31 May 2023

*வைகாசி 17ம் நாள் !*

 *வைகாசி 17ம் நாள் *


*ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் (நம்பெருமாள்) ஸ்ரீரங்கம் திரும்பிய நாள் இன்று!* வைகாசி17  (31.5.23) 


652 ஆண்டுகளுக்கு முன்னர், பரீதாபி ஆண்டு(1371) இதே  வைகாசி 17ஆம் நாள்,  ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் 48 ஆண்டுகள் அந்நிய வாசம் முடிந்து, ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளினார்!







1323 ஆம் ஆண்டு, பங்குனி மாதம், ஊலுக்கான் என்னும் முஸ்லீம் மன்னன் (முகமது பின் துக்ளக்) படைகள் ஸ்ரீரங்கத்தை முற்றுகையிட்டன. 

ஸ்ரீரங்கநாதப் பெருமாள் உற்சவர், அழகிய மணவாளர் பங்குனி உற்சவம், எட்டாம் நாள் புறப்பாடு கண்டருளி, வடதிருக்காவேரியில் உள்ள பன்றியாழ்வான் சந்நிதிக்கு எழுந்தருளியிருந்தார்.


அப்போது முஸ்லீம் படைகள் சமயபுரம் அருகே நெருங்கிவிட்டனர் என்று செய்தி வந்தது.

 உடனே அங்கு எழுந்தருளியிருந்த ஸ்ரீபிள்ளைலோகாசார்யரும் மற்ற ஆசார்ய புருஷர்களும், பெருமாளுக்கு திரையிடச்செய்து, பெருமாளையும் உபய நாச்சிமார்களையும் பல்லக்கில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தெற்கு நோக்கிப் புறப்பட்டு விட்டனர். 


அதே சமயம், கோயிலுக்குள் பெரிய பெருமாள் கர்பக்கிரஹத்தை கற்கள் வைத்து சுவர் எழுப்பி மூடிவிட்டனர். ஸ்ரீரங்கநாயகி தாயார் விக்ரஹத்தை, தாயார் சந்நிதி வில்வ மரத்தடியில் பூமிக்குள் மறைத்து வைத்துவிட்டுச் சென்றனர்.


அங்கே பன்றியாழ்வான் சந்நிதி மண்டபத்தில் பெரும் திரளாகக் கூடியிருந்த 12000 பக்தர்களுக்கு இவை எதுவும் தெரியாது. பெருமாளுக்கு சாத்துப்படி அலங்காரத்திற்க்காக திரையிடப்பட்டுள்ளது என நினைத்து காத்திருந்தனர். 


சிறிது நேரத்தில் முஸ்லீம் படைகள் ஸ்ரீரங்கத்தை நோக்கி அந்த வழியாக வந்தன. 

கூடியிருந்த பக்தர்கள் அவர்களை உள்ளே விடாமல் துணிந்து எதிர்த்து நின்றனர். முஸ்லீம் படைகள் ஈவு, இரக்கமின்றி அவர்கள் அனைவரையும் கொடூரமாக வெட்டிக் கொன்றனர். 


அரங்கனைக் காக்க, அடியார்கள் தம் இன்னுயிர் நீத்த இந்த நிகழ்வு, "பன்றியாழ்வான் சந்நிதியில் பன்னீராயிரம் வைஷ்ணவர்கள் முடிதிருத்திய கலகம்" என்று அறியப்படுகிறது!

தெற்கு நோக்கிச் சென்ற பிள்ளைலோகாசார்யர் கோஷ்டி, மதுரைக்கு அருகே உள்ள ஜோதிஷ்குடி என்னும் இடத்துக்குச் சென்றனர். 

அழகிய மணவாளனையும்,

உபய நாச்சிமார்களையும், அங்குள்ள ஆனைமலையின் பின்புறம் உள்ள குகையில் எழுந்தருளப்பண்ணி சில ஆண்டுகள் அங்கேயே இருந்தனர்.

 பிள்ளைலோகாசார்யர், அங்கு நித்ய திருவாராதனைகளை நடத்தி வந்தார்.  சிறிது காலத்தில் அங்கேயே அவர் பரமபதம் அடைந்தார்.


அவரது சீடர்கள் அழகிய மணவாளனை எடுத்துக் கொண்டு, மேலும் தெற்கே சென்று, மலையாள தேசம் வழியாக, கர்நாடகா (மேல்கோட்டை) சென்று,அங்கிருந்து, சந்திரகிரி (திருப்பதி) திருமலை சென்றனர்.


 சுமார் பத்து இடங்களில் ஓரிடத்திலிருந்து, மற்றொரு இடமோ/தேசமோ எழுந்தருளி இருந்தார்.(காரணம் ஆங்காங்கே நடைபெற்ற ஆட்சி மாற்றமே)

பிள்ளைலோகாசார்யரின் சிஷ்யர்கள் மிகுந்த சிரமப்பட்டு அழகிய மணவாளப்பெருமாளை ஏளப்பள்ளிக் கொண்டு பல இடங்களுக்கும் செல்லும் போது, பலர் உயிரழந்தனர் (மூப்பு/நோய் காரணமாக).

திருத்தாழ்வரை தாசர் வம்சத்தார் மூன்று பேர் மட்டுமே உயிரோடு இருந்தனர். 

குருகூர்தாசர், அவரது மைத்துனர் வில்லிபுத்தூர் தாசர் மற்றும் குருகூர்தாசரின் மகன் ஸ்ரீராமதாசர் என்னும் மூவர் மட்டுமே. 


இவர்களில் குருகூர்தாசர் பெருமாளுக்காகத் தன் உயிரையும் பொருட்படுத்தாது, துருக்கியரிடம் இருந்து, பெருமாளைக் காக்கவேண்டி மலைமுகட்டில் இருந்து இறங்கும் போது, கீழே சரிந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார். இதனைக்  கண்ட வில்லிபுத்தூர் தாசர், மூத்தவர்  இறந்ததும் தானும் இறந்தார். 


ஸ்ரீராமதாசர் என்னும் மூன்றாம் கொடவர் மட்டும் பதினெட்டு வருடங்கள், தனியே சந்திரகிரி காட்டில் பேசுவதற்கு துணை இல்லாமல், சித்த ப்ரம்மை பிடித்து அரங்கனோடு மட்டும் பேசிக் கொண்டு,காட்டில் கிடைத்த கனி/கிழங்குகளை அரங்கனுக்கு நைவேத்யம் செய்து, தானும் உயிர் வாழ்ந்து, அரங்கனுக்கு எந்தவிதத்திலும் குறை ஏற்படாதவாறு கைங்கர்யம் செய்தார்!


  இறுதியில் அவர் சந்திரகிரி காட்டில் இருக்கிறார் என்பதைத் தெரிந்து கொண்டு அங்கே சென்று, விஜயநகரப் பேரரசரான கம்பன்னர் அழகிய மணவாளனை திருமலை கொண்டு சேர்த்தார். 


1323 மார்ச் -  ஸ்ரீரங்கம்

1323-1325 ஏப்ரல்-ஜூலை -  ஜ்யோதிஷ்குடி

1325-26 - கோழிக்கோடு

1326-27 - திரிகடம்பபுரா (திருக்கணாம்பி)

1327-28 - புங்கனூர் வழியாக மேல்கோட்டை

1328-43 - மேல்கோட்டை (15 ஆண்டுகள்)

1344-70 - சந்திரகிரி காடுகள்/திருமலை (26 ஆண்டுகள்)

1371 - செஞ்சி, அழகியமணவாளம் கிராமம்,    ஸ்ரீரங்கம்.

(நன்றி:ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ணமாசார்யர்)






திருமலையில் த்வஜஸ்தம்பத்துக்கு முன் வலதுபுறம் உள்ள ரங்கமண்டபத்தில் தான் நம்பெருமாள் பல ஆண்டுகள் இருந்தார்.


செஞ்சியை ஆண்ட கோபண்ண உடையார் திருமலையிலிருந்து, அழகிய மணவாளப் பெருமாளை ஸ்ரீரங்கத்துக்கு எழுந்தருளப் பண்ணினார்.

  48 வருடங்கள் கழித்து, 1371-பரிதாபி ஆண்டு, வைகாசி மாதம் 17 ஆம் தேதி நம்பெருமாள் மீண்டும் திருவரங்கம் திரும்பினார். 

அப்போது 48 வருடங்களுக்கு முன்னர் கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர்கள்/பணியாளர் கள் யாரும் உயிருடன் இல்லை.


ஸ்ரீரங்கத்தில் இருந்த பெரும்பாலான ஸ்ரீவைஷ்ணவர்களும் இல்லை. இடைக்காலத்தில், வேறோரு உற்சவரைப் பிரதிஷ்டை செய்து, அவரையே அழகிய மணவாளப் பெருமாளாக ஆராதித்துக் கொண்டிருந்தனர். 


எனவே 48 ஆண்டுகள் கழித்துத் திரும்பிய பெருமாளை, ஆதிபெருமாள் என்று யாரும் நம்பத் தயாராக இல்லை. திருத்தாழ்வரை தாசரான ராமதாசர் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்தபோது பார்த்தவர்கள் யாரும் அச்சமயத்தில் இல்லை. எனவே பெருமாளை கோவிலுக்குள் உடனே அனுமதிக்கவில்லை! 


அது மட்டுமல்லாமல், திருத்தாழ்வரை ஸ்ரீராமதாசரை, குழப்பம் விளைவிக்க வந்தவர் என்று கேவலப்படுத்தினர். ஆர்யபடாள் வாசலுக்கு வெளியே, குலசேகரன் திருச்சுற்றில்உள்ள திருமங்கை ஆழ்வார் மண்டபத்தில் எழுந்தருளச் செய்தார்கள்.


பெருமாளுக்கு வஸ்திரம் துவைத்துத் தரும் ஈரங்கொல்லி (வண்ணார்) குடும்பத்தைச் சேர்ந்த, கண் பார்வை இழந்த 93 வயது பெரியவர் ஒருவர் கோயிலுக்கு வந்து பெருமாளின் ஈரவாடைத் தீர்த்தம் மூலம் தாம், வந்துள்ள பெருமாள், ஆதி அழகியமணவாளரா, இல்லையா என்று சொல்ல முடியும் என்றார். 


மண்டபத்தில் எழுந்தருளியிருந்த பெருமாளுக்குத் திருமஞ்சனம் செய்து, அர்ச்சகர் ஈரவாடைத் தீர்த்தத்தை அவருக்கு வழங்க  அதை  ஸ்வீகரித்து, தீர்த்தத்தின் வாசனையை உணர்ந்து,


*இவரே நம் பெருமாள்!*

*நம் பெருமாள்!!*

*நம்பெருமாள்!!!*

என்று உற்சாகத்தில் துள்ளிக் குதித்துக் கொண்டாடினார். 


*அந்த ஈரங்கொல்லி கொண்டாடிய 'நம்பெருமாள்'*

*என்னும் பெயரே அழகிய மணவாளருக்கு இன்று வரை நிலைத்து விட்டது!*

இடைக்காலத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட உற்சவப் பெருமாள்  *திருவரங்க மாளிகையார்* என்னும் திருநாமத்தோடு, நம்பெருமாளுக்கு இடது புறத்தில் சேவை சாதிக்கிறார்!




நம்பெருமாள் உபய நாச்சிமார்களுடன் பெரிய கோவிலில் தம்முடைய ஆஸ்தானத்தில்-சேர பாண்டியன் சிங்காசனத்திலே எழுந்தருளி கொடவர் ஸ்ரீராமதாசரை அழைப்பித்து,

"திருத்தாழ்வரை தாசர்" என்று அருளப்பாடிட்டு,சகல வரிசைகளையும்-தீர்த்தம், சடாரி,சந்தனம்,பரிவட்டம்,மற்றும் பிரசாதம்-சாதித்தருளினார். அதுமுதல் அந்தக் கொடவர் வம்சத்தாருக்கு 'திருத்தாழ்வரை தாசர்' என்னும் பட்டப்பெயர் வழங்கலாயிற்று.


ஸ்ரீராமபிரான் திருவாராதனை செய்த நமது நம்பெருமாள்,ராமரைப் போலவே அந்நிய/வன வாசத்தில் பல இன்னல்களை எதிர்கொண்டு,ராமர் அயோத்தி திரும்பிய வண்ணம்,ஸ்ரீரங்கம் திரும்பினார் என்பதை எண்ணிப் பார்க்கும் போது கண்ணீர் பெருகுகிறது !


ஸ்ரீ ரங்கா ரங்கா ரங்கா....

ஸ்ரீ ரங்கா ரங்கா ரங்கா....

ஸ்ரீ ரங்கா ரங்கா ரங்கா....









வானுளார் அறியல் ஆகா*  வானவா! என்பர் ஆகில்,*

தேனுலாம்  துளப மாலைச்*  சென்னியாய்! என்பர் ஆகில்*

ஊனம் ஆயினகள் செய்யும்*  ஊனகாரகர்க ளேலும்,*

போனகம் செய்த சேடம்*  தருவரேல் புனிதம் அன்றே? 41

912


          

  பழுது இலா ஒழுகல் ஆற்றுப்*  பல சதுப்பேதிமார்கள்,*

இழிகுலத்தவர்களேலும்*  எம் அடியார்கள்  ஆகில்,*

தொழுமின் நீர், கொடுமின், கொள்மின்!*  என்று நின்னோடு ஒக்க,*

வழிபட அருளினாய் போல்*  மதில் திருவரங்கத்தானே! 42

913


அமர ஓர் அங்கம் ஆறும்*  வேதம் ஓர் நான்கும் ஓதி,*

தமர்களில் தலைவராய*  சாதி அந்தணர்களேலும்,*

நுமர்களைப் பழிப்பர் ஆகில்* நொடிப்பது ஓர்  அளவில்,*  ஆங்கே-

அவர்கள் தாம் புலையர் போலும்*  அரங்கமா நகருளானே! 43

914



ஸ்ரீ நம்பெருமாள் திருவடிகளே சரணம் 



அன்புடன் 
அனுபிரேம் 💗💗💗

3 comments:

  1. எத்தனை இன்னல்கள்..... வேதனை.

    தகவல்கள் தெரிந்தவை என்றாலும் மீண்டும் படித்தேன். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. இறைவனுக்கே எத்தனை இன்னல்கள். நம் பெருமாள் பற்றிய தகவல்களை படித்து தெரிந்து கொண்டேன்.ஸ்ரீ ரங்கநாதனை மனதாற வணங்கிக் கொண்டேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete