12 July 2023

15. காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தின் வரலாறு (அகல்யா பாய் ஹோல்கர் )


வாழ்க வளமுடன் 














காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்த்தின்  வரலாறு ...

காசி ஸ்ரீ விஸ்வநாதர் ஆலயத்தை   முகலாய சக்ரவர்த்தி அக்பரின்  வருவாய்துறை அமைச்சர் தோடர்மால்  கட்டினார். 

தோடர்மால் தனது குருவான நாராயண் பட் உதவியுடன் ஷகி கஜானா நிதியிலிருந்து இந்தப் பணியைச் செய்துள்ளார். ஆனால் காசி விஸ்வநாதர் கோயிலின் பழங்கால வரலாற்றிலும், கல்வெட்டுகளிலும் இதுபற்றிய தகவல்கள் ஏதுமில்லை. 

கி.பி 1034ம் ஆண்டு முதல் காசி விஸ்வநாதர் கோயில் பலமுறை முகலாய பேரரசர்களால் இடித்து தள்ளப் பட்டுள்ளது. இதை இந்துக்கள் திரும்பத் திரும்ப கட்டி வந்துள்ளனர். 

கி.பி  1669-ல் அக்பரின் பேரன் அவுரங்கசீப் விஸ்வநாதர் கோயிலில் உள்ள சிருங்கர் மண்டபத்தின் சுவரை ஆதாரமாகக் கொண்டு கோயில் அருகில் ஒரு மசூதியையும் கட்டினார்.

 இப்போதும் இந்த மசூதி இருக்கிறது. 

இப்போதுள்ள காசி விஸ்வநாதர் கோயில் 1777ம் ஆண்டு கட்டப்பட்டது. 

இந்தூர் ராணி அகல்யாபாய் இக்கோயிலைக் கட்டினார். அப்பொழுது இந்த கோயில் மிகவும் சிறிய கோயில் தான். குறுகலான பாதையில் சென்று கோயிலை அடைய வேண்டும். 

பூஜை பொருட்களைக் கொண்டு பக்தர்களே ஆராதனைகள் அனைத்தையும் செய்யலாம். அர்ச்சகரிடம் கொடுத்து பூஜிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 

1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டது

1780 ஆம் ஆண்டில், மால்வாவின் ராணி அகிலியாபாய் ஹோல்கர் கியான் வாபி வளாகத்திற்கு அடுத்ததாக, அருகில் ஒரு புதிய கோவிலைக் கட்டினார். புதிய வளாகம் தான் இப்போது காசி விஸ்வநாதர் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

1853 ஆம் ஆண்டில், பஞ்சாபின் ரஞ்சித் சிங் கோயிலின் கோபுரத்தை அலங்கரிப்பதற்காக 880 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.

மகாராஜா ரஞ்சித்சிங் கோயிலுக்கு 820 கிலோ தங்கத்தை நன்கொடையாக வழங்கினார்.

 காசி விஸ்வநாதர் கோவிலின் வரலாறை தேடி படித்த பொழுது இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர் பற்றி அறிய நேர்ந்தது. படித்தை இங்கே பகிர்வதில் மிக மகிழ்ச்சி. 

காசி விஸ்வநாதர் கோவில் பற்றியும், சிவனை பற்றியும் எழுதும் ஆன்மீக பயண குறிப்பில் ஏன்  இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர்  பற்றி எழுத வேண்டும் ...ஏன்னெனில்  நமக்கு இந்த சிவ தரிசனம் செய்விக்க அவர் செய்த செயல்கள் நம்மால் கனவிலும் எண்ண  இயலாதது. நம் முன்னே நமக்காக போராடிய ஒருவரை அறிந்து கொள்வதில்  பெருமை தானே  எனவே தான்  அவரை பற்றியும் இங்கே பகிர்கிறேன் ...

இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர்  பற்றி 







பிறப்பு: 31 மே 1725

இறப்பு: 13 ஆகஸ்ட் 1795

 இந்தூர் ராணி அகல்யா பாய் ஹோல்கர்   சிவபெருமானின் தீவிர பக்தை. காசி விஸ்வநாதர் கோயில் உட்பட பல கோயில்கலை நிர்மாணித்தவர், புனரமைத்தவர் இவர்.


ராணி அஹில்யாபாய் 1725 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி, மஹாராஷ்டிராவின் சௌண்டி கிராமத்தில் பிறந்தார்.

 அவரது தந்தை, மான்கோஜி ஷிண்டே, ஒரு மரியாதைக்குரிய குடும்பத்திற்கு வாரிசாக இருந்தார். அந்த நேரத்தில் பெண்கள் பள்ளிக்குச் செல்லவில்லை, ஆனால் அஹில்யாபாயின் தந்தை அவளுக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக் கொடுத்தார். 

ஒருமுறை மராட்டிய பேஷ்வா பாஜி ராவின் சேவையில் இருந்த தளபதியான ஸ்ரீ மல்ஹர் ராவ் ஹோல்கர், புனே செல்லும் வழியில், சௌண்டியில் இடையில் நின்று, கிராமத்தில் உள்ள கோவிலில் எட்டு வயது சிறுமி அஹில்யாபாய் சேவை செய்வதைக் கண்டார். 

அவளுடைய பக்தியையும் அவளுடைய குணத்தையும் உணர்ந்து, அஹில்யாபாயை ஹோல்கர் பிரதேசத்திற்கு தன் மகன் கந்தேராவ் ஹோல்கருக்கு மணப்பெண்ணாகக் கொண்டு வந்தான். அவர்கள் 1735 இல் திருமணம் செய்து கொண்டனர். 

அவர்களுக்கு மலேராவ் என்ற மகனும் முக்தாபாய் என்ற மகளும் என இரு குழந்தைகள் இருந்தனர். 

அஹில்யாபாய், முக்தாபாயை (அவரது மகள்) யஷ்வந்த்ராவுக்கு திருமணம் செய்தபோது மற்றொரு பாரம்பரியத்தை உடைத்தார்.  யஷ்வந்த்ரா ஒரு ஏழை ஆனால் வீரம் மிக்கவர். அவர்  கொள்ளையர்களை தோற்கடித்த வீரத்திற்க்காக அஹில்யாபாய் முக்தாபாயை  யஷ்வந்த்ராவுக்கு திருமணம் செய்து வைத்தார் .

 1754 இல், கும்ஹர் முற்றுகையின் போது கந்தேராவ் ஹோல்கர் கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்குப் பிறகு, அவரது மாமனார் மல்ஹர் ராவ் அஹில்யா பாய் சதி செய்வதைத் தடுத்தார்.

1766 இல், மல்ஹர் ராவ் ஹோல்கர் இறந்தார், அவரது மகன் கந்தேராவ் இறந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு. 

1766 ஆம் ஆண்டில், மல்ஹர் ராவின் பேரனும் கந்தேராவின் ஒரே மகனுமான மாலே ராவ் ஹோல்கர் அஹில்யாபாயின் ஆட்சியின் கீழ் இந்தூரின் ஆட்சியாளரானார், ஆனால் அவரும் சில மாதங்களுக்குள் 5 ஏப்ரல் 1767 அன்று இறந்தார்.

ஏற்கனவே ஆட்சியாளராக பயிற்சி பெற்ற அஹில்யாபாய், நிர்வாகத்தை தானே எடுத்துக் நடத்துவதாக  பேஷ்வாவிடம் மனு செய்தார். மால்வாவில் சிலர் அவளை ஆட்சியாளராக ஏற்றுக்கொள்வதை எதிர்த்தனர், ஆனால் ஹோல்கரின் இராணுவம் அவளுக்கு ஆதரவளித்தது. அவளுக்குப் பிடித்த யானையின் ஹவுடாவின் மூலைகளில் பொருத்தப்பட்ட நான்கு வில் மற்றும் அம்புகளுடன் அவள் அவர்களை நேரில் அழைத்துச் சென்றாள். 


1767 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி பேஷ்வா அவளுக்கு அனுமதி வழங்கினார், மேலும், சுபேதார் துகோஜிராவ் ஹோல்கர் (மல்ஹர்ராவின் வளர்ப்பு மகன்) இராணுவ விவகாரங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் மிகவும் பண்பட்ட முறையில் மால்வாவை ஆட்சி செய்யத் தொடங்கினார்.


 அவுரங்கசீப் ஆட்சி காலத்தில் இந்துக்கள் அளவு கடந்த துயரத்தை அனுபவித்தார்கள். 

பாரத தேசத்தில் அடி நாதமாக விளங்கும் ஆன்மீகத்தை கருவறுத்து விட்டால் நிச்சயம் இந்துக்களை மதம் மாற்றி விடலாம் என்ற நப்பாசையில் பாரத முழுவதும் சுமார் நாற்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்களை இடித்து தள்ளினான் அந்த கொடுங்கோலன் ஔரங்கசீப்.

முதலில் அவன் கை வைத்தது இந்துக்களின் ஆன்மீக தலைநகராக விளங்கும் காசி விஸ்வநாதர் கோவிலை தான் படைகளை அனுப்பி காசி விஸ்வநாதர் கோவிலை நாசம் செய்தான்.

 அதுமட்டுமல்ல இடிந்த கோவிலுக்கு மேலே மசூதியை கட்டி ஞானவாபி மசூதி என்று பெயரிட்டு கொக்கரித்தான்.

 காசி விஸ்வநாதர் லிங்க திருமேனியை கிணற்றுக்குள் வீசினான். இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த ராணி அகல்யா பாய் உடனடியாக பக்கத்திலேயே ஒரு அழகிய கோவிலை கட்டி விஸ்வநாத சுவாமியை பிரதிஷ்டை செய்து இந்துக்கள் தங்கள் வாழ்நாள் கடமையை சரிவர செய்வதற்கு பேருதவி புரிந்தார்கள்.

அந்த சமயத்தில் கூட உண்மையான கருவறையை நோக்கி இருந்த அந்த நந்தி சிலையை, வருங்காலத்தில் இப்படி ஒரு சோக வரலாறு நடந்தது என்பதை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக பெயர்த்து எடுக்காமல் அப்படியே நிலைபெற வழிவகை செய்தார்கள்.

 ராணி அகல்யா பாய் என்கின்ற அந்த வீர பெண்மணி தீரமிகு இந்த முயற்சிகளை எடுத்திருக்கா விட்டால் இன்றைய தினம் காசி விஸ்வநாதர் என்னும் அந்த பெருமித உணர்வு இந்துக்கள் மனதில் இருந்து சுத்தமாக அழிக்கப்பட்டிருக்கும்.

முஸ்லிம்கள் ஆட்சி காலத்தில் இடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பெரிய பிரம்மாண்டமான கோவில்களை, தனது ராஜ்ஜியத்தின் சொத்துக்கள் மூலம் புனர்நிர்மாணம் செய்து இந்துக்கள் தங்கள் வழிபாட்டு கடமைகளை ஆற்ற துணை நின்றார்.

இவர் ஆட்சி காலத்தில் நகர மக்கள் இன்றும் போற்றும் வண்ணம் நல்ல சாலைகளும் கல்விக்கூடங்களும் மருத்துவமனைகளும் இவர் செய்த பணிகளாக நிற்கின்றன.

 சுமார் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இவரது அரண்மனை மிகவும் வித்தியாசமான, மேற்கத்திய கட்டடக் கலை அம்சங்களுடன் ஒரு ஐரோப்பிய நாட்டு அரண்மனையைப் போன்று விளங்குகிறது.

இவரின் தர்பார் மண்டபம் 108 ருத்ராட்ச லிங்கம், நவமணிகளின் ஒவ்வொரு ரத்னத்திலும் கட்டை விரல் அளவு சிவலிங்கங்கள், நர்மதை நதியில் இருக்கும் பளிங்குக் கல்லைக் கொண்டு செய்யப்பட்ட பாண லிங்கங்கள் என்று அந்த மண்டபத்தை அப்படியே ஒரு ஈஸ்வர லோகமாக அமைத்தவர்.

இறையருள் பெற்ற இந்தூரை மகாராணி ‘அகல்யாபாய்’ ஆண்ட பொழுது பல அற்புத ஆலயங்களையும், ஏற்கனவே இருந்த பழைய கோயில்களை புதுப்பித்தும், தனக்கென்ற ஒரு வழிபாட்டு முறைகளை ஏற்படுத்தி விட்டுப்போய் இருக்கிறார். 


நாற்பத்தி மூன்று தீர்த்தக் குளங்களை ஏற்படுத்தியிருக்கிறாள். துவாதசலிங்க க்ஷேத்திரங்கள் என்று 97 வகைப்பட்ட ஆலயங்களை கட்டிய பெருமை இவரையே சாரும். இந்த ஆலயங்களை பராமரிக்கவும், அன்றாட வழிபாடுகள் நடைபெறவும் இவரால் பல லட்ச ரூபாய் வாரி வழங்கப்பட்டிருக்கின்றது. 

ராமேஸ்வரம் ராமநாதர் சுவாமிக்கும், காசி விஸ்வநாதருக்கும் அன்றாடம் காசி தீர்த்தமும், கோடி தீர்த்தமும் அபிஷேகங்களுக்கு கொண்டு சேர்ப்பித்த மாபெரும் புண்ணியவதி இவர்.


தீவிர சிவபக்தையான இவள் அன்றாடம் பிரம்ம முகூர்த்த நேரமான அதிகாலை 4 மணிக்கு நர்மதை நதியிலிருந்து மண் எடுத்து வந்து ஒரு கோடி லிங்கத்தைப் பிடித்து, பலவகையில் வேதத்தில் தேர்வு பெற்ற வேத சாஸ்திர நிபுணர்களான அந்தணர்களை கொண்டு ருத்ர ஜபம் ஜபித்து, வழிபாடுகள் செய்து, பகல் நேர உச்சி வேளையில் நர்மதை நதியில் கரைத்து விடுவாராம். இந்த புனிதக் கைங்கரியம் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதை ‘கோடிலிங்கார்கனம்’ என்று அழைக்கின்றனர்.



பாரதத்தில் உள்ள 12 ஜோதிர்லிங்க கோயில்களில் 8 ஜோதிர்லிங்க கோவில்களான காசி விஸ்வநாதர் கோவில், குஜராத்திலுள்ள சோமநாதர் கோயில், ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனர், உஜ்ஜயினியில் ஓம்காரேஷ்வர், கேதார்நாத் கேதாரேஸ்வர், மகாராஷ்ட்ராவிலுள்ள பீம் சங்கர் கோவில், மகாராஷ்ட்ராவிலுள்ள திரியம்புகேஷ்வர் கோவில், எல்லோரா அருகிலுள்ள கிருஷ்ணேஷ்வர் கோவில் போன்றவை இவரால், தன் சொந்த செலவில் புனரமைக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று இந்தியாவில் தொன்மையான பல்வேறு கோவில்கள் இன்று நிலைத்து நிற்பதற்கு இந்த பெண்மணியின் வீரமும் தியாகமும் மட்டுமே காரணம்.

 அதனால்தான் காசி விஸ்வநாதர் கோவிலை விரிவாக்கம் செய்த போது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோவில் வளாகத்திலேயே ராணி அகல்யா பாய் அவர்களுக்கு ஒரு பிரம்மாண்ட சிலையை அமைத்து, விஸ்வநாதரை தரிசித்து விட்டு வரும் பக்தர்கள் ராணி அகல்யா பாயையும் வழிபட செய்தார்கள்.

இந்திய அரசு அகல்யா பாய் ஹோல்கருக்கு மரியாதை அளிக்கும் விதமாக இந்தோர் விமான நிலையத்திற்கு, தேவி அகல்யா பாய் ஹோல்கர் விமான நிலையம் என பெயர் சூட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, 1996ம் ஆண்டு ஆகத்து 25-ம் நாள் இவருடைய படத்தை அஞ்சல் தலையில் பொறித்து மரியாதை செய்துள்ளது.

தற்பொழுது தினமும் காலையில் பொதிகை தொலைக்காட்சியில் தினம் ஒரு கதை என்ற நிகழ்ச்சியில் திரு.மதுசூதனன் கலைச்செல்வன் மிக அருமையாக பல கதைகளை  கூறுகிறார். அப்படி போன வாரம் அகல்யா பாய் ஹோல்கர்  பற்றி கூறினார்.

அதன்  இணைப்பு இது ... Dhinam oru Kadhai | தினம் ஒரு கதை | Story: 06  நேரம் இருப்பவர்கள் பாருங்கள். மிக சிறப்பாக இருக்கும்.











மஞ்சள் பூக்களின் அலங்காரத்திற்கு நடுவில் விஸ்வநாதர் தரிசனம் பெற்ற பின் அங்கிருந்த மற்ற சந்நதிகள்  சென்றோம்.

கிணறும் அருகில் ஸ்தல மரமும் இருந்தது. அந்த கிணற்றை கம்பிகள் கொண்டு மூடி இருந்தார்கள். மக்கள் அதற்குள் காசுகளை போடுகிறார்கள். 

பின் அங்கிருந்த மற்ற  சந்நதிகள் சென்று தரிசனம் பெற்றோம் வரிசையாக அந்த சந்நதிகள்  பெயர்கள் நினைவில் இல்லை. பின் விஸ்வநாதர் சந்நதியின் பின் புறம் நகரத்தார் நிறுவிய சிவபெருமான் சந்நதி  சென்றோம். இங்கு சிவலிங்கத்தை தொட்டு தரிசனம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.

பின் அமைதியாக சிறிது நேரம் அமர்ந்து இருந்து விட்டு நாமும் காசி விஸ்வந்தாரை பார்த்து விட்டோம் என்ற திருப்தியில் அங்கிருந்து கிளம்பினோம்.






முதல் திருமுறை

068 திருக்கயிலாயம்
பாடல் எண் :  4



முந்நீர்சூழ்ந்த நஞ்சமுண்ட முதல்வர் மதனன்றன்
தென்னீருருவ மழியத்திருக்கண் சிவந்த நுதலினார்
மன்னீர்மடுவும் படுகல்லறையி னுழுவை சினங்கொண்டு
கன்னீர்வரைமே லிரைமுன்றேடுங் கயிலை மலையாரே.
 


இயற்கையாகத் தோன்றிய மலைக் குகைகளில் வாழும் புலிகள், பசியினால் சினமடைந்து கல்லால் இயன்ற மலைமிசை உணவாதற்குரிய இரைகளையும், அருந்துவதற்கு நிலைபெற்ற நீரையுடைய மடுக்களையும் தேடும் கயிலைமலையில் உறையும் தலைவர், கடலில் பரவித் தோன்றிய நஞ்சினைத் திரட்டி உண்டவர் மன்மதனின் அழகிய உருவம் அழியக்கண்சிவந்த நுதலை உடையவர்.

ஓம் நமசிவாய ! ஓம்  நமசிவாய ! 
ஓம்  நமசிவாய ! ஓம் நமசிவாய ! 
ஓம்  நமசிவாய ! ஓம் நமசிவாய!


தொடரும் ...


அன்புடன்,
அனுபிரேம் 🌼🌼🌼

2 comments:

  1. வரலாற்றுத் தகவல் தெரிந்து கொண்டேன் அனு. கதைகள் வரலாறு என்பதை எல்லாம் தாண்டி எனக்கு காசி விஸ்வநாதரைப் பார்க்கும் ஆவல் ரொம்பவே உண்டு. அதுவும் காசியைப் பார்க்க ரொம்பவே...உண்டு.

    உங்கள் அனுபவங்கள் அருமை. கடைசியாகத் திருமுறைப் பாடலும் அதன் பொருளும் சிறப்பு.

    நல்ல தகவல்கள் அனு..

    கீதா

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அக்கா

      விரைவில் தாங்களும் காசி சென்று விஸ்வநாதரை தரிசனம் செய்யும் பாக்கியத்தை அவரே அருள்வார் ...

      Delete