ஶ்ரீரெங்கநாச்சியார் தாயார் சந்நிதியில் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்)...
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் பெருமாள், தாயாரைக் குளிர்விக்க `பூச்சாற்றி விழா’ நடைபெறுகிறது. சித்திரை மாதத்தில் ஸ்ரீரங்கநாதருக்கும் அதன்பிறகு ஸ்ரீ ரங்கநாயகித் தாயாருக்கும் இந்த உற்சவம் தலா பத்து நாள்கள் நடைபெறும்.
அதன்படி ரங்கநாதருக்குக் கோடை விழா முடிவடைந்து, நாச்சியாருக்கு விழா தொடங்கியது. முதல் 5 நாட்கள் `வெளிக் கோடை விழா’வும், பின் 5 நாட்கள் `உள் கோடை விழா’ எனும் பூச்சாற்றி விழா நடைபெறும். இந்த ஆண்டு மே மாதம் 10 தேதி தொடங்கி இன்று வரை இவ்விழா நடைபெறுகிறது. இதில் போன வெள்ளிக்கிழமை நேரில் கண்டு மகிழும் பேறு கிடைத்தது. அதிலும் அன்று வெள்ளிக்கிழமை நல்ல கூட்டம் இருந்தாலும் தாயாரை கண் குளிர அருகில் நின்று காணும் பாக்கியம் கிட்டியது.
ஶ்ரீரங்கநாயகி தாயார் பூச்சாற்று புறப்பாடு
ஶ்ரீரெங்கநாச்சியார் --- தாயார் சந்நிதியில் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்),
முதல் திருநாள்
நாச்சியாரின் அழகுக்கு அழகு சேர்க்கவும், கோடையின் கடுமை பாதிக்காமல் இருக்கவும், இந்த நாளில் வண்ண வண்ண மலர்களால் தாயாரை அலங்கரித்துப் பக்தர்கள் ஆனந்தம் கொள்வார்கள். ஸ்ரீ ரங்கநாதரின் ஏழு நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவி, துலுக்க நாச்சியார், சேரகுலவல்லி நாச்சியார், கமலவல்லி நாச்சியார், கோதை நாச்சியார், ஸ்ரீ ரங்கநாச்சியார் ஆகியோரில் ஸ்ரீ ரங்கநாச்சியாரே முதன்மையானவர்.
இவருக்குச் செய்யப்படும் எல்லா பூஜைகளும் மற்ற தேவியரைச் சென்றடையும் என்பது ஐதீகம்.
இந்தப் பூச்சாற்றி விழாவில் மாலை 6 மணிக்கு ஸ்ரீ ரங்கநாச்சியார் கருவறையிலிருந்து புறப்பட்டு மாலை 6:30 மணிக்கு வெளிக்கோடை மண்டபத்தை அடைவார். அங்கு இரவு 7:30 மணிவரை மலர் அலங்காரத்தில் சேவை சாதித்த பின்னர், இரவு 7:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு உள்கோடை ஆஸ்தான மண்டபத்துக்கு வருவார். அங்கு சுமார் ஒரு மணி நேரம் பக்தர்களுக்குச் சேவை சாதிப்பார். பின்னர் 8:45 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு, வீணையின் மங்கள நாதத்தைக் கேட்டபடியே சுமார் 9:45 மணிக்குக் கருவறையை அடைவார். உள்கோடை விழாவின் போது தினமும் மாலை 4:30 முதல் 6 மணி வரை தாயார் கருவறையில் மூலவர் தரிசனம் கிடையாது.
கோடைக்கான உற்சவம் என்பதால், இது தினமும் ஆறு மணிக்கு மேல் கொண்டாடப்படுகிறது. எந்தப் பேதமும் இல்லாமல் எல்லா பக்தர்களிடமிருந்தும் பெறப்படும் மலர்கள் நாச்சியாருக்குச் சாத்தப்படும்.
கோயில் அர்ச்சகர்கள் மாலை ஐந்து மணியிலிருந்து பக்தர்களிடம் மலர்களை பெறத் தொடங்குவார்கள்.
மேலும், திருக்கோயில் அரையர்கள் கொண்டுவரும் மலர்ப் போர்வையும் நாச்சியாருக்குச் சாத்தப்படும்.
இந்த மலர்க்குவியலில் அதிகமாக மல்லிகை மலர்களே காணப்படும். கடுமையான வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டவை மல்லிகை மலர்கள். அதுமட்டுமன்றி உஷ்ணத்தால் உண்டாகும் பல நோய்களைத் தீர்க்கும் ஆற்றலும் இதற்கு உண்டு என மருத்துவ நூல்கள் தெரிவிக்கின்றன.
மலர்களால் குளிர குளிரக் காட்சிதரும் நாச்சியாரை இந்த நாள்களில் தரிசித்தால் எண்ணியவை யாவும் கிடைக்கும் என்கிறார்கள். நாச்சியார் சூடிய மலர்கள் அன்றிரவே பக்தர்களுக்கு விநியோகிக்கப்படும். நாச்சியார் சூடிய மலர்கள் வெம்மை நோய்கள், கண் நோய்களைத் தீர்ப்பதாக பக்தர்கள் நம்பி பெற்றுச் செல்கிறார்கள்.
ஶ்ரீரெங்கநாச்சியார் --- தாயார் சந்நிதியில் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்),
இரண்டாம் திருநாள்
ஶ்ரீரெங்கநாச்சியார் ---- தாயார் சந்நிதியில் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்),
மூன்றாம் திருநாள்
ஶ்ரீரெங்கநாச்சியார் --- தாயார் சந்நிதியில் கோடை திருநாள் ( பூச்சாற்று உற்சவம்),
நான்காம் திருநாள்
எல்லா பக்தர்களிடமிருந்தும் பெறப்படும் மலர்கள் நாச்சியாருக்குச் சாத்தப்படும். பின் திருக்கோயில் அரையர்கள் கொண்டுவரும் மலர்ப் போர்வையும் நாச்சியாருக்குச் சாத்தப்படும்.
இந்த மலர் போர்வையில் மலர்களாலே தினம் ஒரு அழகிய வடிவம் போடபட்டிருக்கும்.
No comments:
Post a Comment