவில் வர வேண்டும். மக்களின் துன்பத்தை போக்கி இன்பத்தை தந்து எப்போதும் இறைவனை மறவா வரமும் தர வேண்டும்.

  ReplyDelete
 3. படங்கள் எல்லாம் அருமையான தேர்வு.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. கஜேந்திர மோக்ஷம் - மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறீர்கள்.

  சேர்த்திருக்கும் படங்களும் ரொம்பவே அழகு.

  ReplyDelete