08 July 2023

54.கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே !

 (54) கண்டு வந்தேன் என்றேனோ திருவடியைப் போலே !




ராமாயணத்தில் சீதையைத் தேடிக் கண்டு பிடித்து ராமரிடம் வந்து சொல்லும் காண்டம் ‘சுந்தரக் காண்டம்’.  சுந்தர என்றால் அழகு என்று பொருள். ராமர் எல்லோருக்கும் ஆனந்தத்தைக் கொடுப்பவர். ராமருக்கு நல்ல செய்தி கொண்டு வந்து அவருக்கே ஆனந்ததைக் கொடுத்த காண்டம். அதனால் இது அழகான காண்டம் ! சுந்தரக் காண்டம்!


இராவணனால் கடத்திச் செல்லப்பட்ட சீதையைத் தேடி காடு முழுதும் அலைந்தபோது கபந்தனை சந்திக்கின்றனர் இராமலக்ஷ்மணர். கபந்தனின் வதத்திற்கு பின் அவனது ஆலோசனையின்படி ரிஷ்யமுக பர்வதத்தை அடைகின்றனர். 

இராமருக்கும், லக்ஷ்மணனுக்கும் வானரர்களின் அரசனான சுக்கிரீவனின் நட்பு கிடைத்தது. சுக்ரீவன் அவர்களுக்கு உதவி புரிய சம்மதித்ததால் இராம லக்ஷமணரும் சுக்ரீவனை கிஷ்கிந்தையின் அரசன் ஆக்க உதவி புரிந்தனர்.


இராமனுக்கு உதவி புரிய விரும்பிய சுக்ரீவன், நான்கு திசைகளிலும் வானர கூட்டங்களை அனுப்பி சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்துவரச் சொன்னான். அங்கதனின் தலைமையில் தெற்கு திசையில் ஜாம்பவானையும் ஹனுமனையும் (திருவடி) அனுப்பி வைத்தான்.

 ஒரு மாதத்திற்குள் அவர்கள் சீதையின் இருப்பிடம் குறித்து அறிந்து வர ஆணையிட்டான்.

அனுமார் ஒரு பிரம்மச்சாரி அதனால் பெண்ணின் பெருமையை அறியாதவர். ஒரு பெண்ணைத் தேட எல்லோரும் இவ்வளவு மெனக்கெடுகிறார்கள் என்று மனதில் ஒரு எண்ணம். 

ராம, லக்ஷ்மணர்களை முதலில் பார்த்தபோது ராமர் வருத்தத்தில் இருக்கிறார். 

அப்போது அனுமார் தன் மனதில் “ஒரு தேசத்தின் மகாராஜா ராமர் ஒரு பெண்ணுக்காக இப்படி வருத்தப்படுகிறாரே! வேறொரு பெண்ணைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாதா ?” என்று நினைக்கிறார்.

ஹனுமன் சீதையை சந்திக்கக்கூடும் எனும் ஓர் உளக்குறிப்பில் இராமன் அவரிடம் தன் கணையாழியை தந்தார், இராமதூதன் என்ற சின்னமாக. வானரங்கள் தெற்கு சாகரத்தை அடைந்து வழி தெரியாமல் அமர்ந்தபோது, ஜடாயுவின் சகோதரன் சம்பாதியை சந்திக்கின்றனர். 

சீதை லங்கையில் இருக்கிறாள் என்று அறிந்த வானரங்கள் மேற்கொண்டு செய்ய வேண்டியதை கலந்தாலோசித்தன. ஜாம்பவானின் அறிவுரையின் படி வாரனங்கள் ஹனுமனை சீதையைக் காண அனுப்பின.


கடல் தாண்டி சென்ற ஹனுமன், இலங்கை அடைந்து, அசோகவனத்தில் சிறைப் பிடிக்கப்பட்டுள்ள சீதையைக் கண்டார். 


ஒரு பெண்ணுக்கு ஏன் ராமர் இவ்வளவு வருத்தப்படுகிறார் என்று முன்பு நினைத்த அனுமார் இப்போது “எப்படி ராமர் சீதையைப் பிரிந்து இவ்வளவு காலம் உயிருடன் இருக்கிறார்!” என்று எண்ணுகிறார். 

பிறகு அனுமார் மரத்தின் மீது ஏறி ராமருடைய கதையைச் சீதைக்குக் கூறுகிறார். 

இராமன் தன்னிடம் கொடுத்த கணையாழியை சீதையிடம் வழங்கி, தான் இராமனின் தூதுவன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். சீதைக்கு நம்பிக்கையும், ஆறுதலும் கூறி பின் சீதை கொடுத்த சூடாமணியை எடுத்துக் கொண்டு கிஷ்கிந்தையை வந்தடைந்தார்.


தன் வரவை எதிர்நோக்கி காத்திருந்த இராமனிடம் ஹனுமன் கூறிய முதல் வாசகமே - த்ருஷ்டா சீதா - "கண்டேன் சீதையை!" என்றுதான்.

 “சீதையை” என்று தொடங்கி இருந்தால் இராமன் சீதைக்கு என்ன நேர்ந்து விட்டதோ என்று பதைத்து விடுவாரோ என்று எண்ணியும், இராமனுக்கு மணித்துளி மனவருத்தத்தையும் தான் அளிக்கக் கூடாதெனக் கருதியும், தன் சொல்லில் ஐயம் எழக்கூடாதெனக் கருதியும் ஹனுமான் “கண்டேன்” என ஆரம்பித்தார்.


கம்பன் மிக அற்புதமாக இக்காட்சியை வர்ணிக்கிறார்:


"கண்டனென் கற்பினுக்கு அணியைக் கண்களால்

தெண்திரை அலைகடல் இலங்கைத்தென்நகர்

அண்ட நாயக! இனித் தவிர்தி ஐயமும்

பண்டுஉளதுயரும் என்று அனுமன் பன்னுவான்."


"சீதையைப் பார்த்தேன்" என்று ஆரம்பித்தால் ஒரு வார்த்தைக்கும் மற்றொரு வார்த்தைக்கும் இடையில் தவறான அர்த்தத்தை இராமபிரான் கற்பித்துக் கொண்டால் என்ன செய்வது என்று "கண்டனென்" என்று தொடங்குகிறான். 

அடுத்து முக்கியமான விஷயம் பிராட்டியின் கற்பின் நிலை. சீதை என்று கூறாமல் "கண்டனென் கற்பினுக்கணியை" என்பதன் மூலம் கம்பன் தன் அற்புத வார்த்தைகளால் ஹனுமனை சொல்லின் செல்வனாக மாற்றி விடுகிறார்.


ராமர் மனம் குளிர்ந்து “அனுமானே! நீ இரண்டு உயிர்களைக் காப்பாத்திருக்கிறாய். ஒன்று நான் இன்னொன்று சீதை. அதற்குப் பரிசாக என்னிடம் இருப்பது ஓர் உயிர் தான். நான் என்ன செய்வேன்! என்னையே உனக்குக் கொடுக்கிறேன்” என்று அனுமாரை தன் மார்புடன் ஆரத்தழுவிக்கொண்டார். ராமரின் நறுமணம் அப்படியே அனுமார் மீது பரவியது.


"அப்படிப்பட்ட அனுமனைப் போல பெருமானுக்கு சேவை செய்தேனா? இல்லையே! பிறகு நான் இந்த திருக்கோளூரில் இருந்து என்ன பயன்? கிளம்புகிறேன்" என்று அந்தப் பெண் கிளம்பினாள்.

முந்தைய பதிவுகள் - 

திருக்கோளூர் பெண்பிள்ளை  ரகசியம் முன்னுரை ...

1. அழைத்து வருகின்றேன் என்றேனோ அக்ரூரரைப் போலே.
2 . அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போல
3. தேகத்தை விட்டேனோ ரிஷிபத்தினியைப் போலே
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயைப் போலே
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே
9. மூன்றெழுத்துச் சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே
10. முதலடியைப் பெற்றேனோ அகலிகையைப் போலே





திருவாய்மொழி -முதற் பத்து

 1- 10 பொருமா நீள் படை

ஈஸ்வரன் செய்யும் உபகாரம் 

                                          எந்தையே என்றும்*  எம் பெருமான் என்றும்,* 
சிந்தையுள் வைப்பன்*  சொல்லுவன் பாவியேன்,*
எந்தை எம் பெருமான் என்று*  வானவர்,* 
சிந்தையுள் வைத்துச்*  சொல்லும் செல்வனையே. 10.7

3004

          
செல்வ நாரணன் என்ற*  சொல் கேட்டலும்,* 
மல்கும் கண்பனி*  நாடுவன் மாயமே,*
அல்லும் நன்பகலும்*  இடைவீடு இன்றி,* 
நல்கி என்னை விடான்*  நம்பி நம்பியே. 10.8

3005








55. திருப்பவளவண்ணம்

ஸ்ரீ பவளவல்லீ ஸமேத ஸ்ரீ பவளவண்ண ஸ்வாமிநே நமஹ


சுவாமி இராமானுஜர் திருவடிகளே சரணம்!!!


ரகசியம் தொடரும்...

அன்புடன் 
அனுபிரேம்  💕💕


2 comments:

  1. சிறப்பான பதிவு. தொடரட்டும் பதிவுகள்.

    ReplyDelete
  2. வணக்கம் சகோதரி

    பதிவு அருமை. பல முறை படித்த கதை என்றாலும், புதிதாக படிப்பது போன்ற பிரமை. இதிகாசங்கள் படிக்கப்படிக்க திகட்டாதவை அல்லவா..! நாமும் அந்த ஸ்ரீ ராமரின் அடி பற்றிய பக்திக்கு இணையில்லாத ஸ்ரீஆஞ்சநேயர் புகழ் பாடி இருவரையும் பக்தியுடன் தொழுவோம். படங்கள் அருமை. ஸ்ரீநாராயணனை தரிசித்துக் கொண்டேன். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete