31 August 2023

26. படே ஹனுமான் ஜி மந்திர்

ஜெய் ஸ்ரீ ராம் .....

முந்தைய பதிவுகள் ...


 1. வாரணாசி ......





26.படே ஹனுமான் ஜி மந்திர்

திரிவேணி சங்கமத்தின்  கரை ஓரமாக உள்ள ஒரு கோவில் இந்த  படே ஹனுமான் ஜி மந்திர்.

திரிவேணி  சங்கமத்தில் நீராடிட்டுவிட்டு  மீண்டும் மடத்திற்கு சென்று உடை  மாற்றி கொண்டு அதே ஆட்டோவில் இங்கு வந்தோம் .

அன்றைய நாள் சூரிய கிரகணம் அதனால் கோவிலின் நடை சாற்றிவிட்டார்கள். என்ன அன்றைய நாளில் தரிசிக்க வேண்டிய கோவில் அனைத்தும் காண முடியாமல் போய்விட்டது.





கோவிலின் நடை அடைத்தும்  நல்ல கூட்டம் மக்கள் வெளியேவே நின்று தங்களின் பிரார்த்தனைகளை செய்கிறார்கள்.
நாங்களும் அப்படியே நின்று  தரிசனம் செய்து கொண்டோம்.


இந்த  ஆஞ்சனேயர்  சுமார் 15 அடிக்கு, படுத்திருப்பது போலிருக்கிறது. இப்பொழுதுள்ள தரை அளவிலிருந்து 10-15 அடி கீழேயுள்ளது என்றனர். கங்கையில் வெள்ளம் வரும் போது, இக்கோவில் நீரில் மூழ்கி விடுவதும் உண்டு. அக்பரின் ஆணையின்படி, வீரர்கள் இவ்விக்கிரகத்தை அப்புறப்படுத்த விரும்பியபோது, ஏதோ ஒரு குரல் தடுத்ததால் அப்படியே விட்டுவிட்டுச் சென்று விட்டனர் என்றும்  சொல்கின்றனர்.





உத்திரப் பிரதேசத்தின் கன்னோஜ் நகரத்தினைச் சேர்ந்த வியாபாரி ஒருவருக்கு அளவில்லாத சொத்து.  ஆனால் அவருக்குப் பின் அவற்றை கட்டிக்காக்க, அனுபவிக்க ஒரு மகவு இல்லாதது அவருக்குப் பெரும் குறை.  சங்கடங்களை தீர்க்க வல்ல ஹனுமனுக்கு ஒரு கோவில் எழுப்பினாலாவது தனக்கு சந்தான பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விந்தியாசல மலையில் ஒரு கோவில் எழுப்ப முடிவு செய்தார் கன்னோஜ் வியாபாரி. 


மலையிலிருந்து பெரிய கல்லாகத் தேர்வு செய்து பெரிய ஹனுமான் விக்ரஹமும் தயார் ஆனது.  [B]படே ஹனுமான் விக்ரஹத்தினை கோவிலில் பிரதிஷ்டை செய்வதற்கு முன் புண்ணிய நதிகளில் நீராட்ட முடிவு செய்தார் வியாபாரி.  ஒவ்வொரு நதியாகச் சென்று நீராட்டிய பிறகு அவர் கடைசியில் வந்தது அலஹாபாத்தின் சங்கமத்திற்கு – மூன்று நதிகள் சங்கமிக்கும் இடமாயிற்றே. அங்கே நீராட்டினால் சிறப்பன்றோ.


கங்கைக் கரையில் விக்ரஹம் படுத்த நிலையில் இருக்க, மாலை நேரம் ஆகிவிட்டபடியால், அன்று சங்கமக் கரையிலேயே உறங்கி அடுத்த நாள் பயணத்தினை தொடர முடிவானது.  அடுத்தது விந்தியாசல மலையில் விக்ரஹத்தினை கொண்டு சேர்த்து கோவிலை எழுப்ப வேண்டியது தான் பாக்கி.  தான் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும் என்று சொல்வார்கள்.  அதுதான் இங்கேயும் நடந்தது.அன்று உறக்கத்தில் கன்னோஜ் வியாபாரியின் கனவில் ஹனுமான் எழுந்தருளி தான் கங்கைக் கரையிலேயே கோவில் கொள்ள விரும்புவதாகச் சொல்ல, வியாபாரியும் அப்படியே செய்ய முடிவு செய்தாராம்.  அங்கே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடுகள் செய்வதற்காக கன்னோஜ் திரும்புகிறார்.  அங்கே கங்கைக் கரையில் படுத்த நிலையில் ஹனுமார்.


நெடு நாட்கள் பயணத்திற்குப் பிறகு வீடு திரும்பிய அந்த வியாபாரி தனது சொந்த வேலைகளில் ஆழ்ந்து விட, சில மாதங்களில் வியாபாரியின் மனைவி அழகான ஒரு குழந்தையை பெற்றெடுத்தாள். கோவில் கட்ட நினைத்த வியாபாரியும் தனது கோரிக்கை நிறைவேறிய காரணத்தினாலோ என்னமோ, கோவில் கட்டுவதை அடியோடு மறந்து விட்டார் போலும்!  கங்கைக் கரையில் படுத்த நிலையில் இருந்த ஹனுமன் கால ஓட்டத்தில் மண்ணுக்குள் மண்ணாய்!


சில காலத்திற்குப் பிறகு கங்கையில் புனித நீராட வந்த ஒரு சாமியார் குளிப்பதற்கு கங்கையில் இறங்குமுன் தன்னுடைய திரிசூலத்தினை பூமியில் ஊன்ற ஏதோ கல்லில் மோதும் சத்தம் வர, அந்த இடத்தினைத் தோண்டினால் அங்கே ‘[B]படே ஹனுமான்’ அவரை நோக்கி மந்தஹாச புன்னகை வீச, அவருக்கு அங்கேயே கோவில் எழுப்ப முடிவு செய்தார்கள்.


படுத்த நிலையில் இருக்கும் ஹனுமான் சிலையை நேராக நிற்க வைத்து கோவில் எழுப்ப எவ்வளவு முயற்சி செய்தும் முடியவில்லையாம்.  அதனால் அதே நிலையில் பூமிக்குள் ஒரு தொட்டி போல கட்டி அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்தார்களாம்.  தற்போது கோவில் சுற்றி பல கட்டுமான பணிகள் செய்யப்பட்டு விட்ட்து.  பக்தர்களும் சங்கமத்தில் நீராடி இங்கே ஹனுமனின் தரிசனம் கண்டு செல்கிறார்கள்.


ஒவ்வொரு வருடமும் கங்கை கரை புரண்டு ஓடும்போது ஹனுமனின் கால் வரை தண்ணீர் வந்து செல்லுமாம்.  ஹனுமனின் பாத கமலத்தினை கங்கையே பூஜித்துச் செல்கிறாளோ! 


(வெங்கட் சார் தளத்திலிருந்து )




முதல் திருமுறை
036 திருவையாறு

பாடல் எண் : 8


வரையொன் றதெடுத் தவரக்கன்

சிரமங் கநெரித் தவர்சேர்வாம்

விரையின் மலர்மே தகுபொன்னித்

திரைதன் னொடுசே ருமையாறே.

  


கயிலை மலையைப் பெயர்த்த இராவணனின் சிரங்களும் பிறஅங்கங்களும் சிதறுமாறு நெரித்த சிவபிரான் எழுந்தருளிய இடம். மணம் பொருந்திய மலர்களைக் கொண்டு புண்ணிய நதியாகிய காவிரி அலைகளோடு கூடிப்பாய்ந்து வளம் சேர்க்கும் திருவையாறு ஆகும்.




தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼


1 comment:

  1. ஆஅஹா மை ஆஞ்சு!!! ரசித்தேன், அனு.

    படே ஹனுமான் பத்தி வெங்கட்ஜியும் எழுதியிருந்தாரேன்னு வாசித்துக் கொண்டே வந்தால் கடைசில சொல்லிருக்கீங்க!!! ஆமாம் கங்கை நீர் பாதம் வரை வருவதைப் பார்க்க வேண்டும் என்றா ஆசை உண்டு.

    கீதா

    ReplyDelete