12 August 2023

57.இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே!

 (57) இரு மிடறு பிடித்தேனோ செல்வப் பிள்ளையைப் போலே!








சுவாமி  ராமானுஜர் திருவரங்கத்தில் இருந்த சமயம் ஒரு சோழ அரசன் பல தொல்லைகள் கொடுத்தான். அந்தச் சோழன் தீவிர சைவ பற்றுடையவன். ‘சிவனே பரம் பொருள்’ என்று எழுதி அதில் ராமானுஜரிடம் கையெழுத்து வாங்க நினைத்தான். வீரர்களைத் திருவரங்கத்துக்கு அனுப்பி ராமானுஜரை அழைத்து வரச் சொன்னான்.

விஷயம் அறிந்த ராமானுஜரின் பிரதானச் சீடர் கூரத்தாழ்வான் ராமானுஜருக்குப் பதில் தான் காவி உடை அணிந்து சோழ அரசனிடம் சென்று தன் கண்களைப் பறிகொடுத்தார். ராமானுஜர் சீடர்களின் வேண்டுகோளை ஏற்று மேலைநாட்டுக்குச் சென்றார்.

ராமானுஜர் கொங்கு நாடு வழியாக மேலை நாட்டில் தொண்டனூர் என்ற இடத்துக்கு வந்தடைந்தார். அங்கே ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனருகே ஒரு குடில் அமைத்துத் தங்கியிருந்தார்.

 அங்கிருந்து ஒரு மலை தெரிந்தது. அதன் பெயர் யதுகிரி. அந்த மலையைப் பற்றிப் புராணங்களில் இருக்கிறது.

ராமர் பட்டாபிஷேகத்தின்போது விபீஷணனுக்குத் தான் பூஜை செய்த ரங்கநாதரை பரிசாகக் கொடுத்தார். அந்தப் பெருமாள் தான் திருவரங்கம் பெருமாள். அதன் பிறகு ராமரும் லவ குசர்களும் ராமப்பிரியன் என்ற பெருமாளை பூஜித்தார்கள். அந்தப் பெருமாள் இந்த மலையில் தான் இருக்கிறார்.

ராமானுஜர் அந்த ஊர் மக்களிடம் ‘அந்த மலை மேலே கோயில் இருக்கிறதா ?’ என்று கேட்டார் ராமானுஜர். “கோயிலா ? எங்களுக்குத் தெரிந்து அங்கே கோயில் எதுவும் இல்லையே! மலைமீது ஏறவே முடியாது. போகும் இடம் எல்லாம் முள்ளும் கற்களும் இருக்கும்” என்றனர் அந்த ஊர் மக்கள்.

தினமும் ராமானுஜர் தொண்டனூர் ஏரியில் குளித்துவிட்டு தன் அனுஷ்டானங்களை முடித்துவிட்டு கீழிருந்தே அந்த மலையை வணங்குவார்.

ஹொய்சல மன்னன் பிட்லதேவன் அந்த நாட்டை ஆண்டு வந்தான். அவன் சமண மதத்தைத் தழுவியிருந்தான். அவனுடைய அழகிய இளவரசிக்கு பேய் பிடித்திருந்தது. யாராலும் குணப்படுத்த முடியவில்லை. ராமானுஜர் என்ற சந்நியாசி வந்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு ராமானுஜரை வந்து வணங்கித் தன் மகளைப் பற்றிக் கூறினான்.

ராமானுஜர் அரண்மனைக்குச் சென்று இளவரசியைக் குணப்படுத்தினார். மன்னன் ஆனந்தம் அடைந்தான். ராமானுஜரின் அறிவுரைகளைக் கேட்டுச் சமணனாயிருந்த பிட்லதேவன் ராமானுஜரை தன் குருவாக ஏற்று வைணவத்துக்கு மாறினான். தன் பெயரையும் விஷ்ணுவர்தன் என்று மாற்றிக்கொண்டான்.




இந்தச் சமயம் ராமானுஜருக்கு தன்னிடம் இருந்த திருமண் கட்டிகள் தீர்த்துவிட்டது. எப்படியொரு திருமணமான பெண்ணுக்குத் தாலிக்கொடி முக்கியமோ அதுபோல வைஷ்ணவனுக்குத் திருமண் முக்கியம். அது பெருமாள் கட்டிய தாலி.

ராமானுஜர் மிகுந்த கவலையுடன் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த சமயம், அவருக்குப் பெருமாள் கனவில் தோன்றி ’யதுகிரி மலைமீது ஒரு புஷ்கரணி இருக்கிறது அங்கே தோண்டினால் திருமண் கிடைக்கும்’ என்றார்.

ராமானுஜர் விஷ்ணுவர்தனிடம் உதவி கோரினார். அவனும் தன் படை வீரர்களும் மலைமீது இருந்த செடி கொடிகளைச் சுத்தம் செய்து வழி அமைத்துத் தானும் ராமனுஜருடன் மலைமீது ஏறினான்.

மலைமீது ஏறியபிறகு துளசிச் செடிகள் காடுபோல வளர்ந்த ஓர் இடத்தைக் கண்டார். அங்கே தோண்டியபோது வெள்ளை சங்கு போலத் திருமண் குபுகுபு என்று வந்தது. 

ராமானுஜர் ஆனந்தம் அடைந்தார்.

 அப்போது ஓர் அதிசயம் நடந்தது. 

திருமண் கிடைத்த இடத்தில் ஒரு விக்கிரகம் தென்பட்டது. உடனே தோண்டுவதை நிறுத்திவிட்டு பாலால் அபிஷேகம் செய்தபோது விக்கிரகம் மீது படிந்திருந்த மண் எல்லாம் நீங்கிப் பெருமாள் காட்சி கொடுத்தார்.

 ராமானுஜருக்கு ஆனந்தம் பல மடங்கு பெருகியது. கண்டெடுத்த பெருமாளுக்கு திரு நாராயணன் என்று பெயர் சூட்டினார்.




“பெருமாள் மண் புற்றிலிருந்து காட்சி தந்தபோது ராமானுஜர் நம்மாழ்வார் பாசுரமான ‘ஒரு நாயகமாய் என்ற பாசுரத்தைப் பாடினார். அதில் ‘திருநாரணன் தாள்' என்று வரும் அதனால் அந்தப் பெருமாளுக்குத் திரு நாராயணன் என்று பெயர் வந்தது...!” 

பெருமாளுக்குப் பெயர் சூட்டிய பிறகு அரசன் அங்கே பெரிய கோயில் ஒன்றைக் கட்டினான். பெருமாளை அங்கே பிரதிஷ்டை செய்தர்கள்.

 ஆனாலும் எல்லோருக்கும் உற்சவர் இல்லையே என்ற குறை இருந்தது.

 ராமானுஜர் திருநாராயணனை வேண்டிக்கொண்டார். மீண்டும் கனவில் பெருமாள் தோன்றி ’வடக்கே தில்லி பாதுஷா மன்னர் அரண்மனையில் ராமப்ரியன் இருக்கிறான்’ என்று கூறினார்.

ராமானுஜர் சற்றும் தாமதிக்காமல் தில்லிக்குப் புறப்பட்டார். ராமப்பிரியனை காண உள்ளம் துடித்ததால் எங்கும் நிற்காமல், ஓய்வு எடுக்காமல் வேகமாகத் தில்லி சென்றடைந்து, தாமதிக்காமல் அரண்மனைக்குச் சென்றார்.

தில்லி சுல்தான் ராமானுஜரை வணங்கி “உங்களைப் பார்த்தால் சந்நியாசி மாதிரி இருக்கிறது. உங்களுக்கு எதுவும் தேவைப்படாதே ? அப்படி இருக்க என்னிடம் என்ன வேண்டும் ?” என்றான்.

“எங்கள் பிள்ளை ராமப்பிரியன் உங்களிடம் இருக்கிறான். அவனை எனக்குக் கொடுக்க வேண்டும்” என்றார்.




தில்லி அரசனுக்கு ஒன்றும் புரியவில்லை “உங்கள் பிள்ளையா ?” என்று குழப்பத்துடன் கேட்டான்.

எங்களிடமிருந்த உற்சவர் ராமப்பிரியன் உங்கள் அரண்மனையில் இருக்கிறான் என்று விளக்கினார்.

சுல்தான் “சன்னியாசியே நாங்கள் பல கோயில்களில் பல விக்ரகங்களைக் கொண்டு வந்தோம். அவை எங்கள் ஒரு கிடங்கில் இருக்கிறது. அங்கே சென்று உங்களுக்கு வேண்டியதை எடுத்துக்கொள்ளும்” என்று அனுமதி கொடுத்தான்.

ராமானுஜர் ஏராளமான விக்ரகங்களை இருந்த கிடங்கைப் பார்த்து மலைத்துப் போனார். ஆனால் அவர் தேடி வந்த ராமப்ப்ரியன் அங்கே இல்லை. மீண்டும் சுல்தானிடம் முறையிட்டார்.

சுல்தான் யோசித்தார். என் மகள் ஒரு விக்ரகத்தை விளையாட்டு பொம்மையாக வைத்திருக்கிறாள் ஒரு வேளை அதுவாக இருக்கலாம் என்று ராமானுஜரை அந்தப்புரத்துக்கு அழைத்துச் சென்றான்.

அங்கே இளவரசியின் கையில் ராமப்பிரியன் இருந்தார். அரசன் “உனக்கு வேறொரு நல்ல பொய்மை கொடுக்கிறேன். இது இந்தச் சந்நியாசிக்கு வேண்டுமாம். கொடுத்துவிடு” என்றான். 

ராமானுஜரும் இளவரசியிடம் “குழந்தாய்! அது என்னுடைய பிள்ளை. பெயர் ராமப்பிரியன். தந்துவிடுமா” என்றார்

அந்தப் பெண் ”தரமாட்டேன் போ” என்று அடம்பிடித்து பெரிதாக அழத் தொடங்கினாள்.

 சுல்தானுக்கு மகள்மீது பாசம் அதிகம் அதனால் “ராமானுஜரே எப்போது பார்த்தாலும் ‘என்னுடைய பிள்ளை என்னுடைய பிள்ளை’ என்கிறாய். உம்முடைய பிள்ளை என்றால் கூப்பிடும். கூப்பிட்ட குரலுக்கு வந்தால் அழைத்துச் செல்லும்” என்றான்.

ராமானுஜர் ”என் செல்லப் பிள்ளாய் வாராய்!” என்றார்.

உடனே “இட்ட சட்டையும், கட்டின சிறு சதங்கையும், இட்ட கஸ்தூரி திலகமும், மைவண்ண நறுங்குஞ்சி குழல்பின் தாழ, முகத்துச் சுட்டியுடன் கட்டிலிருந்து குதித்தான் ராமப்பிரியன்.

 சலங்கை ‘சலசல’ என்று ஒலிக்க, 

தளர் நடை நடந்து எல்லோரும் காணும் படி ராமானுஜர் மடியில் ஏறிக்கொண்டு. 

பிரிந்து தாயைப் பார்க்கும்போது குழந்தை எப்படி கட்டிக்கொள்ளுமோ அதுபோல ராமப்பிரியன் வலது கரத்தால் ராமானுஜரின் கழுத்தை நெருக்கக் கட்டிக்கொண்டான்.

 ராமானுஜரும் ’என் செல்லப் பிள்ளையே!’ என்று ஆரத் தழுவி உச்சி முகர்ந்தார். சிலை என்று நினைத்த எல்லோரும் சிலையாக நின்றனர்.




“சாமி! ராமானுஜரின் கழுத்தைக் கட்டிக்கொண்டது போல் பெருமாள் என் கழுத்தைக் கட்டிக்கொள்ளவில்லையே ! என் கழுத்துக்கு ( மிடறு) அந்தப் பெருமை (இரு) கிடைக்கவில்லையே ! அதனால் நான் ஊரைவிட்டுப் போகிறேன்” என்கிறாள் அந்த பெண் .


முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -இரண்டாம் பத்து

 2- 1 வாயும் திரை - பிரிவாற்றாமைக்கு வருந்துதல்


காமுற்ற கையறவோடு* எல்லே இராப்பகல்,* நீ முற்றக் கண் துயிலாய்* நெஞ்சு உருகி ஏங்குதியால்,* தீ முற்றத் தென் இலங்கை* ஊட்டினான் தாள் நயந்த,* யாம் உற்றது உற்றாயோ?* வாழி கனை கடலே 3

3011

கடலும் மலையும்* விசும்பும் துழாய் எம்போல்,* சுடர் கொள் இராப்பகல்* துஞ்சாயால் தண் வாடாய்,* அடல் கொள் படை ஆழி* அம்மானைக் காண்பான் நீ,* உடலம் நோய் உற்றாயோ* ஊழிதோறு ஊழியே. 4

3012








58. திருநின்றவூர்

ஸ்ரீ என்னைபெற்றதாயார் ஸமேத ஸ்ரீ பக்தவத்சலாய நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕

4 comments:

  1. முன்னர் படித்தது. பதிவில் மிகவும் சிறப்பாக ஓவியங்களுடன் கண்டதில் மகிழ்ச்சி.

    ReplyDelete
  2. இராமானுஜர் - நிகழ்வு மற்றும் விவரங்கள் படங்கள் எல்லாம் செம அனு. நேத்தே வாசித்திட்டேன்...

    இன்னிக்கு எபி ல நெல்லையின் பதிவிலும் இராமானுஜர் கூரத்தாழ்வான் நிகழ்வு எழுதியிருக்கிறார்.

    கீதா

    ReplyDelete
  3. ஓவியங்கள் அழகு. தகவல்கள் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  4. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. ஸ்ரீ இராமனுஜரின் பக்தி நிகழ்வுகளை படங்களுடன் தொகுத்து தந்ததை விரும்பி படித்தேன். அதை ஓவிய நிகழ்வாக தந்திருப்பதும் அருமை. கருத்தில் சகோதரி கீதா ரெங்கன் அவர்கள் சொன்ன மாதிரி எ. பியில் ஞாயிறு பதிவாக சகோதரர் நெல்லைத்தமிழர் ஸ்ரீ இராமனுஜர் பற்றி எழுதி வருவதையும் படித்தேன். அறியாத விஷயங்களை படித்து தெரிந்து கொண்டேன். ஸ்ரீ மன்நாராயணனை பணிந்து வணங்கிக் கொண்டேன். ஸ்ரீ இராமனுஜரின் திருவடிகளே போற்றி போற்றி. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete