29 April 2018

ஸ்ரீ மதுரகவியாழ்வார்

இன்று  (29.4.2018)  மதுரகவியாழ்வார்    அவதார தினம் .....

 (சித்திரையில் – சித்திரை)........

மதுரகவி ஆழ்வார்  வாழி திருநாமம்!


சித்திரையிற் சித்திரைநாள் சிறக்கவந்தோன் வாழியே

திருக்கோளூரவதரித்த செல்வனார் வாழியே

உத்தரகங்காதீரத் துயர்தவத்தோன் வாழியே

ஒளிகதிரோன் தெற்குதிக்கவுகந்துவந்தோன் வாழியே

பத்தியொடு பதினொன்றும் பாடினான் வாழியே

பராங்குசனே பரனென்று பற்றினான் வாழியே

மத்திமமாம் பதப்பொருளை வாழ்வித்தான் வாழியே


மதுரகவி திருவடிகள் வாழிவாழி வாழியே !
மதுரகவியாழ்வார்

பிறந்த ஊர் : பாண்டிய நாட்டில் திருக்கோளூர்

பிறந்த காலம் : கி.பி.8ம் நூற்றாண்டு

 சித்திரைத் திங்கள் -  சித்திரை நட்சத்திரத்தில்

 வளர்பிறை சதுர்த்தசி திதியில்

வெள்ளிக்கிழமை அன்று அவதரித்தார்.

சிறப்பு : கருடனின் அம்சம்


இவர்தம் சிறுவயதிலேயே சிறந்த பாடல்கள் இயற்றவும், கேட்போரின் செவியும் மனமும் குளிரும் வண்ணம் இனிய பாடல்களைத் தன் மதுரமான குரலில் பாடவும் வல்லவர்.


   நிலையற்ற இப்பூலோக வாழ்வின் மீது பற்றின்றி, எம்பெருமானின் திருப்பாதத்தைத் தேடிப் புனித யாத்திரை மேற்கொண்டு, அனைத்து திருத்தலங்களுக்கும் சென்றார்.


     கயா, காசி, காஞ்சி, அவந்தி, துவாரகை சென்று ஸ்ரீமன், நாராயணனைத் தரிசித்து, இறுதியாக அயோத்யாவை அடைந்தார்.

அங்கு அவர் தம் திருப்பயணத்தை முடித்துவிட்டு, தாம் பிறந்த ஊருக்கு வர புறப்பட்டார்.


அயோத்தியில் தங்கியிருந்தபோது தெற்கே ஒரு பேரொளியைக் காணுற்று வியப்படைந்தார்.

மறுநாளிரவிலும் அதே ஒளி அவ்வாறே தோன்றிற்று.

மதுரகவிகள் ‘தெற்கே ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது; அதைச் சென்று காணவேண்டும்’ என்று தீர்மானித்து தெற்கு நோக்கிப் புறப்பட்டார்.

 அவ்வொளி தோன்றிய இடமாகிய திருக்குருகூரை அடைந்தார்.

           ஆழ்வார் திருநகரி வந்தவுடன் அந்த ஜோதியைக் காணாத ஆழ்வார், அந்த ஊர் மக்களிடம் இந்த ஊரின் சிறப்பு என்ன எனக் கேட்டார். ஊர் மக்களும், அந்த ஊர் புளிய மரத்தின் கீழ் பத்மாசனத்தில் சின் முத்திரையோடு அமர்ந்திருக்கும் நம்மாழ்வாரைப் பற்றி கூறினார்கள்.


புளியமரத்தின் கீழ் எழுந்தருளியிருந்த அவ்வொளியாகிய நம்மாழ்வாரை சமாதியிலிருக்கக் கண்டார்.
முதலில் ஒரு பெரிய கல்லை கீழே போட்டு அந்த சத்தத்தினால் அவர் சமாதியைக் கலைத்தார்.

மேலும் அவர் நிலையை அறிய விரும்பி, உடம்பில் ஆத்மா வந்து புகுந்து எதனை அனுபவித்து எங்கே இருக்கும் ?என்று நினைத்து,

 “செத்ததன் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?“ என்று வினவினார்.

     “அத்தைத் தின்று அங்கே கிடக்கும்” என்று விடை வந்தது.

பிறந்தது முதல் பெற்றவர்களிடம்கூட பேசாத நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வாரிடம் அத்தைத் தின்று அங்கேயே கிடக்கும் (அந்த உடலின் தொடர்பால் ஏற்படும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி அங்கேயே இருக்கும்) என்று பதில் உரைத்தார்.

      இந்த வினா-விடை இரண்டிலும் தத்துவம் புதைந்துள்ளது.

‘சூட்சுமமாயிருக்கும் ஜீவன் பிறப்பெடுத்தால் அதன் வாழ்வு எப்படி இருக்கும்?’ என்பது கேள்வி. ‘தன் புண்யபாவங்களின் பயன்களை நுகர்வதே அதன் வாழ்க்கையாக இருக்கும்’ என்பதே விடை.

    மதுரகவிகள் அக்கணமே அவரை தன் ஆசாரியராக வரித்தார்.

நம்மாழ்வாரும் இவரை அடிமை கொண்டு, மூவகைத் தத்துவங்களின் இயல்பையும் மற்றும் அறியவேண்டிய யோக இரகசிய உண்மைகளையும் சீடனுக்கு உபதேசித்தார்.
   சிறந்த குரு பக்திக்கு, மதுரகவியாழ்வாரே சிறந்த எடுத்துக்காட்டு .

‘உண்ணும் சோறும், பருகும் நீரும், திண்ணும் வெற்றிலையும் எல்லாம் கண்ணனே‘ என்று இருந்தவர் நம்மாழ்வார்.

ஆனால் மதுரகவியாழ்வாருக்கு எல்லாமும் நம் நம்மாழ்வாரே ஆவார்.

மதுரகவியாழ்வார், கடவுள் மேல் கொண்ட பக்தியைக் காட்டிலும், தன் குரு மேல் கொண்ட பக்தியே அதிகம்.
நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். 

அப்பாமாலையின் முதற்பா, “கண்ணிநுண் சிறுத்தாம்பு“ என்று தொடங்குவதால் அதற்கு  “கண்ணிநுண் சிறுத்தாம்பு” என்பது பெயராயிற்று.

கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்
நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்
அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே….1நம்மாழ்வாரை நாம் அழைக்கும், ‘வேதம் தமிழ் செய்த மாறன்‘ என்னும் பெயர் மதுரகவியாழ்வார் அளித்ததே!

அதோடு ‘அளவில்லா ஞானத்து ஆசிரியர்‘ என்றும் தம் குருவை மதுரகவியாழ்வார் அழைத்தார்.

    தம் குருவுக்காக அவர் ஒரு விக்ரகம் செய்து, அவருக்கு அனுதினமும் அபிஷேகம், ஆராதணை செய்து வணங்க வேண்டுமென்று எண்ணி, தாமிரபரணி ஆற்று நீரைக் காய்ச்சி ஒரு விக்ரகமும் செய்தார்.

    நம்மாழ்வார், மதுரகவியாழ்வாரிடத்தில் கனவில் தோன்றி, ‘இவ்விக்ரகம் தன்னுடையது அல்லவென்றும், இது பின்னாளில் வரப்போகும் ஸ்வாமி ராமானுஜரின் (பவிஷ்யத் ஆச்சார்யார்) விக்ரகம் என்று கூறினார். அதன் பிறகு, நம்மாழ்வாருக்குத் தனியாகப் புது விக்ரகம் செய்தார்.

    நம்மாழ்வார் காலத்துக்குப் பின் அவரது விக்ரகத்தை ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளச் செய்தார்.இவை இரண்டும் இன்னும் இருக்கின்றன.

அதனால் மதுரகவியாழ்வார், ஆழ்வார்க்கடியன் என்று அழைக்கப்படுகிறார்.
மதுரகவியாழ்வார் ஆச்சார்ய பக்தியின் பெருமையை எடுத்துச்சொல்ல அவதரித்தவர். 

அதாவது, ஆச்சார்ய பக்தியும், பெருமானிடத்தில் உள்ள பக்தியும் படிக்கட்டுகளாக் கருதினால், பெருமான் மீது கொண்ட பக்தி என்பது முதல் படியாகும், ஆச்சார்ய பக்தி இரண்டாவதுப் படியாகும். 

ஒருவேளை பெருமானிடத்தில் உள்ள பக்தி குறைந்து அப்படிக்கட்டில்  இருந்து தவறினால், சம்சாரம் என்னும் கடலில் விழுந்து விடுவோம். 

ஆச்சார்ய பக்தி என்னும் படியில் இருந்து தவறினால், அடுத்தப்படியான பெருமானின் மீது கொண்ட பக்தி காப்பாற்றி விடும்.


கண்ணிநுண் சிறுதாம்பு
(937)
கண்ணி நுண்சிறுத் தாம்பினால் கட்டுண்ணப்

பண்ணி யபெரு மாயன்என் னப்பனில்

நண்ணித் தென்குரு கூர்நம்பி யென்றக்கால்

அண்ணிக் கும்அமு தூறுமென் நாவுக்கே.
(938)
நாவி னால்நவிற் றின்ப மெய்தினேன்

மேவி னேனவன் பொன்னடி மெய்ம்மையே

தேவு மற்றறி யேன்குரு கூர்நம்பி

பாவி னின்னிசை பாடித் திரிவனே.
(939)
திரிதந் தாகிலும் தேவ பிரானுடை

கரிய கோலத் திருவுருக் காண்பன்நான்

பெரிய வண்குரு கூர்நகர் நம்பிக்காள்

உரிய னாய்அடி யேன்பெற்ற நன்மையே.ஓம் நமோ நாராயணாய நம!!
மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்!!

அன்புடன்
அனுபிரேம்...

5 comments:

 1. நல்ல தகவல்கள். மதுர கவியாழ்வார் பற்றிய தகவல்கள் சிறப்பு.

  ReplyDelete
 2. மதுரகவி ஆழ்வார்: ஒரு சிறப்பான அறிமுகம். சிறப்பான பதிவு.

  ReplyDelete
 3. சிறப்பான தகவல்கள் படங்கள் மதுரகவியாழ்வார் பற்றி....சகோ/அனு

  ReplyDelete
 4. வணக்கம்,

  www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது இந்த தமிழ்US திரட்டி.

  இத் திரட்டியின் மூலம் உங்கள் செய்திகள், பதிவுகள், கவிதைகள் உடனுக்குடன் பலரைச் சென்றடையும் வகையில் பகிர்ந்து கொள்ளமுடியும். இதனால் உங்கள் தளங்களிற்கான வருகையாளார்களின் எண்ணிக்கையையும் அதிகரிகத்துக் கொள்ளலாம்.

  அதேவேளை இத் திரட்டியில் உங்களின் பதிவைப் பகிர்ந்து இத்திரட்டிக்கான ஒத்துழைப்பை நல்குவதுடன், எமது பதிவுகள் மற்றவர்களைச் சென்றடைய facebook, twitter போன்ற சமூக வலைத் தளங்களை மட்டுமே நம்பியிருக்கிற நிலைமையையும் மாற்றமுடியும் என நம்புகிறோம்.

  நன்றி..
  Tamil US
  www.tamilus.com

  ReplyDelete