14 July 2023

16. காசி ஸ்ரீ விசாலாட்சி கோயில்

வாழ்க வளமுடன் 




 காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தின்  வரலாறு என்ற முந்தைய பதிவில் அகல்யா பாய் ஹோல்கர்  பற்றி பார்த்தோம். அப்பொழுது பகிர நினைத்து மறந்த ஒரு செய்தி.

தற்பொழுது தினமும் காலையில் பொதிகை தொலைக்காட்சியில் தினம் ஒரு கதை என்ற நிகழ்ச்சியில் திரு.மதுசூதனன் கலைச்செல்வன் மிக அருமையாக பல கதைகளை  கூறுகிறார். அப்படி போன வாரம் அகல்யா பாய் ஹோல்கர்  பற்றி கூறினார்.

அதன்  இணைப்பு இது ... Dhinam oru Kadhai | தினம் ஒரு கதை | Story: 06   நேரம் இருப்பவர்கள் பாருங்கள். மிக சிறப்பாக இருக்கும்.


 




16. காசி விசாலாட்சி கோயில்

காசி விசாலாட்சி கோயில், காசி விசுவநாதர் கோயிலுக்குச் செல்லும் வழியில் வலப்புறத்தில் உள்ளது. விசாலாக்ஷி கோவில் விசாலாக்ஷி கௌரி கோவில் என்றும் அழைக்கப்படுகிறது. 

முக்தித் தலமான காசியில் பக்தர்களுக்கு அருள் செய்ய அழகுடன் மணிகர்ணிகா பீடத்தில் அமர்ந்தவள். எல்லாத் திசைகளில் உள்ளோரும் போற்ற ஒருமித்த உள்ளத்தோடு சத்திய சாதனையை விளக்க சாந்த வடிவத்தோடு காட்சி தருபவள். எட்டுத் திக்குகளில் உள்ளோராலும் போற்றி வணங்கப்படுபவள் இந்த விசாலாட்சி தேவி.

மணிகர்ணிகா காட் என்ற படித்துறையில் அன்னை அருட்பாலிப்பதால் இது மணிகர்ணிகா பீடம் என வணங்கப்படுகிறது.





விசாலாக்ஷி கோயிலின் வரலாறு

காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாக்ஷி ஆகிய முப்பெரும் கோவில்களின் ஒரு பகுதியாக விளங்கும் இக்கோயில் 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். 

புராணங்களின்படி, வாரணாசியின் இந்த புனித ஸ்தலத்தில் சதி தேவியின் காதணி விழுந்துள்ளது. சதி தேவியின் (அக்ஷி) மூன்று கண்களில் ஒன்று இங்கு விழுந்ததால் தான் இது சக்தி பீடம் என்று மற்றொரு பதிப்பு கூறுகிறது. தெய்வீகக் கண்ணால் பிரபஞ்சம் முழுவதையும் உணர முடியும் என்பதால், இங்குள்ள அன்னை விசாலாக்ஷி என்று அழைக்கப்படுகிறாள்.

முன்பு ஒரு காலத்தில் சிவனின் மாமனாரான தட்சன் செய்த யாகத்திற்குச் சென்ற பராசக்தியான தாஷாயணி, அங்கு தானும் சிவனும் அவமதிக்கப்பட்டதால் மனம் வருந்திய சக்தி, அங்கு இருந்த யாககுண்டத்தில் விழுந்து உயிர் துறந்தார்.

இதனை கண்ட சிவன் நெற்றிக்கண்ணை திறந்து வீரபத்திரரையும், பார்வதியின் கோபத்தி்னால் பத்திரகாளியையும் உருவாக்கி தட்சனின் தலையை கொய்து ஒரு ஆட்டின் தலையை வைத்து, அடங்காச் சினத்திடன் தனது தேவியின் இறந்த உடலை எடுத்துச் சிரசின் மேலே வைத்து அண்ட சராசரங்களும் அதிரும்படி சுழன்று ஆவேசமாக நடனம் ஆடினார்.

உலக அழிவு நெருங்கி விட்டதோ என உலக மக்களும் பிரம்மா, தேவாதி தேவர்கள் முதல் அனைவரும் அஞ்சி நடுங்கினார்கள்.

விஷ்ணு பகவான் சதியின் உடலை 52 பகுதிகளாக தனது சக்கரத்தால் அறுத்தார். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் சக்தி பீடமாக மாறியது. பூமியில் உடல் துண்டு விழுந்த இடத்தில் கோயிலாக மாறியது. 

சிவபெருமான் சக்தி பீடத்தை பாதுகாக்க ஒவ்வொரு சக்தி பீடத்திற்கும் 52 பைரவர்களை பாதுகாவலராக உருவாக்கினார். வாரணாசியில் அவரது கண்கள் அல்லது காதணிகள் விழுந்ததாகக் கருதப்படுகிறது, அதனால்தான் வாரணாசியில் உள்ள கோயில் விசாலாக்ஷி கோயில் என்று அழைக்கப்படுகிறது.






ஸ்ரீ விசாலாக்ஷி கோவிலின் அமைப்பு -

ஸ்ரீ விசாலாக்ஷி கோயில் தென்னிந்திய கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ளது.

 நுழைவாயிலில் உள்ள கோபுரம் விரிவான சிற்ப வேலைப்பாடுகளைக் கொண்டுள்ளது மற்றும் கோயிலில் சிவலிங்கங்கள் வரிசையாக உள்ளன. 

பிரதான சன்னதியின் முன் உள்ள நான்கு தூண்களும் வண்ணமயமான சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. சிறிய கோவில் தான் ஆனால்  பக்தி மணம்  கமழும் இடம்.

 கர்ப்பகிரகத்தில் விசாலாக்ஷி தேவியின் இரண்டு சிலைகள் உள்ளன - ஆதி விசாலாக்ஷி என்று அழைக்கப்படும் ஒரு சிறிய கருங்கல் சிலை. இது இடது பின்புறத்தில் உள்ளது. முன்புறம் அன்னையின்  சிலை உள்ளது. 

நாட்டுக்கோட்டை நகரத்தாரால் காசி விஸ்வநாதர் கோயில் அருகே புதிய இடம் வாங்கி தமிழக கட்டிடகலையில் கி.பி1893 இல் விசாலாட்சி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலுக்கு பிலவ ஆண்டு தை மாதம் 25ஆம் நாள் (கி.பி1908இல்) நாட்டுக்கோட்டை நகரத்தாரால் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது.  இன்றும் இக்கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தார் நிர்வாகத்தில் உள்ளது.






ஆதி சங்கராச்சாரியார், பல படையெடுப்புகளின் சுமைகளைத் தாங்கிய தெய்வத்தின் சக்திகளைப் புதுப்பிக்க பிரார்த்தனை செய்தார். இங்கு ஸ்ரீ யந்திரத்தையும் நிறுவினார்.

விசாலாக்ஷி கோயில் கஜலி திஜ் திருவிழாவிற்கு பெயர் பெற்றது, ஆகஸ்ட்மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அம்மன் வெற்றியையும் செல்வத்தையும் அளிப்பதால் அம்மனுக்கு பூஜை, ஜல், பாடல்கள் பாடுவது மிகவும் லாபகரமானது என்று நம்புகிறார்கள்.

 தனிச் சன்னதியில் அன்னை விசாலாட்சி நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள்.

சாந்த வடிவத்தோடு எட்டு திக்குகளிலும்  உள்ளோரால் பக்தர்களுக்கு அருள் புரியும் வகையில், அன்னை விசாலாக்ஷி எனப்படும் மணி கர்ணிகா பீடத்தில் அமர்ந்து, அழகுற அருள்பாலிக்கிறாள். தன்னை அன்போடு வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்கள் யாவையும் நிறைவேற்றுகிறாள் அந்த அம்மன்.

நவராத்திரியின் போது 9 நாட்களும் நவதுர்க்காவடிவில் தோன்றும் தேவியானவள், அப்போது வேண்டுபவர்களுக்கு வேண்டியதை தருகிறாள். 




காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்திலிருந்து, அடுத்து விசாலாட்சி அம்மனை காண சென்றோம்.

 நம் காஞ்சி காமாட்சியம்மன், மதுரை மீனாட்சியம்மன் அவர்கள் எல்லாம் மிகப் பெரிய கோவில்களில் கண்டு விட்டு காசி விசாலாட்சி அம்மனையும் அவ்வாறு தேடி சென்றால் ஏமாற்றமே வரும். இந்த அம்பாள் மிகச் சிறிய கோவிலில் அமர்ந்து மிக அருமையான தரிசனத்தை அனைவருக்கும் தருகின்றாள்.

இங்கு  கோவிலும் மிக சிறியது, தாயாரும்  சிறிய மூர்த்தி  ஆனால்  மனதிற்கு வருகின்ற நிறைவு  மிக அதிகம். இந்த இடமே புராதனமாக, நல்ல சுகந்த மணத்தோடு  அமைதியாக காட்சி தருகின்றது.

 விஸ்வநாதர் கோயிலில் அத்தனை கும்பல் இருந்தாலும் இங்கு அத்தனை கூட்டம் ஏதுமில்லை. மிக நிதானமான தரிசனம்  கிடைத்தது. ஒருவேளை நாங்கள் சென்ற நேரம் அவ்வாறு இருக்கலாம். நாங்கள் இங்கு செல்லும் பொழுது மதியம் மூன்று மணி.

 மிகப் பொறுமையாக இந்த அம்பாளை  தரிசித்து வெளியே வந்தோம். பிறகு வரும் வழியில் இன்னும் இரண்டு மூன்று அம்பாள் சன்னதிகள் இருந்தது அனைவரையும் வணங்கி விட்டு வந்தோம். 

எல்லா தரிசனமும் முடிந்த பிறகே  எங்களின் மொபைல் ஃபோனை லாக்கரிலிருந்து  எடுத்தோம். அதனால் இன்று பகிர்ந்த படங்களும்  காசி விசாலாட்சி அம்மன்  கோயில் முகநூல் தளத்திலிருந்து.

இப்பொழுது மணி நான்காகி  விட்டதால் நேராக எங்களது மடத்திற்கு வந்து விட்டோம். சிறிது நேரம் அங்கேயே உண்டு விட்டு ஓய்வெடுத்த பின் மாலை எங்கு சென்றோம் அடுத்த பதிவில்....





இந்த முக்தி தலத்தில் வந்து உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும் என்கிறார்கள். ஆன்மா பிரியும் தருணம் அவர்களை விசாலாக்ஷி தன் மடி மீது கிடத்திக் கொள்வதாகவும், விஸ்வநாதர் அவர்களது காதில் ஸ்ரீ இராம நாமத்தை உபதேசிப்பதாகவும் நம்பப்படுகிறது.


காஞ்சி காமாட்சி மதுரை மீனாட்சி

காசி விசாலாட்சி கருணாம்பிகையே!

தருணம் இதுவே தயை புரிவாயம்மா!

பொன் பொருள் எல்லாம்

வழங்கி எம்மை வாழ்த்திடுவாயம்மா!

ஏன் என்று கேட்டு என் பசி தீர்ப்பாய்

என் அன்னை நீயே அம்மா!

மங்களம் வழங்கிடும் மகாசக்தியே!

மங்கலத் தாயே நீ வருவாயே!

என்னுயிர் தேவியே! எங்கும் நிறைந்தவளே!

எங்கள் குலவிளக்கே! நீ வருவாயே!

பயிர்களில் உள்ள பசுமையில்

கண்டேன் பரமேஸ்வரி உனையே!

சரண் உனை அடைந்தேன்

சங்கரி தாயே, சக்தி தேவி நீயே!

அரண் எனக் காப்பாய்

அருகினில் வருவாய் அகிலாண்டேஸ்வரியே!



அன்னை விசாலாட்சி திருவடிகளே சரணம் ...


தொடரும் ...



அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼



1 comment:

  1. படங்களும் தகவல்களும் அருமை, அனு. அங்கும் நகரத்தார் பராமரிப்பில் இருக்கா. இப்ப நானும் நகரத்தார் பராமரிப்பில் உள்ள சிவன் / வைரவர் கோயில் பத்திதான் சொல்லிருக்கிறேன்.

    கீதா

    ReplyDelete