25 July 2023

பத்தாம் திருநாள் - ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி வைபவம்...

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திரு ஆடிப்பூர உற்சவம் 



 2 . இரண்டாம்  நாள் இரவு 

 3. மூன்றாம் திருநாள்  இரவு 



5.  ஐந்தாம்  திருநாள் இரவு  --- ஐந்து கருட சேவை 

6. ஆறாம் திருநாள் 



9. ஒன்பதாம் திருநாள் -  திரு ஆடிப்பூரத்தை முன்னிட்டு திவ்ய தம்பதிகள் திருத்தேரில் ...


ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூரத்தை முன்னிட்டு திருவாடிப்பூர நந்தவனம் எழுந்தருளி அங்கு திருமஞ்சனம் கண்டருளிய பின் சிறப்பு அலங்காரத்தில் திவ்ய தம்பதிகள் சேவை...







10.பத்தாம் திருநாள் -  ஶ்ரீ ஆண்டாள் முத்துக்குறி   வைபவம்...










ஆண்டாள் செட்டியக்குடித் தெருப்பெண் அலங்காரத்தில் எழுந்தருளி இருக்கிறார்.

அரங்கன் வந்து தன்னைக் கைத்தலம் பற்றும் நாளும் விரைவில் வராதோ என்று ஆண்டாள்-தலைவி ஏங்கி,ஏங்கி உருகி மெலிந்து விடுவாராம்.

தலைவியின் தாய் தன் மகள் பெருமாள் மேல் காதல் கொண்டு, இப்படி உருகி உருகி மெலிகிறாளே என்று 'இரக்கம் இல்லாத பெருமாளே' என்று கோபித்துக் கொள்வார்.


வாள்-நுதல் இம் மடவரல் உம்மைக்
காணும் ஆசையுள் நைகின்றாள்;விறல்
வாணன் ஆயிரம் தோள் துணித்தீர்! உம்மைக்
காண, நீர் இரக்கம் இலீரே

(திருவாய்மொழி 2-4-2)

தலைவியின் நிலை, தாயின் புலம்பல்,  தோழி இயம்புதல் ஆகியவற்றை பல பாசுரங்கள் வாயிலாக அரையர் ஸ்வாமி எடுத்துரைப்பார்.

108 திவ்ய தேசப் பெருமாள்கள், ஆண்டாள் நாச்சியாரை மணம் புரிய வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் வந்து விடுகிறார்களாம்.

அவர்களில் யார் ஆண்டாள் கனாவில் கண்ட பெருமாள் என்று கட்டுவிச்சி என்னும் குறத்தி குறி சொல்வாள். அரையர் ஸ்வாமியே குறத்தியாகவும் இருந்து சொல்வார்.

இதற்காக ஆண்டாள் சந்நிதியில் பாரம்பரியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும் நன்முத்துக்களை ஒரு தாம்பாளத்தில் பரப்பி, அவற்றை கைகளால் அலைந்து
ஒவ்வொருவராக விலக்கி நிறைவாக அரங்கர்/ரங்கமன்னார் தான் ஆண்டாள் கவர்ந்த பெருமாள் என்று ஆண்டாளும்,ரங்கமன்னாரும் கூடுவதாக கட்டுவிச்சி (அரையர்) உரைப்பார்.

இந்த வைபவத்தில் அரையரே கேள்வி-பதில் சொல்வார்....

தகுந்த பாசுரங்களை இசைப்பார்....சில இடங்களில் அபிநயமும் செய்வார்....


பட்டு உடுக்கும்; அயர்ந்து இரங்கும்; பாவை பேணாள் 
பனி நெடுங் கண் நீர் ததும்பப் பள்ளி கொள்ளாள் * 
எள் துணைப் போது என் குடங்கால் இருக்ககில்லாள், 
எம்பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும் *
மட்டு விக்கி மணி வண்டு முரலும் கூந்தல் 
மட மானை இது செய்தார் தம்மை * மெய்யே 
கட்டுவிச்சி! சொல் என்னச் சொன்னாள், நங்காய்! 
கடல் வண்ணர் இது செய்தார்,காப்பார் ஆரே? 

11 2062

(திருநெடுந்தாண்டகம்)

என் மகளை இந்நிலைமைக்கு ஆளாக்கியவர் யார்? தாயின் கேள்விக்கு கட்டுவிச்சி தன் பதிலைப் பதிவு செய்கிறாள்..
அழகனின்.. அந்த அரங்கனின்.. காரியமே இது..

என்ன இது?

அவனே இதற்குக் காரணம் என்றால் என் மகளைக் காப்பவர் யார்?
அப்படி என்னதான் செய்துவிட்டான் அழகன்?
பட்டாடையை உடுத்திக் கொள்கிறாள்..
அவன் வரவுக்காய் காத்திருக்கிறாள்..
அவன் வரவில்லை..

ஏமாற்றத்தின் உச்சத்தில் ஏங்கித் தவிக்க விட்டான்..
விரும்பி விளையாடும் மரப்பாச்சி கூட தொடாத பொருளாகி விட்டது..
விழிகளில் நீர் ததும்ப உறக்கத்தை துறக்கின்றாள்..

என் அரங்கன் பள்ளி கொண்ட திருவரங்கம் எங்கே எனக்
கேட்டபடியே இருக்கிறாள்..
என் மகளை இந்நிலைமைக்கு ஆளாக்கியவன் அவனேதான்..



நாச்சியார் திருமொழி
12.மற்று இருந்தீர்கட்கு

கண்ணனிடம் கொண்டு  விடும்படி வேண்டுதல்



ஐந்தாம் பாசுரம். அங்கிருந்தவர்கள் இவளுக்கு உள்ள நோயை அறிந்து சரியான பரிஹாரம் செய்ய வேண்டும் என்று துக்கப்படத் தொடங்கினார்கள். இவள், நீங்கள் உறவினார்களாக இருக்கும் காரணத்தினால் மட்டும் என் நோயை அறிய முடியாது என்கிறாள்.


ஆர்க்கும் என் நோய் இது அறியலாகாது*  
அம்மனைமீர்! துழதிப் படாதே* 
கார்க்கடல் வண்ணன் என்பான் ஒருவன்*  
கைகண்ட யோகம் தடவத் தீரும்* 

நீர்க் கரை நின்ற கடம்பை ஏறிக்*
  காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து* 
போர்க் களமாக நிருத்தம் செய்த*  
பொய்கைக் கரைக்கு என்னை உய்த்திடுமின்*.     5
621


தாய்மார்களே! என்னுடைய இந்த நோய் எப்படிப்பட்டவர்களுக்கும் அறிய முடியாதது. நீங்களும் துக்கப்படாமல் காளிங்கன் வசித்த மடுவின் கரையில் இருந்த கடம்ப மரத்தின் மேலேறி காளிங்கனின் தலையின் மேல் ஒரு நர்த்தன வகையாகப் பாய்ந்து அந்தப் பொய்கைக்கரையே ஒரு போர்க்களம் ஆகும்படியாக நர்த்தனம் செய்யப்பெற்ற பொய்கையின் கரையிலே என்னைக் கொண்டுபோய்ப் போடுங்கள். கறுத்த கடல் போன்ற நிறத்தை உடையவனான கண்ணன் தனது திருக்கைகளால் என்னைத் தடவினால் இந்த நோய் தீர்ந்துவிடும். இது கைமேல் பலிக்கக்கூடிய வழி.


 ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்.......




தொடரும் ....

அன்புடன்
அனுபிரேம்💗💗💗

No comments:

Post a Comment