இன்று நமது 77-வது ஆண்டு சுதந்திர தினம்....
அனைவருக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் ....
நம் பாரத மணித்திரு நாட்டின் தேசியக் கொடியில் உள்ள அசோகச் சக்கரத்தின் 24 ஆரங்கள் குறிக்கும் பொருள்கள் என்னென்ன....
நமது தேசியச் சின்னத்தைப் பற்றிய சில சிந்தனைகள்....
அசோகச் சக்கரம் (Ashoka Chakra) என்பது அசோகரின் பல சிற்பங்களில் காணப்படும் இருபத்து நான்கு ஆரங்களைக் கொண்ட சக்கர வடிவ சின்னமாகும். இது பௌத்தர்களின் எட்டு ஆரங்களைக் கொண்ட தர்ம சக்கரத்தை ஒட்டி வடிவமைக்கப்பட்டுள்ளது.
அசோகர் பயன்படுத்தியமையால் இது அசோகச் சக்கரம் என்று அழைக்கப்படுகிறது.
புகழ்பெற்ற சாரநாத்தில் உள்ள சிங்கத் தலைகள் பதித்த அசோகத்தூணில் உள்ள இந்தச் சக்கரம் பாரத நாட்டின் தேசியக் கொடியில் மையப்பகுதியில் கடற்படை நீல நிறத்தில் இடம் பெற்றுள்ளது.
அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்தியக் குடியரசின் இலச்சினையாகவும் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
அசோகச் சக்கரத்தைப் போற்றும் விதமாக அசோகச் சக்கர விருது பாரத நாட்டின் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பாரதத்தின் படைத்துறையினால் போர்க்களத்தில் அல்லது அமைதிக்காலத்தில் படைவீரர்கள் வெளிப்படுத்தும் மிக உயரிய வீரதீரச் செயல்களுக்காகவும் தன்னலமற்ற உயிர்த்தியாகத்திற்காகவும் வழங்கப்படுகின்றன. இது போர்க்காலத்தில் நிகழ்த்திய வீரச்செயல்களுக்கு வழங்கப்படும் பரம வீரச் சக்கரத்திற்கு இணையானது. இந்த விருது படைத்துறையில் அல்லாமல் குடிமக்களுக்கும் வழங்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
அசோகச் சக்கரத்தின் 24 ஆரங்கள் குறிக்கும் பொருள்கள்:
அசோகர் பரப்பிய தர்மங்கள் 24 (போதி சத்வ தர்மங்கள்)
1. அஹிம்சை - உயிர்களுக்கு இன்னா செய்யாமை.
2. அப்பந்தா - சிக்கனம்
3. அபிச்சதி - பயபக்தி(பெரியோர்&ஆசிரியர்)
4. அபசினவம் - மானமுடைமை
5. உத்சஹா - உற்சாகம்
6. கிருதக்ஞாதா - செய்நன்றி அறிதல்
7. சத்யம் - உள்ளத்தால் உண்மை
சொல்லால் உண்மை
செயலால் உண்மையை போற்றுதல்.
8. சமயப்பொறை - மாற்று மதக்கருத்துக்களையும் மதித்தல்
9. சாதுதா - நல்லவனாயிருத்தல்
10. சாம்யமா - புலனடக்கம்
11. சாத்வம் - நன்மை தரும் செயல்களைச் செய்தல்
12. சிரமசேவிதம் - கடின உழைப்பு
13. சுஷ்ருதா சரீர சஹாயம்,- உடல் நோய் தீர்த்தல்
14. சௌசம் - உடல் தூய்மை
15. தயை - இரக்ககுணம்
16. தானம் - வறியோர்க்கு வழங்கல்
17. தம்மதானம் - தர்மத்தைப் பரபபுதல்
18. தம்ம விஜயம் அறத்தின் வழிபெறும் வெற்றி
19. தர்மதாமதா - அறம் செய்வதில் ஆர்வம்
20. த்ருதபக்திதா - மாறாத அன்புள்ளம்
21. பயம் - பாவம் செயவதில் அச்சம்
22. பரிக்ஷா - தன்னம்பிககை
23. பாவசுத்தி - எண்ணத்தூய்மை
24. மார்த்தவம் - அருளுடைமை.
பாரத நாட்டின் தேசியச் சின்னம் (Emblem Of India) என்பது அரசு முத்திரைகள், ரூபாய், நாணயம் போன்றவற்றில் பொறிக்கப்பட்டுள்ளன.
அசோகத்தூணில் உள்ள சிங்கத்தலைகள் இந்திய அரசு மற்றும் பாரதக் குடியரசின் சின்னமாக (இலச்சினை) எடுத்துக் கொள்ளப்பட்டது. கவிழ்ந்த நிலையில் உள்ள ஒரு தாமரை மலர், அதன்மேல் நான்கு சக்கரங்களை பக்கவாட்டில்கொண்ட முரசு போன்ற அமைப்பு கொண்டது. இதில் உள்ள சக்கரங்கள் தர்ம சக்கரங்கள் எனப்படுகின்றன .
தர்ம சக்கரத்தில் 24 ஆரங்கள் உள்ளன . சக்கரங்களுக்கு அருகில் நான்கு பக்கமும் சிங்கம்,குதிரை,எருது,யானை ஆகியவற்றின் உருவங்கள் உள்ளன. முரசின் மேல் சிங்கங்கள் நான்கும் ஒன்றை ஒன்று பின்புறம் ஒட்டியபடி நிற்கின்றன. இந்தச் சிற்பத்தை படைத்தவர் அசோக பேரரசர் ஆவார். இதில் உள்ள தர்ம சக்கரம் நமது தேசியக் கொடியின் மையத்தில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வட பாரதத்தின் பல்வேறு இடங்களில் அசோகரால் பொது யுகத்திற்கு முன் 3 ஆம் நூற்றாண்டில் பல தூண்கள் நிறுவப்பட்டன. இவற்றில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் தூண் சாரநாத் தூண் ஆகும்.
புத்தர் தமது முதல் போதனைகளைச் சாரநாத்தில் வெளியிட்டார். ஆகவே அவ்விடத்தில் அசோகர் ஒரு உயரமான கல்தூணை நிறுவினார். அதன் உச்சியில் சிங்கங்களும்,மற்ற உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. கம்பீரமாக நான்கு சிங்கங்கள்,அடிபீடத்தின் மையத்தில் தர்ம சக்கரம் (Dharma Chakra) உள்ளது. இந்த கல்தூண் தற்போது உத்திரப்பிரதேசத்தில் வாரனாசியின் புறநகரப் பகுதியான சாரநாத்தில் உள்ள சாரநாத் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
பாரத நாட்டின் தேசியச் சின்னம் அசோகர் தூணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. அசோகத் தூணின் மேற்பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட சின்னமே நமது நாட்டின் தேசியச் சின்னமாகும். இது 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பாரத நாடு, குடியரசு நாடாக ஆன தினத்தில் தேசியச் சின்னமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
தீனநாத் பகர்வா என்பவர் அசோகத் தூணிலிருந்து சின்னத்தை எடுத்து நமது தேசியச் சின்னத்தை வடிவமைத்தார். இதில் மூன்று சிங்கங்கள் மட்டுமே தெரிகிறது. நான்காவது சிங்கம் பார்வையிலிருந்து மறைக்கப்பட்டு உள்ளது. அசோகச் சக்கரம் பீடத்தின் நடுவில் அமைந்துள்ளது. வலப் புறத்தில் எருதும், இடதுபுறத்தில் பாயும் குதிரையும் அமைந்துள்ளது. வலது, இடது கோடிகளில் தர்மசக்கரத்தின் விளிம்புகள் தெரிகின்றன. பீடத்தின் கீழிருந்து தாமரை நீக்கப்பட்டுள்ளது.
பீடத்தின் கீழே வாய்மையே வெல்லும் என்னும் பொருள் கொண்ட ”சத்ய மேவ ஜெயதே” என்ற குறிக்கோள் கொண்ட வார்த்தை தேவநாகரி எழுத்துகளால் பொறிக்கப்பட்டுள்ளன.
முந்தைய பதிவுகள் ...
சுதந்திர தின வாழ்த்துக்கள் (2020) நமது மூவர்ண கொடி பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள் ........
75-வது ஆண்டு சுதந்திர தினம்(2021) ....
நமது 76-வது ஆண்டு சுதந்திர தினம் (2022).... சுதந்திரம் தினம் குறித்த சில வரலாற்று சம்பவங்கள்
அன்புடன்
அனுபிரேம் 💖💖💖
சிறப்பான தகவல்கள்.
ReplyDeleteசுதந்திரதின வாழ்த்துகள்!
கீதா
வணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. சிறப்பான தகவல்களுடன் படங்கள் அனைத்தும் நன்றாக உள்ளது. பதிவில் பல விபரங்கள் அறிந்து கொண்டேன். தங்களுக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.