கார்த்திகைப் பூர்ணிமா!!!
முந்தைய பதிவுகள் ...
வாரணாசியில் ஆண்டுதோறும் தேவ் தீபாவளி பண்டிகை கங்கை நதியையும், காசி விஸ்வநாதரையும் மரியாதை செலுத்தும் விதமாக மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இங்கு கொண்டாடப்படும் மஹாஉத்சவம் என்ற பண்டிகையின் கடைசி நாளான தேவ் தீபாவளியின் போது நகரமெங்கும் வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அதோடு கங்கை ஆற்றில் ஆயிரமாயிரம் அகல் விளக்குகள் மிதக்கவிடப்படும். அப்போது மாலைவேளையில் நடக்கும் கங்கா ஆர்த்தியை பார்க்க கண்கோடி வேண்டும்!
தேவ் தீபாவளி என்னும் பண்டிகை, தேவர்கள் புவிக்கு வரும் கோலாகலமான விழா, தீபாவளி பண்டிகையை அடுத்து கார்த்திகை மாதத்தின் பௌர்ணமி தினத்தன்று கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தின் போது வானிலிருந்து கடவுளர்கள் எல்லாம் பூமிக்கு இறங்கி வந்து கங்கையில் நீராடுவதாக புராண நம்பிக்கை சொல்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக உலகம் முழுவதுமிருந்து ஏராளமான பக்தர்களும், பயணிகளும் வாரணாசியில் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் குழுமுகிறார்கள்.
கங்கை நதியின் படித்துறைகள் அனைத்தும் தேவ் தீபாவளி பண்டிகையின்போது வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அப்படி 84 படித்துறைகளும் வண்ண விளக்குகளால் மிளிரும் போது படகுப்பயணம் மேற்கொள்வது சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக இருக்கிறது. இந்த அலங்கார விளக்குகளின் அணிவகுப்பு கங்கை நதிக்குச் செய்யும் மரியாதையாகவும் கருதப்படுகிறது. அதோடு பூமிக்கு வரும் தேவதைகள் இதன் மூலம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஒரு நம்பிக்கை நிலவுகிறது.
இந்த ஆண்டு தேவ் தீபாவளியின் பொழுது நமது பிரதமர் மோடி அவர்களும் கலந்து கொண்டார்.அவரின் முக நூல் தளத்தில் கிடைத்த தீபாவளி காட்சிகள் .....
காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் உள்ள தசஸ்வமேத் படித்துறையில் ஒவ்வொரு நாளும் சூரிய அஸ்த்தமனத்தின் போது கங்கா ஆர்த்தி நடைபெறும். ஆனால் தேவ் தீபாவளி அன்று நடக்கும் மகா ஆர்த்தி வெகு விசேஷமாக ஆயிரக்கணக்கான பயணிகள் மற்றும் பக்தர்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது. அப்போது கங்கா ஆர்த்தி பிராமண அர்ச்சகர்கள் மற்றும் இளம் மங்கைகளால் நிகழ்த்தப்படுகிறது.
தசஸ்வமேத் படித்துறையில் கங்கா ஆர்த்தி நடைபெற்றுக்கொண்டிருக்கும் அதேவேளையில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு அமர் ஜவான் ஜோதியில் இராணுவ வீரர்களால் வீரவணக்கமும், அஞ்சலியும் செலுத்தப்படுகிறது. அப்போது நாட்டுப்பற்றுமிக்க பாடல்களும், பஜன்களும் பாடப்படுகின்றன. அதோடு பகீரத் சௌர்ய சம்மன் என்ற விருதும் இந்த தருணத்தில் இராணுவ வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.
காசியில் தேவ் தீபாவளி பண்டிகையின் போது ஆயிரக்கணக்கான அகல் விளக்குகள் கங்கை நதியில் மிதக்கவிடப்படுகின்றன. அப்போது படித்துறைகளோடு சேர்ந்து கங்கை நதியும் ஒளிவெள்ளத்தில் மிதக்கும்!
இத்தனை விஷேமான தினத்தில் அங்கிருந்ததை நினைத்தால் மிக மகிழ்ச்சியாக உள்ளது. என்ன இன்னும் கொஞ்சம் படகில் பயணம் செய்தோ இல்ல மற்ற படித்துறைகளுக்கு சென்றோ படம் எடுத்து இருக்கலாம். ஆனால் கூட்டம் பற்றி மற்றவர்கள் கூறியது கேட்டதால் சட்டென்று முடிவு எடுத்து செல்ல இயலவில்லை. மேலும் உடன் பெரியவர்கள் இருப்பதால் இந்த கூட்டத்தில் செல்லுவதற்கு அத்தனை விருப்பமும் அவர்களுக்கு இருப்பது இல்லை, அவர்களை தனியே விட்டு செல்ல நமக்கு மனம் இருப்பது இல்லை. ஆனாலும் நல்ல சிறப்பான அனுபவங்கள் கிடைத்தன.
பாடல் எண் : 6
தாதார் கொன்றை தயங்குமுடியர் முயங்கு மடவாளைப்
போதார்பாக மாகவைத்த புனிதர் பனிமல்கும்
மூதாருலகின் முனிவருடனா யறநான் கருள்செய்த
காதார்குழையர் வேதத்திரளர் கயிலை மலையாரே.
கயிலைமலை இறைவர், மகரந்தம் நிறைந்த கொன்றைமாலை விளங்கும் முடியினை உடையவர். தம்மைத் தழுவிய உமையம்மையை மென்மையான இடப்பாகமாக ஏற்றதூயவர். குளிர்ந்த இவ்வுலகின்கண் வயதால் முதிர்ந்த சனகர் முதலிய முனிவர்களுக்கு அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கையும் அருளிச் செய்தவர். வலக்காதில் குழை அணிந்தவர். வேதவடிவாய் விளங்குபவர்.
அனுபிரேம் 🌼🌼🌼
No comments:
Post a Comment