11 July 2023

14. ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயம் ....

 காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம் 

 கல்வியை வழங்கும் கிரகமான புதன் காசிவிஸ்வநாதரைப் பூஜித்ததன் பயனாக நவக்கிரகங்களில் ஒருவராக கிரகபதவி பெற்றார். கல்வியில் சிறந்து விளங்க மாணவர்கள் காசிவிஸ்வநாதரை வழிபாடு செய்வது சிறப்பாகும்.  இங்கே இறந்து போகும் பறவைகள், மிருகங்கள் மற்றும் சகல ஜீவராசிகளுக்கும் மரணம் நேரும் போது அவற்றின் காதுகளில் ராமநாமத்தை சிவனே ஓதுகிறார் என்பது ஐதீகம். ஓம் என்ற பிரணவத்தை ஓதுவதாகவும் சொல்லப்படுவதுண்டு.








ஸ்ரீ  காசி விஸ்வநாதர் ஆலயம் 

மூலவர் :     காசி விஸ்வநாதர்
அம்மன் :   விசாலாட்சி
பழமை :      5000 வருடங்களுக்கு முன்


 தீர்த்தம் :     கங்கையில் 64 தீர்த்தக் கட்டங்கள் உள்ளன. ஆதிகங்கை என்ற தீர்த்தக் குளம் உள்ளது. ஞான வாவி என்ற சிறுதீர்த்தக் கிணறு, மணிகர்ணிகா தீர்த்தம், சக்ரதீர்த்தம் முதலியன காசியில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்.

புராண பெயர் :      வாராணசி, பனாரஸ், ஆனந்த வனம், மகாமயானம்,அவிமுக்தம்

தல சிறப்பு :          மூலவர் விஸ்வநாதர் மரகதத்தால் ஆன சுயம்புநாநர்.













விஸ்வநாதர்  கோயில் கர்ப்பகிரகம் வடநாட்டுப்பாணியில் கோபுரம் உயரமாகவும், கொடியுடனும் காணப்படுகிறது. மூலவர்  விஸ்வநாதர்  லிங்கம் சிறியதாக பூமி மட்டத்திலிருந்து ஒரு பள்ளத்தில் உள்ளார். பக்தர்கள் மண்டிபோட்டுக் குனிந்து விஸ்வநாதரைத் தொட்டு வழிபடுகின்றனர். 

லிங்கத்தின் தலையில் தங்கமுலாம் பூசப்பட்ட தாமிரத் தகடு பொருத்தப்பட்டுள்ளது. லிங்கத்தைச் சுற்றிலும் வெள்ளித் தகடுக் கட்டு அமைத்துள்ளார்கள். லிங்கத்தின் மேல் ஒரு பாத்திரம் கட்டித் தொங்க விட்டுள்ளார்கள். அதிலிருந்து கங்காதீர்த்தம் சொட்டுச் சொட்டாக லிங்கத்தின் மீது விழுந்து அபிஷேகம் செய்கிறது.


இந்தியாவில் 12 ஜோதிர்லிங்க ஸ்தலங்களில் காசியே முதன்மையானது. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மணிகர்ணிகா சக்தி பீடம் ஆகும்.


              அவிமுகேஸ்வரர் என்றும் விஸ்ஹேஸ்வர் என்றும் அழைக்கப்பட்ட  காசி மூலவர் பின்னர்  விஸ்வநாதர் என்று  வேதம் கற்ற அறிஞர்களால் பெயர் சூட்டப்பட்டு அழைக்கபடலானார்.
 

           கோயிலின் பின்பக்கம் ஒரு தனி நந்தி, சுவற்றைப் பார்த்துள்ளார். இது தான் ஆதி நந்தி. அந்த நந்தியின் அருகே ஞானவாவி என்ற தீர்த்தக் கிணறு உள்ளது. சப்த மோட்ச புரிகளில் வாரணாசியும் ஒன்று. மற்ற மோட்ச புரிகள் அயோத்தி, மதுரா, அரித்வார், காஞ்சி, உச்சையினி(அவந்தி), துவாரகை.






ஸ்தல பெருமை:

இங்கு விஸ்வநாதர் மகிழ்ச்சி பெருக்குடன் எழுந்தருளி உள்ளார். எனவே, இவ்வூரை ஆனந்த பவனம் என்கின்றனர். வெள்ளித்தகடு பதித்த தொட்டியில், தங்க ஆவுடையார் மீது இவர் காட்சியளிக்கிறார். 

சிவபெருமானின் அடியையும் முடியையும் காண பிரம்மாவும் திருமாலும் முயன்றபோது, அவர்களை எரித்து அழித்த இடம் இவ்வூரே என்றும்  கூறுவதுண்டு. எனவே, இவ்வூருக்கு மகாமயானம் என பெயர் வந்தது.




 
விசாலாட்சி அம்மைக்கு தனி சன்னதி உள்ளது. கங்கை நதியின் மேற்குக்கரையில் காசி அமைந்துள்ளது. காசியிலிருந்து வடக்காக 30கி.மீ. தொலைவு வரை கங்கை நதி ஓடுகிறது. இங்கே வடமுகமாக கங்கை ஓடுவதால் உத்தர வாகினி என்று அழைக்கின்றனர்.








ஸ்தல வரலாறு:

இமயத்தில் சிவபெருமானை உதாசீனம் செய்துவிட்டுத் தக்கன் யாகம் செய்தார். தமது கணவனை அவமதித்த, யாகத்தை தடுக்கச் சென்ற பார்வதி தேவியைத் தக்கன் அவமதித்து விட்டார். அதனால் பிராணத்தியாகம் செய்த பார்வதி தேவியின் உடலை, சிவபெருமான் தூக்கிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்தார்.

இதனைப் பார்த்த திருமால் தமது சக்ராயுதத்தை ஏவி, பார்வதி தேவியின் உடலின் பாகங்களைத் துண்டித்தார். ஒவ்வோர் இடத்தில் ஒவ்வொரு பாகம் விழுந்தது. ஆவேசம் தணிந்த சிவபெருமான் மகாமயானமான காசிக்கு, மீதமுள்ள உடல் பாகத்தைக் கேதார நாத்திலிருந்து கொண்டு வந்தார்.

மகாமயானத்தில் பார்வதி தேவியின் உடலை அக்கினியில் இடமுனைந்தார். சிவபெருமான் பார்வதி தேவியின் காதில் தாரக மந்திரம் உபதேசம் செய்தார். அப்போது அவரது காதிலிருந்த காதணி எங்கேயோ விழுந்து விட்டதை அறிந்தார். 

 அங்கே திருமால் தமது சக்கரத்தால் ஒரு தீர்த்தக் கிணறு தோண்டி, அதனருகே அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் செய்து கொண்டு இருந்தார்.

சிவன் அவரை அணுகி பார்வதி தேவியின் காதணி பற்றிக் கேட்டார். திருமால் தாம் அமர்ந்திருந்த இடத்திற்கு அருகே உள்ள கிணற்றைச் சுட்டிக் காட்டினார். சிவபெருமான் அக்கிணற்றை எட்டிப்பார்க்கையில் அவரது காதிலிருந்த குண்டலமும் கிணற்றில் விழுந்துவிட்டது. கிணற்றினுள்ளிலிருந்து பிரகாசமான பேரொளியுடன் ஒரு சிவலிங்கம் வெளிப்பட்டது. அந்தச் சிவலிங்கத்தில் சிவபெருமானின் சக்தியும் பார்வதி தேவியின் சக்தியும் ஒன்றாக ஐக்கியமாகி இருந்தது.

திருமால் அந்த ஜோதிர்லிங்கத்தை எடுத்து இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். 

சிவ பெருமானை நோக்கித் தமது தவத்தை தொடர்ந்து மேற்கொண்டார். சிவபெருமான், திருமால் முன்பு விசுவரூபம் கொண்டு தோன்றினார்.

 திருமால் விரும்பும் வரம் யாதெனக் கேட்க, அவர் இங்கு பிரதிஷ்டை செய்த ஜோதிர் லிங்கத்திலிருந்து எப்போதும் மக்களை ஆசிர்வதிக்க வேண்டினார். மேலும் சிவபெருமான் ஜடாமுடியிலிருக்கும் கங்கை இத்தலத்தில் வந்து சிவபெருமானை அர்ச்சிப்பதுடன், இத்தலம் வந்து கங்கையில் நீராடும் மக்களுடைய பாவங்களைப் போக்க வேண்டும் எனவும், சிரார்த்தம் செய்தால் அவர்கள் பாவம் எல்லாம் விலகி புனிதம் அடைந்து சுவர்க்கம் போக வேண்டும் எனவும் வரம் வேண்டினார். சிவபெருமானும் அவர் கேட்ட வரம் தந்து, தாமும் அந்த லிங்கத்தில் ஒளியாக ஐக்கியமாகி இன்றும் மக்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

திருமாலுக்கு விசுவரூபம் காட்டித் தந்தமையால், சிவலிங்கத்திற்கு விசுவநாதர் எனப்பெயர் உண்டாகியது. 

அதன்பின்பு விசாலாட்சியாக அவதாரம் கொண்டிருந்த அன்னை பார்வதி தேவியை, சிவபெருமானுக்குத் திருமால் திருமணம் செய்து வைத்தார். 

பிரம்மதேவர் பல யாகங்கள் செய்து அவர்கள் திருமணத்திற்கு உதவி செய்தார். இவ்வாறு திருமாலின் வேண்டுதலின் படி ஜோதிர்லிங்கமாகத் தோன்றிய சிவன் விசுவநாதர் என வழங்கப்பட்டு வருகிறார்.




காசியைப் பற்றி ஏகப்பட்ட புராணக் கதைகள் உள்ளன. 

ஏனெனில் காசியம்பதி வேதகாலம், புராண காலத்திற்கு முற்பட்டது. பல தேவர்களும், முனிவர்களும், மன்னர்களும், இங்கு தவம்செய்து பேறு பெற்றுள்ளார்கள்.

 சூரியனின் புத்திரர்கள் எமனும், சனி பகவானும் சிவபெருமானை நோக்கி இப்பதியில் தவம் செய்து, எமன் தென்திசைக் காவலனாகவும், எமலோகத்திற்கு அதிபதியாகவும், பதவி பெற்றார். 

சனிதேவன் சிவபெருமான் அருளால் நவக்கிரகங்களில் ஒரு கிரகமாகப் பதவி பெற்றார்.

பிரம்மாவே இங்கு யாகம் செய்தும், தவம் செய்தும் பிரம்ம பதவியைப் பெற்றார் எனில், காசியின் மகிமையும் தொன்மையும் யாரால் எடுத்துக் கூற முடியும் ?

சப்தரிஷிகள் என்னும் ஏழு ரிஷிகளும் இங்கு தவம் செய்து, சிவபெருமான் அருளால் நட்சத்திரப் பதவியடைந்துள்ளார்கள். காசியில் இரவு பூஜை சப்த ரிஷிகள் பூஜை என மிகவும் சிறப்பாக, தினசரி நடைபெறுவதால் இத்தலத்தை அவர்கள் தான் தாபித்தார்களோ என ஓர் எண்ணம் உண்டாகிறது.

இராமபிரான் முன்னோர்களில் ஒருவரான ஹரிச்சந்திரன் வரலாறு அறியாதோர் இலர். அவர் விசுவாமித்திரர் சோதனைக்குட்பட்டு காசியில் வந்து சுடலையைக் காத்து, மனைவியைப் பிறர்க்கு விற்றுத் துன்பப்பட்டும், பொய்யே பேசாமல் முடிவில் சிவபெருமான் அருளால் இழந்த செல்வம் எல்லாம் பெற்று சுபிட்சம் அடைந்தார். 

இதிசாக காலத்தில் இராமர் இங்கிருந்து சிவலிங்கம் கொண்டு சென்று, இராமேசுவரத்தில் வைத்து வழிபட்டு, இராவணனை வதைத்த தோஷம் நீங்கப் பெற்றார் என இராமயணத்தில் வரலாறு காண்கிறோம். 

மகாபாரதக் காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் காசி வந்து வழிபாடுகள் செய்ததாகவும் மகா பாரதத்தில் வரலாறு கூறப்படுகிறது. இன்னும் இப்படி எத்தனையோ புராணங்கள் காசிப் பதியைப் பற்றியுள்ளன.













புராண காலத்தில் சத்தியபுரம் என்னும் ஊரில் பூரித்தியும்னன் என்பான் அரசாண்டு வந்தான்.

 அவனுக்கு ஆயிரக்கணக்கான மனைவிகள். 

இன்பத்தில் மூழ்கியிருந்ததால் அவனால், அரசாட்சியை சரிவர கவனிக்க இயலவில்லை.

 இதனைச் சாதகமாக்கி அவனது விரோதிகள் அவனை நாட்டை விட்டுத் துரத்தி விட்டனர். 

விபாவரை என்னும் தமது பட்டத்து ராணியை மட்டும் தன்னுடன் அழைத்துக்கொண்டு, மன்னன் விந்திய மலைச்சாரலில் வந்து வாழ்ந்து வந்தான். வறுமையின் கொடுமையால் தன் மனைவியையே கொன்றுவிட்டான். 


அவள் மாமிசத்தை உண்ணப் போகும் போது, இரண்டு சிங்கங்கள் அங்கே வர பூரித்தியும்னன் ஓடிவிட்டான்.

 அப்படி அவன் ஓடும் போது அவன் எதிரே வந்த நான்கு பிராமணர்களைக் கொன்று தின்ன முற்பட்டான். அப்போது பிராமணர்களது கையிலிருந்த வேத ஏடுகள், மான்தோல் ஆசனம், அவர்கள் அணிந்திருந்த பூணூல் இவைகளைக் கண்டதாலும் தொட்டதாலும் அவனுக்குப் புத்தி தெளிந்தது.

பூரித்தியும்னன் தான் செய்த பெண் கொலை, பிராமணர்கள் கொலை இவைகளினால் பாவ ஆத்மாவாக ஆகிவிட்டதை உணர்ந்தான்.

 பிரம்மஹத்தி தோஷம் அவனைப் பற்றவே அவன் பெரும் சண்டாளன் ஆகிவிட்டான். 

காட்டில் அலைந்து சாகல்யா என்ற தவமுனிவரைக் கண்டு பாவவிமோசனம் கேட்டான். 

அந்த முனிவர் ஐந்து கருப்புத் துணிகளைக் கொடுத்து அவனை உடுத்திக் கொள்ளக் கூறினார்.

 காசிக்குச் சென்று கங்கையில் மூழ்கி விசுவநாதரைத் தரிசித்தால் பாவ விமோசனம் ஆகும் என்று கூறினார். அவனும் முனிவர் சொற்படி, காசிக்குச் சென்றான். 

அவன் காசிமண்ணை மிதித்ததும் ஒரு துணி வெண்மை ஆகிவிட்டது.

 கங்கையில் மூழ்கி எழுந்தான். என்னே ஆச்சர்யம்! இறந்த அவனது மனைவி அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு உடன் எழுந்தாள். மற்றும் ஒரு கருப்பு ஆடை வெண்மை ஆகிவிட்டது. இரண்டு ஆடைகளையும் கங்கையில் அவிழ்த்து விட்டு மூன்று ஆடைகளுடன் கரையேறினான்.

இரண்டாவது அதிசயம்...இவனால் கொல்லப்பட்ட நான்கு பிராமணர்களும் கரையில் நின்று கொண்டு தம்பதிகள் இருவரையும் வரவேற்றனர். அவனதுபாவம் தீர மந்திரம் ஓதி அட்சதை தெளித்தனர். மூன்றாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. 

கணவன் மனைவி இருவரையும் மணிகர்ணிகா கட்டத்தில் அவர்கள் மூழ்கச் செய்தனர்.
நான்காவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது. 

பின்பு விசுவநாதரைத் தொட்டு, பக்தியுடன் வழிபடக் கூறினர். அவ்விருவரும் அதன்படியே வழிபட, ஐந்தாவது ஆடையும் வெண்மை ஆகிவிட்டது.

 அவனது பாவங்கள் எல்லாம் நீங்கிப் புனிதன் ஆனான். விசுவநாதர் ஆலயத்தின் முன்பு அவர்கள் இருவரையும் அவனது எதிரிகள் அன்புடன் வரவேற்றனர்.

 நாட்டிற்கு அழைத்துச் சென்று, அவனது அரசை அவனிடமே கொடுத்து, மீண்டும் பூர்த்தியும்னனை அரசனாக்கினர். 

எனவே கங்கையில் மூழ்கி காசி விசுவநாதரைத் தரிசித்தால் கொடிய பாவங்களும் நீங்கிவிடும். 

எனவே தான் காசிக்கு வரும் பக்தர்கள், தம்பதிகளாக, இரு ஆடைகள் அணிந்து கங்கையில் மூழ்கி, ஓர் ஆடையை கங்கை நீரில் விட்டுவிட வேண்டும் என்கின்றனர்.

 கரைக்கு வந்து பிராமணர்களைத் தரிசித்து அவர்களுக்கு தானம் வழங்க வேண்டும் என்றும் கூறுவர். விசுவநாதர் ஆலயம் சென்று விசுவநாதரைத் தொட்டு வழிபட வேண்டும் என்றும் இங்கே கூறுகின்றனர். அவ்வாறு செய்தால்தான், நாம் நம்மையும் அறியாமல் செய்த பாவங்கள் கூட விலகும் என்கின்றனர்.








கோயில் அமைப்பு---

இக்கோயிலின் உயரம் 51 அடிகளாகும். கோயிலின் உள்ளே சிவலிங்கம் வைக்கப்பட்டு இருக்கிறது. 

காசி விஸ்வநாதன் கோவிலில் முக்கியமாக சபா கிரஹம்  மற்றும் கர்ப்ப கிரஹம் உள்ளது.
 சபா  கிரஹம் வெளி சுற்றுசுவரை ஒட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த  சபா  கிரஹத்தில் அவிமுக்தேஸ்வரர்,   விநாயகர், காலபைரவர், தண்டபாணி, விஷ்ணு, சனீஸ்வரர், விருபாஷா மற்றும் விருபாஷா கௌரி ஆகியோருக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. இவை அனைத்தும் வெண் நிற பளிங்கு கற்களால் நிறுவப்பட்டுள்ளன.

காசி விஸ்வநாதனின் கோவிலின்  கர்ப்ப கிரஹத்தில்  ஜோதிர்லிங்கம் பிரதான கோவிலின் வளாகத்தில் ஒரு வெள்ளி பலிபீடத்தில் நிறுவப்பட்டுள்ளது. இரண்டு கோபுரங்கள்  தங்க முலாம் பூசப்பட்டவை, ஸ்ரீ காசி விஸ்வநாதனின் சன்னத்திற்கு  மேலே உள்ள கோபுரத்தில் கோயில் கொடி மற்றும் திரிசூலம் உள்ளது.

மூலவர் சன்னதிக்கு பின் பகுதியில் நகரத்தார் நிறுவிய சிவ பெருமான் சன்னதியும்  உள்ளது.

கோவிலின் வடக்கு பகுதியில்  ஞானவாபி என்ற புகழ்பெற்ற கிணறு உள்ளது. இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பின்போது காசி விஸ்வநாதனின் ஜோதிர்லிங்கம் இந்த கிணற்றில் தான்  பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

கோயிலின் உள்ளே நேபாள மன்னரால் கொடுக்கப்பட்ட ஒரு பெரிய மணி தொங்கவிடப்பட்டு இருக்கிறது. இதன் சத்தம் நீண்ட தூரம் கேட்கிறது. 








 காசி அன்னப்பூரணி கோவிலின் தரிசனம் கண்ட  பிறகு மீண்டும் வரிசையில் நின்று காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயம் சென்றோம். நல்ல கூட்டம் மக்கள் பக்தி பரவசத்தில் இடித்து  தள்ளி கொண்டு செல்லுகின்றனர். அவர்களே நம்மையும் இழுத்து சென்று விடுவர். 

நேராக  விஸ்வநாதர் முன்னே நிற்கும் பாக்கியம் கிடைத்தது. சிலிர்ப்பூட்டும் நேரம். 

அந்த காவலாளிகள் போங்கள்  என்று கூறினாலும் இழுத்து தள்ளுவது எல்லாம் இல்லை. நாம்  நடந்து கொண்டே தரிசனம் பெற வேண்டும். நாங்கள் சென்ற பொழுது விசேஷ நாளுக்ககான  அலங்காரத்தில் விஸ்வநாதர். லிங்க ரூபம் தவிர்த்து அனைத்து  இடமும் மஞ்சள் பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மஞ்சள் நிற ஒளி வெள்ளம் என்றும் கூறலாம். அருமையான, மனதிற்கு நிறைவான  தரிசனம்.




முதல் திருமுறை

068 திருக்கயிலாயம்

பாடல் எண் : 3

மாவினுரிவை மங்கைவெருவ மூடி முடிதன்மேல்
மேவு மதியு நதியும்வைத்த விறைவர் கழலுன்னும்
தேவர்தேவர் திரிசூலத்தர் திரங்கன் முகவன்சேர்
காவும்பொழிலுங் கடுங்கற்சுனைசூழ் கயிலை மலையாரே.
 

பொழிப்புரை:
திரங்கிய தோலை உடைய குரங்குகள் வாழும் காடுகளும் பொழில்களும் மலையிடையே இயற்கையாக அமைந்த சுனைகளும் சூழ்ந்த கயிலைமலைப் பெருமானார் உமையம்மை அஞ்ச யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டு முடிமீது பிறை கங்கை ஆகியவற்றைக் கொண்ட இறைவர், தம் திருவடிகளை நினைந்து போற்றும் தேவர்களின் தேவர். முத்தலைச் சூலத்தை உடையவர்.




ஓம் நமசிவாய ! ஓம்  நமசிவாய ! 
ஓம்  நமசிவாய ! ஓம் நமசிவாய ! 
ஓம்  நமசிவாய ! ஓம் நமசிவாய!




தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼

2 comments:

  1. அங்கு என்ன என்ன சந்நிதிகளைச் சேவித்தீர்கள் என்று எழுதலையே.. அடுத்த பகுதியில் வருமா? ஞானவாபியைப் பார்த்துக்கொண்டு இருக்கும் சிவலிங்கத்தைத் தரிசித்தீர்களா?

    ReplyDelete
  2. நன்றி சார்

    அங்கு பார்த்த சந்நிதிகள் பற்றி அடுத்த பதிவில் குறிப்பிட்டு உள்ளேன் ....

    ReplyDelete