ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம்
5. ஐந்தாம் திருநாள் இரவு --- ஐந்து கருட சேவை
7 .ஏழாம் திருநாள் --- சயன திருக்கோலத்தில் ஸ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார்.
(323)
சித்திரகூடத்து இருப்பச் சிறு காக்கை முலை தீண்ட
அத்திரமே கொண்டு எறிய, அனைத்து உலகும்திரிந்து ஓடி
வித்தகனே! இராமாவோ! நின் அபயம் என்று அழைப்ப
அத்திரமே அதன் கண்ணை அறுத்ததும் ஓர் அடையாளம்.
வனவாசத்தின் போது சித்திரகூட மலையில் சீதாப்பிராட்டியின் மடியில் ஸ்ரீராமபிரான் தலைவைத்து சயனித்திருக்கும் போது,
இந்திரன் மகனான ஜயந்தன் பிராட்டியினழகைக் கண்டு மயங்கி அவளைத் தான் ஸ்பரிசிக்க வேண்டுமென்னும் தீயகருத்தினனாய் தேவவேஷத்தை மறைத்துக் காகவேஷத்தைப் பூண்டு கொண்டு வந்து,
பிராட்டியைத் துன்புறுத்த, பெருமாள் விழித்து காகம் மேல் கோபம் கொண்டு அஸ்திரத்தை வீச, அந்த அஸ்திரத்திலிருந்து தப்பிக்க மூன்று உலகங்களுக்கும் ஓடிப்பார்த்து முடியாமல் பிராட்டியின் திருவடியிலேயே வந்து விழுந்தது.
பிராட்டியும் காகம் மேல் இரக்கம் கொண்டு அதற்கு உயிர்ப்பிச்சை அளிக்க பெருமாளிடம் வேண்ட, பிராட்டியின் சிபாரிசுக்காக காகத்தைக் கொல்லாமல் அதன் ஒரு கண்ணை மட்டும் அறுத்து உயிர்ப்பிச்சை அளித்தார்.
இந்தப் பாசுர நிகழ்வை விளக்கும் வகையில் இன்றைய சயன சேவை. வேறெங்கும் காணமுடியாத தரிசனம்.
நாச்சியார் திருமொழி
நாச்சியார் திருமொழி
12.மற்று இருந்தீர்கட்கு
கண்ணனிடம் கொண்டு விடும்படி வேண்டுதல்
முதல் பாசுரம். “எம்பெருமான் வந்து கைக்கொள்ளும் வரை நாம் காத்திருக்கவேண்டும். இப்படிப் பதறக்கூடாது” என்று சொல்ல “என் நிலையைப் புரிந்து கொள்ளாமல் இருக்கும் உங்களுக்கும் எனக்கும் பேச்சுக்கு இடமில்லை. உங்கள் வார்த்தையைக் கேட்பதற்கும் எனக்கு ப்ராப்தியில்லை”.
மற்று இருந்தீர்கட்கு அறியலாகா*
மாதவன் என்பது ஓர் அன்பு தன்னை*
உற்று இருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்*
ஊமையரோடு செவிடர் வார்த்தை*
பெற்று இருந்தாளை ஒழியவே போய்ப்*
பேர்த்து ஒரு தாய் இல் வளர்ந்த நம்பி*
மற் பொருந்தாமற் களம் அடைந்த*
மதுரைப் புறத்து என்னை உய்த்திடுமின்*. 1
617
என்னுடைய நிலைக்கு மாற்பட்டு இருக்கிற உங்களுக்கு அறிய முடியாததாய் மாதவன் விஷயமான அன்பை அடைந்திருக்கிற எனக்கு நீங்கள் கூறுவதெல்லாம் ஊமையும் செவிடனும் பேசிக்கொள்வதுபோல் வீணானது.
இப்போது செய்யத்தக்கது, பெற்ற தாயான தேவகிப்பிராட்டியை விட்டு வேறொரு தாயாகிய யசோதையில் வீட்டிலே வளர்ந்தவனும் மல்யுத்தகளத்திலே மல்லர்கள் வருவதற்கு முன்பு தான் அங்கே முன்பே வந்திருப்பவனுமான கண்ணபிரானுடைய மதுராபுரியின் அருகிலே என்னைக் கொண்டுபோய் சேர்த்துவிடுங்கள்.
ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......
தொடரும் ....
அன்புடன்
அனுபிரேம்💗💗💗
No comments:
Post a Comment