20 May 2023

47. அக்கரைக்கே விட்டேனோ குகப் பெருமாளைப் போலே !

(47) அக்கரைக்கே விட்டேனோ குகப் பெருமாளைப் போலே !




கங்கைக் கரை முழுவதும் அடர்ந்த காடு. அந்தக் காட்டுக்கு நடுவில் சிருங்கபேரபுரம் என்ற சிற்றூர். அதற்குத் தலைவன் ஒரு வேடுவன். 

அவன் பெயர் குகன். கங்கையின் இருகரைக்கும் சொந்தக்காரன். அவனிடம் கங்கையைக் கடக்கப் ஆயிரக்கணக்கில் படகுகள் இருந்தது. குகனின் உதவி இல்லாமல் யாரும் கங்கையைக் கடக்க முடியாது.

வில்வித்தையில் சூரன். கறுத்த தேகம். பரந்த தோள்கள். சிவந்த நிறம் கொண்ட தோலை அடையாக உடுத்தியிருப்பான். இடுப்பைச் சுற்றி புலி வாலை கட்டிக்கொண்டு இருப்பான். கால்கள் உலக்கை போல இருக்கும். மார்பு கல் போன்று உறுதியாக இருக்கும். கண்கள் சிகப்பாக, குரல் இடி போல எமனே பார்த்துப் பயப்படுவான். படிப்பு அறிவு இல்லை. குகன் ராமரைப் பார்த்ததில்லை. ராமரின் குணங்களையும் பண்புகளையும் கேட்டு அவர்மீது அவனுக்குப் பெரும் மதிப்பு ஏற்பட்டு மனதாலே தோழமை கொண்டான்.

ராமரிடம் குலசேகர ஆழ்வார் மாதிரி அபரிமிதமான அன்பும் பக்தியும் வைத்திருந்தான்.

 எப்படி குலசேகர ஆழ்வாரை ’குலசேகரப் பெருமாள்’ என்று அழைப்போமோ அதே போலக் குகனை ‘குகப் பெருமாள்’ என்று அழைப்போம்.

ராமருக்குப் பட்டாபிஷேகம் என்று கேள்விப்பட்டு குகன் மகிழ்ச்சியிலிருந்தான். ஆனால் ராமரின் பட்டாபிஷேகம் தடைப்பட்டது என்று தெரிந்ததும் துடிதுடித்துப் போனான்.

ராமர் அயோத்தியிலிருந்து புறப்பட்டுச் சிருங்கிபேரபுரத்துக்கு வந்தடைந்தார்கள். ராமரைக் கண்ட குகன் ஓடோடி வந்து, ராமரை உள்ளம் குளிர வரவேற்று அப்படியே மண்ணில் விழுந்து ராமர் காலைப் பற்றினான். கூட இருந்த லக்ஷ்மணனிடம் “நான் நாய்போல ராமருக்கு அடிமை” என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டான் அந்தக் காட்டுக்கு அரசன்.

ராமரை நலம் விசாரித்த குகன் பழங்கள், தேன், திணை முதலியவற்றை எடுத்துக்கொண்டு வந்து ராமருக்குக் கொடுத்தான். 

ராமர் “குகா நீ அன்புடன் கொடுத்த இந்தப் பழங்கள் அமுதத்தைவிட இனியவை. நான் தவப் கோலத்தில் இருக்கிறேன். அதனால் இந்த உணவை எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால் நான் உண்டதாக நினைத்துக்கொள்” என்றார் ராமர்.

 அப்போது குகனைப் பார்த்து “என் தந்தை தசரதனுக்கு நானும் என் மூன்று தம்பிகள் மொத்தம் நான்கு பிள்ளைகள். இன்று முதல் நீயும் என் தம்பி. அதனால் இனி ஐந்து பேர் !” என்றார். 

குகனுக்கு அளவுகடந்த மகிழ்ச்சி.

 அன்று இரவு குகன் ராமருக்குத் தரையைச் சுத்தம் செய்து படுக்க இடம் ஏற்படுத்திக் கொடுத்தான்.

ராமனும் சீதையும் தரையில் படுத்து உறங்கினார்கள். அவர்களுக்குக் காவலாக லக்ஷ்மணன் வில்லும் கையுமாகக் காவல் காத்தான். குகனும் அவனுடைய படைகளும் காவல் புரிந்தார்கள். லக்ஷ்மணன் காட்டு விலங்குகளால் ராமருக்கு ஏதாவது வருமோ என்று காவல் காத்தான்.

 ஒரு தம்பி தாயுடன் சேர்ந்து ராமனைக் காட்டுக்கு அனுப்பிவிட்டான். இந்தத் தம்பி என்ன செய்வானோ என்று குகன் ராமனைக் காவல் காத்தான். 

குகனோ காட்டுக்கு அரசன். லக்ஷ்மணனோ நாட்டை ஆளும் இளவரசன். இவர்கள் இருவரும் ராமருக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தால் ? என்று நினைத்துக் குகனின் படை வீரர்கள் காவல் காத்தார்கள். ஒருவர் மீது ஒருவர் ராமர் மீது இருந்த அன்பு காரணமாகச் சந்தேகப்பட்டார்கள் .

மறுநாள் கங்கையைக் கடக்கக் குகனை அழைத்தார் ராமர். 

குகன் ராமரிடம் , ஐயனே ! ஏன் புறப்பட வேண்டும். இதுவும் காடு தான். இங்கேயே தங்கிவிடலாமே ? உங்களுக்கு இங்கே வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கிறேன். சாப்பிடப் பழங்கள், தேன் தினை மாவு, தங்குவதற்கு இடம். நீராடுவதற்குக் கங்கை. நிழலுக்கு மரம். உடைக்கு மென்மையான தோல். நாய்போலத் தொண்டு செய்ய நானும் என் படையும் காத்துக்கொண்டு இருக்கிறோம் என்றான் குகன்.

குகனின் அன்பைக் கண்டு பூரித்துப் போனார் ராமர். 

மிக அழகிய அலங்கரிக்கப்பட்ட படகைக் கொண்டு வந்தான் குகன். “ஐயனே! நானும் உங்களுடன் கூட வருகிறேன். உங்களுக்குத் தொண்டு செய்யும் பாக்கியத்தைக் கொடுக்க வேண்டும்” என்றான். 

ராமர் நெகிழ்ந்து “குகா இங்கே உனக்கு ஒரு ராஜ்யம் இருக்கிறது. உனக்குச் சுற்றமும் நட்பும் இருக்கிறார்கள். அவர்களைக் காக்க வேண்டியது உன் கடமை அல்லவா ? . அதனால் நீ இங்கேயே இருக்க வேண்டும்.வனவாசம் முடிந்து திரும்பும்போது உன்னைச் சந்திக்கிறேன் என்று புறப்பட்டார் ராமர். அந்த அழகிய படகில் ராமரை அக்கரைக்குக் கொண்டு விட்டான் குகன்.

ராமர் சென்றபிறகு பரதன் ராமரைத் தேடி வர, குகன் பரதனின் நல்ல பண்புகளைப் பார்த்துப் பரதனையும் அவனுடைய படைகளையும் அக்கரைக்குக் கொண்டு விட்டான்.

“சாமி! குகன் போல நான் யாரையும் அக்கரைக்குக் கொண்டு விடவில்லையே ! அதனால் நான் ஊரை விட்டுப் போகிறேன்!” என்றாள் அந்தச் சின்னப் பெண்.



முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -முதற் பத்து

1- 9 இவையும் அவையும் 

ஆழ்வாரோடு  எம்பெருமான் கலந்த வகை 


அருகல் இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்

கருகிய நீல நன் மேனி வண்ணன் செந்தாமரைக் கண்ணன்

பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூமகளார் தனிக் கேள்வன்

ஒருகதியின் சுவை தந்திட்டு, ஒழிவு இலன் என்னோடு உடன 9.3

2989



உடன் அமர் காதல் மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்

மடமகள், என்று இவர் மூவர்; ஆளும் உலகமும் மூன்றே

உடன் அவை ஒக்க விழுங்கி, ஆலிலைச் சேர்ந்தவன் எம்மான்

கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலையானே. 9.4

2990













48. திருப்பாடகம்

ஸ்ரீ ருக்மணி ஸத்யபாமாதேவீ ஸமேத ஸ்ரீ பாண்டவதூதாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕


1 comment:

  1. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஸ்ரீ ராமபிரானின் மேல் குகன் வைத்திருந்த அன்பபையும், பாசத்தையும் விளக்கிய விதம் நன்றாக உள்ளது. படங்கள் அனைத்தும் அழகு. நாராயணனை தரிசித்துக் கொண்டேன். அழகான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete